பெண் தலைமத்துவக் குடும்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களில் வாழும் பிள்ளைகள் தங்கள் கல்வியைத் தொடர்வதில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். அதே சமயம் தொலைதூரக் கிராமங்களில் வாழும் பிள்ளைகளும் தங்கள் கல்வியைத் தொடர்வதில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
பெண் தலைமத்துவக் குடும்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குடும்பங்கள் பல இன்னமும் குறைந்த வருமானம் பெறும் நிலையிலேயே இருந்து வருகின்றார்கள். மற்றொரு புறம் கல்விக்கான செலவினங்களும் அதிகரித்துச் சென்றிருக்கிறது. அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் எனினும், பாடசாலை செயற்றிட்டங்களுக்கான கட்டணங்கள், மேலதிக வகுப்புகளுக்கான கட்டணங்கள் எனப் பல நிதிச்செலவுகளை பிள்ளைகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தொலைதூரக் கிராமங்களில் வாழும் பிள்ளைகள் மேலும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல தொலைதூரக் கிராமங்களில் இயங்கும் பாடசாலைகள் தரம் 5 வரையான வகுப்புக்களை மட்டும் (ஆரம்பப் பிரிவு மட்டும்) கொண்ட பாடசாலைகளாக உள்ளன. சில கிராம மையங்களில் உள்ள பாடசாலைகள் தரம் 9 வரையான வகுப்புக்களை மட்டும் கொண்டவையாக உள்ளன. இதனால் இப்பிள்ளைகள் தங்கள் கிராமங்களில் கல்வியைத் தொடர முடியாத நிலையில் , தொலைவிலுள்ள சிறுநகரங்களில் இயங்கும் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இப்பிள்ளைகள் போக்கு வரத்துச் செலவு, உணவுச் செலவு அல்லது தங்கும் வசதிக்கான செலவுகள் என மேலதிக செலவுகளை செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.
இத்தகைள பிரச்சினைகளால் இக்குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் சிறந்த கல்வி வாய்ப்பைப் பெற முடியாதவர்களாக ஆகிறார்கள். அதிகரித்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் கல்வியை இடைநடுவில் விட்டுச் செல்லும் துர்ப்பாக்கிய நிலையினையும் ஏற்படுத்தி விடுகின்றது.
இத்தகைய சமூக – பொருளாதாரப் பின்னணியில் வாழும் பிள்ளைகள் கல்வியைத் தொடர்வதற்கு, நிதி உதவி செய்ய வேண்டிய சமூகத் தேவை தோன்றியுள்ளது. இந்நிலையினைக் கருத்தில் கொண்டு மீட்சி அமைப்பு, இத்தகைய சமூக – பொருளாதாரப் பின்னணியில் வாழும் பிள்ளைகள் தங்கள் கல்வியைத் தொடர நிதி உதவிகளை வழங்கும் செயற்றிட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
மீடசி அமைப்பின் கல்வி உதவித் திட்டத்தில் பங்கு கொண்டு, எமது சிறுவர்கள் சிறந்த கல்வியைப் பெற்று வாழ்வில் உயர உதவுமாறு வேண்டுகின்றோம்.
நன்றி
இணைப்பாளர்,
மீட்சி