மட்டக்களப்பு – புளியந்தீவில், ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த புராதன இறங்குதுறையில், அப்புராதன இறங்கு துறையை ஞாபகப்படுத்தும் நோக்குடன் அமைக்கப்பட்டு, மட்டக்களப்பினொரு அடையாளமாக விளங்கும் நினைவுச் சின்னமே மட்டக்களப்பு வாயில் (Batticaloa Gate).
ஒல்லாந்தர் இலங்கையை ஆண்ட காலத்தில், போத்துக்கீசரால் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டிருந்த கோட்டையைப் புனரமைத்து பாரிய கோட்டை ஒன்றை மட்டக்களப்பு வாவி அருகே ஏற்படுத்தினர். இக் கோட்டைக்குரிய வளங்களை விநியோகிப்பதற்கும், ஏனைய வாணிப நடவடிக்கைகளுக்கும் கடல்வழி மார்க்கமே முக்கிய போக்குவரத்துச் சாதனமாக இருந்த அக்காலத்தில், கோட்டையை அண்மித்த ஆழமான கடல் நீர் ஏரியே சகல ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளுக்கும் முக்கிய இறங்குதுறையாக காணப்பட்டது. இதனால் கோட்டைக்கருகான வாவிக்கரையில் இறங்கு துறையை – துறைமுக மேடையை ஒல்லாந்தர் அமைத்தனர்.
தற்காலத்தில் சுங்கவீதி என அழைக்கப்படும் வீதியில் பொது நூலகத்திற்கு அருகாக இவ்விறங்குதுறை அமைக்கப்பட்டிருந்தது. இவ்விறங்கு துறையின் எச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன. இவ்விறங்குதுறையில் அமைக்கப்பட்டிருந்த பாரம் தூக்கி இன்றும் காணப்படுகிறது. இந்தப் பண்டைய இறங்கு துறையை ஞாபகப்படுத்தும் நோக்குடனும், அதைப் பிரதிபலிப்பதற்காகவுமே இவ்விடத்தில் மட்டக்களப்பு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மட்டக்களப்பு வாயில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் அமுல் படுத்தப்பட்டுவரும் வடக்குக் கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தித் திட்டத்தினால் (நெக்டெப்) இலங்கை அரசாங்கத்தினதும், ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் நிதியுடன் 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
வாயிலின் வெளியமைப்பு
இதன் சிறப்பம்சம் யாதெனில் இதில் இரண்டு விதமான கருங்கற்கள் பதிக்கப்பட்டு, நவீனமுறையில் அழகிய கலப்பான சிற்பக்கலை அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் விதமாகும். இதன் முன் பகுதி திறந்த தலைவாசலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு பக்கமும் இரண்டு சிறிய வாசல்களைக் கொண்ட தாழ்வாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உச்சிப் பகுதி ஒல்லாந்தரினால் பாவிக்கப்பட்ட பண்டைய விளக்குகளைப் பிரதிபலிக்கும் மாதிரி விளக்குகளினாலும், பண்டைய கலாச்சாரத்ததைப் பிரதிபலிக்கும் கலசங்களினாலும் அழகுற அலங்கரிக் கப்பட்டுள்ளது. இதன் வெளிச்சுவர் இள மஞ்சள் நிற கருங்கற்களாலும், தூண்கள் கறுப்பு நிறக் கருங்கற்களாலும் பதிக்கப்பட்டு அழகாகவும், சீராகவும் அமைக்கப்பட்டுள்ளன.
வாயிலின் உள்ளமைப்பு
பிரதான தலைவாசலின் வலது பக்கச் சுவரில் முதலாவதாக புறாவின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது தேசத்தின் முக்கிய தேவையான சமாதானத்தை நினைவு படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நாட்டில் சமாதானம் நிலவுமானால் அங்குவாழும் இனங்களுக்கிடையே அன்னியோன்யமும், சகோதரத்துவமும், நிலவுவதுடன் எல்லா இனங்களும் ஒருவரோடு ஓருவர் கைகோர்த்து ஐக்கியமாக வாழ்வதைக் குறிப்பதற்காகவே இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் ஆகியோரது ஐக்கியத்தை எடுத்துக்காட்டுவதற்காக நான்கு கைகள் கோர்த்திருக்கும் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக நாட்டில் சமாதானமும், ஐக்கியமும் நிலவுமானால், இயல்பாகவே மகிழ்ச்சி பொங்கி வழியும். அதைப் பிரதிபலிப்பதற்காகவே பால் பொங்கி வழியும் பானையின் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெண்கள் விருந்தினர்களை ஆரத்தி எடுத்து வரவேற்பதாகவும், மலர் தூவி வரவேற்பதாகவும் ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டக்களப்புக்கு வெளியிலிருந்து வருகை தரும் விருந்தினர்களை மனமகிழ்வுடன் வரவேற்று உபசரிக்கும் மட்டக்களப்பு மக்களின் இயல்பான பண்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
தலைவாசலின் இடதுபக்கச் சுவரில் மட்டக்களப்பு மக்களின் பாரம்பரிய கலை கலாச்சார, களியாட்ட கலையம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் மட்டக்களப்பு நாட்டுக்கூத்தில் அணியப்படும் கிரீடம், மற்றும் வாத்தியங்களான பறைமேளம், சல்லாரி, உடுக்கு, மகரயாழ், சிலம்பு, சொர்ணாலி ஆகிய வாத்தியங்களின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தலைவாசலின் வடக்கு, தெற்கு சுவர்களில் தானியக்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு மக்களின் முக்கிய வாழ்வாதாரத் தொழிலான வேளாண்மைச் செய்கையைப் பிரதி பலிக்கும் வகையில் அசைந்தாடும் நெற்கதிர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தலைவாசலின் உட்பகுதிமேற் சுவரில் இயற்கையுடன், உயிரினங்களும் இணைந்த ஒரு கலப்பான ஓவியம் வரையப்பட்டுள்ளது. இயற்கையின் பல்லினச் சேர்கையை விளக்குவதற்காக இந்தக் கற்பனை ஒப்பனைகள் கலந்த நவீன ஓவியம் வரையப்பட்டுள்ளது.
வலது பக்கத்திலுள்ள சிறிய வாசலைக் கொண்ட தாழ்வாரத்தின் வடபுறச் சுவரில் பண்டைக்காலத்தில் மட்டக்களப்பின் சிற்றரசர்களாயிருந்த மேகநாதனினதும், உலகநாச்சியாரினதும் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. தென்புறச் சுவரில் இலங்கையை ஆண்ட போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் அன்றைய ஆடையுடனான உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அத்துடன் அன்று அவர்களால் பயன் படுத்தப்பட்ட பாய்மரக்கப்பலின் சாயலும் பொறிக்கப்பட்டுள்ளது.
இடது பக்கத்திலுள்ள சிறிய வாசலைக் கொண்ட தாழ்வாரத்தின் மேற்குப்பக்கத்தில் மட்டக்களப்பு மக்களின் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகளான மட்டக்களப்பு நாட்டுக்கூத்தில் அணியப்படும் கிரீடமும், மற்றும் காவடி ஆட்டம், வசந்தன் கூத்து, கும்மி, மத்தளம் என்பவற்றின் கோலங்கள் வரையப்பட்டுள்ளன. மேல் பகுதியில் சந்திரவட்டக் கல்லின் தோற்றம் வரையப்பட்டுள்ளது.
அடுத்ததாக வெளிப்புறச் சுவரின் இரு பக்கங்களிலும் மட்டக்களப்பு வாவியில் பாடப்படுவதாக நம்பப்படும் நீராடும் மகளிரின் உருவங்களை வெளிக்காட்டுவதாக கருங்கல்லினூடே அந்த உருவங்கள் வரையப்பட்டுள்ளன.
முன்பு இத்துறைமுகம் மூலமே மட்டக்களப்பு பிரதான நிலப்பகுதி தீவான புளியந்தீவுடன் இணைக்கப்பட்டது. இவ்விடத்தில் மட்டக்களப்பிற்கான முதலாவது மெதடிஸ்த நற்செய்தியாளர் வண. வில்லியம் ஓல்ட் 1814 இல் தரையிறங்கியதாக நம்பப்படுகின்றது. அவரின் சிலையும் மட்டக்களப்பு வாயில் நினைவுச் சின்னத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பு
இம் மட்டக்களப்பு வாயில் நினைவுச் சின்னத்தின் எண்ணக்கரு, வடிவமைப்பு மற்றும் சித்திரங்களின் தேர்விலும் முக்கிய பங்காற்றிய, வடக்குக் கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தித் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டப்பிரிவில் இயற்கை வளத்திட்டமிடலாளராகப் பணியாற்றிய அரியதுரை அருணந்தியும், நினைவுச் சின்ன உருவாக்கத்தில் பங்காற்றிய மற்றையோரும் பாராட்டப் படவேண்டியவர்கள்.
மேற்படி அரியவரலாற்றுச் சின்னங்களை புனிதமாகவும், சிதைக்காமலும், வேறு வர்ணங்களால் கீறாமலும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவருவதும் கடப்பாடாகும்.
நன்றி : பிரதம ஆசிரியர், “முகவரி”, எண் 11, பாதை 1, புரட்டாதி – 2015