• முகப்பு
  • மீட்சி
  • Projects
  • கலை
  • சமூகம்
  • அரசியல்
  • இலக்கியம்
  • அரசியல்
  • வழிபாடு
  • தொடர்புகளுக்கு
  • Subscribed Donations
Meedsi © All rights reserved.
+94 77 008 3912
  • மீட்சி
  • Projects
  • தொடர்புகளுக்கு
Meedsi Meedsi
  • முகப்பு
  • அரசியல்
  • சமூகம்
  • வரலாறு
  • வழிபாடு
  • கலை
  • இலக்கியம்
Subscribed Donation
Meedsi

பெரியாரியத் தத்துவமும் பெண்ணியமும் – அ.ராமசாமி

Home / அரசியல் / பெரியாரியத் தத்துவமும் பெண்ணியமும் – அ.ராமசாமி
By Vijey Edwin inஅரசியல், சமூகம், சமூகம், பிரதான கட்டுரைகள்

[அன்னை தெரேசா பல்கலைக்கழகமும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து திண்டுக்கல் எம்.வி.எம் பெண்கள் கல்லூரியில் நடத்தும் திராவிட இயக்கமும் இலக்கியமும் என்ற கருத்தரங்கிற்கு எழுதப்பட்ட கட்டுரை.]

பெண்ணியம் குறித்த விவாதங்களின் போது பெண்ணியம் என்பது இந்தியச் சூழலுக்குப் பொருத்தமற்ற ஒன்று என்பதாகவும், அதனால் பொருட்படுத்திப் பேசப்பட வேண்டியதே இல்லை என்பதாகவும் வாதங்கள் முன் மொழியப்படுவதை நான் கேட்டிருக்கிறேன்; நீங்களும் கேட்டிருக்கலாம். இத்தகைய கூற்றுகள்; உண்மையான நிலையைக் கண்டு கொள்ளாமல், ஒதுக்கி விடுவதால் அந்தப் பொருளை ஒழித்து விட முடியும் என்ற நம்பிக்கை உடையவர்களின் கூற்றுகள் எனலாம். காலனிய ஆட்சிக்காலத்தில் பரவி, பின்காலனிய இந்திய சமூக வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சொல்லாடல்களுள் பெண்ணியம் முதன்மையானது என்று கூடச் சொல்லலாம். சமூக விடுதலை பேச வந்த இந்தியச் சிந்தனையாளர்கள் பலரும் பெண் விடுதலையை முன்மொழிய வேண்டியவர்களாக இருப்பது கண்கூடு. பெரியாரும் கூடச் சமூக விடுதலையை முன்னெடுக்கும் விதமாகவே பெண்ணியத்திற்குள் நுழைந்துள்ளார்.

மகளிரியலும் பெண்ணியமும்

இன்று கல்விப்புலங்களில் பேசப்படும் பெண்ணியம் பற்றிய சொல்லாடலில் இரண்டு கட்டங்கள் உண்டு. முதல் கட்டத்தை மகளிர் இயல் [Women studies] என்ற கலைச்சொல்லால் குறிக்கலாம். மகளிரியலைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குள் நுழைவதே பெண்ணியம். சிந்தனையைத் தீர்மானிப்பதில் வரலாற்று வாதத்திற்கு முக்கியப்பங்குண்டு என்பதை ஒத்துக் கொள்பவர்கள் பெண்ணின் இருப்பைப் பேசுவது வரையிலான சொல்லாடல்களை மகளிரியல் என வரையறை செய்கின்றனர். இப்போதுள்ள இருப்பிலிருந்து மாற்றம் வேண்டும் என்பதற்கான சொல்லாடலை முன்னெடுப்பதை பெண்ணியம் என்று வரையறுக்கின்றனர். ஒரு பெண் உயிரியாக இருக்கிறாள், பொறுப்போடு பணிகளைச் செய்கிறாள், வலியும் துயரம் கலந்ததாக இருக்கிறது அவளது வாழ்க்கை, அதற்கான அடிப்படை வசதிகளும் அங்கீகாரமும் இல்லை என்ற எல்லைக்குள் நின்று பேசுவதெல்லாம் மகளிரியல் சார்ந்த சொல்லாடல்கள். அதிலிருந்து மாறுபட்டதாக அடுத்த கட்டத்திற்கு நகர்வதாகப் பெண்ணியம் இருக்கிறது.

பெண் என்னும் உயிரியைத் தனித் தன்னிலையாக அங்கீகரிக்க மறுக்கும் போக்கு, அவளது தன்னிலையில் பெரும்பாதியைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அவளை அடக்குதல், அவளுக்கெனத் தனியான மனம், உடல் என உண்டு என்பதை ஏற்காமல், தனது உடலின் இன்பமே அவளின் உடலின்பம், தனது விருப்ப நாட்டமே அவளின் விருப்ப நாட்டம் என்பதாகக் கருதும் மேலாண்மை போன்றவற்றில் ஆண்களின் அதிகாரம் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதில் பெண்ணியம் தனியாகப் பரிமாணம் கொள்கிறது. அதனால், ஆணின் அதிகாரத்திற்கெதிராகப் போராட வேண்டியதை அது வலியுறுத்துகிறது. ஆணின் அதிகாரத்தை உறுதி செய்த மரபுகளையும், கருத்துக்களையும், அவற்றை உருவாக்கிய சமய, சமூக நிறுவனங்களை மறு விசாரணை செய்கிறது. இலக்கியங்கள் கூட அத்தகைய புனைவுகளைச் செய்து தன்னை அடிமைப்படுத்த உதவியதாகக் கருதும் நிலையில், அதன் இயல்புகளையும், வெளிப்பாட்டு முறைகளையும் கட்டுடைத்து அவற்றின் ஆண் சார்புத் தன்மையை வெளிச்சம் போடுகிறது. அந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டிய நிலையில் ஆண் துணையின்றித் தனியாகப் பெண்ணால் வாழ்வதும் சாத்தியம் என நிருபிக்கும் முயற்சி களையும் மேற்கொள்கிறது பெண்ணியம். தாராளவாதப் பெண்ணியம், பொருளாதார வாதப் பெண்ணியம், சமத்துவப் பெண்ணியம், தீவிரநிலைப் பெண்ணியம் என்பனவற்றை வகைகளாகப் பார்க்காமல், பெண் தன்னிலை உணர்தல், சமத்துவத்தைக் கோரல், உரிமைகளை வேண்டல், தனித் திருத்தலைப் பேசுதல் என வளர்ச்சியின் பரிணாமங்களாகப் பார்த்தால் சுலபமாகப் புரியக் கூடிய ஒன்று தான்.

ஈ,வெ.ராமசாமியின் காலத்திற்கு முன்னும் பின்னும் இந்தியப் பெண்களைப் பற்றிப் பேசிய ராஜாராம் மோகன் ராய், மோகன் தாஸ் காந்தி, விவேகானந்தர் போன்றவர்கள் மகளிரியல் என்ற வரையறைக்குள் நிற்கத் தக்க கருத்துக்களைச் சொன்னவர்கள்.

தமிழில் பாரதியார் கூட மகளிரியலின் கடைசி அத்தியாயமான மகளிர் மேம்பாடு என்ற சொல்லாடலை உரைநடைகளில் அதிகம் பேசியுள்ளார். ஆனால் அவரது கவிதைகளில் வெளிப்படும் நிலைப்பாடு முற்றிலும் வேறானது. பெண்ணின் சுதந்திர மனநிலையையும், கல்வியால் அவள் வாழ்க்கை அடையக் கூடிய மாற்றம் பற்றியும் பேசி, ஆண் – பெண் சமத்துவத்தை நோக்கி நகரும் பெண்ணியத்தின் முதல் அத்தியாயத்தைத் தெளிவாகத் தொடங்கி வைத்தவர் கவி பாரதி.

ஆனால், ஈ.வெ.ராமசாமி அவர்களோ, பெண்ணியத்தின் கடைசி அத்தியாயம் வரை சென்று, ஆண் துணையற்ற வாழ்க்கை பற்றியும், குடும்ப அமைப்பைக் குலைப்பது பற்றியும் பேசியிருக்கிறார் என்பது கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. அவர் பேசிய அனைத்தும் சாத்தியங்களா? என்ற விவாதங்களுக்குள் நுழைவதற்கு முன் அவர் பேசியிருக்கிறார் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். ஐரோப்பியப் பெண்ணியலாளர்கள் சொன்ன அதே கருத்தை, தமிழக மேடைகளில் பேசும் புரிதலும், அதற்கு வரும் எதிர்வினைகளுக்குப் பதில் சொல்லும் ஆற்றலும் தைரியமும் அவருக்கு அப்போதே இருந்திருக்கிறது. தான் பேசுவதற்கு மாறான வாழ்க் கையை மேற்கொள்ளாமல், எழுத்தையும், பேச்சையும், வாழ்க்கையையும் ஒன்றாகப் பாவிக்கும் மனோபாவமும் அவரிடம் வெளிப்பட்டிருந்தது என்பது வியக்கத்தக்க ஒன்று. ஆனால் அவரால் வழி நடத்தப்பட்ட திராவிட இயக்கங்களின் தலைவர்களும் தொண்டர்களும் அத்தகைய பார்வையுடையவர்களாக வளரவில்லை என்பதும் உண்மை. அவரிடமிருந்து பிரிந்து சென்றவர்களின் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை என்பது ஓரளவு உண்மையாக இருந்த போதிலும், அவர்களை அப்படி வளர்த்தெடுப்பதில் பெரியாரியம் பங்காற்றவில்லை என்பதும் ஒத்துக் கொள்ள வேண்டிய ஒன்று தான். அவரிடமிருந்து விலகியவர்கள், எல்லாவற்றிற்கும் அவரையே துணைக்கழைக்கிற போது நிகழ்காலத்தின் மீது வைக்கும் விமரிசனத்தை அவரிடமிருந்தே தொடங்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

பெரியாரியப் பெண்ணியம்

சமூகநீதியை முன்வைத்தே ஈ.வெ.ராமசாமி பெண்ணியத்துக்குள் நுழைந்தார் என்பதை அவரது பேச்சிலிருந்தே நாம் காட்ட முடியும். இந்தியாவில் நடக்க வேண்டிய மாற்றங்களுக்கான முன்நிபந்தனைகளாகப் பேசும் போது இப்படிச் சொல்கிறார். அவரது வாசகங்களை ஒரு முறை வாசிக்கலாம்;

அந்நிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும் ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதி யுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ளவும் வேண்டுமானால், முக்கியமாகவும், அவசர மாகவும் ஒழிக்கப்பட வேண்டியதாகவுமிருக்கும் கொடுமைகள் இரண்டுண்டு. அவைகளில் முதலாவதாக எதுவென்றால், இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும் உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதாகும். இரண்டாவது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தை, அடியோடு பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாகவே இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்து வதாகும். ஆகவே மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவில் இனி அரைகணம் கூட இருக்க விடாமல் ஒழித்தாக வேண்டியவைகளாகும்.[பெண் ஏன் அடிமையானாள்- சொத்துரிமை, 51]

இன்றுள்ள அறிவாளிகளால் தலித்தியம், பெண்ணியம் எனப் பெயரிட்டு விவாதிக்கும் சொல்லாடல்களைச் சரியாகவே அடையாளப்படுத்திய முன்னோடியாக பெரியாரை அடையாளப்படுத்தும் பகுதி இது. பாரதியின் கவிதைகளிலும் இவ்விரு விடுதலையின் கீற்றுக்கள் உண்டு என்றாலும் சரியான புரிதலோடும், தர்க்கங்களோடும் விவாதித்தலில் பெரியார் முன்னிலை பெறுகிறார் என்று தான் சொல்ல வேண்டும் பெண்கள் பற்றிய பெரியாரின் சொல்லாடலில் மூன்று நிலைகள் உண்டு.

  1. பெண்களைச் சுற்றிப் பின்னப்பட்ட கருத்தியல் மற்றும் புனைவுகளைத் தகர்த்து   அவர்களின் தன்னிலையை உணரும்படி செய்தல்
  2. பெண்கள் ஆணின் துணையின்றி தனித்து இயங்கக் கூடியவர்களாக ஆக வேண்டும் என்றால் சொத்துரிமையைக் கோர வேண்டும் என்று வலியுறுத்துதல்
  3. முழு உரிமையை நோக்கி நகரும் பயணத்தை அடையாளப்படுத்தல் என்பதாக அம்மூன்றையும் வரையறை செய்யலாம்.

முதல் சொல்லாடலில் அவர் கற்பு, காதல், விபச்சாரம், விதவை என்ற பெண்கள் சார்ந்த சொற்களின் பின் மறைந்திருக்கும் ஆணின் சுயநலத்தையும், பெண்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கமும் இருப்பதை எடுத்துக் காட்டி விளக்கியுள்ளார். பெண் விடுதலைக்கு முன்பாக சமத்துவக் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பெரியார், அதற்குத் தடைகளாக இருக்கும் கருத்தியல்களைக் கைவிட வேண்டும் என விரிவாக விளக்குகிறார்.

கற்பு, காதல் இரண்டின் மீது பெரியார் வைத்துள்ள விமரிசனங்கள், இன்றளவும் மறுக்கப்படாத விமரிசனங்கள் எனலாம். புனிதம் என்ற சொல்லோடு சேர்த்து வைத்துப் பேசப்படும் கற்பும், காதலும் ஆண்களால் புனையப்பட்ட சுயநலச் சொல்லாடல்கள் என்பதை விளக்கும் பெரியார், இப்படி எழுதுகிறார்; அதுபோல பெண்களைப் பற்றிய தர்ம சாஸ்திரங்கள் என்பதும், பெண்களைப் பற்றிய நூல்கள் என்பதும் பெண்களால் எழுதப்பட்டிருக்குமானாலும் அல்லது வியாக்கியானம் செய்யப்பட்டிருந்தாலும் கற்பு என்பதற்கு ‘‘பதிவிரதம்’’ என்கின்ற கருத்தை எழுதியிருப்பார்களா? என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். [பெண் ஏன் அடிமையானாள், கற்பு, ப.8]

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை. அதாவது தனதிஷ்டத்தை- திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்களென்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது. [பெண் ஏன் அடிமையானாள், – காதல,20] பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து, நினைத்து, ஆசைப்படுவதும், ஒன்றிடம் – பலவற்றினிடம் அன்பு வைப்பதும், நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும். அதுபோலவே, மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக் கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ள முயல் வதும் இயற்கை யல்லவா..?[ பெண் ஏன் அடிமையானாள், காதல -23]

பெரியாரின் எழுத்து வெறும் விளக்கமாக மட்டுமே இல்லாமல் தொடர்ந்து கேள்விகளையும் எழுப்பிக் கொண்டேபோகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். விபச்சாரி என்ற சொல்லாடல், பெண்ணுக்கு மட்டுமே இருப்பது பற்றிப் பேசும் போது, மனித சமூகத்திற்கென்று பொதுவாகச் சில கட்டுப்பாடுகளும் ஒழுங்கும் வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அடியோடு ஆட்சேபிக்க வரவில்லை. ஆனால், அவை தனிப்பட்டவர்கள், அதாவது, ஆண்டான் – அடிமை முறை, எஜமான் – கூலி, முதலாளி – காரியஸ்தர் முறை,சி நேகிதர்கள் முறை போன்ற தன்மைகள் கொண்ட அதாவது தனிப்பட்ட சம்பந்தங்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகிய ஒழுங்கு, கட்டுப்பாடுகள் போல பொது வாழ்விற்குப் பொதுக் கொள்கைகளாயிருக்கக் கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் என்பன பொது ஜனங்களில் யாருடைய தனி சுதந்திரத்திற்கும் பாதகம் ஏற்படாததாகவும், அதுவும் பிரயோகத்தில் சிறிதும் ‘பாரபட்சம், உயர்வு, தாழ்வு‘ ஆகிய பேதத் தத்துவம் கொண்ட தல்லாததாகவுமிருக்கவேண்டும். அப்படிப்பட்டவைகளும் கூட மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் சிறிதும் பாதகமுண்டு பண்ணாத தாகவுமிருக்க வேண்டும். நியாயமான என்ற தானாலேயே எது நியாயம் என்பதற்கு ‘தர்மசாஸ்திரங்களை’த் தேட வேண்டு மென்பது கருத்தல்ல. என்று விளக்கியுள்ளார்.

தொடர்ந்து விதவை மணத்தையும் விவாகரத்தின் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசும் பெரியார் [ப.40] விதவைகளின் மணம் தவிர்க்கக் கூடாத ஒன்று என்பதையும் சொல்கிறார். அமைதியுடன் தங்களுடைய உண்மையான கருத்தைத் தங்களின் பெற்றோர் அல்லது போஷகர்களான ஸ்திரீ புருஷர்களிடம் தைரியமாய்ச் சொல்லிவிட வேண்டும். அவர்கள் அதைக் கவனிக்காவிட்டால், தாங்களே ஒரு யோக்கியமான புருஷன் கிடைத்தால் விவாகம் செய்து கொள்ளட்டும். விதவைகளின் போஷகர்கள் இதைச் சரிவரக் கவனியாவிடின், பின்னால் பச்சாதாபப் படுவார்கள். [விதவைகளின் நிலை 48-49] போலியாகக் கட்டப்படும் புனிதக் கருத்தியல் களிலிருந்து விடுபடுதலோடு தங்களை நிலை நிறுத்தக் கொள்ள பெண்கள் சொத்துரிமையைக் கோரவேண்டும் என்கிறார் பெரியார். சொத்துரிமையே பெண்களைத் தனித்தியங்கும் ஆற்றல் உள்ளவர்களாக ஆக்கும் என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறார். பெண் விடுதலையோடு ஆண்களின் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் கல்யாண விடுதலையை – விவாகரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதும் பெரியார் சொன்ன முக்கியமான கருத்தாகும். பெரியார் சொன்ன கருத்துக்களில் அவர் பெண்களின் கர்ப்பப் பையை நீக்குதல் பற்றிச் சொன்னது அதிர்ச்சியூட்டும் ஒன்று என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், தனி மனித சுதந்திரத்தை மையமாகக் கொண்டு சிந்திக்கும் ஒருத்தி, தனது சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் எல்லாவற் றையும் விட்டு விடலாம் என்பதையே புரட்சிகரப் பெண்ணியலாளர்கள் முன் வைக்கின்றனர்.

உலகத்தின் விருத்திக்காக பெண்கள் மட்டும் ஏன் வருத்தப் பட்டுப் பாரம் சுமக்க வேண்டும் என்கிற கேள்வி, தான் ஆண் என்கிற ஆதிக்க உணர்வோடு நடந்து கொள்ளும் ஆண்களை நோக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வெடிகுண்டு என்றே சொல்லலாம். பெண்களின் விடுதலை ஆண்களின் ஆண்மை அழிதலில் தான் சாத்தியம் என்பதை விளக்கும்விதமாக அவர் சொன்ன வார்த்தைகள் வருமாறு; தவிர, பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், உலகம் விருத்தியாகாது, மானிட வர்க்கம் விருத்தியாகாது என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்யாகாவிட்டால், பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்தத் தர்ம நியாயம் (அதாவது மக்கள் பெருக்கமடையாவிட்டால்) பேசுபவர்களுக்குத் தான் என்ன கஷ்டம் உண்டாகிவிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிடவர்க்கத்தால் ஏற்பட்ட நன்மை தான் என்ன என்பதும் நமக்குத் தெரியவில்லை. பெண்களின் அடிமைத் தன்மை, பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணர்வதில்லை.ஆனால் நாம் இச்சமயத்தில் அதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ள வில்லை. பெண்களைப் பற்றிக் கவலை கொண்டே சொல்கிறோம். பெண்கள் விடுதலைக்கு ‘‘ஆண்மை’’ அழிய வேண்டும் [ப.63-64]

பெண் விடுதலை பெண்களால் மட்டுமேபெண்கள் தங்கள் நிலையை உணர்தல் வேண்டும் என்பதில் தொடங்கி, புனிதங்களை கைவிட்டு, சொத்துரிமைக்காகப் போராடி, அடையும் விடுதலையை பெண்கள் முன்னின்று நடத்தும் இயக்கத்தால் தான் சாதிக்க முடியும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும் முயற்சிகளும் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு போலிப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும்- எவ்வழியிலும்- பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது.

தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல், மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத் தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டே போகும் என்பது நமது அபிப்பிராயம். ஆண்கள் வழியாக விடுதலை வரும் என எதிர்பார்க்கக் கூடாது; எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாகத்தான் சொன்னார் பெரியார். அந்த எச்சரிக்கை அப்படியே பலித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் யதார்த்தம். இந்திய நவீனத்துவத்தின் முன்னோடிகளான அம்பேத்கர், நேரு, பெரியார் ஆகியோரைப் பின்பற்றும் கட்சிகளே இன்று ஆட்சியில் உள்ளன. அவர்கள் சமத்துவ இடத்தை உறுதி செய்வதற்குப் பதிலாக 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்குக் கூட வகை செய்ய முடியாமல் – முயலாமல் இருப்பதில் அவர்களின் விருப்பமும் அடிமை கொள்வதில் தான் இருக்கிறது என்ற முடிவுக்குத் தானே இட்டுச் செல்கிறது.

30
Like this post
91 Posts
Vijey Edwin
  • கலைக்கோட்டன் அ.இருதயநாதனின்  எழுதிய “அமேசன் காட்டில் அழகன் பூசாரி”, “உணர்வுகள்”  வெளியிடப்பட்டது.
    Previous Postகலைக்கோட்டன் அ.இருதயநாதனின் எழுதிய “அமேசன் காட்டில் அழகன் பூசாரி”, “உணர்வுகள்” வெளியிடப்பட்டது.
  • Next Postகளுவாஞ்சிக்குடியில் நாவல் மற்றும் சிறுகதை தொகுதி என இரு நுால்கள் வெளியீடு
    கலைக்கோட்டன் அ.இருதயநாதனின்  எழுதிய “அமேசன் காட்டில் அழகன் பூசாரி”, “உணர்வுகள்”  வெளியிடப்பட்டது.

Related Posts

முறுத்தானைக் கிராம மாணவர்கள் கல்வி கற்க உதவுவோம்
projects சமூகம் சமூகம்

முறுத்தானைக் கிராம மாணவர்கள் கல்வி கற்க உதவுவோம்

Brian Chen அவர்களின் நிதி உதவியில் அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதார உதவி…
projects சமூகம்

Brian Chen அவர்களின் நிதி உதவியில் அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதார உதவி…

மீட்சியின் செயற்றிட்டங்கள் – மார்ச் , 2023.
projects சமூகம்

மீட்சியின் செயற்றிட்டங்கள் – மார்ச் , 2023.

மீட்சி…
projects சமூகம் பொது

மீட்சி…

Leave a Reply (Cancel reply)

Your email address will not be published. Required fields are marked *

*
*

Contact us

Director,

14 Elm Road, Chessington, Surrey, KT9 1AW,

UNITED KINGDOM.

tel : +44 7827911279

Contact Us

Coordinator,

Main street, Kiran,

SRI LANKA.

tel: +94 77 008 3912

Contact us

email

[email protected]

optimised

Copyright © 2020 Meedsi. All rights reserved.

Copy