கருப்பையா பிரபாகரன். [J.P, M.A, PGDE, Med. மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய சபை அங்கத்தவர்]
அங்கவீனர்கள், வலுவிழந்தோர் எனும் பதமானது இன்று மாற்றுத்திறனாளிகள் என்ற பதத்தினால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது. உடல் உள ரீதியான குறைபாடு காரணமாக தமது வாழ்வியல் தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதவர்கள் மாற்றுத்திறனாளிகள் என கருதப்படுகின்றனர்.
‘விழிப்புலன், செவிப்புலன், பேச்சுக் குறைப்பாடு, நகர்தல், புரிந்து கொள்ளும் ஆற்றல், உளம் சார் பிரச்சினைகள் என்பவற்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளை பலவாறு வகைப்படுத்துகின்றனர். ‘பிறப்பிலிருந்தோ அல்லது விபத்துக்களினாலோ உடல் உள ஆற்றளில் ஒருவருக்கு ஏதாவது குறைப்பாடு ஏற்படுவதால் வாழ்க்கையில் அத்தியாவசிய தேவைகளை செய்வதை உறுதிப்படுத்த முடியாத குறையே மாற்றுத்திறன் எனப்படுகின்றது’. அதாவது உடலிலோ மனதிலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக ஒருவரால் ஒரு சில செயல்களை சாதாரண மனிதர்களைப் போன்று மேற்கொள்ள முடியாது போகின்ற போது அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்கின்றனர்.
மாற்றுத்திறனை ஏற்படுத்துகின்ற காரணிகளை இயற்கையான காரணிகள், மனிதனால் உருவாக்கப்படுகின்ற காரணிகள் என வகைப்படுத்தி நோக்கலாம். இயற்கையான காரணி எனப்படுவது தாயின் கருவில் ஏற்படும் பாதிப்பு, மரபணுவினால் பிறப்பினால் ஏற்படும் மாற்றம், தீராத நோய் என்பனவாகும். மனிதனால் உருவாக்கப்படும் செயற்கை காரணிகளான யுத்தம், போதைப் பொருள் பாவனை, அணுவாயுத பரிசோதனை, வாகன விபத்துக்கள், தொழிற்சாலை விபத்துக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறு இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ ஒருவரின் சாதாரண நிலை, அசாதாரண நிலைக்கு மாறி ஏனைய மனிதர்களைப் போன்று தொழிற்பட முடியாதிருக்கும் நிலையை மாற்றுத்திறன் என அழைக்கின்றனர்.
தற்போதைய உலகமயமாதல் சூழலில் உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் மாற்றுத்திறனாளிகளாக காணப்படுகின்றனர். 2001ஆம் ஆண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் படி மொத்த சனத்தொகையில் 1.6 % வீதமானோர் மாற்றுத்திறனாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களாக நடந்த உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை கணிசமானளவு அதிகரித்தது. வடக்கில் மாத்திரம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு கூறுகின்றது.
உலகளாவிய ரீதியில் அவதானிக்கும் போது மாற்றுத்திறனிற்கு உள்ளான மக்கள் குறைந்த சுகாதார நிலையையும், குறைந்தளவான கல்வி அடைவு மட்டத்தையும், குறைந்த வருமானத்தையும், கூடிய வறுமை வீதத்தையும் கொண்டுள்ளனர். சாதாரண மக்களைப் போன்று கல்வி, சுகாதார, போக்குவரத்து, வேலைவாய்ப்புக்கள் மற்றும் சேவைகளை இவர்களால் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதுவே இதற்குரிய காரணமாகும். குறிப்பாக அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் உடல் உள ரீதியாக ஆரோக்கியமுள்ள மனிதர்கள் கூட இவற்றை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் அதே வேளை மாற்று திறனுடையோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் மன ரீதியாக சோர்வடைந்து உள ரீதியாக பாதிக்கப்பட்டு, சமூக பொருளாதார வழிகளிலும், சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்படுகின்றனர். இவர்களை சமூகத்தோடு இணைக்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டிய தேவைப்பாடு அனைவருக்கும் உள்ளது. வளர்ந்த நாடுகளில் மாற்றுத்திறன் கொண்ட நபர்களின் சமத்துவத்திற்காக பல்வேறு சட்டத்திட்டங்கள் உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தவகையில் அபிவிருத்தியடைந்த மேலைத்தேய நாடுகளில் பெரிய கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சாய்தள வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதனை காணமுடிகின்றது. இலங்கையைப் பொறுத்த வரையில் பொது சேவைகளை வழங்கக்கூடிய கட்டிடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கட்டிடங்களைத் தவிர பெரும்பாலானவற்றில் சாய்தள வசதி இன்மையால் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் தமது தேவைகளை தாமே சுயமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதுள்ளனர். தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒன்றில் பிறரின் உதவியை நாட வேண்டியுள்ளது. அல்லது நீண்ட நேரத்தை செலவளிக்க வேண்டியுள்ளது. இது அவர்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்குகின்றது.
கல்வித்துறையை நோக்குகின்ற போது, ஏனையவர்களைப் போன்று கல்வி வாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைப்பது இல்லை. மாற்றுத்திறனுடைய மாணவர்கள் சாதாரண பள்ளிகளில் சென்று கல்வி கற்க முடியாதுள்ளது. ஜப்பான் போன்ற நாடுகளில் ‘உள்ளடங்கள் கல்வி’ என்ற செயற்றிட்டத்தின் ஊடாக, மாற்றுத்திறன் உடையோரை சாதாரண பாடசாலைகளில் ஏனைய மாணவர்களோடு இணைத்து கல்வி கற்பிக்கும் செயற்பாடு வெற்றியளித்துள்ளது. இலங்கையில் அத்தகைய திட்டம் நடைமுறையில் இருந்த போதிலும் வெற்றியளிக்கவில்லை. குறிப்பாக சில தமிழ் பாடசாலைகளின் அதிபர்கள் மாற்றுத்திறனுடைய மாணவர்களை தமது பாடசாலைகளில் இணைத்துக் கொள்ள மறுக்கின்றனர். மாற்றுத்திறனுடையோர்கள் மற்றைய மாணவர்களோடு இணையும் போது சாதாரண மாணவர்கள், உள ரீதியாக பாதிப்புறுவார்கள் என்ற சிறுமைத்தனச் சிந்தனையில் சில அதிபர்கள் தமது பாடசாலைகளில் இயங்கி வந்த மாற்றுத்திறனுடையோர் வகுப்பறைகளை இல்லாது செய்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட போதிலும் அதன் பலனை மாற்றுத்திறனாளிகள் பெறவேண்டுமென்று பிரயாணிகளோ, நடத்துனரோ, ஓட்டுனரோ கண்டு கொள்வதில்லை. சக்கர நாற்களாலிகளில் செல்லும் மாற்றுத்திறனாளிகள் பொது போக்குவரத்தினை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு மேலைத்தேய நாடுகளில் காணப்பட்ட போதிலும் மூன்றாம் மண்டல நாடுகளில் அத்தகைய வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
1988ஆம் ஆண்டின் இலங்கை பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனுள்ள நபர்கள் தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்குமானால் திறமை தகுதிக்கு ஏற்ப மூன்று சதவீதம் முன்னுரிமையின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு வழங்க வேண்டுமென குறிப்பிடுகின்ற போதிலும், அவை நடைமுறையில் எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றது. சில நாடுகளில் பத்து சதவீதம் மாற்றுதிறனாளிகளுக்காக வேலைவாய்ப்பிற்கென ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இலங்கையில் மூன்று சதவீதமானோருக்கேனும் இத்தகைய வாய்ப்பு வழங்கப்படாமை வருந்தத்தக்க விடயமாகும்.
மாற்று திறனாளிகளை வேலைக்கு அமர்த்தும் போது குறைந்த ஊதியத்துடன் வேலைக்கமர்த்தல், நீண்ட நேர வேலையை செய்வித்தல், அவர்களின் உடல் உள அசௌகரியங்களை கவனத்திற் கொள்ளாமை போன்ற பொருத்தமற்ற செயற்பாடுகளும் இலங்கையில் இடம்பெற்று வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு விஷேட சலுகைகள் வழங்க வேண்டும் என்பதற்காக அவர்களை வேலையில் இணைத்துக் கொள்ளவும் மறுக்கின்றனர். மேலைத்தேய நாடுகளிலும், தொழில் மையங்களில் மாற்றுத்திறனுடையோரின் வாகனங்களை நிறுத்துவதற்கென தரிப்பிட வசதிகள் கூட செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன. மலசல கூடங்கள் சக்கர நாற்காலிகளை உள்ளே செலுத்தும் வகையில் அகன்ற கதவுகளையும். விசாலமான இடப்பரப்பினையும் கொண்டதாக ஒழுங்கமைக்கப்படுகின்றன. இத்தகைய வசதிகள் இலங்கையில் ஒரு சில இடங்களிலேயே காணக்கூடியதாக உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் தடைகள் ஒன்றோடொன்று இடைத்தொடர்புடையனவையாக காணப்படுகின்றன. அத்தகைய தடைகளை,
01. பௌதீக தடைகள்
02. சமூக தடைகள்
03. பொருளாதார தடைகள்
04. சட்டம் மற்றும் நீதி சார் தடைகள்
மாற்றுத்திறனாளிகள் தாம் வாழுகின்ற சூழலில் இடத்திற்கிடம் நகர்வதற்கு விஷேடமான கருவிகள் தேவைப்படும். உதாரணம் சக்கரநாற்காலி, ஊன்று கோல் போன்றன. இக் கருவிகள் இல்லாத போது மாற்றுத் திறனாளிகள் சமூகத் தொடர்புகளை விருத்தி செய்ய முடியாது போகும். எனவே மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் பௌதீச் சூழலானது மாற்றியமைக்கப்பட வேண்டும் உதாரணமாக கட்டடங்களுக்குள் பிரவேசிக்க கூடிய வகையில் சாய்தள வசதிகள், சக்கர நாற்காலிகள் செல்லக் கூடிய வகையில் பெரிய மலசலக் கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் பற்றிய அறிவுதிறன், மனப்பாங்கு மற்றும் அணுகுமுறைகள் என்பனவே சமூகம் சார்ந்தத் தடைகளாகும். உதாரணமாக மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் படிப்பிற்கு செவு செய்வது வீண்செலவு எனக் கருதுகின்றனர். அதேப்போன்று ஒரு ஆசிரியர் மாற்றுத்திறனாளிக்காக நேரத்தை ஒதுக்காமல் இருக்கின்றார்.
பொதுவாக மாற்றுத் திறனாளிகளில் பலர் வறிய குடும்பங்களிலே வாழ்ந்து வருகின்றனர். இயலாமையின் காரணமாக தொழில் செய்யாமை, அதிகரித்த மருத்துவ செலவு போன்றவற்றினால் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
மாற்றுத் திறனாளிகள் பௌதீக, சமூக மற்றும் பொருளாதார தடைகளை நீக்க சட்ட விதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளின் நலனைப் பேணும் வகையில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1996 ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபை உருவாக்கப்பட்டது. தேசிய சபையின் ஊடாக மாதத்திற்கு ஒரு முறை கூடும் கூட்டத் தொடர்களில் மாற்றுத் திறனாளிகளின் நலன் பற்றித் தீர்க்கமாக ஆராய்ந்து முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை காத்திரமான நடைமுறைப் பிரயோகத்தை எட்டவில்லை என்றே கூறலாம்.
மாற்றுத் திறனாளிகள் சமமாக மதிக்கப்பட வேண்டுமாயின் அவர்கள் எதிர் நோக்குகின்ற உள, உடல், சமூகச் சவால்களைத் தீர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. மாற்றுத் திறனாளிகள் தன்னிச்சையாக தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்யக் கூடிய நிலையை ஏற்படுத்தி மற்றவர்களின் தயவில் தங்கியிருக்கும் நிலையை இழிவளவாக்க வேண்டும்.