“புத்தாண்டு வாழ்த்துக்கள்” அலறிய தொலைபேசியை காதில் வைத்தவுடன் எதிர் பக்கம் நண்பனின் குரல். நீண்ட காலத்தின் பின் சீமையில் இருந்து அழைத்திருந்த நண்பன், வழமையான நலன் விசாரிப்புக்களுக்கு பின், விசயத்திற்கு வந்தான்….
– எப்பிடிடா ஊரில வருசம் போச்சிது?
– வழம போல தாண்டா மருத்து நீர் வெச்சி முழுகி கோயிலுக்கு போய் வந்து ரெலிபோணுக்கு பதில் சொல்றத்திலயே வருசம் முடிஞ்சி பொயித்துடா.
– ஏன்டா “மகிடி” கிகிடி எல்லாம் இப்ப நடக்கிற இல்லையா ?
– நீ என்ன 20 வருசத்துக்கு முந்தின நினைப்புல இரிக்கா போல. அதெல்லாம் இப்ப இல்லாம பொயித்து, 2 வருசத்ததுக்கு முந்தி ஆலடியில ஒண்டு நடந்ததாம் எண்டு கேள்விப்பட்டநான், இப்ப அதுவும் இல்ல.…. அடெய் நம்ம காடுகட்டுறது ஞாபகம் இருக்கா? அதுவும் உனக்கு கட்டுனது.
– ஹ ஹ ஒம் டா, சீவிராட்டி காட்டுக்குள்ள போய் கிளசெறியா எல்லாம் வெட்டித்து வந்து எண்ட உடம்பு தெரியாத அளவுக்கு, வெச்சிக்கட்டி எனக்கு நீங்க ஊருக்குள்ள கூட்டித் திரஞ்சத மறக்க ஏலாடா… பரமநயினார் கோயிலடி இருந்து சிவன் கோயிலடி வரைக்கும் மாலையாகிற வரைக்கும் டெல்கி அடிச்சி பாட்டும் படிச்சி கொண்டு நம்ட பாட்டி(நண்பர்கள்) எல்லம் எப்படி திரிஞ்ச நாம என்ன? நாமதான் காடுகட்டிட தலைக்கு கெல்மட் போட்டு கொஞ்சம் மெடல் (modern) காடுகட்டியா ஆக்கின….
என மூச்சு விடாமல் நீண்ட நினைவுகளை பகிர்ந்தான் நண்பன்.
உண்மையில் காடுகட்டி என்பது சித்திரை வருடப்பிறப்பு காலத்தில் நகைச்சுவை உணர்வோடு மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான ஒர் களம். சித்திரை வருடப்பிறப்பிற்கு அடுத்துவரும் நாட்களில் ஒர் குறிப்பிட்ட நபரை ஆலை இலைகள், காவுலா, புற்கள், கிளசேறியா போன்ற பற்றைகளைக் கொண்டு உடல் முழுவதும் மறைத்து, குறைந்து ஐந்து போர்கொண்ட குழுவினர் குறித்த காடுகட்டின நபரை ஒவ்வொரு வீடாக அழைத்து வருவார்கள். அவருக்கு வழிகாட்டுவதற்கு ஒரு கம்பைக்கொடுத்து ஒருவர் முன்னுக்கு நடந்துவர காடுகட்டப்பட்டவர் மெல்ல மெல்ல அசைந்து வரும் போது டோலக், மத்தளம் போன்ற இசை வாத்தியங்கள் அடித்துக்கொண்டு, சினிமாப்பாடல்களையும் பாடி ஆடி வருவார்கள். அவருக்கு பக்க இசையாக மற்றவர்கள் கைதட்டி உற்சாகம் கொடுத்து வருவார்கள்.
காடுகட்டி ஒவ்வொரு வீட்டிற்கும் போய் நடனமாடி மக்களை மகிழ்விப்பார்கள். முற்காலங்களில் இந்த காடுகட்டி ஆடுவதற்கு கூத்துப்பாடல்களை பாடியதாகவும் பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கின்றோம்.
சித்திரை புத்தாண்டை கொண்டாட ஊஞ்சல், மகிடி கூத்து, காடுகட்டி என எத்தனை மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில் சிலவை ஆங்காக்கு நடைபெற்றாலும் “காடுகட்டி” நிகழ்வு ஆரையம்பதி பிரதேசத்தில் இப்போது நிகழ்வது கொஞ்சம் ஆறுதலான செய்திதான்.
பாரம்பரியம் நிகழ்வுகள் ஒவ்வென்றும் ஏதோ ஒரு வகையில் தொடரப்பட வேண்டும் என்பது இன்று பெரும்பாலனவர்களின் அவா. சிரிப்பை தொடர்ந்து நண்பன் இன்னுமெரு விடயத்தை கூறினான்…
– நான் லண்டனுக்கு வந்து முதல் முதல் இஞச இரிக்கிற ஒரு பெரிய சுப்பர் மாக்கொட்டில (super market) வேல கிடைச்சிது. என்ன வேல எண்டு தெரியுமா ?
– ???
– நாம அங்க காடு கட்டுற மாதிரி இஞ்ச மிக்கிமவுஸ் (mike mouse ) உடுப்ப போட்டு சுப்பமாக்கெட்டுக்கு முன்னுக்கு நிண்டு ஆடுற, வாற கஸ்டமருக்கு பரிசுகள் குடுக்குற வேலதான், மச்சான் காடுகட்டின அனுபவமே என்னவே தெரியாடா. 20 வருசத்துக்கு முந்தி, முதல் வேலய கச்சிதமா செயதநான்.
நாம காடுகட்டுறம் இவனுகள் இஞ்ச காட்டுன் (cartoon) கட்டுறானுகள்…
என சிரித்துக்கொண்டு இருக்கும் போதே அவனது தொலைபேசி நிலுவையும் முடிந்து தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது…