தமிழரின் தொல் வழிபாட்டு மரபு“தெய்வமேறப் பெற்று ஆடுதல்” ஆகும். இதன் தொடக்கப் புள்ளியாக அமைவது, இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட சங்க கால இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டுள்ள முருகு எனும் தெய்வத்திற்கு மேற்கொள்ளப்பட்ட வெறி எனும் வழிபாடாகும்.
முருகு எனும் தெய்வத்தை சங்க இலக்கியங்கள்; முருகன், சேய், சேயோன், வேள், செவ்வேள், நெடுவேள் என்றும் குறிப்பிட்டுள்ளன. இவையாவும் முருகனைக் குறிக்கும் சொற்களாகும் என்பர். இத் தெய்வத்திற்கு மேற்கொள்ளப்பட்ட வழிபாடுகளில் ஒன்றும் சிறப்பானதும் வெறி ஆகும். வெறியை சங்க இலக்கியங்கள்; வெறியயர்தல், முருகு அயர்தல், முருகு ஆற்றுப்படுத்தல் எனவும் குறிப்பிட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் இலக்கண நூலான தொல்காப்பியமே இவ் வழிபாட்டை “வெறியாட்டு“ எனக் குறிப்பிடுகிறது.
தொல்காப்பியத்தில் இடம் பெறும் வெறியாட்டு என்ற சொல் சங்க இலக்கியத்தில் இடம் பெறவில்லை. “மக்கள் வழக்கில் வெறியாட்டு என்ற சொல் இன்றுவரை புழக்கத்தில் இருந்து வருகிறது. சங்கப்புலவர்கள் வெறியாட்டு என்னும் சொல்லை பேச்சு வழக்காக எடுத்துக்கொண்டு அதற்கு இணையான இலக்கிய வழக்கினைப் பயன்படுத்தினார்களோ என்று கருத இடமேற்படுகிறது.”(1) என்று இதற்குக் விளக்கம் தருகிறார் ஜெகதீசன். எனினும் வெறியாட்டு எனும் சொல்லே இன்று வழக்கில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முருகு எனும் தெய்வத்திற்கு மேற்கொள்ளப்பட்ட வெறியை மேற்கொள்பவன் வேலன். அதனால் இது வேலன் வெறியாட்டு எனப்படுகிறது.
இது, தமிழ் மரபிற்குட்பட்ட வழிபாடாகவும் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் நிகழ்த்தப் பெற்ற வழிபாடாகவும்கொள்ளப்படுகிறது. “பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் முருக வழிபாடு முறையாகிய வெறியாட்டு மிகப் பழைமையானது என்பதும், சமுதாயக் கூட்டு வாழ்க்கையின் அடிப்படையில் தோன்றியது என்பதும் அறியப்படுகின்றன. கடவுட் கோட்பாட்டில் முதலில் தோன்றியது முருக வழிபாடு குறித்த கோட்பாடே. தமிழ் நாட்டில் முருக வழிபாட்டிற்குத் தோற்றமாயிருந்தது, வேலன் வெறியாடல். இஃது ஓர் இனக்குழு வழிபாட்டு முறை என்பர். கடவுள் வழிபாட்டிற்குத் தொடக்க நிலையில் உருவங்கள் வைத்து வணங்கப்படவில்லை. குறிப்பிட்ட அடையாளங்களை வைத்தே வழிபட்டனர். அதுபோல முருகனுக்கு அடையாளமாக வேலாயுதம் வைத்து வணங்கப்பட்டது.” என்கிறார் முனைவர் சி.சேதுராமன். *1
வேலன் வெறியாட்டு எனும் இந்தப் பண்டைய வழிபாட்டு மரபு, சிற்சில மாற்றங்களுடன் இன்றும் வழக்கில் இருந்து வருகிறது; ஈராயிரம் வருடங்கள் கடந்தும் இன்றும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது; காலங் கடந்தும் பிரதேசம் கடந்தும் இன்றும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது என்பதுவியப்பூட்டவதாகவே உள்ளது.
கேரளத்தில் வடமலபாரில் நிகழும் திரையாட்டம் அல்லது பேயாட்டம் என்ற பெயரிலும், மலபாரில் நிகழும் வேலன் பூசைகளிலும் சிற்சில மாற்றங்களுடன் இந்தப் பண்டைய வழிபாடு இன்றும் நாட்டு வழக்கில் இருப்பது வியப்பூட்டுவதாக உள்ளது என்கிறார் இந்த வழிபாட்டை பார்வையிட்ட பி.எல்.சாமி.“களம் அமைப்பதிலும், இரத்தப் பலியிலும், வேலன் அணியும் ஆடைகளிலும், வழிபாட்டு முறையிலுள்ள சில விவரங்களிலும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. சங்ககாலத் தமிழகத்தில் நிகழ்ந்து வந்த வேலனாட்டத்தின் எச்சமாகக் கேரளத்தில் இன்றும் நடைபெறும் இக்கிராமிய வழிபாடுகள் உள்ளன என்ற முடிவுக்கு ஐயத்துக்கு இடமின்றி வரமுடிகின்றது.” என்கிறார் அவர்.(2)
தமிழகத்தின் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள போரூரில் வாழும் குன்னுவ மன்னாடி இனத்தினர் நிகழ்த்தும் வெறியாட்டம், கேரள மாநிலத்தின் வடபகுதியிலுள்ள மலபார், காசர்கோட்டு மாவட்டங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்ற வேலன் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் பூசாரி இனத்தவர் நிகழ்த்தும் வேலனாட்டம் அல்லது தெய்யம் என்று அழைக்கப்படுகிற “வேலன் கோலம்”, தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் கன்னிமார் வழிபாடான வெறியாடல் போன்றன இந்தவேலன் வெறியாடலின் தொடர்ச்சிதான் என்கிறார் முத்தையா.(3) மத்திய கேரளத்தில் சங்கனாச்சேரியருகே உள்ளிக் கிராமத்தில் பகவதி காவில் நடைபெறும் வேலன் “வேலன் துள்ளல்” எனப்படும் வேலன் வெறியாட்டு, இன்றும் வேலனின் ஆட்டமோ அவனுடைய குறிசொல்லுதலோ எதுவும் மாறவில்லை. கழங்காடுதல்கூட இன்றும் உள்ளது என்பதனைக் காட்டுவதாகவே உள்ளது.என்கிறார் ஜெயமோகன். (4)
கிழக்கிலங்கையில் நிகழும்“சடங்கு” எனும் பெருவழிபாட்டு மரபு, தமிழரின் பண்டைய வழிபாட்டு மரபான “தெய்வமேறப் பெற்று ஆடுதல்” எனும் வழிபாட்டு மரபின் தொடர்ச்சியாகும். அதாவது சங்க காலத்தில் நிகழ்ந்த வேலன் வெறியாடல் வழிபாட்டு மரபின் தொடர்ச்சியாகத்தான் கிழக்கிலக்கைச் சடங்கு வழிபாட்டு மரபையும் கொள்ளவேண்டியுள்ளது. மட்டக்களப்பு – கிரான் குமாரத்தன் கோயிலின் தெய்வமாடியின், “குமாரருக்கு ஆடித்தான் பூசை செய்ய வேண்டும்” என்ற குரல் இந்த உண்மையைப் புலப்படுத்தும். சங்ககால வெறியாடல் அவ்வாறே அல்லது மாற்றங்களுடன் இன்று இங்கு நிகழ்த்தப்படுகிறது என்பதனைத் துணிந்து கூறுதற்குப் போதுமானளவு ஆய்வுகள் இன்னும் இங்கு நிகழத்தப்பெறவில்லை. எனினும் கிழக்கிலங்கைச் சடங்கு வழிபாடு, குறிப்பாக குமாரத்தன் சடங்கு, சங்ககால வேலன் வெறியாட்டின் தொடர்ச்சிதான் என்பதனை முதற்பார்வையிலேயே உணர்த்துவனவாகவே அமைந்துள்ளன.
“சங்ககாலம் நம்முடைய தொல்மரபு. அதிலிருந்து நாம் இரண்டாயிரம் ஆண்டுகளால் பிரிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நிகழ்த்து கலைகளின் வழியாக மிக எளிதாக நாம் அங்கு செல்லவும் அது இங்கு வரவும் அரியபாதை நம்முன்னே இருந்து கொண்டிருக்கிறது.”(4) என்ற ஜெயமோகனின் கூற்று, இத்தளத்தில் விரிவான ஆய்வுகள் செய்ய வேண்டிய தேவையை உணர்த்தி நிற்கிறது.
கிழக்கிலங்கையில் நிகழத்தப்பட்டு வரும் சடங்கு வழிபாட்டினை, பண்டைய தமிழ் வழிபாட்டு மரபான வேலன் வெறியாட்டுடன் ஒப்பீட்டாரய்வதற்கு, சங்க இலக்கியங்களும் பிற நூல்களும் சித்தரிக்கும் வேலன் வெறியாடல் பற்றிய விபரங்களை தொகுத்தும் பகுத்தும் நோக்க வேண்டியது அவசியமாகும்.இத்தகையதொரு ஆய்வு ஜெயமோகன் கூறியது போன்று ஓர் “அழகிய மலர்ப் பாதை”யாக மட்டும் இருக்கப் போவதில்லை என்பது உறுதி.
உசாத்துணைகள்
(1). முனைவர் சி.சேதுராமன், நெடுந்தொகையில் வழிபாட்டு முறைகள். http://puthu.thinnai.com/?p=7040
(2). சாமி.பி.எல். “வேலன் வழிபாடு”, மக்களும் மரபுகளும் – மானிடவியல் ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு, நியு டிசஞ்சரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட், சென்னை. 1993, பக்: 1,2
(3) முத்தையா.ஓ, “வேலன் வெறியாட்டு – சங்க காலம் முதல் சமகாலம் வரை”, பழந்தமிழக் கலைகளும் நீட்சியும், காவ்யா, சென்னை. 2103, பக் 67,68.
(4) ஜெயமோகன். “அழகிய மலர்ப்பாதை – நிறைவுரை, “வேலன் வெறியாட்டு – சங்க காலம் முதல் சமகாலம் வரை”, பழந்தமிழக் கலைகளும் நீட்சியும், காவ்யா, சென்னை. 2103, பக் 33.
(5). மே.கூ.நூ, பக் 39.