சு.சிவரெத்தினம், விரிவுரையாளர், சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப்பல்கலைக்கழகம். இலங்கை.
இக்கட்டுரை, “ஈழத்தின் மட்டக்களப்புச் சமூக நடைமுறைகளில் சங்க இலக்கியத்தில் கூறப்படும் ‘குடி’ யின் வகிபாகமும் இறந்தவர்களைப் புதைக்கும் தமிழ் மரபும்” பற்றியதாகும்.
இலங்கை, தென்னிந்திய வரலாற்றை எழுதிய சிங்கள, தமிழ் வரலாற்று அறிஞர்கள், இலங்கையும் தென்னிந்தியாவையும் வெவ்வேறு பிரதேசங்களாகவே எழுதி வந்துள்ளனர். சிங்கள வரலாற்று அறிஞர்கள் தென்னிந்தியாவை ஓர் அன்னியப் பிரதேசமாகவும் ஈழத்தமிழர்களை பூர்வீக மற்றவர்களாகவுமே எழுதி வந்துள்ளனர். தென்னிந்திய வரலாற்றை எழுதிய தமிழ் வரலாற்று அறிஞர்கள், ஈழத்தமிழர் குறித்தோ அல்லது இலங்கை குறித்தோ பெரிதாக எதுவும் எழுதவில்லை. இவ்வகையான எழுத்துக்களும் அதன் பயனாய் உருவான இனக்காழ்ப்புணர்வுக் கட்டுமானமும் தொடர்ச்சியான இனமோதலுக்கே வழி வகுத்தது.
முதன் முதலில் பேராசிரியர் கா. இந்திரபாலா தொல்லியல் அடிப்படையில் இலங்கைத் தமிழர் பற்றி ஆய்வு செய்து, இலங்கைத் தமிழர் வரலாற்று எழுத்தியலில் புதிய பரிமானத்தை ஏற்படுத்தினார் எனலாம். “இலங்கையையும் தென்னிந்தியாவையும் பிரித்து நிற்கும் கடல் உண்மையில் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் கடல். அக்கடலின் இரு பக்கங்களிலுமுள்ள நிலப்பகுதிகள் ஒரு பொதுப்பண்பாட்டுப் பிரதேசத்தின் பாகங்கள்…. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் இந்நிலப்பகுதியில் மக்கள் பெயர்ச்சிகளும் பண்பாட்டுப் பரம்பலும் கடல் கடந்து நடைபெற்று வந்துள்ளன, பெரும் அரசியலமைப்புகள் இப்பிரதேசத்தில் தோன்றும் வரை. இத்தகைய மக்கள் நடமாட்டத்தையும் பண்பாட்டுப் பரம்பலையும் ‘அன்னியர் படையெடுப்பு’ அன்னியர் செல்வாக்கின் வருகை என்றெல்லாம் வர்ணிப்பது தவறாகும். இவை ஒரே நிலப்பகுதிக்குள் ஏற்பட்ட பரிமாறல்களும் பெயர்ச்சிகளுமாம். இலங்கைத் தீவானது தொல்காலத்தில் தூர தென்னிந்தியப் பண்பாட்டு வலயத்துள் அடங்கிய ஒரு பாகம் என்பதை ஏற்றுக் கொண்டால், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் வரலாற்றுத் தொடக்க காலத்திலும் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அவதானிக்கமுடியும். அக்கண்ணோட்டம் இலங்கை தொடர்பாக, அதாவது இலங்கையின் வரலாற்றைப் பொறுத்த மட்டில், தென்னிந்தியாவை ஓர் அன்னியப் பிரதேசமாக நோக்காத கண்ணோட்டமாகும்.”
ஈழத்தமிழர், தமிழ்நாட்டுத் தமிழர் என்ற ‘தமிழ்’ ஒருமைப்பாட்டிற்கும் அப்பால் தமிழர்களிடம் காணப்பட்ட, இன்று தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் காணப்படாத தொன்மையான பண்பாட்டு எச்சங்களை ஈழத்தமிழர்களிடம் காணக்கூடியதாக இருக்கின்றது. பண்டைய சங்ககால பண்பாட்டில் ‘குடி’எனும் சொல் குறிக்கும் கருத்தாக்கத்தினை அடிப்படையாக எடுத்துக்கொண்டு, அது ஈழத்தின் மட்டக்களப்புச் சமூகத்து அமைப்பில் எவ்வண்ணம் பங்காற்றுகின்றது என்பதை புரிந்து கொள்வதின் ஊடாக முன்னைய தமிழ் சமூகத்தைப் புரிந்து கொள்வதோடு, அது எவ்வண்ணம் தென்னிந்திய சமூகத்துடன் ஒரு தொடர்ச்சியையும் அதேநேரம் தனித்துவத்தினையும் கொண்டிருக்கின்றது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இந்தப் புரிந்துகொள்ளல் இலங்கை, தென்னிந்திய வரலாற்று எழுத்தியலில் புதிய போக்குகளைத் தோற்றுவிக்கலாம்.
குடி என்பதற்கு பல் வேறு விதமான அர்த்தங்கள் இருந்த போதிலும் கலித்தொகையில் ‘குடி’எனும் சொல் பின்வரும் இடங்களில் குடும்பம் எனும் அர்த்தங்களில் இடம் பெறுவதனைக் காணலாம்.
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு” 104 – 5, (கலி.பக்:459)
எனும் பாடலிலும் “வீவு இல் குடிப்பின் இருங்குடி ஆயரும்” 105 – 7 (கலி.பக் – 469) என குடி குடும்பத்தைக் குறித்து வருகின்றது. தொல்காப்பிய பொருளதிகாரத்தில்,
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்தகாமவாயில்
நிறையே அருளேஉணர்வொடுதிருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”
எனும் மெய்ப்பட்டியல் சூத்திரத்திரத்துள் “பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல் வரும் குலம் குடிமையாவது அக்குலத்தினுள்ளோர் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம்;;; பற்றிய குடிவரவைக் ‘குடிமை’என்றார்” (தொல்காப்பியம் பொருளதிகாரம், பக்: 159) என உரையசிரியர் வரையறுக்கின்றார்.
எனவே, கலித்தொகை கூறும் குடும்பம் என்பதனையும் தொல்கப்பியம் கூறும் அக்குலத்தினுள்ளோர் எல்லாருங் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் என்பனையும் கூர்ந்து கவனித்தாக வேண்டும். இவ்வாறு கூர்ந்து கவனிப்பதற்கு இன்று சமூகங்களில் காணப்படும் கருக் குடும்பத்தையோ அல்லது கூட்டுக் குடும்பத்தையோ அவற்றினது ஒழுக்கங்களையும் கலித்தொகையும் தொல்காப்பியமும் குறிக்கவில்லை என்பதை மட்டக்களப்பு சமூக அமைப்பில் குடி அல்லது குடும்பம் எனும் சமூக நிறுவனமும் அதன் ஒழுக்கம் தொடர்பான சமூக நடைமுறைகளும் எடுத்துக்காட்டுகின்றன.
மட்டக்களப்புச் சமூக அமைப்பானது தென்னிந்திய சமூக அமைப்பு, யாழ்ப்பாண சமூக அமைப்பு என்பவற்றிலிருந்து வேறுபாடானதாகும். தென்னிந்தியாவில் பிராமணரும் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளரும் அதிகாரம் மிக்க சாதிகளாக இருப்பது போன்று மட்டக்களப்பில் முக்குவர் அதிகாரம் மிக்க சாதியாகும். இந்த முக்குவர்களுக்குள் ஏழு குடிகள் காணப்படுகின்றன. இந்த ஏழு குடிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இந்தக் குடிகளுக்கான குடிக்குறி பொதுவானதாக இருப்பது அவர்கள் எந்த மூல ஊற்று என்பதை இலகுவாக அடையாளம் காண உதவுகின்றது. உதாரணமாக வில் அம்பை குடிக்குறியாகக் கொண்ட ஒரு குடியை வெவ்வேறு கிராமங்களில் வெவ்வேறுபெயர்களில் அழைத்தாலும் அவர்களின் வில் அம்பு எனும் குடிக்குறி அவர்கள் எல்லாம் ஒரே மூலக்குடி என அடையாளம் கண்டு கொள்ளமுடியும். இந்த குடிக்குறி இன்று பெருமளவுக்கு மாடுகளை எப்பிரதேச, யாருடைய மாடுகள் என அடையாளம் கண்டு கொள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
குடியுரிமை அல்லது ஒருவர் என்ன குடி என்பது அவருடைய தாய் வழியை அடிப்படையாகக் கொண்டு பார்க்கப்படுவதாகும். தாய் என்ன குடியோ அவருடைய மகனும் மகளும் தாயின் குடியைச் சேர்ந்தவர்களாவார்கள். இந்த இடத்தில்த்தான் தொல்காப்பியம் குறிப்பிடும் ஒழுக்கத்தை நோக்குதல் வேண்டும். அதாவது ஒரே குடிக்குள் திருமணவுறவு விலக்கப்பட்ட உறவாக இருக்கின்றது. அவ்வாறான நடத்தைகள் ஒழுக்கச் சீர்கேடுகளாகப் பார்க்கப்படுகின்றன. தாயின் வழியில் உறவைத் தீர்மானிப்பதால் அங்கு அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, மாமன், மருமகள், மருமகன், மகள், மகன், எனும் உறவுமுறைகளே இருக்கின்றன. இவர்களுக்கிடையிலான உறவுமுறை தகாததாகும். இதனால் ஒரு குடியைச் சேர்ந்தவர் திருமணம் செய்ய வேண்டுமாக இருந்தால் அவர் வேறொரு குடிப்பெண்ணையோ அல்லது ஆணையோதான் திருமணம் செய்தாகவேண்டும். அத்துடன் திருமணம் செய்கின்ற ஆண் பெண் வீட்டிலேயே வசிக்க வேண்டும். அசையும் அசையாச் சொத்துக்களும் பெருமளவுக்கு பெண்ணுக்கே வழங்கப்படும். இதனால் மட்டக்களப்புச் சமூக அமைப்பை புராதன தாய் வழிச் சமூக அமைப்பு என அழைப்பர்.
தென்னிந்திய சமூகங்களில் மாமன் மருமகள் திருமணம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. மாமன் மருமகளைத் திருமணம் செய்கின்ற போது உடன் பிறந்த அக்கா மாமியாகவும் மருமகள் மனைவியாகவும் மாறிவிடுகின்றனர். தாய் வழியில் இரத்த உறவை பேணுகின்ற புராதன மட்டக்களப்பு சமூக அமைப்பில் மாமன் மருமகள், மாமி மருமகன் உறவுகள் மரியாதைக் குரியதொன்றாகவே பேணப்படுகின்றது.
ஒரு கிராமத்தில் இருக்கின்ற குடிகள் அந்தந்தக் குடிகளுக்கான குடித்தலைவர்களைத் தேர்ந்தெடுப்பர் இவர்கள் ‘வண்ணக்கர்’என அழைக்கப்படுகின்றாகர்கள். இவருக்கு உதவியாகவும் கிராமத்திலுள்ள குடிகளின் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் இவர் ‘கடுக்கண்டவர்’ என அழைக்கப்படுவார். கிராம மக்களின் நம்பிக்கையினையும் அவர்களின் விருப்பத்தினையும் பொறுத்து இவர்கள் எவ்வளவு காலமும் இப்பதவிகளை வகிக்கலாம்.
வண்ணக்கர்தான் அந்தக் குடியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கௌரவப் பிரதிநிதியாவார். வண்ணக்கருக்கு வழங்கப்படும் கௌரவம் அந்தக் குடியினுள்ளோர் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அர்த்தம். அதேபோல் வண்ணக்கருக்கு ஏற்படும் அவமானங்கள் அந்தக்குடியினுள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டதாக உணரப்படும். கிராமத்தில் நடக்கின்ற நல்லது கெட்டது போன்ற அனைத்து விடயங்களுக்கும் முதல் அழைப்பு இவ்வண்ணக்குமார்களுக்கே வழங்கப்படும். அதன் பிறகே பிறருக்கு வழங்கப்படும்.
மட்டக்களப்பின் புராதன கிராமங்களின் கோயில்களின் திருவிழாக்கள் அல்லது சடங்குகள் குடிகளுக்குரியதாகவே நடாத்தப்படுகின்றன. வண்ணக்கர் கோயில் திருவிழாவை அல்லது சடங்குகளை குடியின் சார்பில் முன்னின்று நடத்துபவராகவும் அதன் மூலம் வழங்கப்படும் கௌரவத்தினைப் பெறுபவராகவும் இருப்பார்.
கடுக்கண்டவர் எனப்படுபவர் கிராமத்தில் ஏற்படும் மரண வீட்டினை முன்னின்று நடத்துபவராகவும் யார், யாருக்கு என்னென்ன வேலைகள் வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு கொடுப்பனவாக என்ன, எவ்வளவு வழங்கப்படவேண்டும் என்பவற்றையெல்லாம் மரணவீட்டாருக்கு அறிவுறுத்தி அக்கடமைகளை நெறிப்படுத்தி செய்விப்பவராக இவர் இருப்பார்.
எனவே மட்டக்களப்புக் கிராமங்களின் சமூகக் கட்டுப்பாடு, அதன் ஒழுக்கம், நடைமுறைகள் என்பவற்றில் வன்மமுடைய ஒரு நிறுவன அமைப்பாக குடி தொழிற்படுகின்றது.
புராதன தமிழ் சமூக்தில் இறந்தவர்களது உடல் எரிக்கப்படாமல் புதைக்கப்பட்டு அவ்விடத்தில் நடுகற்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்துள்ளதை சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தமரபில் பெரும்படை வாழ்த்தலென்று
இரு மூன்று மரபிற் கல்லொடுபுணரச்
சொல்லப்பட்டஎழு மூன்று துறைத்தே (தொல்.புறத்திணையியல் – 35-38)
எனதொல்காப்பியம் உயிரிழந்தவர்களுக்கு நடுகல் அமைத்தல் பற்றிக் குறிப்பிடுகின்றது. யாழ்ப்பாணமும் தமிழகமும் சமஸ்கிருத மயப்பாட்டுக்குள்ளானதன் காரணத்தினால் உயிரிழந்தவர்கள் புதைக்கப்படாமல் எரிக்கப்படும் மரபு பின்பற்றப்படுகின்றது. தமிழகத்தில் சில சமூகங்களில் உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டாலும் இறப்பின் காரணத்தின் அடிப்படையில் அச்சமூகங்களில் எரிப்பதுவும் நடைமுறையிலுள்ளதாக அறியமுடிகின்றது. ஆனால் மட்டக்களப்புச் சமூகத்தில் வயது, இறப்பின் காரணம் எதுவும் பாராமல் இறந்தவர்கள் அனைவரும் புதைக்கப்படுவதே இன்றும் மரபாக இருந்துவருகின்றது.
இந்த மரபையும் புராதன தமிழ் மரபையும் அடிப்படையாகக் கொண்டே விடுதலைப்புலிகளினால் இறந்த வீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு, அவ்விடத்தில் நினைவுக்கற்கள் கட்டப்பட்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டு நினைவு கொள்ளப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளக் கூடிய தமிழ் மரபின் ஒரு தொடர்ச்சியாகும்.
எனவே குடி, உயிரிழந்தவர்களைப் புதைத்தல் என சங்க இலக்கியங்கள் காட்டும் சமூக நடைமுறைகள் இன்றும் பேணும் தமிழ் சமூதாயமாக மட்டக்களப்பு காணப்படுகின்றது. இவை தவிர புராதன தமிழ் சமூக எச்சங்கள் மேலும் இங்கு காணப்படுகின்றனவா என்பதை தமிழறிஞர்களும் மானிடவியலாளர்களும் சமூகவியலாளர்களும் வரலாற்றாய்வாளர்களும் தொடர்வார்களாயின் தென்னிந்திய, இலங்கை தொடர்பான வரலாற்று எழுத்தியலில் பல புதிய பரிமானங்களை ஏற்படுத்த முடியும் எனலாம்.
உசாத்துணை நூல்கள்.
1. அப்பாப் செட்டியர். பி. ஆர். எதுகை அகராதி (முதல் பாகம்) , சென்னை – 2009
2. இளம்பூரணனார் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை- 2008.
3. இந்திரபாலா. கா. இலங்கையில் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்றவரலாறு, குமரன் புத்தக இல்லம், சென்னை- கொழும்பு – 2006.
4. விசுவநாதன் உரை, பரிமணம். ஆ.மா., பாலசுப்பிரமணியன்.கு.வெ. – பதி, நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 2011.
5. புலியூர்க்கேசிகன் உரை, தொல்காப்பியம் முழுவதும், பாரிநிலையம், சென்னை- 1998.