பழங்குடிகள் என்போர், ஒரு நிலப்பகுதியில் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருபவர்களாவர். பூர்வ குடிகள் என்போர், ஒரு நிலப்பகுதியின் அசல் குடிமக்களாவர். அதாவது பூர்வ குடிகள் குடியேறிய, ஆக்கிரமித்த அல்லது காலனித்துவப்படுத்திய மக்கள் அல்லாதோராவர். பழங்குடிகள் ஒரு நாட்டில் பன்னெடுங்காலம் வாழ்ந்து வருபவர்கள் என்ற வகையில், பூர்வ குடிகளாகவும் அமைவர். ஐக்கிய நாடுகள் சபையானது உலகனைத்தும் உள்ள பழங்குடிகளை பூர்வகுடிகள் என்று அடையாளங் காணப்பட வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது.
இந்த விளக்கத்தினைக் கவனத்தில் கொள்ளும் போது சில சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியவர்களாகின்றோம். மேலைத்தேச நாடுகளில் பன்னெடுங்;காலம் வாழ்ந்து வருகின்ற பழங்குடிகளுக்கும் அண்மைக்காலங்களில் குடியேறியோர்களுக்கும் இடையிலான தெளிவான வேறுபாடுகளை அவதானிக்கலாம். இதனால் பழங்குடியினரை அங்கு பூர்வ குடிகளாகவும் கொள்வது இலகுவானது. ஆனால் பன்னெடுங்காலமாக குடியேற்றம் நிகழ்ந்த இலங்கையில் இது ஒரு சிக்கலான விடயமாக அமைந்து விடுகிறது.
பழங்குடிகள் அல்லது பூர்வ குடிகள் பற்றிய ஆய்வில் இன்னும் சில சிக்கல்களை நாம் எதிர்நோக்க வேண்டியவர்களாகின்றோம். அவை அடையாளச் சிக்கல்களாகும். பக்தவத்சல பாரதி அவர்கள் ““பழங்குடிகளின் பெயர்கள் மற்றவர்களால் பல்கிப் பெருகிய நிலை ஒருபுறமிருக்க, பல பழங்குடிகள் பொத்தாம் பொதுவாக அழைக்கப்படும் அடையாளச் சிக்கலும் மறுபுறம் காணப்படுகின்றது. இருளர், காட்டு நாயக்கன், மலைவேடன், மலைக்குறவன் போன்ற பழங்குடியினர் பலரும், வெளியாரால் ‘வேடன்’ என்றும் கூட அழைக்கப்படுவதுண்டு. இப்பழங்குடிகள் அனைவரும் வேட்டையாடும் தொழிலைக் கொண்டிருப்பதால் அயல் சமூகத்தார் சுருக்கமாக ‘வேடன்’ என்கின்றனர்.” [பக்:72] எனக்குறிப்பிடுகிறார்.
இலங்கையிலும் இத்தகைய பொதுமைப்படுத்தும் வெளியார் அடையாளப் படுத்தல் ஏற்பட்டிக்கிறது என்பதற்கு வேடர் என்ற சொல் பிரயோகத்தின் பரந்த பயன்பாடு சான்றாக அமைகிறது. “இவ்வேடர் தம்மை எப்பெயர் கொண்டழைத்தனரோ தெரியவில்லை. ஆயின் சிங்களர் கொடுத்த பெயரே இவர்களுக்கு வழங்கிவரலாயிற்று.” எனக்குறிப்பிட்டிருக்கிறார் மெண்டிஸ் [பக்: 1-2]
“இத்தகு பொதுமைப்படுத்தும் வெளியாரின் பார்வை பொதுப்புரிதல் சார்ந்தது; அனைவரையும் பொதுமைப்படுத்திக் காண்பது. பொதுமையாக்கம் என்பது அவர்களின் தனித்துவத்தை நிராகரிக்கும் காலணிய மனநிலை சார்ந்ததாகும். இத்கைய பொதுமையாக்கத்தைக் கைவிடுவது மிகவும் அவசியமாகும். அவரவர் பெயராலேயே அழைக்கப்படுவது அவசியமாகும்.” என்கிறார் பக்தவத்சல பாரதி [பக்:72] அவர்கள்.
பாளி மற்றும் தமிழ் மொழியலெழுந்த ஆரம்பகால இலங்கை வரலாற்று நூல்களில், பூர்விக குடிகளை வேடர் எனக் குறிப்பிடும் வழக்கு இருக்கவில்லை என்பது சுவாரஸ்யமானதொன்றே. இந்நூல்கள் இலங்கையின் பூர்வ குடிகள் இயக்கர், நாகர் என்றே குறிப்பிடுகின்றன. இயக்கரும் நாகரும் வேட்டையாடும் சமூகமாக அன்றி, வளர்ச்சி பெற்ற ஒரு சமூகமாகவே காட்டப்படுகின்றனர்.
இத்தகைய சிக்கல்களைக் கவனத்தில் கொண்டு இலங்கையினதும் கிழக்கிலங்கையினதும் பழங்குடிகள் அல்லது பூர்வ குடிகள் பற்றிய தேடலை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இலங்கையின் பழங்குடிகள் அல்லது பூர்வ குடிகள் பற்றிய தகவல்கள் இலங்கையின் பண்டைய வரலாற்றைக் கூறும் நூல்களில் காணப்படுகின்றன. எச்.டபிள்யு.கொடிறின்றன், ‘கௌதம புத்தர் வருகை அல்லது அவருக்கு முந்திய புத்தர்களின் வருகைகளைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் கிடையா. பழங்கதைகளின் படி இந்நாட்டின் பழங்குடி மக்கள் இயக்கர், நாகர், தேவர் ஆகியோராவர். இப்பெயர்களில் யாதாயினும் உண்மை மறைந்திருக்கலாம். (பக்-6) எனக்குறிப்பிடுகின்றார். இவர்களில் “தேவர்” பற்றிய தேடல்கள் நடைபெறவில்லை என்றே குறிப்பிடலாம். குவேனியின் பிள்ளைகளின் வழித்தோன்றல்களான “புலிந்தர்”களைப் பற்றிய மேலதிக தகவல்கள் எதனையும் அறிய முடியாதவர்களாகவே உள்ளோம்.
மகாவம்சம் மட்டுமன்றி, தீபவம்சம், வம்சத்தபகசினி, திவ்யவதனா போன்ற இலங்கையின் பண்டைய வரலாற்றை விளக்கும் நூல்கள் பலவும், இலங்கையில் குடியேற்றங்கள் நிகழ முன்னர், இலங்கையில் பௌத்த சமயம் பரவுவதற்கு முன்னர் வாழ்ந்த பூர்வீக குடிகளாக இயக்கர், நாகர்கள் என்போரைக் குறிப்பிடுகின்றன.
‘மேலே காட்டப்பட்ட பெரும்பாலான ஐதீகங்கள் இலங்கையின் முதன்முதலாக இயக்கர்களே இருந்தனர் என்பதைக் கூறுகின்றன. ஆனால் எல்லாக்கதைகளும் இயக்கர் பற்றிய பகை நோக்கினையே கொண்டுள்ளன. புத்தர் இயக்கர்களைத் துரத்தினார் எனத் தீபவம்சம் கூறுகிறது. ஆனால் திவ்யவதனாவும் ஹியன்-சாங்கின் இரண்டாவது கதையும் சிம்களவே அவர்கைளத் துரத்தினான் எனக்கூறுகின்றன.’ (பக் 69-70) எனக்குறிப்பிடுகிறார் குணவர்த்தனா. இலங்கையின் பண்டைய வரலாற்றை விளக்கும் நூல்கள், நாகர்கள் பற்றி நட்பு நோக்கினையே கொண்டுள்ளன.
கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள் சான்றுகளும் இயக்கர் இலங்கையின் பூர்வ குடிகள் – குறுணிக்கற்கால மக்கள் எனக் காட்ட, நாகர்கள் ஆதி இரும்பக்கால – பெருங்கற்காப் பண்பாட்டு மக்கள் என்றும் அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து தமது பண்பாட்டின் செல்வாக்கை நிலைநிறுத்தியவர்கள் என்றும் இயக்கரும் நாகரும் ஒன்று கலந்தனர் என்றும் எடுத்துக் காட்டுகின்றன. குறுணிக்கற்கால மக்கள் ஒரு வகை முண்டா மொழியினைப் பேசியவர்கள் என்று அறிஞர் கொள்வர் எனவும் குறிப்பிடுகிறார் சி.பத்மநாதன் (பக்: 26) அவர்கள். நாகர்கள் மிகப் பண்டைக்காலத்தில் இலங்கையில் குடியேறியோராவார். அவ்வகையில் அவர்களை இலங்கையின் பழங்குடியினர் எனக் கொள்ளலாம்.
மட்டக்களப்பு பூர்வு சரித்திரம், இயக்கர் மற்றும் நாகரை மட்டக்களப்பின் பூர்வ குடியினர் எனக்குறிப்பிடுகின்றது. அண்மைக்காலத்தில் அறியப்பட்ட தொல்பொருள் சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு, மட்டக்களப்பு பிரதேசத்தில் நாகருக்கு முன்பு பல நூற்றாண்டுகளாக இயக்கர் வாழ்ந்து வந்துள்ளனர். இயக்கரின் நடமாட்டம் மலைகளிலும் மலையடிவாரங்களிலும் கூடுதலாகக் காணப்பட்டது எனக் குறிப்பிட்டிருக்கிறார் சி.பத்மநாதன் அவர்கள். (பக் 435) மேலும், இலக்கியம் வளம் பெறாத, ஆதிகுடிகளான இயக்கரின் மொழி காலப்போக்கில் அழிந்து விட்டது. தென்னிலங்கையில் இயக்கரின் மொழியும் தமிழும் வழக்கற்றுப் போய்விட்டன. ஆயினும் இலங்கையில் மூன்றிலோரு பாகத்தில் வடமேற்கு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ் மொழியின் ஆதிக்கம் காலப்போக்கில் மேலோங்கி விட்டது. இங்கு இயக்கரின் மொழியும் பிராகிருதமும் வழக்கொழிந்து விட்டன என்ற தகவலையும் தருகிறார் சி.பத்மநாதன் (பக் : 454) அவர்கள்.
இலங்கையிலுள்ள பிராகிருத மொழிக் கல்வெட்டுக்களில் தமடே, பத, பரத, நாக, கபோஜ, பமன என்னும் இன, சமூக குழுக்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கின்றன. (சி.பத்மநாதன், பக்:18) இவர்களில் பத என்போர் சமூக உற்பத்தியிலும் மொழி வழக்கிலும் ஏனையோரிலிருந்தும் வேறானவர்கள் என்பதற்கு பதவி நிலைகளில் இருந்த வேறுபாடு அடையாளமாகிறது. பத என்பது பூர்வீக குடிகளான குறுணிக்கற்கால மக்களைக் குறிக்கும் பெயராகலாம் எனக்குறிப்பிடுகிறார் சி.பத்மநாதன் (பக்: 26) அவர்கள்.
மட்டக்களப்பில் “குசலான் மலையில் பிராகிருத மொழியிலுள்ள நான்கு கல்வெட்டுக்கள் பத என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கிய நன்கொடைகளைக் குறிப்பிடுகின்றன. அவர்கள் பௌத்த சங்கத்தினருக்குக் குகைகளை வழங்கினார்கள். அவர்கள் அனைவரும் பிராகிருத மொழிப் பெயர்களைப் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவன் பத புஸபூதி, இன்னொருவன் பத கௌதம, என்பவன்; மற்றொருவன் க பதி சுமண; அவன் பத வே வகுத்தனின் சகோதரன்; வேறொருவன் பத சுதன என்பவன். குசாலன்மலைக் கல்வெட்டுக்கள் மூலம் பத என்போர் நாகரைப் போன்று ஒரு வேறான சமூகப் பிரிவினர் என்பதை உணரமுடிகிறது.” எனக்குறிப்பிடுகிறார் சி.பத்மநாதன் அவர்கள். (பக்:116-117) இவர்கள் மட்டக்கள்ப்பு பிரதேசத்தில் வாழ்ந்த பூர்வ குடியினாரவர்.
“மட்டக்களப்பு தேசத்தின் தென்பகுதிகளிலுள்ள கல்வெட்டுக்களிற் பத என்ற சொல் மிகக் கூடுதாலகக் காணப்படுகிறது.”, “நாகரை உள்ளடக்கிய ஆதி இரும்பக்காலப் பண்பாட்டு மக்களும், பத என்போரை உள்ளடக்கிய பூர்வ குடிகளும் சங்கமமாகின்ற நிலை ஏற்பட்டது. இரு சாராரும் பெரும்பாலும் பிராகிருத மொழிப் பெயர்களைப் பெற்றனர். பௌத்த சமயத்திலும் சேர்ந்து விட்டனர். எனினும், காலப்போக்கில் பிராகிருதமன்றித் தமிழே அவர்களின் பொது மொழியாகியது.” எனவும் குறிப்பிடுகிறார் சி.பத்மநாதன் அவர்கள். (பக்:117)
நாகர் மட்டக்களப்பு பிரதேசத்தில் பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்களாவர். மட்டக்களப்பு பூர்வு சரித்திரம் நாகர்கள் பற்றிக் குறிப்பிடுகையில், “குருகுலத்தில் அண்டிய நாகர்”, “அத்திநாடதனால் மீண்டு இலங்கை சேர்ந்து வாழ்ந்தனர்” என்று குறிப்பிடுகிறது. கலிகடந்து தெண்ணூறாண்டில் இலங்கையில் நாகர் வலியர் இயக்கரோடு கலந்தவர், மரபொன்றாகி நலிவில்லா நிருபஞ் செய்து நகரெலாம் இறைகளென்ன உகந்த மென்னும் நகரத்திலுறைந்தார் என மட்டக்களப்பு பூர்வு சரித்திரம் குறிப்பிடுவது, முக்கியமானதொரு விடயமாகவே கொள்ளப்பட வேண்டியதாகிறது.
அண்மைக்காலத்தில் மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள தொல்லியல் தலங்களில் நடைபெற்ற மேலாய்வுகள் நாகர்கள் பற்றிய பெருமளவிலான தகவல்களைத் தந்துள்ளன. இவ்வாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, இயக்கரும் நாகரும் கி,மு. 500 ஆம் ஆண்டு முதலாக மட்டக்களப்பு பிரதேசத்திலே கலந்து வாழத்தொடங்கினர், (பக்:445) என்றும் ‘கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் நாகரின் குடியேற்றங்களும் செல்வாக்கும் எழுவான் கரையிலும் படுவான்கரையிலும் பரவியிருந்தன என்று கொள்ளலாம்.’ (பக்:453) என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சி.பத்மநாதன் அவர்கள். மட்டக்களப்பில் வாழ்ந்த நாகர்கள் பற்றிய ஆய்வு தனியாக அமையும் அளவிற்கு முக்கியமானதும் விரிவானதுமாகும்.
திமிலர் மட்டக்களப்பில் பண்டைக்காலத்தில் இருந்து வாழ்ந்து வருகிற ஒரு சமூகப்பிரிவினர் என்ற வகையில் அவர்கள் இப்பிரதேசத்தின் பழங்குடியினராவர். மட்டக்களப்பு பூர்வு சரித்திரத்தில் ‘இயக்கர் என்னுந் திமிலர்’ என்ற குறிப்பும் காணப்படுகிறது. சங்க காலத்தில் திமிலர் எனும் மீனவர்கள் வாழ்ந்தமை பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் உண்டு. “திமிலர் என்பவர்கள் சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்த மீனவர்கள் குடிகள் ஆவர். திமில் என்பது சங்க காலத் தமிழர் பயன்படுத்திய கடல் நீர் கலங்களுள் ஒன்றாகும். இக்கலத்தை ஓட்டியவர்கள் திமிலர்கள்.” என்ற தகவலை விக்கிபீடியாவில் காணக்கிடைக்கிறது.
மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் வேறு சில பண்டைக்காலச் சமூகங்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. ஆடகசவுந்திரி ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த எயினர், நூற்றெட்டு பூதங்கள் பற்றி குறிப்புக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. எயினன், உன்னாசகிரியிலுள்ள குறுநில எயினன் எனக்குறிப்பிடுகிறான்.(பக் 20) சங்க இலக்கியமான பெரும்பானாற்றுப்படையில் வருணிக்கப்படுகிற வேடர் குடும்பம், எயினர் குடும்பமென்று குறிப்பிடப்படுகிறது. இப்பெயர் பாலையோடு தொடர்புடையது எனச் சிவத்தம்பி (பக்:36) அவர்கள் தரும் விளக்கம் எயினன் சங்ககாலச் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதனைக் காட்டுகின்றது.
நூற்றெட்டு பூதங்கள் யானையைப் போன்ற தேகமுடையவர்கள், முற்காலத்தில் இராவணேஸ்வரன் நிகும்பலயாகஞ் செய்ய அதிலுண்டாகிய பூதங்கள் எனவும், அவர்கள் வசித்த குகைக்கருகான இடமெல்லாம் செந்நெல் முத்துக்கோதுகள் பிரமாண்டமாய்க் குவிந்து கிடக்கின்றன என்பன் போன்ற தகவல்கள் மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளன. (பக் 20)
மட்டக்களப்பு பிரதேசம் பற்றிய ஆரம்பகால நூல்களில் கூறப்பட்டுள்ள பழங்குடியினர் அல்லது பூர்வ குடியினர் பற்றிய விபரங்களை பார்த்தோம். இதற்கப்பால், மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள தொன்மையான கிராமங்களையும், தொன்மையான கோயில்களையும் உருவாக்கியவர்களாகக் கருதப்படுகின்ற “வேடர்கள்” குறித்த ஐதீகக் கதைகள் குறித்து நோக்க வேண்டும்.
உசாத்துணைகள்
மெண்டிஸ், ஜீ.ஸி. (1969) நம்முன்னோரளித்த அருஞ்செல்வம் – முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பெனி லிமிற்றெட், கொழும்பு.
கொடிறின்றன், எச்.டபிள்யு. (1960) இலங்கையின் சுருக்க வரலாறு, அரசகருமமொழி வெளியீட்டுக் கிளை, இலங்கை.
கார்த்திகேசு சிவத்தம்பி. (1998) பண்டைத் தமிழ்ச் சமூகம், மக்கள் வெளியீடு, சென்னை.
பக்தவத்சல பாரதி. 2013. வரலாற்று மானிடவியல். புத்தாநத்தம்: அடையாளம்.
பத்மநாதன். சி., 2016, இலங்கைத் தமிழர் வரலாறு கிழக்கிலங்கையில் நாகரும் தமிழரும் இந்து சமக கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.
https://ta.wikipedia.org/wiki/திமிலர்