முருக வழிபாடு
தமிழரின் தொல்வழிபாடான “வேலன் வெறியாட்டு”, இரண்டாயிரம் வருடங்களிற்கு முன்னரான சங்க காலத்தில் முருகுவிற்கு – முருகனுக்கு மேற்கொள்ளப்பட்டதொரு வழிபாடாகும். எனவே இதனைப் புரிந்து கொள்வதற்கு முருக வழிபாடு பற்றி நோக்குதல் அவசியமாகும்.
முருக வழிபாடு, மிகப் பண்டைக்காலத்திலிருந்து நிலவி வருகின்ற வழிபாடாகும்.மிகப் பண்டைக்காலத்தில் நிலவிய முருக வழிபாடு, இன்று நாம் காண்கின்ற முருக வழிபாடு போன்றோ ஏன் சங்க இலக்கியங்கள் சித்தரிக்கின்ற முருக வழிபாடு போன்றோ இருந்திருக்காது என்பர்.
கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த சிந்துவெளி நாகரிகத்தில்(1) “முருக வணக்கம்” நிலவியது எனக்கூறுவோரும் உளர். சிந்து வெளி எழுத்தக்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் படித்தறியப்படாத நிலையில், இக்கருத்தைக் கூறுவதில் முன்னர் ஓர் தயக்கநிலை காணப்பட்டது. இருந்த போதிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பயனாக, சிந்து வெளியில் முருக வழிபாடு நிலவியது என்ற கருத்தை அறிஞர்கள் முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
சிந்து வெளி நாகரிகத்தில் முருக வழிபாடு நிலவியிருந்தது என்ற கருத்தினைத் தோற்றுவித்ததில் பெரும் பங்கு செலுத்தியதுஅங்கு கண்டெடுக்கப்பட்ட இலச்சினையொன்றில் பொறிக்கப்பட்டிருந்த உருக்களாகும். அது ஹரப்பா பண்பாட்டு இலச்சினை. அவ்விலச்சினையில் “எழுவர் கை கோர்த்து நிற்கின்றனர். மேலே ஒரு மரம் நெருப்பை போல பிளந்து நிற்க அதிலிருந்து கை வளையங்களும் இரு கொம்புகள் கொண்ட தலையணியும் அணிந்த ஒரு தெய்வம் வெளிப்படுகிறது. அதன் முன்னர் ஒரு பூசகர். பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. அருகில் ஒரு ஆடு.”(2) எனும் உருக்கள் காணப்படுகின்றன. இந்த உருக்கள் சங்க கால இலக்கியங்கள் சித்தரிக்கும் வேலன் வெறியாடலை ஒத்திருக்கிறது என்பது ஆய்வாளர்கள் கருத்து.
ஐராவதம் மகாதேவன், “சிந்துவெளிப் பண்பாட்டுக்கு, பிற்காலங்களிலிருந்து நான் கொடுத்துள்ள சான்றுகள் ஓரளவே சிந்துவெளி முருகனின் எச்சங்களாகும். ஈராயிரம் ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு சங்க காலத்தில் முருகன் வரலாறு முற்றிலும் மாறிவிட்டது. தமிழகத்தில் இன்று கிடைக்கும் திருவுருவங்கள் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை.” எனக்கூறியிருப்பதுடன், “சிந்துவெளி முருகனின் எச்சம் சங்ககாலத்துக்கு முந்தைய பெருங்கற்காலத்தில் மட்டுமே இருந்தது. (ஏறத்தாழ கி.மு 1000 – 500).இந்த தெய்வத்திற்கு ‘முருகு’ என்ற பெயர் இருந்திருக்கலாம் என்பது என் ஆய்வின் முடிவு. ‘முருகு’ என்றால் ‘அழகு’ என்பதெல்லாம் பிற்காலக் கற்பனைகள். சங்க காலத்தில் கூட முருகுவிற்கு உருவ வழிபாடு கிடையாது. முருகு அதன் பூசாரியான வேலன் மீதோ ஒரு பெண்ணின் மீதோ வந்து வெறியாட்டம் நடைபெறும் போதுதான் முருகன் வெளிப்படுகிறான்.” (3) எனவும் கூறியிருக்கிறார்.
சங்ககாலத்துக்கு முந்தைய பெருங்கற்காலத்தில்தமிழ் நாட்டிலும் – ஈழத்திலும் முருக வழிபாடு நிலவியிருந்தது என்பர். இதற்குஆதாரங்களாக அமைவன தொல்பொருள் சின்னங்களாகும்.மெஞ்ஞான புரம் நாகரிகத்தில் (காலம்:கி.மு. 1500) கண்டெடுக்கப்பட்ட இரும்பினால் ஆன அம்பு நுனி, திரிசூலம் என்பனவும் ஆதிச்சநல்லூர் (காலம்:கி.மு.1150) அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம், வேல் என்பனவும் (4) இலங்கையில் பொம்பரிப்பு, அனுராதபுரம், பின்வேவா, கந்தோரடை, பூனகரி ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவேல் (5) போன்றனவற்றைக் கொண்டு அக்காலத்தில் முருக வழிபாடு நிலவியது எனக்கூறுவர்.
ஆயினும் சங்க காலஇலக்கியங்களில்தான் முருரு – முருகன் வழிபாடு பற்றிய தெளிவான தகவல்களைக் காணமுடிகிறது. சங்க காலஇலக்கியங்களில் முருகு, முருகன், சேய், சேயோன், வேள், செவ்வேள், நெடுவேள் என்னும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவையாவும் முருகனைக் குறிக்கும் சொற்களாகும். எனவேதமிழரின் முருக வழிபாடு இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலான தொன்மை வாய்ந்த வழிபாடு எனக்கூற தெளிவான சான்றுகள் உள்ளன எனலாம்.
இந்நீண்ட நெடிய காலத்தில் தமிழர்களிடையே நிலவிவந்த முருக வழிபாட்டைப் பிரதானமாக மூன்றாக வகைப்படுத்தலாம். ஓன்று, தமிழ் மரபிற்குட்பட்ட – தமிழ்ப்பண்பாட்டுத் தளத்தில் நிகழ்த்தப் பெற்ற வழிபாடான முருக வழிபாடு. சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்ற முருகு அல்லது முருகன் குறித்த செய்திகளும் வேலன் வெறியாடல்-குரவையாடல் முதலியனவும் இத்தகையன. இரண்டாவது, தமிழ் மரபும் ஆரிய மரபும் இணைந்த முருகன் – ஸ்கந்தனுக்குரிய ஆகம முறைசார்ந்த முருக வழிபாடு.சங்கக்கால இறுதிப்பகுதியில் முருக வழிபாட்டில் வைதீக ஆரிய மரபுகள் சேர்ந்தன. சிவசக்தி ஆகியோரின் மகனாக முருகன் உருவாகுவதும் தெய்வயானையை முருகன் திருமணம் செய்வதும், முருகன் சுப்பிரமணியனாகவும், கார்த்திகேயனாகவும் அறிமுகப்படுத்தப்படுவதும் அவனை ஒரு ஆரியக்கடவுளாக உள்வாங்கின.(6) இவ்விரண்டு வழிபாட்டு முறைகளும் சங்க காலத்தில்நிலவியவழிபாட்டு முறைகளாகும்.
மூன்றாவது, ஈழத்தில் நிலவுகின்ற ‘வாய்கட்டி மௌனமாக செய்யப்படும் பூசை‘ வழிபாடு. மட்டக்களப்பில் மட்டும் நிலவுகின்ற குமாரர் அல்லது குமாரத்தன் வழிபாடும் முருக வழிபாடு எனக்கொள்வேரும் உண்டு.
இந்த மூவகை முருக வழிபாட்டில், சங்க காலத்தின் ஆரம்பத்தில் அதாவது வைதீக ஆரியப் பண்பாடு கலப்பதற்கு முன்னர் நிலவிய வழிபாடு வேலன் வெறியாட்டு ஆகும். இதுவே தமிழரின் தொல் வழிபாட்டு முறையாகும். சங்க இலக்கியங்கள் சுட்டும் முருக வழிபாட்டில் பெரும் பகுதி வெறியாடல் நிகழச்சியாகவே அமைந்துள்ளது என்பர் செல்வராசு.சங்கப் பாடல்களில் வெறியாட்டுப் பற்றிய பாடல்கள் 62, வெறியாட்டைப் பற்றிச் சிறப்பாகப் பாடிய புலவர் வெறிபாடிய காமக்கண்ணியர் எனப்பட்டார், ஐங்குறுநூற்றில் வெறியாட்டுப் பற்றிய பாடல்கள் வெறிப் பத்து எனப்பட்டது போன்ற தகவல்கள் அக்காலத்தில் வெறியாட்டு பெற்றிருந்த செல்வாக்கை காட்டுவன.
உசாத்துணைகள் :
(1). https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_நாகரிகம்
(2).அரவிந்தன்நீலகண்டன், ஹரப்பா கந்தனும் கார்த்திகைமாதரும். (https://sites.google.com/site/tamiletymology/v-other-articles-added/murugan-and-indus-seal)
3. ஐராவதம் மகாதேவன் சிந்து வெளியில் முருகன் – திரு. ஐராவதம் மகாதேவனின் மறுமொழி. (http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=239&Title=)
4. வானமாமலை.நா. தமிழர்பண்பாடும்தத்துவமும், சென்னை, 1990, பக்:33
5. புஸ்பரத்தினம்.மு. “இலங்கையில்முருகன்வழிபாடுதொல்பொருள்ஆராய்ச்சியில்புதிய பரிமாணம்.” (http://www.murugan.org/tamil/.htm)
6. செல்வாரசு. நா, நாட்டுப்புறச் சமயம், தொன்மங்கள் – வழிபாடுகள் – சடங்குகள், சென்னை, 2017.