தமிழர் மத்தியில் இசை கிளைவிட்ட முறைமை
யாழ்பல்கலைக் கழகத்தில் நடந்த நினைவுப்பேருரை அனுபவங்கள். – பேராசிரியர் சி.மௌனகுரு
முதலில் என்னை அழைத்தமைக்கும் இப்படி வழமைக்கு மாறான முறையில் உரையை ஆற்றுகையாக வெளிப்படுத்த அனுமதித்த நினைவுப்பேருரைக் கல்விக்குழுவுக்கும் எனது மனம் நிறை நன்றிகள். பொதுவாக நினைவுப்பேருரைகள் பல்கலைக் கழகங்களில் ஒரு சடங்காகவே நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பேசும் பேச்சை அவர்கள் ஏற்கனவே பெற்று, சிறு பிரசுரமாக வெளியிட்டு, அதனை வந்தோருக்கு விநியோகிப்பர். அதில் நினைவுக்குரியவர் பற்றிய சிறு அறிமுகமும், பேருரை நிகழ்த்துபவர் பற்றிய சிறு அறிமுகமும் நிகழ்த்தவிருக்கும் உரையும் இடம் பெறும். உரை நினைவுப்பேருரைக்குரியவர் சார்ந்தும் இருக்கலாம், அல்லது அவர் ஈடுபாடு காட்டிய துறையாகவும் இருக்கலாம், அல்லது உரை நிகழ்த்துபவர் வேலை செய்யும் துறையாகவும் இருக்கலாம்.
இம்முறையும் இதுவே நடந்ததாயினும் எனது உரை ஓர் ஆற்றுகையாக நிகழ்த்தப்பட்டதுடன், ஆற்றுகை செய்யும் முறைமையும் ஆற்றுகைக்கான பாடல்களும் நூலில் இடம் பெற்றிருந்தன. இதனால் இதனை ஆற்ற விரும்புவோருக்கு ஓர் ஆற்றுகைப் பிரதி கிடைத்தது எனலாம். உண்மையில் ஆற்றுகையின் தலைப்பு தமிழர் மத்தியில் இசை கிளைவிட்ட முறைமை என்பதாகும்.
யாழ்பல்கலைக் கழகத்தில் ஓர் இசைத்துறை இருக்கிறது. அதில் கர்னாடக சங்கீதமும் பண்ணிசையும் கற்பிக்கப்படுகிறது. கர்நாடக இசையும், பண்ணிசையுமே தமிழர் இசை என்ற ஒரு கட்டமைப்பு அங்கு வேரூன்றி விட்டது. அதற்கான பண்பாட்டுப்பின்புலமும் அங்கு உண்டு. தமிழிசை என்பது ஒரு பேராறு. அது வரலாற்றினூடாக வெளியிலிருந்து வந்த பல இசை மரபுகளையும் தன் வயமாகிய வண்ணம் பல தரப்பட வளர்ந்துள்ளது. கோவிலுக்குள் பாடப்படும் இசைகளான கர்நாடக இசையும் பண்ணிசையுமே தமிழர் இசையாகக் கட்டமைக்கப்பட, கோவிலுக்கு வெளியே மக்கள் மத்தியில் நிலவிய நாட்டாரிசை, கூத்திசை, இசை நாடக இசை, சிறு தெய்வக்கோவிலில் இசைக்கப்படும் கரண இசை, பின்னாளில் பிரபலமான சினிமா இசை, மெல்லிசை என்பன தமிழிசையாகத் தமிழிசை வல்லுநர்களால் ஏற்கப்படுவதில்லை. எனது உரையிலும் ஆற்றுகையிலும் நான் தமிழிசையின் பன்மையை அழுத்தினேன்.
ஆரம்பத்தில் திரை பிடிபட்டு இருக்கும். திரைக்குப்பின்னால் ஒரு பெண் நிற்பாள். உரைஞரான நான் உரை ஆரம்பிப்பேன். தமிழர் இசை தமிழர் வாழ்விலிருந்து உருவாவது முதலில் தாலாட்டே எமக்குக் கேட்கும் முதல் இசை என்பேன். உடனே திரை தூளியாக மாற அப்பெண் தாயாக மாறித் தாலாட்டுவாள் ஏனையோர் உறவினராக அவளுடன் இணைவர். பிள்ளைகள் வளர அவர்களை ஊர்க்கோவிலுக்கு பெற்றோர் அழைத்துச் செல்வர். அங்கு அவர்கள் சடங்கிசை அல்லது கரண இசை கேட்பர் என நான் கூற, திரை நிக்கப்பட அங்கு செம்பேந்தி நிற்கும் இரு பெண்கள் செம்பெறிந்து மாரிஅம்மன் பாடலுக்கு ஆடுவர் இதுவோர் சடங்கிசையாகும். பின்னர் இறக்கும்போதும் நாம் இசையுடன் போகிறோம் என்று கூற, திரை நீளவாட்டில் கிடத்தப்படும். அதனை ஒரு ஆளாக உருவகித்து அதன் தலை மாட்டிலும் கால் மாட்டிலும் சிலர் அமர்ந்திருக்க தாய் ஒப்பாரி வைப்பாள்.
அதன்பின்னர் நான் 3000 வருட தமிழர் வரலாறு கூறி, மிகப்புராதன காலத்தில் காட்டில் மூங்கிலில் வண்டுகள் துளையிஒட்டிருக்கும் காற்று அதனூடாக வருகையில் ஓர் இசை பிறந்திருக்கும். அதனை கண்ணுற்ற ஒருவர் அதனை அப்படியே இசைத்திருக்கலாம் எனக்கூற, ஆற்றுகையளர் ஒருவர் வந்து கீழேகிடந்த புல்லாங்குழலை எடுத்து ஊதிப்பார்த்து அதன் சப்தம் கேட்டு வியப்படைந்து பின்னர் மெல்ல மெல்ல அதனை ஊத ஒரு பண் பிறக்கும். இதுவே குறிஞ்சிபண் அரிகாம்போதி. அரி எனும் வண்டு அந்த மூங்கில் கம்பில் துளைத்த ஓட்டைகளினூடு புறப்படும் ஒலி என விளக்கி அதில் அமைந்த பெரும்பாணாற்றுப்படையில் வரும் ஒரு காட்சி அந்த இசையில் நிகழ்த்திக்காட்டப்படும். ஒரு இடையன் ஆடுமாடுகள் மேய்த்து வருவதகவும், அவன் கூழ் காய்ச்சி குடிப்பதாகவும் புல்லாங்குழல் இசைப்பதாகவும் அக்காட்சி அமையும்.
இவ்வாறே புறநானூற்று வீரத்தாய், சிலப்பதிகார மாதவி கோவலன், பல்லவர்கால திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் என்போர் பண்ணிசை பாடி மேடையில் தோன்றுவர். அப்பர் சூலை நோய் வந்து துடிப்பார். சம்பந்தர் யாழ்ப்பாணருடன் யாழ்முறிப் பண்பாடி யாழை முறிப்பார். அதன்பின் சோழ காலதில் கம்பன் தனது இராமாயாணத்தை இசையுடன் அரங்கேற்றுவான். இரமாயணப்பாடல் ஒன்றுக்கு இராவணன் அபினயிப்பான். அடுத்த காலமான நாயக்கர் காலத்தில் குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் தமிழின் அழகொழுகப் பாடுவார். அதன் பின் அருணகிரிநாதர் சந்தத் திருப்புகழ் பாடுவார். பல்லவ காலத்தில் சிவனும் விஸ்ணுவும் பிடித்த இடத்தை இப்போது மீனாட்சியும் முருகனும் பிடித்துக்கொள்கிறார்கள். அடுத்து குறவஞ்சிப்பாடல், பள்ளுப்பாடல்கள், கூத்துப்பாடல்கள் எனச் சென்று முத்துத் தாண்டவரின் ஆடிக்கொண்டார் என்ற கீர்த்தனை அறிமுகம் செய்யப்பட ஒருவர் ஆனந்தத் தாண்டவம் ஆடுவார்.
அதன்பின் பார்ஸிநாடக இசையும், அது சினிம இசையாக மாறியமையும் கூறப்படும். பாபநாசம் சிவன், ராமநாதன் விஸ்வநாதன், இராமமூர்த்தி ஆகியோர் எவ்வன்ணம் கர்நாடக இசையையும் பார்ஸி நாடக இசையையும் ஹிந்துஸ்தானி இசையையும் கலந்து சினிமா இசையை உருவாக்கினர் என்பன பாடல்கள் மூலம் கூறப்படும். அதன்பின்னர் இளையராஜாவின் வருகை கிராமிய இசை சினிமாவில் உட்புகுந்த கதை. அதன்பின்னர் ரகுமானின் மூலம் உலக இசை தமிழ்சினிமாவுக்குள் வந்தமை கூறப்பட்டு ஒவ்வொரு போக்கையும் பிரதிபலிக்கும் சினிமாப் பாடல்கள் பாடப்படும்.
இந்த தமிழிசை அனைத்து மதக் கடவுளரையும் பாடியது எனக்கூறி எங்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் எங்கள் யேசுவை நான் துதிப்பேன் எனும் ஜேசுநாதரைத் துதிக்கும் பாடலும் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை எனும் நாகூர் ஹனிபாவின் அல்லாஹ்வைத் துதிக்கும் பாடலும் பூமியில் மானிட ஜெனமம எடுத்துமோர் எனும் பாகவதரின் புத்த பகவானைத் துதிக்கும் பாடலும் இசைக்கப்படும்.
அதன் பின்னர் உழைக்கும் மக்களிசை, பெண்கள் எழுச்சி இசை, என சமுகப்பிரச்சனைகளை இசை கூறுவது உரைக்கப்பட்டு அதற்கான பொருத்தமான பாடல்களும் பாடப்பட்டு இறுதியில் இன்குலாப்பின் மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னைப்போல அவனைப்போல எட்டுச் சாணு உயரமுள்ள மனுசங்கடா எனும் தலித் இசையுடன் இந்தப் பிரவாகம் முடிவடையும்.
இறுதியில் பாடகர்கள் அனைவரும் இணைந்து இசையல் இணைவோம் என்று தொடங்கி,
இசையால்இணைவோமே – தமிழ் இசையால்இணைவோம் இசையால்இணைவோம் இசையால்இணைவோமே நாட்டிசை பண்ணிசை வரியிசை கூத்திசை பள்ளிசை குறவஞ்சி கீர்த்தனை மெல்லிசை நாடகஇசையுடன் உழைப்பிசை தலித்இசையாம் அனைத்து இசையையும் தம்வசமாக்கிய அழகிய பிரவாகம் அனைத்து மக்களை அரவணைத்தோடும் அழகியநதி இதுவாம் தமிழிசை தமிழிசை தமிழிசைஎன்றே தாளம் தட்டிடுவோம் தமிழிசை தமிழிசை தமிழிசைஎன்றே மேளம்கொட்டிடுவோம்
என முடியும். இங்கு கர்நாடக இசை பண்ணிசை தவிர்ந்த இன்னும் பல இசைகளும் தமிழரிடமுண்டு. அது ஓர் அழ்கிய பிரவாகம். அந்தப்பிரவாகம் அனைத்தையும் அணைத்துகொண்டோடுகிறது என்ற கருத்து வலியுறுத்தப்படும்.