மட்டக்களப்பின் வடக்கில், கிரான் ஊரிற்கு மேற்கே, வயல் சூழ்ந்த மருதநிலத்தில், மாந்திரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிற கிராமமே கோரவெளி.
கோராவெளியில், மருத மரங்களின் நிழற்சோலையில், மாந்திரி ஆறு வார்த்த மணற்பரப்பில், கொக்கட்டிய மரத்தடியில், வைகாசி திங்கள் பதின்நான்காம் நாள் (28.05.2018) திங்கட்கிழமை மண்டபங்காவல் பண்ணலுடன் அரம்பமாகி, வைகாசி திங்கள் பதினைந்தாம் நாள் (29.05.2018) செவ்வாய்க்கிழமை மாலை பௌர்ணமித் திதியில், கோராவெளி ஸ்ரீ கண்ணகி அம்மன் வருடாந்த திருக்குளிர்த்தியாடல் தனிச்சிறப்புடன் நிறைவு பெற்றது.
கோரவெளி கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தி என்பது, ஏழு ஊர்களிலிருந்து எடுத்துவரப்படுகிற எட்டுக் கண்ணகி அம்மன்களுக்கு தனிச்சிறப்புடன் நடைபெறும் திருக்குளிர்த்தியாடல் ஆகும். இது ஏழு ஊர்கள் ஒன்று கூடி எட்டுக் கண்ணகி அம்மன்களுக்கு மேற்கொள்ளும் திருக்குளிர்த்தியாடல் ஆகும்!
கோராவெளியில் கண்ணகி அம்மனுக்கான நிரந்தரக் கோயில் இல்லை. “ஆயிரம் மண்டபங் கொண்ட தனக்கு கோயில் தேவையில்லை” என்று கண்ணகி அம்மன் கனவில் வந்து சொன்ன வாக்கை ஏற்று மக்கள் இங்கு கோயில் கட்டவில்லை! அம்மன் வாக்கை மீறி அமைக்கப்பட்ட கோயில் ஒன்று வெள்ளத்தில் இடிந்து போனமையும் வரலாறு. மாந்திரியாறு ஒரு காட்டாறு. அண்மைக்காலத்தில் பந்தல் வடிவிலான விநாயகர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நிலவும் கண்ணகி அம்மன் வழிபாடு “தேதியும் வருசமும் அறியா”க் காலத்துப் பழமையானதாகும். வழிபாட்டு மரபும் ஆகம முறைசாராது மரபு வழிப் பூசைப் பொங்கலும் குளிர்த்தியும் என தொல்தமிழ் முறையிலமைந்தது.
குளிர்த்திக்கு முதல்நாள், வைகாசித் திங்கள் பதினான்காம் நாள் (28.05.2018) கேராவெளி அம்மனை, சந்திவெளி கண்ணகி அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்து, மண்டபங்காவல் பண்ணி, கொக்கட்டிய மரத்தடியில், தாய்ப்பந்தலில் எழுந்தருளச் செய்வர். அதேபோல சித்தாண்டி, முறக்கொட்டன்சேனை, சந்திவெளி, கோரகல்லிமடு, கிரான், கிண்ணையடி, மிறாவோடை ஆகிய ஏழு ஊர்களிலிருந்து கண்ணகி அம்மன்களை ஊர்வலமாக எடுத்து வந்து, மண்டபங்காவல் பண்ணி, தாய்ப்பந்தலைச் சுற்றி வட்டவடிவில் பந்தலமைத்து எழுந்தருளப் பண்ணுவர். அம்மன் ஊர்வலமாக ஊருக்குள் வருகையில் கும்பம் வைத்து வரவேற்று தங்களின் விளைபொருட்களை வழங்குவர் மக்கள்.
வைகாசி திங்கள் பதின்நான்காம் நாள் (28.05.2018) திங்கட்கிழமை நோர்ப்பு நெல்குற்றல், அம்மன் அபிஷேகம், அம்மன் பூசை, நோர்ப்புப் பூசை, நோர்ப்பு ஒப்புக் கொடுத்தல் ஆகிய மரபுவழி நிழ்வுகள் நடைபெற்றன.
வைகாசி திங்கள் பதினைந்தாம் நாள் (29.05.2018) செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கும்பம் வைத்தல், விநாயகப்பானை எடுத்தல், விசேட அலங்கார பூசை என்பன இடம் பெற்றதுடன் மாலை திருக்குளிர்த்தியாடலும் வாழி பாடலும் இடம் பெற்று வருடாந்த திருக்குளிர்த்தி நிறைவுற்றது.
கோராவெளயில் இரு நாள் நடைபெற்ற திருக்குளிர்த்திச் சடங்கில், நாற்பதுக்கு மேற்பட்ட பூசகர்கள் மந்திரம் மற்றும் கண்ணகி அம்மன் காவியம் – குளிர்த்திப் பாடல்களைப் பாட, உடுக்கு, பறை வாத்தியங்கள் முழங்க, அடியார்களின் அரோகரா முழங்க, நாற்பதுக்கும் மேற்பட்ட தெய்வமாடிகள் தெய்வமாடி, சாட்டை பெற்று, வாக்குச் சொல்ல என பாரம்பரிய தொல்தமிழர் வழிபாட்டு முறையின் தனிச்சிறப்பை காணமுடிந்தது.
ஏழு ஊர்களிலிருந்தும் திரண்டு வந்த மக்கள், கண்ணகி அம்மனை வழிபட்டு, கண்ணகி அம்மனுக்கு தொண்டூழியம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தி, வாக்குக் கேட்டு, பொங்கலிட்டு அம்மனுக்குப் படைத்து, குளிர்த்தி பார்த்து வழிபடுதல் என்ற தொல்தமிழ் வழிபாட்டு முறையைக் காணமுடிந்தது அங்கு.
வருடம் ஒரு முறை ஏழு ஊர் மக்கள் ஒன்று கூடி ஆனால் தனித்தனிப் பந்தல் அமைத்து வழிபாடு இயற்றுதல், ஆகம முறைசார தொல்தமிழ் வழிபாட்டு முறையை தொர்டந்தும் பேணுதல், தங்கள் விளை பொருள்களை அம்மன் திருக்குளிர்த்திக்கு காணிக்கையாக வழங்குதல், உணவு சமைத்து வந்தோர்க்கு அமுது வழங்குதல் என்ற வகையில் இது ஒரு தனித்துவமான பண்பாட்டு மரபேயாகும்.
விவசாயம், மந்தை மேய்த்தல் மற்றும் சேனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் தனித்துவமான பண்பை எடுத்துக்காட்டும் ஒரு வழிபாட்டு முறையாக இவ்வழிபாட்டு முறை அமைந்திருக்கிறது. இத்தனித்துவமான வழிபாட்டு மரபை பேணிப்பாதுகாப்பதும் காலமாற்றங்களிற்கு ஈடுகொடுத்து தொடர்ந்து நிலைத்து நிற்கச் செய்வதும் நம் கடமையகும்.
கண்ணகி அம்மன் குளிர்த்தி, ஒரு பிரதேசத்து விவசாயிகளின் வழிபாட்டு மரபு மட்டுமல்ல. பரந்து பட்டு வாழும் தமிழர்களின் தனித்துவமான வழிபாட்டு மரபும் பண்பாட்டு அடையாளமுமாகும். அதிலும் கோராவெளியில் நிலவி வரும் வழிபாட்டு மரபு தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டு அடையாளமாகக் கொள்ளப்பட வேண்டும். இவ்வழிபாட்டு முறையினூடே மக்களின் வரலாறும், சமூகச் செய்திகளும் மறைந்து கிடைக்கின்றன.
தனித்துவமான தமிழிசை மரபைப் பேணலும் தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம் போற்றப்படுதலும் கண்ணகியை தங்கள் தாய்த்தெய்வமாக நோக்குதலும் இவ்வழிபாட்டு முறையில் காணப்படும் சிறப்பம்சமாகும். சிலப்பதிகாரத்தை, கண்ணகி கதையை இங்குள்ள சாதாரண மக்கள் அறிந்து பாடுதலும் கதையாகக் கூறுதலும், கண்ணகி அம்மனை வழிபடுதலும் தனிச்சிறப்பான செய்திகளாகும்.
இயற்கைச் சூழலை நேசிக்க வேண்டும், இயற்கைச் சூழலைப் பாதுக்காக்க வேண்டும், மக்கள் சமூகமாக ஒன்று கூடி வாழவேண்டும் என்னும் உலகளாவிய புதிய சிந்தனைகளைப் பிரதிபலிக்கின்ற இவ்வழிபாட்டு முறையை பேணிப்பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்.