• முகப்பு
  • மீட்சி
  • Projects
  • கலை
  • சமூகம்
  • அரசியல்
  • இலக்கியம்
  • அரசியல்
  • வழிபாடு
  • தொடர்புகளுக்கு
  • Subscribed Donations
Meedsi © All rights reserved.
+94 77 008 3912
  • மீட்சி
  • Projects
  • தொடர்புகளுக்கு
Meedsi Meedsi
  • முகப்பு
  • அரசியல்
  • சமூகம்
  • வரலாறு
  • வழிபாடு
  • கலை
  • இலக்கியம்
Subscribed Donation
Meedsi

இலங்கையில் திரௌபதி அம்மன் வழிபாடு – பகுதி 03 –விஜய்

Home / திரெளபதை அம்மன் / இலங்கையில் திரௌபதி அம்மன் வழிபாடு – பகுதி 03 –விஜய்
By Vijey Edwin inதிரெளபதை அம்மன், பிரதான கட்டுரைகள், வரலாறு, வழிபாடு, வழிபாடு

இலங்கையில் அம்பாறை – மட்டக்களப்பு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிந்து கிடக்கிற ‘மட்டக்களப்புத் தேசத்தில்’, அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பழுகாமம் மற்றும் புளியந்தீவு – பாஞ்சாலிபுரத்திலும் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயில்கள் பிரசித்தமானவை. இதற்கப்பால், இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் உடப்பு மற்றும் முந்தல் கிராமங்களிலும் பிரசித்தமான திரௌபதி அம்மன் கோயில்கள் உள்ளன.

இத் திரௌபதை அம்மன் கோயில்களின் அமைவிடத்தை நோக்கும் போது, தெளிவாகத் தெரிகிற அம்சம், இவ்வழிபாட்டு முறையானது யாழ்ப்பாணத்திலோ அல்லது வட பகுதியிலோ அல்லது திருகோணமலையிலோ அமைந்திருக்கவில்லை என்பதாகும். இலங்கையின் கிழக்கிலும் இலங்கையின் வடமேற்கிலும் கரையோரங்களை அண்டி இவ்வாலயங்கள் அமையப்பெற்றிருக்கின்றன. தமிழகத்திலிருந்து பரவிய இவ்வழிபாட்டு முறை சிலவேளைகளில் மக்கள் குடியேற்றங்களுடன் இணைந்து பரவியிருக்கலாம் என்பதனை இவ்வமைவிடங்கள் காட்டுகின்றன எனக்கருதவேண்டியுள்ளது. ஏனெனில் இவ்வாழிபாட்டு முறையானது பெரும் சமூக ஆதரவுடன் நடாத்தப்பட வேண்டியதொன்றாகும். இன்றும் தமிழகத்தில் நடாத்தப்படுகின்ற திரௌபதி விழா, பல ஊர் அமைப்புக்கள் இணைந்து நடாத்தப்படுகின்றதொன்றாகவே விளங்குகின்றது. எனவே, இவ்வழிபாட்டு முறையைப் பின்பற்றுகின்ற மக்கள் குடியேற்றங்கள் இன்றி இவ்வழிபாட்டு முறை பரவுதற்கு வாய்ப்பில்லை என்றே கருதவேண்டியுள்ளது.

‘மட்டக்களப்புத் தேசத்தில்’ பாரதம் அறிமுகமாக்கப்படுவதைனையும் திரௌபதி அம்மன் வழிபாடு தோற்றம் பெற்ற முறையையும் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் / மட்டக்களப்பு மாண்மியம் விபரிக்கிறது. இந்நூலிலுள்ள தாதன் வரவு மற்றும் தாதன் கல்வெட்டு ஆகிய பகுதிகளில் இது பற்றிய விபரிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. தாதன் வரவில்:

மட்டக்களப்பை எதிர்மன்ன சிங்கன் (கி.பி 1539 – கி.பி-1583) அரசு புரிந்து வரும்போது, ‘வடநாட்டு கோங்கு நகரிலுள்ள தாதன் என்றொருவன் விட்டிணு மதத்தைப் போதிப்பதற்காக மகாபாரதத்தோடு சேர்த்துப் புலவர்களால் பாடிய இதிகாசத்தை மடலில் வரைந்து எடுத்துக் கொண்டு, காவிகமண்டலதாரியாக வேடம் பூண்டு வந்து நாகர்முனைத் திருக்கோயிலைக் கண்டு தரிசனை செய்து மகாபாராத இதிகாசத்தை அவ்வாலயத்தில் போதித்தனன்.’ (பக்:42)

என்ற தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும், எதிர்மன்ன சிங்கனிடம்

‘பாண்டவர் குலத்துத் தர்மாதிகளுக்கு நாகர்குலத்து துரியோத்துத் துரியோதனாதிகள் செய்த தீமைகளை செய்து காண்பிக்க…’ ‘சமுத்திரக்கரையருகும் வடவால் நிறைந்த இடமும், அதற்கப்பால் வனமிருக்குமிடத்தில் தான் காண்பிக்க வேண்டும்.’ என வேண்டுகின்றான் தாதன். அரசனுஞ் சம்மதமுற்று திருக்கோயிலிலிருந்து கடலருகாய் வரும் போது தாதன் வேண்டியபடியிருந்தது. ‘அந்த இடத்தில் பாண்டவருடைய உறுப்பை ஆறுபேருக்கு உண்டாக்கி அதனை நம்பும்படி தீ வளர்த்து, அதிலிறங்கி மீண்டு காட்டினான். அரசனும் மகிழந்து அந்த இடத்தில் ஆலயமுண்டாக்கிப் பாண்டுறுப்புமுனை என நாமஞ்சாற்றி, வங்கர் குலத்து திக்கதிபர் குலமே பரிபாலிக்கும்படி திட்டம் செய்து தன்னிருப்பிடஞ் சென்றனன்.’

என்கிறது மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்.

இவ்விபரிப்புக்களை உடணடுத்து, சில குடியேற்றங்களின் விபரங்கள் தரப்படுகின்றன. ‘வடநாட்டு அண்ணாமலைச் செட்டிகள் வர்த்தகஞ் செய்ய மட்டக்களப்பு நாப்புட்டி முனைக்கு மேற்கில் வர்த்தகசாலை, கிட்டங்கி வீடுகளியற்றி வர்த்தகஞ் செய்தனர். அந்தக் காலத்தில் காட்டான், பட்டாணி, சுல்தான், சீகந்தர், வேரடியோடு வர்த்தகஞ் செய்வதற்காகச் சில துலுக்க குடும்பங்களுடன் மண்முனைக்கடுக்கப் பாளையம் போட்டு வர்த்தகஞ் செய்தனர்.’ (பக்:44) என குடியேற்றங்களின் விபரங்கள் காட்டப்பட்டுள்ளன. அக்காலத்தில் மத்திய நாட்டுக்குக் கீழ் மட்டக்களப்பு இருந்தது. மத்திய நாட்டு அரசன் இராசசிங்கன் (முதலாம் இராஜசிங்கன் 1582-1592) என்ற விபரங்களும் தரப்படுகின்றன.

தாதன் கல்வெட்டும் இந்த விபரங்களை சற்று விரிவாகச் சொல்லுகிறது. அதில் தாதன் தான் ‘கோவேசியர் குலம் எனவும், பாரத மதத்தை கலிங்க குலத்தோர்க்கு சூட்ட நினைவு கொண்டு துளசிமணி மாலையிட்டு வந்தேன். இது எனது மரபு.’ (பக் :72) என மன்னனுக்கு கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் ‘தீவளர்த்துப் பாய்ந்த பின்பு, கலிங்க குலத்தோர்க்கு வரிசை கொடுத்து…’ எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கண்டி அரசன் விமலதருமன் (முதலாம் விமலதர்மசூரியன் -1590–1604) ‘கோயிலுக்கு வயல்நிலமும் வெள்ளிக் களஞ்சியமும் தூண்டுதும்பிக் கோடுடனே சோதியெழ யீந்து மன்னன் கண்டி நகர்சென்றார்…’ (பக்:73) என்ற தகவலும் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கிழக்கில் மகாபாரதம் பரவியதனையும் பாண்டிருப்பில் திரௌபதை அம்மன் கோயில் தோற்றம் பெற்ற வரலாற்றையும் இவ்வாறுதான் கூறியிருக்கிறது.

1837 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டSeventy-two Specimens of Castes in India நூலில், தாதன் (HINDU BEGGER)  மற்றும் தாதச்சி ஆகியோரின் வரையப்பட்ட உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. தாதன் என்பவன் விஷ்ணு பக்தன். அதேசமயம் காஞ்சி புரத்திற்கு வடக்கே உள்ள பனப்பாக்கம் என்னும் ஊரிலுள்ள விநாயகர் கோயிலருகே தாதன் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் பெறமுடிகிறது.

பாண்டிருப்பு திரளெபதி அம்மன் வழிபாட்டு முறைகள் பற்றி தாதன் கல்வெட்டில் விபரிக்கப்பட்டுள்ளது. இதனை விட பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” எனும் ஆய்வு நூலிலும் விபரிக்கப்பட்டுள்ளது. அவர், பாண்டிருப்பு பாரதம் படித்தலும் தீப்பள்ளயச் சடங்கும் முற்றாக சடங்கினின்று விடுதலை பெறாத விழாவாகக் காணப்படுகின்றது. சடங்கு அமிசமே இங்கு கூடுதலாக உள்ளது. இதனை நாட அமிசம் நிரம்பிய சடங்கு எனலாம். (பக்:153) எனக்குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் நாட்டில் நடக்கும் பாரத விழா சடங்கு நிலையினின்று சற்று வளர்ச்சியடைந்தது போலத் தோன்றுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழ் நாட்டில் இன்று வளர்ச்சி பெற்றுக் காணப்படும் பாரத விழாவின் புராதானத் தன்மையையும் மூல வடிவத்தையும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில் பாண்டிருப்பில் நிகழும் பாரதம் படித்தலும் தீப்பள்ளயச் சடங்கும் உணர்த்துகிறது.’ (பக்:153) எனக்குறிப்பிடுவது கவனத்தில் கொள்ள வேண்டியதொன்றே.

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் சடங்கு குறித்து பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவ்வாயலத்தில் கோபுரங்கள் இல்லை. கிழக்கு நோக்கி சந்நிதானமும் அம்மனை நோக்கிய வண்ணம் விரபத்திரர் ஆலயம் கொணடது இக்கோயில். சுற்றுப்பிரகாரங்களில் காடேறி, கமலகன்னி, பட்டாணி, வைரவர் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரபத்திரர் கோயிலுக்குப் பின்புறமாக வெளிவீதியில் தீக்குளிக்கம் இடம் அமைக்கப்படும். புரட்டாதி மாதம் அமாவாசைக்கு முன்பின்னாக வரும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றி, பதினெட்டுத் தினங்கள் சடங்கு நடைபெற்று, பதினெட்டவாது நாள் தீமிப்புடன் வருட உற்சவம் முடிவுறும். உற்சவம் தீமிதிப்பு, பள்ளயம், சடங்கு எனப்படும்.

ஆகமம் சாராத முறையிலான பூசைகளைக் கொன்டது இவ்வாலயம். பூசை செய்பவர் பூசாரி என அழைக்கப்படுவார். 18 நாட்கள் நடைபெற்ற பாரதப்போரைக் குறிக்கும் வகையில் 18 நாட்கள் திருவிழா நடைபெறும். பாரதப் போரினதும் மகாபாரதத்தினதும் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்த்திக்காட்டப்படுவதுடனான சடங்குடன் கூடிய வணக்கமுறை நடைபெறும். பஞ்சபாண்டவர், திரெளபதை, கிருஷ்ணன், காளி, வீரபத்திரர் எனப் பலர் விரதம் அனுட்டித்து கொலுவிருப்பர். 12 ஆம் நாள் கலியாணக்கால் வெட்டுதல், 16 ஆம் நாள் வனசவாசம் செல்லும் நிகழ்ச்சி, 17 ஆம் நாள் தவநிலைச் சடங்கு, தீமிப்பு என்பன முக்கிய நிகழ்வுகளாகும். பாரதம் படித்தலும் நிகழும்.

உசாத்துணை

http://indian-heritage-and-culture.blogspot.com/2014/08/seventy-two-specimens-of-castes-in.html

பேராசிரியர் சி.மௌனகுரு ‘மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்’ 1988

இலங்கையில் திரௌபதி அம்மன் வழிபாடுபாண்டிருப்பு திரளெபதி அம்மன் கோயில்விஜய்
45
Like this post
91 Posts
Vijey Edwin
  • மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை: நீடித்துநிலைத்திருக்கும் பிரச்சினை! -விஜய்
    Previous Postமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை: நீடித்துநிலைத்திருக்கும் பிரச்சினை! -விஜய்
  • Next Postதிருகோணமலையில் மூலோபாய கற்கை நிலையம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது!
    மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை: நீடித்துநிலைத்திருக்கும் பிரச்சினை! -விஜய்

Related Posts

வளமான வாயப்பு : கச்சான் / நிலக்கடலை செய்கை
projects சமூகம் சமூகம் பிரதான கட்டுரைகள்

வளமான வாயப்பு : கச்சான் / நிலக்கடலை செய்கை

மீட்சியின் சமூக அபிவிருத்தி திட்டம்…
projects பிரதான கட்டுரைகள்

மீட்சியின் சமூக அபிவிருத்தி திட்டம்…

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தல் ..,
அரசியல் அரசியல் சமூகம் பிரதான கட்டுரைகள்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தல் ..,

அம்மாச்சி : பெண்களை விடுதலை செய்யும் – பேரா. அ. ராமசாமி, இந்தியா
அரசியல் சமூகம் சமூகம் பிரதான கட்டுரைகள் பொது

அம்மாச்சி : பெண்களை விடுதலை செய்யும் – பேரா. அ. ராமசாமி, இந்தியா

Leave a Reply (Cancel reply)

Your email address will not be published. Required fields are marked *

*
*

Contact us

Director,

14 Elm Road, Chessington, Surrey, KT9 1AW,

UNITED KINGDOM.

tel : +44 7827911279

Contact Us

Coordinator,

Main street, Kiran,

SRI LANKA.

tel: +94 77 008 3912

Contact us

email

[email protected]

optimised

Copyright © 2020 Meedsi. All rights reserved.

Copy