• முகப்பு
  • மீட்சி
  • Projects
  • கலை
  • சமூகம்
  • அரசியல்
  • இலக்கியம்
  • அரசியல்
  • வழிபாடு
  • தொடர்புகளுக்கு
  • Subscribed Donations
Meedsi © All rights reserved.
+94 77 008 3912
  • மீட்சி
  • Projects
  • தொடர்புகளுக்கு
Meedsi Meedsi
  • முகப்பு
  • அரசியல்
  • சமூகம்
  • வரலாறு
  • வழிபாடு
  • கலை
  • இலக்கியம்
Subscribed Donation
Meedsi

சமூசாவும் பால் ரீயும் – மனோபவன் மனோகரதாஸ்

Home / இலக்கியம் / சமூசாவும் பால் ரீயும் – மனோபவன் மனோகரதாஸ்
By Vijey Edwin inஇலக்கியம், இலக்கியம், கலை, கலை, பிரதான கட்டுரைகள், பொது

கலாநிதி. மனோபவன் மனோகரதாஸ். பிரம்ப்டன். கனடா


மட்டக்களப்பு மாநகர சபை வாசிகசாலையும், ஹாஜியார் கடையில் இரண்டு சமுசாக்களும் ஒரு கிளாஸ் தேத்தண்ணியும், அடிக்கடி மேட்டினி சினிமாவும்… அத்துடன் எனது க.பொ.த உயர்தர விஞ்ஞானக் கல்வியும் தொடர்பான நினைவுப் பகிர்வு!

தொண்ணூற்றியோராம் ஆண்டில் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புக்குள் காலெடுத்து வைத்துப் பிரவேசித்தேன்.

‘பிரவேசம்’ என்றால், அது ‘பாட்சா’ படத்தில் ரஜினி மிகவும் ஸ்டைலாக (பின்னணியில் “பாட்சா… பாட்சா” என்ற இசை அழகாக ஒலிக்க) நடைபோட்டு வரும் பிரவேசமல்ல.

காலத்தின் கோலம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் சித்தியடைந்து விட்டேன். அதனால் உயர்தர வகுப்புக்குள் கட்டாயமாக தள்ளப்பட்டேன். வேறு வழியில்லை. “Cache twenty-two situation” என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே. தமிழில், “மெல்லவும் முடியாத – விழுங்கவும் முடியாத நிலை”, அதற்கு இதுதான் சரியான உதாரணம்.

பத்து வருடங்களாக – கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடியும் வரை – “அரசினர் அளிக்கும் நற்கொடை இந்நூல்”, என்று கிடைக்கப்பெற்ற இலவசப் பாடப்புத்தகங்களின் தயவால் டியூசன் வகுப்புக்களின் தொந்தரவிலிருந்து தப்பித்திருந்த எனக்கு, தொண்ணூற்றோராம் ஆண்டு ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது.

ஆறு மணித்தியாலம் பாடசாலையில் காலம் கழித்த பின்னர், மதிய வெய்யிலில் சைக்கிள் உழக்கி மறுபடியும் டவுணுக்கு வந்து, தகரக் கொட்டகையில் ஈச்சா டீச்சரிடம் தவளையின் உயிரியலும், அது முடிந்த கையோடு, கல்லடிப் பாலம் கடந்து, நடராசா டீச்சர் வீட்டில் ஒளியலைகளின் பௌதிகமும் கற்றுக் “கொல்ல”ப்படுவது பெரிய ஈடுபாடாக இருக்கவில்லை.

எதுவும் தேவையென்றால் தெரிந்து கொள்ள, ஒருவருமே செல்லாத, மனித சஞ்சாரமற்ற மாநகர சபை வாசகாசாலை இருந்தது எனக்கு. அங்கு, அலட்டிக் கொள்ளாமல் எதனையுமே இலகுவாக வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

தவளையின் உயிரியலைப் பார்க்கவும் பாடத்திட்டத்தின் கடைசிப்பகுதியான உயிரிகள் (மற்றும் மனித இனத்தின்) கூர்ப்பு மிகவும் ஈடுபாடாக இருந்தது. உயர்தரக் கடைசியாண்டு அண்ணன்மாரிடமிருந்து குறிப்புக்களை வாங்கிப் படித்துப் பார்த்தேன். பாடத்திட்டம் உயிரினக் கூர்ப்பின் புதுக் கொள்கைகளை பற்றி சற்றும் கருதாது எழுதப்பட்டிருந்தது வெளிப்படையாக விளங்கியது. என்னைப் பொறுத்தவரையில், பிரளயக்கோட்பாடு சார்ந்த பொறிமுறைகளின் அடிப்படையிலும் உயிரினங்களின் பரிணாமம் விளங்கப்படுத்தப்பட வேண்டும். அது பரம்பரையியலகுகளின் எதேச்சையான மாறல்களின் அடிப்படையை படமிட்டு அறிய வழிவகுக்கும். பரம்பரையியலலகுகளின் ஏதேச்சையான மாறல்களினால் வருகின்ற மாற்றங்களின் வகையிற் கூட கூர்ப்பு நிகழலாம். இதனையே கூர்ப்புப்பாய்வு (sudden evolutionary leap) என்று விளிப்பர். இதனை உள்வாங்கிக் கொள்தல் உயிரியல் ஆய்வுகளுக்கு மிகவும் முக்கியம். இதையெல்லாம் யாரிடம் (அடியேன் பொடியன்) சென்று சொல்வது?

ஐம்பது வருடமாக மாறாத, எப்போதுமே தொடர்ச்சியாக அரைக்கப்பட்ட பாடத்திட்டம், அலுப்படித்தது. “பாடசாலையும் அதன் பின் டியூசன் வகுப்பும்” நினைத்தாலே கொட்டாவி வந்தது.
ஆனால், எனது நண்பர்களோ கவனத்துடன் குறிப்பெடுத்தனர். அரைத்த மாவை நன்றாகவே திரும்பத் திரும்ப விருப்பத்துடன் அரைத்தனர். பொறியியல், மருத்துவம், வங்கியியல் என்று பல்கலைக்கழகக் கனவுகள் காணத் தொடங்கிருந்தனர். அவர்களிடம் சாதிக்க வேண்டுமென்ற எண்ணக் குவியமிருந்தது.

ஆனால், சாதனைகள் பற்றி விளங்காத, விளங்கிக் கொள்ள முடியாத என்போன்ற அரை-விசரர் சங்கத்தவர்களுக்கோ? வெறுமை மட்டும் தான் மிஞ்சியிருந்தது.

சாயங்காலப் பொழுதில் டியூசன் கொட்டகைக்குள் புகுந்து, அங்கு காசு அறவிடும் அக்காவிடமோ அண்ணாவிடமோ பத்து ரூபாய் நோட்டை கையளித்து, டியுசன் சிட்டையில் கையெழுத்து வாங்கி, அதன்பின் மாட்டுத்தொழுவம் போன்ற தகரக்கொட்டகையில், மேடையில் நிற்கும் டியூசன் ஆசிரியரின் அறுபது நிமிட நேர, நீண்ட சொல்வதெழுதல் கேட்டு குறிப்பெடுக்கும் வித்தை எனக்கு கைவர மறுத்தது.

“ஆ ஆ வ்….” அனாயசமான கொட்டாவி அதைப்பற்றி நினைத்தாலே… இன்றும் வந்து விடுகின்றது.
அதனால் கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டி இருந்தது. பாடசாலை விட்டதும் வீடு செல்ல வேண்டும். டியூசன் வகுப்புக்கு செல்வது அதன்பின் கட்டாயம்.

“இல்லை, போகமுடியாது” அல்லது மட்டக்களப்பு தமிழில் – “ஒண்ணாது” – அதாவது ‘இயலாது’, என்றால் கேள்வி வரும்.

அம்மாவிற்கு பிடிக்காது. அம்மாவிற்குப் பிடிக்காவிட்டால் அப்பாவுக்கும் பிடிக்காது. அதன்பின் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து கதகளி ஆடிவிடுவர்! அதனால் வெளியேற வேண்டும்.

ஆனால், அலுப்படிக்கும் தவளையின் உயிரியல் தொடர்பான டியூசன் சொல்வதெழுதல் வகுப்புக்கு செல்ல முடியாது. அது மூளையைக் காய வைத்து விடும். அலுப்படிக்கும். மீனிலிருந்து ஈரூடகவாழி, அதிலிருந்து ஊர்வன, அதிலிருந்து மமேலியாக்கள், இறுதியில் மனிதன்… இந்த அடிப்படை நன்கு தெரிந்திருக்க, ஏன் நான் தவளையின் சுவாசத்தொகுதியைப் பற்றி அறிய வேண்டும்? அடிப்படை தெரிந்தால் எதனையும் உசாவியறியலாம் என்பது எனது தாழ்மையான கொள்கை. ஆனால், என் கருத்துக்களை கேட்பதற்கு ஒருவரும் தயாரில்லை!

டியுசனுக்கு செல்வதாக காட்டிக்கொள்ள வேண்டும். எப்படியோ அன்றையக் கைக்காசாக இருபதோ முப்பதோ கிடைக்கும், டியூசன் கட்டணமாக.

முப்பது ரூபாய் தினசரி வருமானம், அதற்கு தோதான செலவு, கையிருப்பில் கிட்டிய சாயங்கால நேரம். எனக்குக் கிட்டிய மாறிகள் (variables) அல்லது வளங்கள், தொழிலதிபர் போல சிந்திக்காவிட்டாலும் என்னளவுக்கு சிந்தித்தேன்.

“மாற்றி யோசி மனே”??? “மனே”, மட்டக்களப்புத் தமிழில் ‘மகனே’ என்பதன் வடிவம்.

இரண்டு துவக்கம் இரண்டரைக்குள் பள்ளியிலிருந்து வீடு சென்று, மதிய சாப்பாட்டை விழுங்கி, மறுபடியும் டவுனுக்குள் பிரவேசம் நடக்கும் (பட்டினப் பிரவேசம்?).

மற்றவர்கள் நேரே மைக்கல்ஸ் (St. Michael’s College தாண்டி டியூசன் வகுப்புகளுக்குள் பிரவேசிக்க, நான் குறுக்கு வழியால் மாநகரசபை வாசிகசாலைக்கு வந்து விடுவேன்.

செய்தித்தாள் பகுதியில் குமுதம், ஆனந்தவிகடன், வீரகேசரி, ஒப்சேவர் என்று கொஞ்சநேரம் மேய்வேன்.

நாளிதழ் வழியாக சுஜாதாவும், பிரபஞ்சனும், ஜெயகாந்தனும், ‘எஸ்.போ’வும், டானியலும் மிகவும் பரிச்சயமானார்கள். இந்தியா டுடே, பத்திரி(க்)கையியலின் புதுப் பரிணாமங்களை தமிழ் வழியாகத் தந்தது. ‘பாமரன்’ என்கின்ற அழகுசுந்தரம் குமுதத்தில் எழுதத் தொடங்கியிருந்த காலம். அவரின் எழுத்துக்கள் முற்றுமாக விளங்கவில்லை. ஆனாலும் துணிவாக எவரையும் விமர்சிக்கும் அவரின் எழுத்தின் கம்பீரம் மலைக்க வைத்தது. வெள்ளைக் காகிதத்தில் அச்சிட்ட எழுத்துக்கள் என்னைப் பிரமிக்க வைத்தது (இன்று வரைக்கும் அந்தப் பிரமிப்பு நீங்கவில்லை). மதனின் கேலிச்சித்திரம் எனது பென்சிலையும் படம் வரையத் துண்டியது.

வாசிகசாலையின் அகன்ற யன்னல்களினுடாக வந்து தாலாட்டும் வாவிக்காற்றின் தயவால், என்னை சுற்றிலும் ஒய்வூதியக்காரர்கள் செய்தித்தாள்களின் பின்னால் அரை நித்திரையிலிருப்பார்கள். வழுக்கைத்தலைகளும், வெள்ளிக் கம்பிகள் போன்ற எஞ்சியிருக்கும் சிகை கொண்டு ஐம்பதாமாண்டு எல்விஸ் பிரேஸ்லி((Elvis Presley) அலங்காரங்களுமாக, அந்தத் தாத்தாக்கள் அழகாக இருந்தார்கள்.

‘பென்சில் கோட்டு மீசைகள்”, ‘இருபது நாள் சவரம் செய்யாத முகங்கள்” – என்று பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

வாழ்ந்து முடித்திருந்த அவர்களையும், ‘வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத’ எலி மீசை முளைத்தும் முளைக்காத பொடியனான என்னையும், வாசிகசாலை இணைத்திருந்தது.

கவிஞர் நுஃமானின் பாணியில் சொல்வதானால், தாத்தாமார்களுக்கும் பேரனுக்கும் தஞ்சம் தந்தது வாசிகசாலையே. அந்தத் தாத்தன்மார், யானைகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்தார்களா இல்லையா என்பது இற்றைவரை எனக்கு தெரியாது. விளங்காதவர்கள் ‘தாத்தாமார்களும் பேரர்களும்’ என்கின்ற கவிதையை வாசித்து அறிந்து கொள்ளக்கடவீர்களாக.

செய்தித்தாள் பகுதியிலிருந்து புத்தகங்கள் பகுதிக்கு அதன்பின் பிரவேசம். இது ஒரு அரை அல்லது ஒரு மணித்தியாலத்தின் பின்னர் நடக்கும். புத்தகங்கள் பகுதியில், கல்கியின் “பொன்னியின் செல்வனும்”, சேக்ஸ்பியர் எழுதிய அத்தனையும், உயிரியல் விஞ்ஞான ஆய்வுப் புத்தகங்களும், நஷனல் ஜியோகிராபிக் (National Geographic) இதழ்களும், என்சைக்கிளோப் பீடியா பிரிட்டானிக்காவும் காத்திருக்கும். எழுந்தமானமாக, எது கைப்படுகின்றதோ அதை எல்லாமே படிப்பேன். நஷனல் ஜியோகிராபிக் இதழ்கள் வழியாக அமேசனும், ஆப்பிரிக்காவும், கொலராடோவும், அன்டார்ட்டிக்காவும் கையெட்டு தூரத்துக்குள் வந்து சிந்தனையை சுண்டியிழுத்தன.

அங்கும், வாவிக்கரைக்காற்று யன்னல் வழி வந்து தாலாட்டும். ஆனால் நித்திரை வந்ததில்லை.
சரியாக நான்கு மணிக்கு அண்மையாக, டவுண் பள்ளிவாசலிலிருந்து தொழுகைக்கு அழைப்பு கேட்கும்.

வாசிகசாலை கடந்து நகரின் வியாபார பகுதியிற்கு கால்கள் நடக்கும். வாசிகசாலைக்கு அருகில் நீதிமன்ற வழியில் “ஃபிறீமன் தண்ணீர் பந்தல்” (Freeman Tanneer Pandal) என்று ஆங்கிலத்தில் பொறித்த வினோதமான சிறு பழங்கட்டிடம் எப்போதுமே பூட்டியபடி காணப்படும். அதன்மேல் வாகை மரப்பூக்கள் சிதறிக்கிடக்கும்.

தொடர்ந்தும் நடக்க, ஒடுக்கமான வீதியின் ஓரமாக ஒய்யாரமாக இருக்கும் கொலோனியல் பாணி வியாபாரக் கட்டிடம், சாப்பாட்டு வகைகளின் படங்களுடன் ஜொலிக்கும், ‘வாவென்று’ வரவேற்கும்!

“ஹாஜியார் சாப்பாட்டுக்கடை – இன்றைய ஸ்பெசல் பிரியாணி”… என்று எப்பொழுதுமே மாறாத ஒரு அறிவிப்பு ஓரமாக காணப்படும். இன்றுமட்டுமல்ல என்றுமே பிரியாணிதான் அங்கு ஸ்பெசல்.
உயரமான படிகளில் ஏறி, டீ மாஸ்டரின் பகுதியைக் கடந்து உள் நுழைய சமையலறையிலிருந்து சமுசாக்கள் பொரியும் வாசனை – தூக்கலாக வந்து சேரும்.

கல்லாப் பெட்டியருகில் ஹாஜியாரோ, அவர் வெளியே சென்றுவிட்டால் (சிலசமயங்களில்) அவரது மக்களுள் ஒருவனே குண்டாக உட்கார்ந்திருப்பார்கள்.

“கொடுத்து வைத்தவர்கள் அவர்கள்”, என்று நினைத்துக் கொள்வேன். தினசரி சமுசாவுடன் வாழக் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் தானே?

ஹாஜியாரின் முகம் எப்போதுமே கவலையுடன் காணப்படும். வெங்காய விலையும், மிளகாய் விலையையும் ஏற்ற இறக்கமின்றி என்றுமே மாறாமல் (அவர் கடைத் தேவைக்கு சாதகமாக) அமைவதற்கு என்ன செய்யலாம் (?) என்று வணிக சந்தை நிலவரம் பற்றி அடிக்கடி யோசித்துப் பெருமூச்சு விடுவதனால் போலும், அவர் (அதுதான், ஹாஜியார்) சிரிக்க மறந்து ஆண்டுகள் பலவாகியிருந்தன.

இரட்டை நாடி சரீரம் கொண்ட அவரின் முகத்துக்கு மீசை சற்று அகலமாக வைத்திருக்கலாம், ஆனால் அவருக்கோ முக்கோண வடிவ மயிர்க்கொட்டி போன்ற மீசையே பிடித்திருந்தது. வயது எத்தனை கடந்தாலும் ஹாஜியாரின் மீசையின் கருமை என்றுமே குறைவதில்லை! அதுவும் ஒரு அதிசயமே!

நிற்க, ஹாஜியார் தனது மக்களை பெரிய பெரிய நம்பிக்கைகளுடன் டவுன் பள்ளியான சென்றல் கொலிச்சில் (Methodist Central College) சேர்த்துப் படிக்க வைக்க முயன்றிருந்த போதிலும், அவர்கள் சமுசாதான் கதி என்று மாறாதிருந்தது, ஒரு சோகமான உபகதை. அது பற்றி அலச இங்கு இடமில்லை. பிரதான கதையோட்டத்தில் தொடர்வோமா?

கடையினுள் கிறுகும் (சுழலும்) மின்விசிறிக் காற்றையும் விஞ்சிய வெக்கை (வெம்மை) முகத்தில் அடிக்கும். கடையுள் மேசைகள் மீது பாதியாக வெட்டப்பட்ட பிளாஸ்ரிக் விம் போத்தல்களில் அழகாகக் கிழிக்கப்பட்ட செய்தித்தாள் துண்டுகள் அடுக்கி செருகி வைக்கப்படிருக்கும். இருபுறமும் கண்ணாடிக் கிளாசுகள்.

போய் ஏதாவது ஒரு மேசைக்கருகில் அமர்ந்தால், பெனியனும் மடித்துக்கட்டிய சாரமும் அணிந்த ஒல்லி நானா காத்தான்குடித் தமிழில் “என்னம்பி சாப்புடுற?” எனக் கேட்ட படி தண்ணிக் கிளாசை நிரப்புவார்.

அதனை, அந்த தண்ணிக் கிளாசை ஒருவரும் தொடுவது கிடையாது. பொதுவாகவே… கைகழுவ மட்டுமே பாவிக்கப்படும். அது ஹாஜியாருக்கும் தெரியும்.

எனது கைகள் காசை எண்ணிப் பார்க்க, யோசிக்காமலேயே வாயிலிருந்து வார்த்தைகள் கொட்டும்: “சோட் ஈட்ஸ் கொண்டாங்க நானா” (அண்ணன்”…)

“சோட் ஈட்ஸ்” (short-eats) என்பது சமுசா, முட்டைக் கட்லெட், இறைச்சி ரோல்ஸ் முதலாய இன்னபிற உணவுப்பண்டங்களின் ஒரு கூட்டமைப்பு எனப் பொருள் கொள்க. இதனை தமிழாக்கி தீவிர உணவு ஆர்வலர் பலரும் ‘சோடிட்ஸ்’… ‘சோடிஸ்ஸ்’… என வெவ்வேறு விதமாகவும் சொல்வர்.

எப்பெயர் சொன்னாலும், குறித்திருப்பது ஒரு மூலத்தையே என்பதனால் கடை எடுபிடி நானாவோ, ஹாஜியாரோ, நானோ சரியான வார்த்தைப் பிரயோகம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியிருக்கவில்லை.

ஒரு பிளாஸ்ரிக் தட்டில் விரிக்கப்பட்ட செய்தித்தாள் காகிதத்தின் மேல் அழகாக அடுக்கப்பட்ட “சோட் ஈட்ஸ்” வந்து சேரும். சமுசா, முட்டைக் கட்லெட், இறைச்சி ரோல்ஸ் என்று ஒவ்வொரு வகையிலும் மும்மூன்று இருக்கும். முறுகப் பொரிந்த மசாலா கலந்த கறி உள்ளீடும், மொறு மொறுவென்ற முக்கோணவடிவ மாக்கோதுமாக சமுசாக்கள் நாவின் சுவையரும்புகளை தூண்டிவிடும்.

‘சோட் ஈட்ஸ்’ தட்டு மேசைக்கு வந்ததும், உடனடியாக ‘விழுங்குவதற்குப்’ பறக்கக் கூடாது. சற்று அமைதியாக தட்டில் உள்ள பொக்கிஷங்களைப் பார்வையிட்டு இரசிக்க வேண்டும். சுவையான உணவுப்பண்டங்களின் மணம் தொடர்ச்சியாக சுவையரும்புகளை அருட்டிக் கொண்டிருக்க நாவில் ஊறும் எச்சிலையும் கட்டுப்படுத்திக் கொண்டு பொறுக்க வேண்டும்.

அதன்பின் மெதுவாக ஒரு சமுசாவை கையில் எடுத்து… லாவகமாக உண்ண ஆரம்பிக்க வேண்டும்.

பொரிந்த வெங்காயமும், மசாலாவும், ‘கொச்சிக்காயும்’ (மட்டக்களப்புத் தமிழில் “மிளகாய்”) கலந்த இறைச்சிக்கறி மொறு மொறுவென்று பொரிந்த மாக்கோதின் வழியாக நாவின் சுவையரும்புகளை வந்து சேர – வருகின்ற ‘ஏகாந்த நிலை’க்காக ஹாஜியாருக்கு ஒரு பெரிய ‘ஓ’ போட்டுத்தான் ஆக வேண்டும்.

இரண்டு சமுசாக்களை கபளீகரம் செய்தபிறகு, நாவில் சிறிதாகக் காரம் உறைக்கத்தொடங்கும். “நானா, ஒரு பால் டீ தாங்க”, தன்னிச்சையாகவே வாயிலிருந்து வார்த்தைகள் கொட்டும்.
டீ மாஸ்டரின் கைவண்ணத்தில் உருவான நுரைபொங்கும் பால் தேனீர் கையைவந்து சேரும். திகட்டும் அந்த சுடுபானத்தை முதல் வாய் அருந்தும் போது, காரத்துடன் சேர்ந்த வெம்மை, நாவை மேலும் அருட்டும். ஆனால், அடுத்த மிடறில் காரத்தின் வேகரம் மறைந்து விட தேனீர் உருசிக்கத் தொடங்கும்.

இவ்வளவும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களில் நடந்தேறும்.

நானா, துண்டுக்காகிதத்தில் ‘பில்’ (பற்றுச்சீட்டு) கிறுக்கித்தருவார். அவருக்காக மேசையில் ஒரு இரண்டு ரூபாய் குத்தியை வைத்துவிட்டு ( a tip- as pocket money for the நானா?), ஹாஜியாரிடம் சென்று பணத்தை செலுத்திவிட்டு, வெளியேறுவேன்.

வாசல்கரையில் டீ மாஸ்டர் நீர்வீழ்சியாக தேனீர் ஆற்றிக்கொண்டிருப்பார். “நயாகரா நீர்வீழ்சியை வட அமெரிக்காவுக்கு வருபவர்கள் தவறாது தரிசிக்க வேண்டும் என்று ஒரு கட்டாயம் உள்ளது”. “அது போல, மட்டக்களப்புக்கு வருபவர்கள் ஹாஜியார் சாப்பாட்டுக்கடை ‘தேனீர் நீர்வீழ்ச்சியை’ பார்த்துத் தரிசித்தால் பல பாவங்கள் நீங்கப் பெறுவார்கள்”, என்று நான் சொன்னால், அது சற்று மிகைதான், ஆனால் அப்படி இருந்தால் நல்லதே!

மறுபடியும் வாசிகசாலையடிக்கு நடைப்பயணம். “ஃபிறீமன் தண்ணீர் பந்தல்” கட்டிடம் மாலைநேர மஞ்சள் வெய்யிலில் தங்கமாக ஜொலிக்கும். வாகை மர நிழல் குளிர்மையாக இருக்கும். எண்பதுகளின் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரலில் “இது ஒரு பொன்மாலைப் பொழுது” காதுக்குள் ரீங்காரமாய் ஒலிக்கும்.

சைக்கிளை எடுத்துக்கொண்டு, சனம் சந்தடியற்ற ஓரத்தெருக்களால் மறுபடியும் பயணம்… வீடு நோக்கி.
பிரதான தெருக்கள் வழியால் சென்றால், நண்பர்கள் யாரவது என்னைக் கண்டு, “டேய், ஏண்டா

டியூசனுக்கு வரல்ல?” என்று கேட்கக் கூடும் அல்லவா. அதன்பின் கதை காட்டுத்தீயாகப் பரவி வீடு வரை போய் சேர, அது எனது வாழ்வுக்கு இடைஞ்சலாகிவிடும்.

இப்படியாக, இனிமையாகப் போய்க்கொண்டிருந்த எனது வாழ்க்கை, அடுத்த பத்துப் பன்னிரெண்டு மாதங்களில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்ததும் முடிவுக்கு வந்தது என்று முற்று முழுதாகச் சொல்ல முடியாது.

பரீட்சையில் வெறுமனே மூன்று ‘சி’க்களும் ஒரு ‘பி’யும் பெற்றிருந்த எனக்கு முதல் தரத்தில் பல்கலைக்கழக அனுமதி கிட்டாது போனது. எனது பெற்றோருக்கும் சக குடும்பத்தினருக்கும் நான் புரியாத புதிராய் மாறிக்கொண்டிருந்தேன்.

இப்படியான இரண்டும்கெட்டான் நிலையில் இருந்த எனக்கு அந்தக்கால மட்டக்களப்பில் ஆக்கபூர்வமாகச் செய்வதற்கு வேறொன்று மிருக்கவில்லை…

மறுபடியும், அடுத்த தடவை பரிட்சை எழுதுவதற்காக ‘எனது வழியில்’ படிக்கத் தொடங்கினேன். வாசிகசாலை நிரந்தர வேடந்தாங்கலானது. ஹாஜியார் சாப்பாட்டுக்கடை தினசரி வாடிக்கையானது. இடையிடையே, சாந்தி தியேட்டரும், சுபராஜ் தியேட்டரும், ராஜேஸ்வரா தியேட்டரும், மற்றும் பல சினிமாக் கொட்டகைகளும் கூட பரிச்சயமாயின.

ஆனாலும், வாசிகசாலையின் யன்னல்வழிக் காற்றும் வாவியின் மணமும், புத்தகங்களும் (என்னை விமர்சிக்காத, என்னை ‘நானாக’ ஏற்றுக்கொண்டிருந்த) நிரந்தரமான பிரத்தியேக நண்பர்களாயிருந்தன.

எனது ‘மனித நண்பர்களில்’ சிலர் பல்கலைக்கழகம் செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். சிலர் தொழில்களில் சேர்ந்திருந்தனர். வாழ்க்கையில் இன்னொரு கட்டத்துக்கு சென்றுவிட உன்னிப்பாய் முயன்றனர். மோட்டார் சைக்கிள்கள் வாங்கினர், தங்கள் அண்ணன்மாரின் கார்களை ஓட்டிப் பழகிக்கொண்டனர். இடையில், அவர்கள் வாழ்வுகளில், பல காதல் கதைகளும் வந்து போயின…

அவர்கள் அனைவருக்கும் நான் ஒரு விநோதப் பிறவியாகத் தென்பட்டேன். எனக்கோ, தொண்ணூற்று நான்காம் ஆண்டு முடியும் வரை அரதப்பழசான எனது ‘பினிக்ஸ்’ சைக்கிளும் சமுசாக்களும் மட்டுமே உற்ற உறவுகளாய் தொடர்ந்தன.

காலத்தின் கோலம், தொண்ணூற்று நான்காம் ஆண்டு எப்படியோ உயர்தரப் பரீட்சையில் எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்க, எனது ‘இனிமையான வாழ்க்கைமுறை’ மிகப் பெரிய அதிர்வுடன் முடிவுக்கு வந்தது.

இன்று, எறத்தாழ இருபது வருடங்கள் கழித்து எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும்போது ஹாஜியாரும், அவர் மீசையும், சமுசாக்களும், வாசிகசாலையில் தஞ்சம் பெற்றிருந்த தாத்தன்மார்களும், பாரதிராஜா படத்தின் வெண் நிற ஆடைத் தேவதைகளாக மனதின் ஓரத்தில் நின்று “லா லா லா” பாடுகின்றார்கள்.

உள்ளத்தின் உள்ளகத்தில் மென்மையான சாந்தம் இதமான ஈரமாய் படருகின்றது…

“பல்கலைக்கழகம்” என்கின்ற வார்த்தையை பல விதங்களிலும் – ஒரு மாணவனாக, ஆய்வாளனாக, ஆசிரியனாக (‘பயண வழிகாட்டி’ என்பதே நான் செய்த தொழிலுக்கு சாலப் பொருத்தம்), மற்றவர்களுக்கு “அரியண்டம்” தருபவனாக (அது அவர்கள் தமது கொழுத்த! கொள்கையற்ற! சுயநலமான அசமந்தப் போக்குகளை விடமுடியாததால் வந்திருக்கலாமா?), அடிவாங்குபவனாக, அடிகொடுத்தவனாக, தொடர்ந்தும் அடிகொடுக்க விரும்புவனாக – இந்த இருபது ஆண்டுகளில் உணர்ந்திருக்கின்றேன்.

ஆனால், ஹாஜியாரின் சமுசாக்களும், வாசிகசாலையும், மற்றும் அந்த பழைமையான மட்டக்களப்பின் சினிமா தியேட்டர்களும் எனக்குத் தந்தவைகள் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொள்ள முடியாதவை. அந்தக்காலம் மீண்டும் வராது தான். ஆனால், அந்த நினைவுகள் (நாசிக்குள் மறவாமல் இருக்கின்ற ஹாஜியார் கடை சமுசாவின் மசாலாவாசனை போல) என்றுமே பசுமையாக இருக்கும்!

ஆமென்! எல்லாப் புகழும் அருளாளனுக்கே!

உயிரியல்கலாநிதி. மனோபவன் மனோகரதாஸ்கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புக்குள்சமுசாடியூசன்பாடத்திட்டம்மட்டக்களப்பு கல்விமட்டக்களப்பு மாநகரசபை வாசிகசாலைஹாஜியார் சாப்பாட்டுக்கடை
53
Like this post
91 Posts
Vijey Edwin
  • சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழ் சமுதாயம் - விஜய்
    Previous Postசங்க காலத்திற்கு முற்பட்ட தமிழ் சமுதாயம் - விஜய்
  • Next Postஇது ஒற்றைக் காலடி அல்ல பலநூறு இதைத் தொடரும்
    சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழ் சமுதாயம் - விஜய்

Related Posts

மீட்சி…
projects சமூகம் பொது

மீட்சி…

மீட்சி; நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்சிக்கான செயற்றிட்டம்
பொது விஜய்

மீட்சி; நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்சிக்கான செயற்றிட்டம்

வளமான வாயப்பு : கச்சான் / நிலக்கடலை செய்கை
projects சமூகம் சமூகம் பிரதான கட்டுரைகள்

வளமான வாயப்பு : கச்சான் / நிலக்கடலை செய்கை

மீட்சியின் சமூக அபிவிருத்தி திட்டம்…
projects பிரதான கட்டுரைகள்

மீட்சியின் சமூக அபிவிருத்தி திட்டம்…

Leave a Reply (Cancel reply)

Your email address will not be published. Required fields are marked *

*
*

Contact us

Director,

14 Elm Road, Chessington, Surrey, KT9 1AW,

UNITED KINGDOM.

tel : +44 7827911279

Contact Us

Coordinator,

Main street, Kiran,

SRI LANKA.

tel: +94 77 008 3912

Contact us

email

[email protected]

optimised

Copyright © 2020 Meedsi. All rights reserved.

Copy