மூலோபாயக் கற்கை நிலையம் [Centre for Strategic Studies : CSST] கடந்த சனிக்கிழமை 17.03.2018 அன்று திருகோணமலையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நீதியரர் விக்கினேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, இக்கற்கை நிலையத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
“குறிப்பிட்ட விடயங்கள் நோக்கி ஆராய்ச்சி செய்து, கருத்துக்கள், ஆலோசனைகள், வழிமுறைகளை வழங்கி அவற்றுக்குரிய குறிக்கோளை முன்னெடுத்துச் செல்ல முயலும் நிறுவனம் அல்லது நிறுவனப்படுத்தப்படாத குழு” வே சிந்தனைக் குழாம் அல்லது மதியுரையகம் [THINK TANK] எனப்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் தென்னிலங்கையிலும் இத்தகைய அமைப்புக்கள் சிறப்புறச் செயற்பட்டும் வருகின்றன. எனினும் நீண்டகால போராட்டவரலாற்றைக் கொண்ட ஈழத்தமிழர்களிடையே இத்தகைய அமைப்பொன்று இல்லாத நிலையே காணப்பட்டுவந்தது.
அண்மைக்காலங்களில் தமிழர்களுக்கான அரசியல் சிந்தனைக் குழாம் [THINK TANK / மதியுரையகம்] ஒன்றின் அவசியம் பற்றி சிலர் பேசி வந்த நிலையில், அரசியல் ஆய்வாளர் ஏ.யதீந்திரா அவர்களின் முயற்சியினால் இந்த மூலோபாயக் கற்கை நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மூலோபாயக் கற்கை நிலையத்தின் இயக்குனரும் அரசியல் ஆய்வாளருமான ஏ.யதீந்திரா,
“நவீன அரசியலில் சிந்தனைக் குழாம்களின் பங்களிப்பு முதன்மையான ஒன்றாகும். வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகாரத்திலுள்ளவர்களை கொள்கை சார்ந்து வழிநடத்துவதில் சிந்தனைக் குழாம்களுக்கு முக்கிய பங்குண்டு. அந்தவகையில் தமிழ் சமூகம் தமெக்கென சிந்தனைக் குழாம்களை கொண்டிருப்பது இன்றைய புதிய பூகோளவாத அரசியல் சூழலில் அத்தியாவசியமானது. இப்பூகோளவாத அரசியல் சூழலில் இலங்கையின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளவும் அதன் ஊடாக தமிழர்கள் எவ்வாறு பயணிக்கலாம் என்பதைக் கற்றுக் கொள்ளவும் நமக்கான கற்கை நிலையங்களை நாம் உருவாக்க வேண்டிய தேவையுண்டு.”
என இக்கற்கை நிலையத்தின் முக்கியத்தவம் பற்றி விபரித்திருக்கிறார். மேலும்
“மூலோபாயக் கற்கை நிலையம் ஒரு இலாப நோக்கற்ற சிந்தனைக் குழாமாகும். தெற்காசிய நிலையில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில், இலங்கையை மையப்படுத்திய அரசியல் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதையே இந்நிலையம் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இத்துறையில் உள்நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் இலங்கையை மையப்படுத்திச் சிந்திக்கும் சுயாதீன ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் உட்பட ஆர்வம் மிக்க புலமையாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்தும் அவர்களது ஆய்வுகளையும் கருத்துக்களைளையும் கொள்கை வகுப்பாளர்களுக்குப் பயன்படும் வகையில் வெளிப்படுத்தவதுமே இக் கற்கை நிலையத்தின் பிரதான செயற்பாடுகளாக அமையும்.”
எனவும் ஏ.யதீந்திரா தெரிவித்திருக்கிறார்.
மூலோபாயக் கற்கை நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன், தமிழர்களைப் பொறுத்தவரையில் உலகளாவிய அரசியல் சிந்தனைகள் அல்லது அரசியல் ஆய்வறிவு ஆகியன மிகக் குறைவாகவே கணக்கில் எடுக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டதுடன், கற்கை நிலையத்தின் அவசியப்பாட்டினை வலியுறுத்தியிருந்தார். அவரது உரையில்
‘தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. பண்டாரநாயக்கா சர்வதேச கற்கை நிலையம் (Bandaranaike Centre for International Studies (BCIS), லக்ஷ’மன் கதிர்காமர் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகள் நிலையம் (Lakshman Kathirgamer Institute of International Relations and Strategic Studies), திரு.பாக்கியசோதி சரவணமுத்து அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (Centre for Policy Alternatives) ஆகிய நிலையங்கள் சிறப்பாக செயற்படுகின்ற போதும் தமிழ் மக்கள் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கான எந்தவொரு கற்கை நிலையமோ அல்லது அமைப்போ எம்மிடையே காணப்படாமை மிகப் பெரியதொரு பின்னடைவாக இருந்து வந்துள்ளது.
அந்த வகையில் மூலோபாயக் கற்கை நிலையமானது எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்களும் அரசியல் ஆர்வலர்களும் அரசியல் பற்றிய ஆய்வறிவுகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்று நம்பலாம். சர்வதேச அரசியல் விவகாரத்தில் இலங்கையின் வகிபாகம் பற்றிக் கற்றுக் கொள்வதற்கும் சர்வதேச அரசியலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை குறிப்பாக தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் அல்லது தீமைகள் பற்றி அறிந்துகொள்வதற்கும் இம் மையம் மிகவும் உதவியாக அமையும் எனக் கருதுகின்றேன்.
தமிழ் மக்களுக்கான அரசியல் மாற்றங்கள் மற்றும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களின் வாழ்க்கையை வழிநடத்தக்கூடிய வகையில் அரசியல் முன்னெடுப்புக்கள் இனிவருங்காலங்களில் முன்னெடுத்துச் செல்லப்பட வழிவகுக்க வேண்டும். நான் அரசியலுக்கு வந்தவுடன் கொழும்பில் சிங்கள அன்பர்களால் நடாத்தப்படும் இவ்வாறான சில கற்கை நிலையங்களின் கருத்து முடிவுகள் வாராந்தம் எனக்குத் தரப்பட்டது. அவை தர்க்க பூர்வமாக அமைந்திருந்தாலும் அடிப்படையில் சில பிழையான ஊகங்களைக் கொண்டிருந்தன. ஆகவே அவற்றை வாசிப்பதைக் கைவிட்டேன். எமது சூழலுக்கும் நன்மைகளுக்கும் ஏற்றவாறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே சிறந்த வழிகாட்டல்களையும் காத்திரமான அரசியல் கொள்கைகளையும் எமது அரசியல் தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்குவதற்கு இந்த நிலையம் தன்னாலான எல்லா முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்
இன்றைய பூகோள அரசியல் மாற்றத்தில் இலங்கையைக் களமாகக் கொண்டு அமெரிக்கா, சீனா, யப்பான், இந்தியா, மேற்கத்தேய நாடுகள் போன்ற பல நாடுகளும் தத்தமது அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் இந்த வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகள் உள்நாட்டில் எமது மக்கள் மத்தியில் எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சரியான தரவுகளின் அடிப்படையில் அவற்றை வெளிப்படுத்த வேண்டியது கல்விச் சமூகத்தினர், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் முதலானோரின் கடமையாகும். இன்று பூகோள சுருங்கலானது பல நன்மைகளையும் தீமைகளையும் தந்து வருகின்றது. சீனாவில் மூக்குளைந்தால் அமெரிக்கா தும்முகின்றது. அவர்களின் பூகோள அரசியல் எம்மையும் பாதிக்கின்றது
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையேயான கலவரம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்ற போது உள்ளூரளவிலான ஒரு இனமுறுகல் சம்பவமாகத் தோன்றினாலும் இவ் விடயங்களின் பின்னணியில் எமது மக்களுக்குத் தெரியாத புரியாத பல அன்னிய சக்திகளின் நேரடியான அல்லது மறைமுகமான பங்களிப்புகள் இருந்துள்ளதை அவதானிக்கலாம். இவ் விடயங்களில் தெளிந்த ஞானமும்; அறிவுமுள்ள பலர் இதனை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே எந்தவொரு விடயமும் உள்ளூர் விடயமெனத் தட்டிக்கழிக்கக் கூடியதாக இல்லை’ எனக்குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் பிரதம ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம், “உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளும்” என்னும் தலைப்பில் உரையாற்றியிருந்தார். அதே போன்று யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் தலைவர் கலாநிதி. மு.வு. கணேசலிங்கம், “இலங்கையை மையப்படுத்திய இந்திய அமெரிக்க சீன நகர்வுகள்” என்னும் தலைப்பில் உரையாற்றியிருந்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலையைச் சேர்ந்த கல்வி மான்கள், சிவில் சமூக செயற்பாடாளர்கள் என பலர் பங்குகொண்டிருந்தனர்.