ஈழத்தமிழர் அரசியலின் “நோக்கும் போக்கும்” பல முனைப்பட்டுக் கிடக்கிறது! பல கட்சிகள். பல அமைப்புக்கள். பல கொள்கைகள்.
கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களின் ஒற்றை அரசியல் போக்காக ‘தமிழ்த் தேசியம்’ விளங்கியது. அப்போதும் சிலமாறுபட்ட ‘நோக்கும் போக்கும்’ இருந்தே வந்தன. அது கடந்த காலம்.
தமிழ் மக்களின் முதன்மையான அரசியல் சக்தியாக இருந்து வருகிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [TNA], இலங்கைத் தமிழரசுக் கட்சி [ITAK] யை முதன்மையமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் [PLOT], தமிழீழ விடுதலை இயக்கம் [TELO] ஆகிய கட்சிகளின் கூட்டமைப்பாகவே இன்று இருக்கிறது. பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி [EPRLF] கட்சி கொள்கை முரண்பட்டு வெளியேறிவிட்டது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலில்; இலங்கைத் தமிழரசுக் கட்சி[ITAK], தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் [PLOT], தமிழீழ விடுதலை இயக்கம் [TELO] ஆகிய பங்காளிக் கட்சிகளுடன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி என்பன கூட்டமைப்பாக இணைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது.
தேர்தல் முடிவுகள், கூட்டமைப்பின் மக்கள் ஆதரவில் பெரும் சரிவொன்றை எடுத்துக்காட்டியிருக்கிறது.
வட – கிழக்கில் இரு சபைகளில் மட்டுமே ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது கூட்டமைப்பு! கிளிநொச்சியில் 20 உறுப்பினர்கள் கொண்ட பூநகரிப் பிரதேச சபையில் 11 ஐப் பெற்றிருக்கிறது. திருகோணமலையில் 13 உறுப்பினர்கள் கொண்ட வெருகல் பிரதேச சபையில் 07 ஐப் பெற்றிருக்கிறது. பல சபைகளில் முன்னிலை பெற்றிருக்கிற போதிலும் ‘எதிரான’ கட்சிகள் அதிகம் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறார்கள். எனவே தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையிலே கூட்டமைப்பு உள்ளது. சில சபைகளில் பின்னிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையில் கூட்டமைப்பு 14242 வாக்குளைப் பெற்று 16 ஆசனங்களையும் தமிழ்த் தேசிய பேரவை 12020 வாக்குளைப் பெற்று 13 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி 8671 வாக்குளைப் பெற்று 10 ஆசனங்களையும் பெற்றிருக்கிறது. ஏனைய கட்சிகள் 06 ஆசனங்களைப் பெற்றிருக்கிறார்கள். கூட்டமைப்பிற்கு இம்முறை யாழ்.மாவட்டத்தில் 92503 வாக்குகள் குறைவாகக் கிடைத்திருக்கிறது. கிழக்கிலும் கூட்டமைப்பின் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 இல் 127,185 வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பு, இம்முறை 88,557 வாக்குகளையே பெற்றிருக்கிறது.
இத்தேர்தலில், கூட்டமைப்பின் ஏகபிரதிநிதித்துவம் என்ற நிலை முதன்முறையாக கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது வாக்காளர்களால்! கூட்டமைப்புக்கு எதிரான ஒரு பொது அணி உருவாகாத நிலையில், கூட்டமைப்புக் எதிராண அணிகளுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு அதிகம்.
கூட்டமைப்பினுடைய சமகால அரசியல் போக்குகள் எவை? அரசியல் நடவடிக்கைகள் யாவை? என்பதனை வரையறுத்து எழுதுவது இலகுவானதொன்றல்ல. கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக வளர்க்கப்படவில்லை. எனவே அதனுள் பொது அரசியல் கொள்கை – அரசியல் செயற்பாட்டைக் காணமுடியாது. கூட்டமைப்பின் மையக் கட்சியான தமிழரசுக் கட்சியை எடுத்தாலும் அங்கும் பல குழுக்கள். பல குழப்பங்கள். தமிழரசுக் கட்சித் தலைமை, தொடர்ந்தும் நல்லாட்சியைப் பாதுகாத்து கொண்டு செல்லுதலை தமது கொள்கையாக கொண்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்திற்கான நல்லிணக்கம் மூலம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அதன் நோக்கம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 2010 ஆம் ஆண்டு கொள்கை முரண்பட்டு வெளியேறிய, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தாயகம் – தேசியம் – சுயநிர்ணயம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து உருவாக்கிய முன்னணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி[TNPF]. உள்ளூராட்சித் தேர்தலின் போது, ஒரு கூட்டு பொது எதிரணியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான EPRLF கட்சி விலகிச் சென்று விட்டது. இந்த நிலையில் அகில இலங்கை தமிழக் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய பேரவை உருவாக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டது.
இத்தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவை, கூட்டமைப்புக்கு எதிரான ஒரு மாற்று அரசியல் சக்தியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது வாக்காளர்களால்!
யாழ். மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 15022 வாக்குகளைப் பெற்றிருந்தது. இத்தேர்தலில் 63244 வாக்குகளைப் பெற்றிருக்கிறது தமிழ்த் தேசியப் பேரவை. பல சபைகளில் கணிசமானளவு வாக்கையும் பெற்றிருக்கிறது. பருத்தித்துறை நகர சபையிலும் சாவகச்சேரி நகரசபையிலும் முன்னிலையைப் பெற்றிருக்கிறது, யாழ். மாநாகரசபையில் பிரதான எதிர்க்கட்சியாகவும் வந்திருக்கிறது. எனினும் தனித்து ஆட்சியமைக்க கூடிய பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. யாழ்.மாவட்டத்திற்கு வெளியே ஆங்காங்கு வாக்குளைப் பெற்றிருக்கிறது. இத்தேர்தலூடாக கூட்டமைப்புக்கு மாற்றான ஓர அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது தமிழ்த் தேசிய பேரவை- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி[TNPF]..
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, உள்ளுராட்சி சபைகளிலும் கொள்கை பற்றுறுதியுடன் செயற்படும் எனத் தெரிவித்திருக்கிறது. கொள்கை ஒருமைப்பாட்மைக் கொண்ட வட மாகாண முதலமைச்சருடன் பேசியிருக்கிறார்கள். பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிற மக்களுடன் இணைந்து தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறார்கள்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் அவர்களை அமைப்பாளராகக் கொண்ட சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான கட்சி, கிளிநொச்சியில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் சுயேட்சை அணியாக கேடயம் சின்னத்தில் போட்டியிட்டு, கணிசமான வாக்குளைப் பெற்று அங்கு மாற்று அரசியல் சக்தியாக தேர்வாகியிருக்கிறது. இக்கட்சி கிளிநொச்சியில் 19018 வாக்குகளைப் பெற்றிருக்கிறது; கரைச்சியில் 14489 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களையும், பச்சிலைப்பள்ளியில் 2070 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும், பூநகரியில் 2429 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும் பெற்றிருக்கிறது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமையும் அபிவிருத்தியும் சமாந்திரமாக கிடைக்க வேண்டும் என்பது இக்கட்சியின் பொதுக்கொள்கை. சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற, திம்புக் கோட்பாட்டுக்குக் குறையாத, சுயநிர்ணய உரிமையுடைய சமஷ்டி தங்களுடைய இலக்கு என்கிறார் அமைப்பாளர்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி [ஈ.பி.ஆர்.எல்.எப்] தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகளின் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு, எந்தப் பிரதேசத்திலும் செல்வாக்கைப் பெறவில்லை என்கிற போதிலும் பரவலாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். வட-கிழக்கில் 40 ஆசனங்களைப் பெற்றிருக்கிறார்கள். புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகளின் கட்சி, திருகோணமலையில் வெருகல் மற்றும் சம்பூர், மூதூர் பிரதேச சபைகளில் உதயசூரியன் சின்னத்தில், ‘கிராம மட்டத்தில் உள்ளுர் அபிவிருத்திகளை முன்னெடுத்தல்’ என்னும் கோஷத்துடன் போட்டியிட்டது. ‘மக்களுக்கான சேவைகளையும் உரிமைகளையும் பெறுவது’ தங்கள் நோக்கம் எனத் தெரிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா.
டக்ளஸ் தேவானாந்த தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி [EPDP] தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஈ.பி.டி.பி. கட்சியானது யாழில் பல சபைகளில் கணிசமானளவு உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. நெடுந்தீவு (06 உறுப்பினர்கள்) மற்றும் ஊர்காவற்றுறை (07 உறுப்பினர்கள்) உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலையைப் பெற்றிருக்கிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு மாற்று அரசியல் சக்தியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பில் 42,407 வாக்குகளைப் பெற்று இரண்டாம் நிலைக் கட்சியாக உருவெடுத்துள்ளது. மட்டக்களப்பு/ஏறாவூர் பற்ற பிரதேச சபையில் முன்னிலை பெற்றிருக்கிறது. எனினும் தனித்து ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மை இல்லை. அதேவேளை, கோறளைப் பற்று பிரதேச சபையில் ஐந்து வட்டாரங்களில் வெற்றி பெற்றிருப்பதுடன் கூட்டமைப்புக்குச் சமனாக 06 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் கூட்டமைப்புக்குச் சமனாக 06 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. மட்/மாநகர சபையில் 05 உறுப்பினர்களை பெற்றிருக்கிறார்கள். பல சபைகளிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு – காணிகள் மற்றும் உரிமைகளை மீட்டல் – கிழக்கின் அபிவிருத்தி – தொழில் வாய்ப்புக்கள் என்பவற்றைக் கொண்டு, கிழக்கின் மாற்று அரசியல் கட்சியாக மாறுவதுடன், கிழக்கில் தமிழ் முதலமைச்சர் என்ற கோஷத்தையும் முன்வைத்துச் செயற்படுவோம் எனக்கூறியிருக்கிறார்.
தமிழ் இடதுசாரிகள் வலி.கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தலில், கா.கதிர்காமநாதன் தலைமையில் வாளிச் சின்னத்தில் சுயேட்சை அணியாக, ‘உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளே உள்ளுராட்சி சபைகளுக்கு இன்றைய தேவை’ என்ற கோஷத்தை முன்வைத்து களமிறங்கி, பிரதேசத்தில் தமது செல்வாக்கை நிரூபித்திருக்கிறார்கள். இச்சபையில் 3858 வாக்குளைப் பெற்று ஓர வட்டாரத்தில் வெற்றியையும் 04 ஆசனங்களையும் பெற்றிருக்கிறார்கள். இது இடது சாரிகளின் வளர்ச்சியைக் காட்டும் குறிகாட்டியாகக் கொள்ளலாமா?
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்திருக்கிற கருணா தொடங்கியிருக்கிற புதிய கட்சி. மட்டக்களப்பில் சுயேட்சையாக தையல் இயந்திரச் சின்னத்தில் போட்டியிட்டு, சில ஆசனங்களைப் பெற்றிருக்கிறது கட்சி. “தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு இணைந்ததாகவே இருக்க வேண்டும்.”, ”தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாக தமது கட்சியின் செயல்பாடுகள் அமையும்.” எனக் கூறியிருக்கிறார் கருணா. சில சபைகளில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்
மேலும், சிறிதரன்- வரதராஜப் பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் EROS, சுயேட்சைக் குழுக்கள் இத்தேர்தலில் போட்டியிட்டு சில ஆசனங்கைளைப் பெற்றுமிருக்கின்றன.
இத்தேர்தலில் ஏற்பட்ட பெரும் ‘அரசியல் கலவரம்’, தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகள்-தேசியக் கட்சிகள் பெற்றிருக்கிற வாக்குகளே. இத்தேர்தலில் வட-கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் மட்டுமன்றி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் தமிழர்களின் வாக்குளைப் பெற்றிருக்கிறார்கள்!
தேசியக் கட்சிகள், வடக்கு கிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் பருத்தித்துறை நகரசபை, ஊர்கவாற்றுறை பிரதேச சபை தவிர்ந்த ஏனைய உள்ளுராட்சி சபைகளில் குறைந்தது ஒரு ஆசனத்தையேனும் பெற்றிருக்கிறது! தமிழ்க் கட்சிகளுக்கு நிகராக வாக்குகளைப் பெற்றுமிருக்கிறது!! பல பிரதேச சபைகளிலும் பல வட்டாரங்களிலும் வெற்றியும் பெற்றிருக்கிறது. வடக்கில் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் ஆதரவு உண்டு. வல்வெட்டித்துறை நகரசபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 230 வாக்குளைப் பெற்று ஓரு மேலதிக ஆசனத்தைப் பெற்றிருக்கிறது!
ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் கணிசமானளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. யாழ்.மாகர சபையில் 03 ஆசனங்களையும் மானிப்பாயில் 03 ஆசனங்களையும் வெற்றி பெற்றிருக்கிறது. பல ‘தலைவர்கள்’ கட்சிப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட-கிழக்கில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் மட்டும் 37 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநான், தாம் தமிழ்க் கட்சிதான் எனவும் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் அபிலாசைக்கும் எதிராகச் செயற்படமாட்டோம் எனத்தெரிவித்திருக்கிறார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணந்து போட்டியிட்ட ஸ்ரீரெலோ கட்சி வடக்கில் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. வவுனியாவில் 04 உறுப்பினர்கள் தெரிவாகியிருக்கிறார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கை மக்கள் தேசியக் கட்சி, ஏறாவூரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து வெற்றி பெற்றிருக்கிறது. இக்கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஷ்ணுகாந்தன், வெற்றியின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை மேற்கொள்ள ஒரு தேசியப் பட்டடியல் உறுப்பினர் எம்.பி வழங்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பெரமுன, வட-கிழக்கில் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. யாழ். வேலணைப் பிரதேச சபையில் 899 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையில் 2067 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. பருத்தித்துறை பிரதேச சபையில் 912 வாக்குகளைப் பெற்று மேலதிக ஆசனமொன்றையும் பெற்றிருக்கிறது.
மக்கள் விடுதலை முன்னணி யாழ்ப்பாணத்தில் நான்கு உள்ளுராட்சி சபைகளிலும் கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளிலும் களமிறங்கியிருந்தது. அக்கட்சியின் முக்கியஸ்தர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகரன். ‘ஒரு மாற்றத்துக்கான அடித்தளத்தை இடுவதற்கு ஏதுவான ஒரு தேர்தலாக அமைய வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
அரசியல் கட்சிகளுக்கு அப்பால், பல அமைப்புக்களும் இயங்குகின்றன. வட- கிழக்கு சிவில் சமூகத்தினரால் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வரும் அமைப்பு தமிழ் மக்கள் பேரவை. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இணைத்தலைவராக கொண்டு, தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கிற கட்சிகளை – அமைப்புக்களை ஒன்றிணைத்துச் செயற்படுகிற அமைப்பு. தமிழரசுக் கட்சி இணக்க அரசியல் வழயில் செல்லத் தொடங்கியதன் பின்னர் தமிழ்த் தேசிய விடுதலையை முன்னகர்த்திச் செல்வதற்கான அமைப்பாக உருவாக்கப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கப் பெற்ற அமைப்பு. ஒரு அரசியல் கட்சியாக இன்றி, ஒரு அரசியல் சக்தியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது.
கிழக்குத் தமிழர் ஒன்றியம் மட்டக்களப்பில் சிவில் சமூகத்தினரால் அண்மையில் உருவாக்கப்பட்ட பொது அமைப்பு. சட்டத்தரணி கே.சிவநாதன் தலைமையிலான கிழக்குத் தமிழர் ஒன்றியம், “கிழக்கை கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஆளவேண்டும்” என்ற நோக்குடன் செயற்பட்டு வருகிறது. மட்டக்களப்பில் உள்ளுராட்சி சபைகளில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்கக் கூடிய பெரும்பாண்மை இல்லாத நிலையில், கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகளுக்கிடையிலான இணக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ஒன்றியம். கிழக்கில் தமிழர் ஆட்சி, கிழக்கு மாகாண சபையில் தமிழ் முதலமைச்சர் என்பது அவர்களுடைய அரசியல் கோஷம்.
உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் சிறியதொரு நிர்வாக அலகுக்கான தேர்தல். குறைந்தளவு வாக்காளர்களைக் கொண்ட வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல். தனிப்பட்ட செல்வாக்கினால் கூட வெற்றி பெறக்கூடிய தேர்தல். விகிதாசார முறையில் பிரதிநிதிகள் தெரிவாகக் கூடிய தேர்தல். எனவே, இத்தேர்தலில் கிடைக்கப்பெற்ற வெற்றிகளை கொண்டு கட்சிகளின் செல்வாக்கை மதிப்படுவது மிகச்சரியானதுமல்ல.
இத்தேர்தலில் வட-கிழக்கில் தமிழர்கள், பல அரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் என பிரிந்து நின்று போட்டியிட்டிருக்கிறார்கள். பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். எனினும் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மை இல்லாத நிலையில் பிரிந்து நின்று போட்டியிட்டவர்கள் இணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைய வேண்டும் – தமிழ்க் கட்சிகள் இணைய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இக்கட்சிகளில் சிலவே, யுத்தத்தைத் தோற்றுவித்த – யுத்தத்தினால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த கரிசனை கொண்டுள்ளவை. எனவே, தேர்தலுக்கு அப்பாலான செயற்பாடுகளைக் கொண்டவை.
பல கட்சிகள், உள்ளுராட்சி சபை நிர்வாகம், வரவுள்ள மாகாண – பாராளுமன்ற தேர்தல்களை மையமாக வைத்து செயற்படவுள்ளன. அவர்களுடைய அரசியல் கொள்கையும் இலக்கும் அத்தகையன!
எதிர்வரும் காலங்களில் புதிய காட்சிகளை நாம் காணவும் முடியம்.