கோணேசர் கல்வெட்டில் கூறப்படும் மருங்கூர் மற்றும் தானத்தார் பற்றிய தேடல், இலங்கைத் தமிழரின் வரலாறு பற்றிய புதிய தகவல்களை வழங்கக் கூடியதொன்று. அவ்வகையில், மருங்கூர் மற்றும் தானத்தார் பற்றி தமிழகத்தில் கிடைக்கக் கூடிய தகவல்களை அறிந்து கொண்டு, அத்தகவல்களினூடாக இலங்கைத் தமிழர்களின் வரலாறு குறித்து சில புதிய புரிதல்களை பெற்றுக் கொள்ள இக்கட்டுரை முயல்கிறது.
தமிழ் அகராதி, தானத்தார், கோயில் அதிகாரிகள் அல்லது கோயில் விசாரணைக்குரியோர் எனப் பொருள் தருகிறது. திருமால் கோயிலை மேற்பார்ப்பவர் “மாகவைணவர்” அல்லது “தானத்தார்” என்றும் பொதுவாகக் கூறப் பெறுவர். தானத்தார் – “தானாவதிப்பிள்ளை” என்று அழைக்கப்படும் திரிசுதந்திரர்கள். சுவாமி எழுந்தருளும் காலத்தில் உடன் சென்று சண்டை சச்சரவு வராமல் பாதுகாப்பவர் இவர்.
முற்காலப் பாண்டியர் துறைமுகப் பட்டினமான மருங்கூர்
மருங்கூர்ப் பட்டினம், முற்காலப் பாண்டியர் துறைமுகங்களில் ஒன்றாகும். முற்காலப் பாண்டியர் துறைமுகப் பட்டினங்கள் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்து பாண்டியர் துறைமுகங்களாகும். முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்த முற்காலப் பாண்டியர் துறைமுகப் பட்டினங்களில் கொற்கை, மருங்கூர், அழகன் குளம் போன்றவை குறிப்பிடப்படுகிறது. மருங்கூர் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய அழகன்குளம் கி.மு.நான்காம் நூற்றாண்டு முதல் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வரை சிறப்புடன் விளங்கி இருந்துள்ளது.
மருங்கூர்ப்பட்டினம் துறைமுகத்தைப் பற்றி நக்கீரர் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இப்பாடல்களில், மருங்கூர்ப்பட்டினம் வங்கக்கப்பல்களில் வாணிகம் செய்வோர் வாழுமிடம் எனவும், கடலோர ஊணூரை அடுத்து மருங்கூர்ப் பட்டினம் இருந்தது எனவும், ஊணூர் அரசன் தழும்பன்; மருங்கூர்ப்பட்டின அரசன் வழுதி, அரசன் வழுதி, ‘பசும்பூண்-வழுதி’ எனச் சிறப்பிக்கப்படுகிறான் எனவும் அகநானூறு 227-18, நற்றிணை 258 மற்றும் 358 ஆம் பாடல்களில் குறிப்பட்டுள்ளன என்ற தகவல்களை விக்கிபீடியா தருகிறது.
சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சியில், கப்பல்கள் இத்துறைமுகத்தில் தங்கிருந்த காட்சி வெள்ளத்தை முற்றுகையிடும் மலை போல் காட்சியளித்தாகவும், மருங்கூர்பட்டினமும் ஊனூரும் சேர்ந்து நெல்லூர் அல்லது சாலியூர் எனப் பெயர் பெற்றிருந்தன எனவும் கூறப்பட்டுள்ளது. நெல் என்பது சாலி எனவும் வழங்கப்படுவதால் நெல்லூர், சாலியூர் எனவும் வழங்கி இருக்கலாம். எனவே தாலமி என்ற கிரேக்க அறிஞர் கூறியுள்ள சாலியூர் இந்தச் சாலியூரே என நாம் கருதலாம் என்கிறார் சொப்னா தனது பாண்டியர் துறைமுகப்பட்டினங்கள் என்ற கட்டுரையில்.
மருங்கூர்ப் பட்டினம் தோட்டங்களையும், காயல்களையும் உப்பங்கழிகளையும், செல்வம் கொழிக்கும் கடைத்தெருக்களையும் கொண்டு விளங்கியதை பாண்டி நாட்டுப் புலவரான நக்கீரர் ‘விழுநிதி துஞ்சும் நீறுபெறு திருநகர், இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, எல்லுமிழ் ஆணவம்’ (அகம்: 227:19-21) என்றும் காவிரிப்பூம்பட்டினத்தைப் போல் ஊணூரும் மதிலையும் அகழியையும் கொண்டு விளங்கியதை ‘கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்” – (அகம்; 227: 18), என்றும் ஊணூரைச் சூழ்ந்து வயல்கள் இருந்ததை ‘முழங்கு, கடல் ஓதம் காலைச் சொட்கும் நெல்லின் ஊணூர்” என்றும் மருதன் இளநாகனார் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுவார் மயிலை சீனி.வேங்கடசாமி.
தென்னிலங்கை வளஞ்சியர்
பாண்டியர் துறைமுக மற்றும் வணிக நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதியைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள், பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள், இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டு வணிகர்கள் போன்றவர்கள் அமைத்த நகரங்களும் பட்டினங்களும் இருந்தன. அவற்றுள் மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள்–நகரத்தார்-மணிக்கிராமத்தார், சாமகபண்டசாலிகள் –நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார்-தென்னிலங்கை வளஞ்சியர் எனப் பல வணிகக் குழுக்கள் இருந்துள்ளன.
தென்னிலங்கை வளஞ்சியர், தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும் என்ற கருத்துப் பலராலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகவல்கள், இலங்கைக்கும் தமிழகத்திற்கும் அதாவது மருங்கூர் உட்பட ஏனைய பாண்டியர் துறைமுக மற்றும் வணிக நகரங்களிற்கும் நெடுங்காலத் தொடர்பு இருந்தமையை அதாவது முற்காலப் பாண்டியர் காலமான சங்ககாலத்தில் காலத்தில் தொடர்பு இருந்தமையை உறுதிப்படுத்தப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுகள் வளஞ்சியரை, தென்னிலங்கை வளஞ்சியர் என குறிப்பிடுகின்றன. வேள்விக்குடி கோவிலின் ஒரு பகுதியை வளஞ்சியரும் திசையாயிரத்துநூற்றுவரும் கட்டச்செய்தனர் எனக் கல்வெட்டு கூறுகிறது. தென்னிலங்கை வளஞ்சியர் தொடர்பான தகவல்கள் வேள்விக்குடி கோவில் பற்றியும், கண்டியூர் பற்றியும் தொடர்புபட்டுள்ளது. செம்பியன் கண்டியூர் அகழாய்வு மூலம் இலங்கை தொடர்பான சில தகவல்கள் அறியப்பட்டுள்ளன.
அழகன்குள பானை ஓடு
முற்காலப் பாண்டியர் துறைமுகப் பட்டினங்களில் ஒன்றான அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடு ஒன்றில், பண்டைய தமிழ் எழுத்தில் ‘சமூதஹ’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் குகைக் கல்வெட்டுகளிலும் ‘சமூதஹ’ என்ற சொல் காணப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் நெடுங்காலத் தொடர்பு இருந்துள்ளதை அறியலாம்.
இத்தகவல்களின் வழியாக குளக்கோட்டான் – மருங்கூர் தொடர்பை உறுதிசெய்து கொள்ளலாம். ஆனால் இத்தொடர்பின் காலத்தை சரியாக அறிந்து கொள்வதற்குப் போதிய தகவல்கள் இல்லை.