இனத் தொல்லியல்(Ethno Archaeology) என்பது சமகாலத்தில் வளர்ச்சியடைந்து வரும் ஒரு துறையாகவும் தொல்பொருளியில் செயன்முறைகளை ஆராய்வதற்கான தகவல் வழங்கும் ஒரு துறையாகவும் காணப்படுகின்றது. இனத்தொல்லியலானது மனிதனுடைய உறவுமுறைகள் மற்றும் அளவிடக்கூடிய மாற்றங்கள்,அவர்களுடை சூழல், கண்ணுக்கு புலப்படாத அல்லது எளிதில் அளவிட முடியாத சமூகமற்றம் கருத்தியல் மாற்றங்கள் பற்றி கவனத்தில் கொள்கின்றது. இனவியல் சார்ந்த ஆய்வின் மூலமாக இன அடிப்படையை மக்கள் வேறுபட்டவர்கள் என்பதை விட பண்பாட்டு அடிப்படையிலே இன வேறுபாடு தோன்றியதென்ற புதிய பண்பாட்டுச்சூழல் உருவானது. ஏங்கெல்லாம் இவ்வாய்வுக்கு தேவையான மனிதனுடைய எச்சங்கள் காணப்படுகிறதோ அவ் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு வயது, பால்வேறுபாடு மக்களது எண்ணிக்கை, சமகால மக்கள் சராசரியாக வாழ்கின்ற காலம், நோய்கள், இயற்கை அனர்த்தங்கள், சமூக உறவுகள், பண்பாடுகள் போன்றவற்றை கண்டறிய உதவுகின்றன. அதுமட்டுமன்றி நவீன மரபணுபரிசோதனை முறையும் இவ்வாய்வில் இணைந்து பண்டைய மக்கள் தொடர்பான பல்வேறு விடயங்களை வெளிப்படுத்த இனத்தொல்லியலுக்கு உதவுகின்றது. இவ்வாய்வில் இனத் தொல்லியலாளரும் இன வரையியலாளரும் கட்டாயமாக இடம்பெறுவர். இவர்களாலேயே மக்களது பாரம்பரிய வரலாறுகள் கட்டமைக்கப்படுவதனைக் காணலாம். அவ்வகையில் நெடுந்தீவில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பல் வாழ்ந்து வரும் நெடுந்தீவார் என்னும் சாதி மக்களுடைய பண்பாடு தொடர்பாக நோக்குவோம்.
அண்மைய தொல்லியல் ஆய்வுகள் நெடுந்தீவின் ஆதிகால வரலாறு யாழ் குடாநாட்டைப் போல பெருங்கற்கால மக்களுடனேயே ஆரம்பிப்பதாக சான்றுபகர்கின்றது. இப் பெருங்கற்கால பண்பாடு தென்னிந்தியாவில் இருந்து இலங்கை தீவெங்கும் பரவுவதற்கு முன்னர் வடஇலங்கையிலுள்ள தீவுகளுக்கு பரவியே பின்னர்; வட இலங்கை பூராகவும் அதிலிருந்து தென்னிலங்கை பூராகவும் பெருங்கற்கால பண்பாடு தோன்ற காரணமாக அமைந்தது. “காக்கை போகாத ஊருமில்லை நெடுந்தீவார் போகாத இடமும் இல்லை” என்ற பழமொழிக்கிணங்க நெடுந்தீவில் இருந்து மக்களின் இடப்பெயர்வானது பெருங்கற்கால பண்பாட்டுடனேயே ஆரம்பித்துள்ளதைக் காணலாம். இதனைத் தொடர்ந்து இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் நெடுந்தீவை ஆட்சி புரிந்த வெடியரசன் போரில் இறந்ததன் பின்னர் அவனது உறவினர்கள் கடல்வழியாக மட்டக்களப்பு பகுதிக்குச் சென்று குடியேறியதாக ஈழத்து முஸ்லிம் அறிஞர் குறிப்பிட்டிருந்த போதும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பழுகாமத்திற்கு அருகில் நெடுந்தீவார் என்னும் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருகின்றனர்.
பின்னர் 1950 இன் பின்னர் விவசாயக் குடியேற்றத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக கிளிநொச்சியில் இரணைமடுவை மையமாகக் கொண்ட பகுதியிலும் முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், வவுனியா போன்ற பகுதிகளிலும் நெடுந்தீவில் இருந்து இடம் பெயர்ந்தனர். அதுமட்டுமன்றி தொழில் வாய்ப்புத் தேடியும் 1980 இன் பின்னர் உள்நாட்டு யுத்தம் காரணமாக மேலத்தேய நாடுகளுக்கு இவ் நெடுந்தீவு மக்கள் இடம் பெயர்ந்தனர். இவ்வாறாக நெடுந்தீவிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தாலும் இவர்களில் பழுகாமத்தில் வாழ்ந்து வரும் நெடுந்தீவை மூதாதையினராகக் கொண்ட மக்கள் ‘நெடுந்தீவார்’ என்ற சாதியாக வகுக்கப்படடு வாழ்ந்து வருகின்றனர். இவ் மக்கள்கூ ட்டம் இன்று நெடுந்தீவுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். ஏனைய உள்நாடு வெளிநாடுகளில் வாழும் நெடுந்தீவு மக்கள் நெடுந்தீவை விட்டு இடம்பெயர்ந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் நெடுந்தீவுடன் இன்றும் தொடர்புடையவர்களாவே காணப்படுகின்றனர்.
ஆனால், நெடுந்தீவார் என்ற பட்டப்பெயருடன் பழுகாமத்தில் வாழும் மக்கள் கூட்டம் முதன் முதலில் பழுகாமத்தில் வந்திறங்கிய இடம் கொக்குபீச்சை எனப்படும் ஆற்றுப் பகுதியாகும். பின்னர் பழுகாமத்தில் குடியேறி பின்னர் மட்டக்களப்பில் கல்லடி, குருக்கள் மடம், களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு போன்ற இடங்களிலும் பரவி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தாம் நெடுந்தீவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்ற வரலாறு மட்டும் தெரிந்துள்ளதோடு மக்களோடு எவ்வித தொடர்பும் இன்றி தமக்கு என்றயொரு கட்டுக்கோப்புடன் நெடுந்தீவு மக்களது பண்பாடுகளையும் மட்டக்களப்பு மக்களுடைய பண்பாடுகளையும் பின்பற்றி தமக்கென ஒரு தனித்துவமான வாழ்க்கை முறையினை வாழ்ந்து வருவதனை காணலாம்.
இப் பழுகாமமானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலர் பிரிவுகளில் கோரதீவுபற்று பிரதேசம் படுவான்கரை ஒரு பகுதியை பிரதிபலிப்பதோடு மட்டூ, நவகீரி என்னும் உப அலுவலகப்பிரிவுகளோடு உள்டக்கியதாக காணப்படுகின்றது. இங்கும் சமூகமானது சாதியினை மையப்படுத்தியதாக நெடுந்தீவைப் போன்றே கட்டமைக்கப்பட்டு அந்தந்தக் குடிகள் அதாவது சாதிகள் குறிக்கப்பட்ட பிரதேசத்திலே வாழவேண்டும் ஏனை குடிகளின் பகுதிகளில் வாழக்கூடாத என்ற நிலையை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. எனினும் ஒவ்வொரு குடியினரும் சமூகநல்லுறவுடன் வாழ்ந்துவருவதனைக் காணலாம். பழுகாமத்தில் வேளாளர், மூக்குவர், பண்டாரப்பிள்ளை, வேடவேளாளர், நெடுந்தீவார், மூலவேலன் கத்தறை, வண்ணார், நாவிதர் எனப்பல சாதிப் பிரிவுகள் காணப்படுகின்றது. இதில் நெடுந்தீவார் என்ற சாதியானது அவர்கள் நெடுந்தீவிலிருந்து இங்கு வந்து குடியேறியதன் காரணமாக அவ்வாறு சிறப்பாக அழைக்கப்படுகிறது.
நெடுந்தீவார் என்ற பட்டப்பெயருடன் பழுகாமத்தில் வாழும் மக்கள் கூட்டம் முதன் முதலில் பழுகாமத்தில் வந்திறங்கிய இடம் கொக்குபீச்சை எனப்படும் ஆற்றுப் பகுதியாகும். பின்னர் பழுகாமத்தில் குடியேறி பின்னர் மட்டக்களப்பில் கல்லடி, குருக்கள் மடம், களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு போன்ற இடங்களிலும் பரவி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தாம் நெடுந்தீவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்ற வரலாறு மட்டும் தெரிந்துள்ளதோடு மக்களோடு எவ்வித தொடர்பும் இன்றி தமக்கு என்றயொரு கட்டுக்கோப்புடன் நெடுந்தீவு மக்களது பண்பாடுகளையும் மட்டக்களப்பு மக்களுடைய பண்பாடுகளையும் பின்பற்றி தமக்கென ஒரு தனித்துவமான வாழ்க்கை முறையினை வாழ்ந்து வருவதனை காணலாம்.
நெடுந்தீவு மக்கள் உள்ளுர், வெளிநாடுகளில் இவர்கள் வாழ்ந்தாலும் நெடுந்தீவார் என்ற பொதுமைச் சாதிப்பெயரால் எவரையும் அழைக்கப்படவில்லை. ஆனால் பழுகாமத்தில்(மட்டக்களப்பு) உள்ள நெடுந்தீவாரையே அவர்கள் வேளாளர்களாக காணப்பட்டாலும் சிறப்பாக நெடுந்தீவார் என அழைப்பதனைக் காணலாம். பழுகாமத்தில் நெடுந்தீவைப்போன்று ஒவ்வொரு சாதியினருக்குரியதாக கோவில்களும் சாதிக்குரியதான பூசைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இங்குள்ள கண்ணன் கோயிலில் ஏழுகுடி மூக்குவர்களும், மாவேற்குடா பிள்ளையார் கோவில், காத்தான்குடி வேளாளரும் மாரியம்மன் கோவிலினை நெடுந்தீவாரும் பரிபாலித்து வருகின்றனர். இம்மரபு நெடுந்தீவிலுள்ள இந்து, கிறிஸ்த மக்களிடம் இன்று காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் நெடுந்தீவார் சில வரலாற்று ஆசிரியர்களால் வெடியரசனோடு தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் எனது களஆய்வின் ஊடாக அவர்கள் கலிங்கமாகனது ஆட்சிக்காலத்தில் நெடுந்தீவுக்கு பழுகாமத்திற்கும் இடையில் ஏற்பட்ட உறவின காரணமாகவே பழுகாமத்தில் வந்து முதல் குடியேறியதாக மக்களால் கூறப்படுகிறது. வெடியசன் தொடர்பான வரலாறு அம்மக்கள் யாருக்குமே தெரியவில்லை. இதற்கு இம்மக்கள் சந்ததி சந்ததியாக தமக்கான வரலாற்று மரபை தொடர்ச்சியாக பேணாமை ஒரு காரணமாக இருக்கலாம்.
பழுகாமத்தில் வாழுகின்ற நெடுந்தீவார் இந்து மதத்தவர்களாக காணப்படுவதனால் வயது வந்தவர்கள் எங்காவது செல்வதாக இருந்தால் திருநீற்றுக் குறியும் பொட்டும் அவர்களது நெற்றியை அலங்கரிக்கும். இவர்களும் நெடுந்தீவாரைப் போன்று அம்மான் என்ற தெய்வத்தை ஆகம மரபுசராத வகையிலே வழிபாடு ஆற்றுவதனைக் காணலாம். இவ்வாலயத்திற்கு பூசகர்களாக இச்சமூகத்தில் உள்ளவர்களே முறைப்படி பூநூல் தரித்து பூசை செய்கின்றமை ஒரு முக்கிய விடயமாகும். மேலும் நெடுந்தீவில் பிடாரி அம்மன் வழிபாடும் பழுகாமத்தில் முத்துமாரியம்மன் வழிபாடும் சிறப்பாகக் கைக்கொள்ளப்படுகின்றது. பழுகாமத்திலுள்ள முத்துமாரியம்மன் ஆலயத் திருவிழாவின் போது தான் நெடுந்தீவார் என்ற சாதிக் கட்டமைப்புடைய மக்கள் கூட்டம் அனைவரும் ஏனைய பிரதேசங்களிலிருந்து முத்துமாரிஅம்மன்கோவில் ஒன்றிணைந்து கொள்வர்.
நெடுந்தீவார் பழுகாமத்தில் குடியேறி பின்னர் வேறு பிரதேசங்களில் குடியேறிய போது அதற்கு தமது தாய்கிராமமான நெடுந்தீவிலுள்ள பெயர்களையே சூட்டினார். குறிப்பாக மட்டக்களப்பில் குருக்கள்மடம் என்ற இடத்திலும் நெடுந்தீவார் என்ற குடியினர் வாழ்கின்றனர். இவ்வாறாக நெடுந்தீவில் உள்ள குருக்கள்மடம் என்ற கிராமத்திலிருந்த மக்கள் தான் மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்து தமது இடத்தின் பெயரை வைத்திருப்பார்களோ என எண்ணத்தோன்றுகின்றது.
இவர்களும் நெடுந்தீவைப் போன்று பனையை தமது வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருவதுடன் காலத்தின் தேவையை உணர்ந்து விவசாயம், மீன்பிடித்தல், கள்வடித்தல், மந்தை வளர்ப்பு போன்ற தொழில்களை பாரபட்சமின்றி செய்வதுடன் தமது கோயில்களை பூசை செய்வதற்காக தம் சாதிக்குள்ளேயே பூநூல் தரித்து ஆலய பூசை செய்து வாழ்ந்து வருகின்றமையை காணலாம். இவர்கள் முதன் முதலில் பழுகாமத்தில் வந்திறங்கிய இடம் கொக்குபீச்சை எனப்படும் ஆற்றுப் பகுதியாகும். அப்பகுதியில் இன்றும் அவர்கள் தமது உணவிற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் மீன்பிடித்து வருகின்றமையை காணலாம்.
இவர்களின் வாழ்வியலும் நெடுந்தீவாரைப்போன்று பாரம்பரியமான பனம்பொருள் உணவுகள், மீன், பிட்டு நெல் அரிசிச்சோறு என்பனவற்றுடன் மட்டக்களப்பு தேசத்திற்குரிய சிலவகையான உணவுகளும் உட்கொண்டுவருகின்றனா. நெடுந்தீவார் பழுகாமத்தில் அதிகமானோர் ஓலையால் வேயப்பட்ட குடிசைவீடுகளிலேயே வாழ்ந்துவருகின்றனர். எனினும் இவர்கள்மத்தியில் பாரம்பரிய சமயலறைப்பொருட்கள் வீட்டு அம்சங்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர்களது சடங்குகள், நம்பிக்கைகள், சமூகக்கொண்டாட்டங்கள் என்பனவும் நெடுந்தீவில் உள்ளவர்களைப்போன்று கடைப்பிடிக்கப்படுவதுடன் மரணவீடு நெடுந்தீவைப்போன்று பழமைமாறாதவகையில் தொடர்ந்து பின்பற்றிவருவதனைக்காணலாம். குறிப்பாக இங்கு பிணத்திற்கு பாடை கட்டும்மரபு இன்று அழியாமலேயே காணப்படுகின்றது.
இவர்களின் பேச்சுவழக்கில் நெடுந்தீவைவிட பாரியமாற்றம் ஏற்பட்டாலும் உறவுமுறைப்பெயர்கள் அப்படியே நெடுந்தீவையே பிரதிபலிப்பதோடு, இவர்களது உரையாடலின் போது ‘ங்க’ என்ற சத்ததுடன் முடிவடையும். குறிப்பா வாங்க, போங்க, அமருங்க போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். மேலும் இவர்களதுபண்பாட்டில் திருமணம்செய்வதாக இருந்தால் இரத்த உறவுகளுக்குள் சாதகப் பொருத்தம் பார்க்காது திருமணம் செய்வதுடன் வேறு முறையிலான திருமண பந்தமும் உளளது. ஆதாவது நெடுந்தீவார் குடிக்குள்ளேயே தமது சாதியினர் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களோடு தமது திருமண பந்தத்தினை வைத்துக்கொள்வார்கள். அத்துடன் திருமணத்தின் போது சீதன முறைமை என்பது இவர்களிடம் குறைவாகவே காணப்படுகின்றது. அத்துடன் சமூகக்கொண்டாட்டங்களின் போது உறவுகள் ஒன்றாக சேர்ந்து நின்று கொண்டாடி மகிழ்வதுடன் கூட்டுக்குடும்ப வாழ்க்கையே இன்று சில குடும்பங்களில் காணப்படுகிறது.
இவ்வாறு நெடுந்தீவில் இருந்து மட்டக்களப்பில் குறிப்பாக பழுகாமத்தில் வாழும் மக்கள் கூட்டம் தம்மை சிறப்பாக நெடுந்தீவார் என்று அடையாளப்படுத்தி தமக்கென்று தனித்துவ பண்புகளையும் தமது பிறந்த மண்வாடையின் பண்பாடுகளை மறக்காது பின்பற்றி வாழ்ந்து வருகின்றமையை காணலாம். இங்கு வாழ்கின்றவர்களில் சிலர் தமது தாயகமான நெடுந்தீவு மக்களுடன் தொடர்பினை பேணவேண்டும் என்ற ஆவலுடன் வாழ்ந்து வருகின்றனர்.
பொ.வருண்ராஜ்
உதவி விரிவுரையாளர்(தற்காலிகம்)
தொல்லியல் பாட அலகு
யாழ் பல்கலைக்கழகம்.