பெரியதம்பிரான் – நீலாசோதையன் வழிபாடு, ஈழத் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்றும், தனித்துவமான வழிபாட்டு அம்சங்களைக் கொண்டதுமாகும். அப்பால், விசேடமான சமூக – மானிடவியல் அம்சங்களைக் கொண்டவையுமாகும்.
ஈழத்தில், பெரிய தம்பிரான் வழிபாட்டில், பெரியதம்பிரான் தெய்வத்தோடு நீலாசோதையன் தெய்வமும் இணைத்து வழிபாடு இயற்றப்படுவதே மரபு. நீலாசோதையன் பெரியதம்பிரான் போல் வணங்கப்படும் தெய்வமாகும். பெரிய தம்பிரான், ‘வண்ணார்’ குலத்தின் குல தெய்வமாகும்.
இந்துக் களஞ்சியம், “பெரியதம்பிரான் வழிபாடு, தமிழ் நாட்டில் அருகியதாகவும் இலங்கையில் யாழ்ப்பாணப் பிரதேசத்திலும் மட்டக்களப்புப் பிரதேசத்திலும் பரந்த வழிபாடாகவும் காணப்படுகிறது.” என்ற தகவலைத் தருகிறது.
யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள பெரிய தம்பிரான் ஆலயங்கள்
இந்து சமயத் திணைக்களம் 1984 இல் வெளியிட்ட “இலங்கைத் திருநாட்டின் இந்துக் கோவில்கள்” எனும் நூல், யாழ்ப்பாணத்திலுள்ள ஓரெயொரு பெரியதம்பிரான் கோவில் பற்றியே பதிவு செய்துள்ளது. இந்நூலில், வல்லன் – புங்குடுதீவு கிழக்கில் அமைந்துள்ள “ஸ்ரீ நாகதம்பிரான் கோவில்” பெரியதம்பிரான் கோவில் என அழைக்கப்படுகின்றது என்ற தகவல் இருப்பதுடன், அக்கோவிலின் மூர்த்திகளில் ஒருவராக பெரியதம்பிரானைக் குறிப்பிடுகிறது.
வடக்கில் 15 பெரியதம்பிரான் கோவில்கள் பற்றிய பதிவுகள் இணைய வலைத் தளங்களில் காணப்படுகின்றன. அந்த வகையில்; நாவற்குழி பெரியதம்பரான் கோவில், சுழிபுரம் பெரியதம்பிரான் கோவில், ஏழாலை பெரியதம்பிரான் கோவில், இடைக்காடு ஸ்ரீ பெரியதம்பிரான் கோவில், மல்லாகம் – நீலியம்பனை பெரியதம்பிரான் கோவில், வதிரி – அல்வாய் தெற்கு பெரியதம்பிரான் கோவில், முகமாலை பெரியதம்பிரான் கோவில், நாகர் கோவில் பெரியதம்பிரான் கோவில், கந்தோரடை பெரியதம்பிரான் கோவில், அளவெட்டி பெரியதம்பிரான் கோவில், மறவன் புலோ – நித்தர்புலம் பெரிய தம்பிரான், பொலிகண்டி பெரிய தம்பிரான், தும்பளை மேற்கு பெரிய தம்பிரான், நீர்வேலி பெரியதம்பிரான் (கோவில் குளம்) போன்ற கோவில்கள் பற்றி பதிவுகளைக் காண முடிகிறது.
வடக்கிலுள்ள பெரிய தம்பிரான் ஆலயங்கள் தொடர்பாக சிலவற்றிற்கு பெயரை மட்டுமே அறியக்கூடியதாக இருக்கிறது. நீர்வேலி பெரியதம்பிரான் கோவில் குளம், தும்பளை பெரிய தம்பிரான் கோவிலடி என்ற குறிப்புக்களையே காணக்கிடை க்கிறது. இதனால் முன்னர் இங்கு பெரிய தம்பிரான் ஆலயம் இருந்தது என ஊகிக்க முடிகிறது.
யாழ்ப்பாணத்தில் பெரிய தம்பிரானை படிமாத்தான் எனக் கூறுவதுண்டு. சங்ககாலத்திற்குரிய வெறியாட்டு ஆடும் வேலனையும் படிமாத்தான் எனக் கூறுவதுண்டு.!
மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள பெரியதம்பிரான் ஆலயங்கள்
இந்து சமயத் திணைக்களம் 1984 இல் வெளியிட்ட “இலங்கைத் திருநாட்டின் இந்துக் கோவில்கள்” எனும் நூலில், மட்டக்களப்பு பிரதேசத்தில் முனைக்காடு – கொக்கட்டிச்சோலை, முனைக்காடு மேற்கு – கொக்கட்டிச்சோலை, ஆறுமுகத்தான் குடியிருப்பு – ஏறாவூர், வெயிலிவீதி – அரசடி – மட்டக்களப்பு, பெரிய நீலாவணை – கல்முனை, பாண்டிருப்பு – கல்முனை, தம்பிலுவில் ஆகிய இடங்களிலுள்ள 07 பெரியதம்பிரான் கோவில் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.
பெரியதம்பிரான் ஆலயங்கள் மட்டக்களப்பின் வடக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது என இரா.வை.கனகரத்தினம் குறிப்பிடுகிறார். அவர் மட்டக்களப்பில் 11 பெரியதம்பிரான் ஆலயங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். இரா.வை.கனகரத்தினம், மட்டக்களப்பின் வடக்கில் குடியிருப்பு, வந்தாறுமுனை, கொம்மாந்துறை, சிற்றாண்டி, கோட்டமுனை முதலான இடங்களிலும் மட்டக்களப்பின் தெற்கில், நாவற்குடா, நீலாவணை, பாண்டிருப்பு, தாளங்குடா, அக்கரைப்பற்று, தம்பிலுவில் முதலான இடங்களிலும் பெரியதம்பிரான் ஆலயங்கள் அமைந்துள்ளன எனவும் குறிப்பிடுகிறார்.
இணைய வலைத்தளங்களில்; சித்தாண்டி பெரியதம்பிரான் கோவில், பெரியநீலாவணை பெரியதம்பிரான் கோவில், அக்கரைப்பற்று பெரியதம்பிரான் கோவில், வந்தாறுமூலை பெரியதம்பிரான் கோவில்கள் பற்றிய பதிவுகளைக் காண முடிகிறது. இவற்றைவிட, மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் பரிவார தெய்வங்களில் ஒன்று நீலாசோதயனாகும். இங்கு நீலாசோதையானுக்கு தனிக் கோயில் உண்டு.
தமிழ் நாட்டில் பெரியதம்பிரான கதை
தமிழ் நாட்டின் குமரி மாவட்டத்தில் நிலவும் உலகுடைய பெருமாள் கதை “பெரிய தம்பிரான் கதை” என்றே அழைக்கப்படுவதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. உலகுடையபெருமாள் கதைப் பாடல் மதுரையை ஆட்சி செய்த நாடார் மன்னன் பற்றியது ஆகும். இக்கதைப்பாடலை 1981 இல் டாக்டர் தி.நடராசன் என்ற தமிழறிஞர் சுவடியிலிருந்து நூல் வடிவாக்கம் செய்துள்ளார்.
மதுரை உலகுடைய பெருமாள் பாண்டிய நாடானுக்கு குமரி மாவட்டத்தில் கீழ் மறவன் குடியிருப்பு, சரல், வெள்ளமடி ஆகிய ஊர்களில் கோவில்களும் உள்ளன. கொடை விழாவுடன் சிறப்பாக நடத்தப்படுகின்றது என்ற தகவலை அறிய முடிகிறது.
நீலாசோதையன்
ஈழத்தில், பெரிய தம்பிரான் ஆலயங்களிலே பெரிய தம்பிரான் தெய்வத்தோடு நீலாசோதையன் தெய்வமும் இணைத்து வழிபாடு இயற்றப்படுவதே மரபு. நீலாசோதையன் பெரிய தம்பிரான் போல் வணங்கப்படும் தெய்வமாகும். இரா.வை.கனகரத்தினம் அவர்கள், “பெரிய தம்பிரான் ஆலயங்களிலே பெரியதம்பிரான் தெய்வத்தோடு நீலாசோதையன் தெய்வமும் இணைந்து வழிபாடு இயற்றப்படும். ஈழநாட்டின் வட பகுதியிலும் பெரிய தம்பிரான் ஆலயங்களில் நீலாசோதையன் சிறப்பான முறையில் போற்றப்பட்ட பொழுதும் நீலாசோதையன் என்னும் தெய்வத்தின் தோற்றம் பற்றி அறிவது மிகுந்த சிரமம். இத்தெய்வம் பற்றிய மரபுக் கதையினை அங்குள்ளவர்கள் அறிந்திருப்பது போல் தெரியவில்லை. மட்டக்களப்பு பிரதேச மக்கள், இத்தெய்வத்தின் தோற்றம் பற்றி கதையாகவும் காவியமாகவும் சொல்லக்கூடியவர்களாக இருக்கின்றனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கிலங்கையில் சோதையன் பற்றிய பெயர்; சோதையன் கட்டு, சோதையன் குளம் எனப் பரவலாகப் பயன்பாட்டிலுள்ளது. சோதையன் என்பவர்கள், பண்டைக்காலத்தில் பாரிய குளங்களை அமைத்த ஒரு குடியினர் என்ற கருத்து, கிழக்கில் வழக்கிலுண்டு. தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்றிராத பண்டைக்காலத்தில், மனித – பௌதிக வளங்களை ஒன்று சேர்த்து பாரிய கட்டுமானங்களை அமைத்த குடியினர் அல்லது குடித்தலைவன் சோதையன் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
மட்டக்களப்பின் பண்டைக்கால குளம், கோவில் மற்றும் குடியிருப்புக்களை அமைத்த குடித்தலைவனாக சோதையனைக் கொள்ளலாமா? என்பது ஆய்வின் வழியாகவே நிருபணம் செய்யப்பட வேண்டும். சோதையன் எனும் பெயர் வழியாக நீலாசோதையன் எனும் பெயர் உருவாகியிருக்காலம்.
நீலசோதையன் பற்றிய குறிப்பு கோணேசர் கல்வெட்டு எனும் நூலில் இடம் பெற்றுள்ளது. கோணேசர் கல்வெட்டின் 28 ஆம் பாடல்,
“எட்டிசை மண்வெட்டிக் கொண்டே ஏழரைச் சுற்றாம் மரத்தை இனதா வெட்டி
தட்டி ஒரு காலாலே எற்றி அது வீழ முன்னம் தரணி மீதில்
ஒட்டி ஒரு குளம் சமைத்து ஆங்கு உறுநீரும் கொண்டு அருளையுற்ற வீரன்
அட்டதிக்கும் புகழ்ந்தருளும் நீலாசோதையன் படையும் அரசர்மாரும்”
என அமைந்துள்ளது. இதற்கான பொருள் விளக்கத்தில், குளத்திற்காக காவல் இருக்கும் தெய்வம் என தரப்பட்டுள்ளது. எனினும் பாடலில், குளம் சமைத்து ஆங்கு உறுநீரும் கொண்டு அருளையுற்ற வீரன், நீலாசோதையன் படையும் அரசர்மாரும் என்றே கூறப்பட்டுள்ளது. அதாவது குளக்கோட்டு மன்னனுக்காக கந்தளாய் குளத்தை அமைத்தது, “நீலாசோதையன் படையும் அரசர்மாரும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறவன்புலோ – நித்தர்புலம் கோவில், நீலசோதி பெரியதம்பிரான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரின் தென்பகுதியிலுள்ள மறவன்புலோக் கிராமத்தில் நித்தர் புலம் என அழைக்கப்படும் பதியில் அமைந்துள்ள பெரியதம்பிரான் ஆலயம் நீலசோதி பெரியதம்பிரான் ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது. நீலசோதி, நீலசோதையனைக் குறிப்பதாக இருக்கலாம். மல்லாகம் கோவில், நீலியம்மனை பெரியதம்பிரான் எனக் குறிப்படப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் பரிவார தெய்வங்களில் ஒன்றாக நீலாசோதயன் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு நீலாசோதையானுக்கு தனிக் கோயில் உண்டு.
பெரியதம்பிரான் பற்றிய மரபுக் கதைகள், காவியங்கள், சிற்றிலக்கியங்கள்
புராண, இதிகாசங்களில் குறிப்பிடப்படாத இத் தெய்வங்கள் பற்றி மக்களிடத்தில் மரபு வழிப்பட்ட பல கதைகள் இருந்து வருகின்றன. இம் மரபுக் கதைகள் பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறுபட்டுக் காணப்படுகின்றன. பெரிய தம்பிரான் பற்றி கதைப்பாடல்களும் சிறு இலக்கிய வடிவங்களும் உண்டு. நீலாசோதையன் காவியம் பெரிய தம்பிரான் மற்றும் நிலாசோதையன் பற்றி விபரிக்கிறது.
பெரிய தம்பிரான பற்றிய மரப வழிக் கதைகள், “தக்கனுடைய யாகத்திலிருந்து பெரியதம்பிரான் தோன்றினார்” என விபரிக்கின்றன. மட்டக்களப்பிலுள்ள இலக்கியங்கள் – ஏடுகள் பெரியதம்பிரானை சிவனாக பாவனை செய்து போற்றுவதாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இரா.வை.கனகரெத்தினம் மட்டக்களப்பில் மக்கள் மத்தியில் வழக்கிலுள்ள பெரிய தம்பிரான் கதை பற்றி கேட்டறிந்து எழுதியிருக்கிறார்.
தக்கனின் யாகத்திலிருந்து சிவனை அழிக்கத் தோன்றியவரே பெரியதம்பிரான். சிவன் கோபாவேசம் கொண்டு வீரபத்திரரை தோற்றுவித்தார். வீரபத்திரர் தக்கனது யாகத்தை துவம்சம் செய்ய, அதைக்கண்டு விரபத்திரர் ஓடத்தொடங்கினார். ஓடும் வழியில் காளியன் என்னும் வண்ணானைக் கண்ட பெரியதம்பிரான் ‘என்னை வீரபத்திரர் கொல்வதற்கு துரத்தி வருகின்றார். எனது கொதியம்-சாடியால் என்னை மூடி விடு என, அவனும் அவ்வாறே செய்தான். துரத்தி வந்த வீரபத்திரர், பெரிய தம்பிரானைக் காணாது திகைத்து, வண்ணானிடம் வினாவினார். வண்ணானும் உடன் பதில் கூறாது அவரை சாந்தப்படுத்தி, பின்னர் பெரிய தம்பிரானைக்கு தான் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியதை உரைத்தான். வீரபத்திரர் அவன் செய்கையைப் பாராட்டி, “நீ காப்பாற்றிய பெரி தம்பிரானை உங்கள் குல தெய்வமாகக் கொண்டு வணங்கி நன்மைகள் பெறுங்கள்” எனக் கூறிச் சென்றார். அன்றிலிருந்து வண்ணார் பெரியதம்பிரானை குலதெய்வமாக ஏற்று வணங்கி வருகிறார்கள்.
பெரயிதம்பிரானை போற்றுதல் செய்து பாடும் பாடல்களில்,
“தூய வள நகர் தனில் சூரிய வம்சத்தில்
தொண்டரென வந்துலகை யாண்ட தெய்வம் நீ
ஐயுமறவே பாண்டியன் தன்னையும் வென்ற சிறை
ஆறிரண்டாயிரம் கொண்டு வந்த தெய்வம் நீயே
கொண்டு வந்த இருவாயிரம் பன்னிரெண்டாயிரம்
குடியேற்றம் செய்த நீயே”
என அமைந்துள்ளமை கவனத்திற்குரியது. பெரியதம்பிரான், பாண்டியன் தன்னையும் வென்ற சிறை ஆறிரண்டாயிரம் கொண்டு வந்த தெய்வம், கொண்டு வந்த இருவாயிரம் பன்னிரெண்டாயிரம் இலங்கையில் குடியேற்றம் செய்த தெய்வமாக கூறப்படுகிறது.
நீலாசோதையன் பற்றிய மரபுக் கதைகள், காவியங்கள்
நீலாசோதையன் காவியத்தில், நீலாசோதையன் தோற்றம் பற்றி விபரிக்கப்படுகிறது. இது பற்றி விபரிக்கும் இரா.வை. கனகரெத்தினம், “நீலாசோதையனின் தயார் யசோதை. நீலாசோதையனும் பெரியதம்பரானும் ஒரே ராசியில், ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ஆகவே இருவரும் ஒரே குணத்தை உடையவர்கள். பெரிய தம்பிரானுக்கு என்ன நடக்குமோ அதெல்லாம் நீலாசோதையனுக்கும் நடக்கும். பெரிய தம்பிரானின் 1000 துலாம் கோடி கொண்ட தண்டாயுதத்தினை, நீலாசோதையன் நொடிப்பெழுதில் தூக்கியதைக் கண்ட பெரிய தம்பிரான்> தன்னையொத்த வல்லமை கொண்ட நீலாசோதையனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று அவரைத் தன் மந்திரியாக நியமித்துக் கொண்டார்.” எனக் குறிப்பிடுகிறார்.
நீலாசோதையன் காவியத்தில், வலவை நகரை பெரிய தம்பிரான் அரசராகவும், நீலாசோதையன் அமைச்சராகவும் இருந்து ஆட்சி புரிந்தமை, பாண்டிய அரசன் ஆறாயிரம் பேரை சிறுப்பிடித்துச் சென்றமையை அறிந்து பாண்டி நாட்டுக்குச் சென்று பாண்டியனை பயமுறுத்தி, சிறைப்பிடித்துச் சென்ற ஆறாயிரம் பேருடன் மேலும் ஆறாயிரம் பேரையும் திறைகளையும் திரவியங்களையும் பெற்று வந்தமை பற்றி விபரிக்கின்றது. அத்துடன், தென்னிந்தியாவிலிருந்து வந்த பிராமணனை நீலாசோதையன் பிடித்தமையும் நீலாசோதையன் முதன் மந்திரியாக்கப்பட்டமையும் விபரிக்கப்படுகிறது.
இவர்கள் இருவர் பற்றிய மற்றொரு மரபுக் கதையானது, பாண்டிய மன்னன் இங்கு வந்து ஆறாயிரம் பேரைச் சிறை பிடித்தச் சென்றதை அறிந்து, அவர்கள் இருவரும் பாண்டியனின் பதியை அடைந்து, பாண்டியன் முன் தங்கள் பலத்தைக் காட்டி, பாண்டியனை அஞ்சி நடுங்கச் செய்து, பாண்டியன் பிடித்துச் சென்ற ஆறாயிரம் கைதிகளோடு மேலும் ஆறாயிரம் கைதிகளையும் பெற்றுக் கொண்டு நாடு திரும்பினர். நாட்டைச் சிறப்பாக ஆட்சி செய்து நீண்டகாலம் வாழ்ந்து, சிவப்பேறு அடைந்தனர். என அமைகிறது. பன்னீராயிரம் பேரும் கைதிகள் எனவும் படைவீரர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.
மற்றொரு மரபுக்கதையானது, தென்திசையிலிருந்து இலங்கை வந்த பிராமணன், “தன் நாட்டை வண்ணான் ஆள்வதைக் கண்டு பொறுக்க முடியாதவனாகி ஆத்திரமுற்று அவர்களை அழிக்கப் பேய், காளி முதலான தேவைதைகள் பலவற்றை அனுப்பி வைத்தான்” எனவும் நீலாசோதையன் பார்ப்பனையும் அவன் அனுப்பிய பேய், காளிகளையும் அழித்தான் எனவும் கூறுகிறது. “பார்ப்பணனிடமிருந்து தன் நாட்டைக் காப்பாற்றியமையையிட்டு, நீலாசோதையனை என்றும் தனக்குச் சமமானவராகக் கருதி தன் முதல் மந்திரியாக வைத்திருந்து நாட்டில் எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்புடன் ஆட்சி பரிபாலனம் செய்து வந்தார்” எனவும் கூறுகிறது.
பெரியதம்பிரான் மற்றும் நீலா சோதையன் தொடர்பில் மக்கள் மத்தியில் புழக்கத்திலுள்ள மரபுக் கதைகள், காவியங்கள், சிற்றிலக்கியங்கள் போன்றன பெரிய தம்பிரானை வலவை நகர அரசன் எனவும் பெரிய தம்பிரானுடன் இணைந்துள்ள நீலா சோதையனை பெரியதம்பிரானின் அமைச்சன் எனவும் குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தோன்றாலாம். ஆயினும் கிராமியத் தெய்வங்கள் தொடர்பில் அத் தெய்வங்களுடைய சமூகப் பரிமணாம் – சமூகப் பெறுமானம் முக்கியமானதாக அமைவதனால் அவ்வாறு கருதி ஆய்வு செய்வது முக்கியமானதொன்றாக அமையும் என்றே கருதவேண்டியுள்ளது.
அதே வேளை, குல தெய்வம் எனக் கருதப்படும் தெய்வங்கள் “ஒரு குறிப்பிட்ட மூதாதையரின் மரபின் வழிவந்தவர்கள், அவர்களுடைய முன்னோர்களில் சிறந்து விளங்கியவர்களை வணங்கும் வழக்கத்தினை கொண்டுள்ளார்கள். இந்த வழிபாடு முறைக்கு குல தெய்வ வழிபாடு என்று பெயர்” என்பதாக அமைகிற போது இவ்வாய்வு பல சமூக விடயங்களை இனங்கண்டு கொள்ள உதவும் என்ற வகையிலும் இவ்வாறான ஆய்வு முக்கியமானதாக அமையும்.
பெரிய தம்பிரான் ஆலயங்கள்
பெரிய தம்பிரான் ஆலயங்கள் கொட்டில்கள்- பந்தல்கள், கட்டடங்களாகவும் அமைந்துள்ளன. ஓலை வேய்ந்த கோவில்களில் பரிபால தேவர்களுக்கு பீடங்கள் இல்லை, வேள்விகளின் போது சிறு பந்தல்கள் அமைக்கப்படும். கட்டடங்களாக அமைந்த கோவில்களில் பரிபால தேவர்களுக்கு பீடங்கள் உள்ளன.
பெரிய தம்பிரான் கோவில்களில் படிம முறையில் அமைந்த விக்கிரகங்கள் இல்லை. பல ஆலயங்களில் சூலமும், சில ஆலயங்களில் உருவங்கள் அற்றும் இருக்கின்றன. விதிவிலக்காக கோட்டைமுனை ஆலயத்தில் பெரிய தம்பிரானுக்கும் நீலாசோதையனுக்கும் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன என இரா.வை. கனகரெத்தினம் குறிப்பிடுகிறார். மட்டக்களப்பு – புன்னச்சோலையில் நீலாசேதையனுக்கு சிறுகோவிலுண்டு. இதில் வேல் வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பெரிய தம்பிரான் வடிவங்களாக பீட வடிவம், சூல வடிவம், முகக்களை வடிவம்(கழுத்துக்கு மேல் தோற்றத்தை மரத்தில் – உலோகத்த தட்டில் வடித்தல்), கதையில் செய்த வடிவம் என்பன அமைகின்றன.
பரிவார தேவர்களாக வீரபத்திரர், கட்டாடிமார், முதலிமார் நரசிம்மர், காளி, பேய்ச்சியம்மன், நாககண்ணி, நாகதம்பிரான், முருகையன், வயிரவர், வதனமார் முதலான தெய்வங்கள் அமைந்துள்ளன.
பெரியதம்பிரான் வழிபாட்டு முறை – வேள்வி
மட்டக்களப்பில் நிலவும் பெரியதம்பிரான் வழிபாட்டு முறைகள் இரா.வை.கனகரெத்தினம் தனது கட்டுரையில் விபரித்திருக்கிறார்.
பெரிய தம்பிரான் சடங்கு அல்லது கிரியை முறைகளை வகுத்துக் கூறும் பெரியதம்பிரான் பத்ததி, கட்டாடி முதலிமார் பத்ததி என இருவகையான பத்ததிகள் அல்லது பத்தாசிகள் உள்ளன. இவற்றில் பெரிய வேறுபாடுகள் இல்லை எனக்கூறப்படுகிற போதிலும், பெரிய தம்பிரான் பத்ததியில் உயிர்ப்பலி, மதுபானம் இடம் பெறுவதில்லை. கட்டாடி பத்ததி முறையில் பூசாரியார் சிவப்புக் கோட்டும் கவாயும் அணிவார். நோர்ப்புக் கட்டியெறிவார். சில பலிகளும் இடம் பெறுவதுண்டு.
பெரியதம்பிரான், வேள்வியில் தோன்றியவர் என்பதானால் பெரிய தம்பிரான் சடங்கு வேள்வி எனப்படும். வேள்வி ஆடி மாதத்தில் நடைபெறும். சடங்கு நடைபெறும் நாட்கள் இடத்திற்கிடம் வேறுபடும். பெரிய தம்பிரான் வேள்வி நடைபெறும் போது அயிலிலுள்ள ஏனைய கோவில்களில் சடங்கு நடைபெறுவதில்லை. வேள்வியை கட்டாடிமாரே செய்வர். பிராமணர்கள் பெரிய தம்பிரானின் எதிரிகள் எனக்கருதப்படுவதால் பிராமணர்களை பூசை செய்ய அனுமதிப்பதில்லை. பெரிய தம்பிரான பத்ததியும், “காளியர் கையினால் செய்யும் பூசையை ஒப்புக் கொள்வானே ஒழிய வேறு எவன் செய்யும் பூசையையும் ஒப்புக் கொள்ள மாட்டான்” எனக்குறிப்பிடுகிறது.
பெரியதம்பிரான் வேள்வியில் பூசாரியார அல்லது கட்டாடியார், தேவாதிகள் அல்லது தெய்வம் ஆடுபவர்கள், பானை எடுப்போர் முக்கியம் பெறுவர். சுற்றுப்புறங்களைச் சுத்தம் செய்தல்(சுத்தாங்கம் செய்தல்), கதவு திறத்தல் போன்ற முறைகள் காணப்படுகின்றன.
தாளங்குடாவில் அமைந்துள்ள ஆலய வழிபாட்டில், கவடா வீட்டிலிருந்து பண்டங்கள் எடுத்து வரல், காவியம் பாடுதல் போன்ற முறைகள் காணப்படுகின்றன.
மறவன்புலோ மத்தி நித்தர்புலம் (நீலசோதி) பெரியதம்பிரான் ஆலயத்தில், மந்திரங்கள் எதுவும் கூறாமல் மௌன பூசையே நடைபெறுவதுண்டு. முன்னைய காலங்களில் பல்லியிடம் கட்டளை கேட்டுப் பொங்கல் பொங்கும் முறை காணப்பட்டுள்ள போதிலும், காலப்போக்கில் அந்த முறைகள் அருகிப் போய் விட்டன. எனினும், தற்போதைய காலத்திலும் கூட பறை மேளம் அடித்து, பெரிய வீடு என்று கூறப்படும் இடத்திலிருந்து மடைப்பண்டம் எடுக்கும் முறை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மடைப்பண்டம் எடுத்தல் போலவே இந்த ஆலயத்தில் மடை பரவும் முறையும் இன்று வரை காணப்படுகின்றது என்ற தகவல்களை பெறமுடிகிறது.
இவ்வழிபாட்டு முறைகள் வட-கிழக்குப் பகுதிகளின் பண்டைய சமூக நிலைமையையும் பண்பாட்டம்சங்களையும் எடுத்துக் காட்டுவனவாகவும் இருக்கின்றன. இவ்வழிபாட்டு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் கிழக்கிலும், வடக்கில் சில இடங்களில் பாரம்பரிய அம்சங்களை நினைவுறுத்தவனாக இன்றும் நிலவுகிறது.
உசாத்துணைகள்.
கனகரெத்தனிம், இரா.வை., (1997) நாட்டார் வழக்காற்றில் பெரியதம்பிரான் வழிபாடு-மட்டக்களப்பு பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, போராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களின் மணி விழா மலர், மணிவிழாக்குழு, கண்டி.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், (2009) இந்துக் களஞ்சியம் தொகுதி – பத்து (ப-பௌ) இலங்கை
சைவப்புலவர்.எஸ். தில்லைநாதன், “மட்டக்களப்பில் இந்து கலாசாரம்”இ மணிமேகலை பிரசுரம்,முதல் பதிப்பு (2006)
http://nadarhistoricalcentre.blogspot.com/2013/07/blog-post_17.html
http://www.maravanpulo.com/?p=3275&