இலங்கைத் தமிழரின் வரலாற்றைக் கூறும் நூல்களில் ஒன்றான “கோணேசர் கல்வெட்டு” கூறும் “மருங்கூர் தானத்தார்” பற்றிய தகவல்கள் வழியாக இலங்கைத் தமிழர்களின் வரலாறு பற்றிய சில தகவல்களைத் தொகுத்து முன்வைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஏட்டுப் பிரதியாக இருந்த “கோணேசர் கல்வெட்டு” முதன் முதலாக வல்வை க.சின்னத்தம்பிப்பிள்ளை அவர்களால் 1887 ஆம் ஆண்டிலே அச்சிட்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து பல பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. 1993 ஆம் ஆண்டில் பண்டிதர் இ.வடிவேல் என்பவரால் பதிக்கப்பட்டதும் முதன்முதலாக அவரால் உரையெழுதப்பட்டதும் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புக்களையும் கொண்டதுமான “கோணேசர் கல்வெட்டு” என்னும் நூலை மையமாகக் கொண்டமைகிறது இக்கட்டுரை.
கோணேசர் கல்வெட்டு
கோணேசர் கல்வெட்டு, கவிராஜவரோதயன் என்பவரால்; பதினேழாம் நூற்றாண்டில் எழுதப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனினும் இந்நூலை முற்காலச் சரித்திர நிகழ்ச்சிகள் பற்றி விபரிக்கிற நூலாகவே கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், இந்நூல் இதற்கு முன்னர் தோன்றிய “செப்பேட்டுப் பெரியவளமைப் பத்ததி” யை மூலநூலாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. மேலும், இந்நூலின் சிறப்புப் பாயிரத்தில் “குளக்கோட்டு மன்னன் சொற்படி சொல்லனவே / கல்வெட்டுப் பாட்டெனப் பாடினான் …” எனவரும் அடிகள், குளக்கோட்டு மன்னன் சொல்லி வைத்த விஷயங்களை கல்வெட்டாகப் பாடியதாகவே கூறுகிறது. எனவே இந்நூல் குளக்கோட்டு மன்னன் காலத்து விடயங்களைக் கூறுகின்றதெனக் கொள்ள வேண்டியுள்ளது.
அதேவேளை, திருகோணமலைப் பிராந்தியத்திலுள்ள சாசான வரலாறுகளையும் அவற்றின் பொருள் மரபினையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஒரு தொடர்ச்சியான இலக்கிய மரபினைப் பிரதிபலிக்கின்ற நூலாகவே கோணேசர் கல்வெட்டு அமைந்துள்ளது” எனப் பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகின்றமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோணேசர் கல்வெட்டு கூறும் மருங்கூர் மற்றும் தானத்தார்
கோணேசர் கல்வெட்டு, திருக்கோணேஸ்வரத் திருப்பணிகள் பற்றிக்கூறுவதுடன் குளக்கோட்டு மன்னன் கோணேஸ்வரக் கோயில் தொழும்புகள் செய்வதற்காக “தமிழ் நாட்டிலிருந்து குடிமக்களை அழைத்துக் கொண்டு வந்து திருகோணமலையில் குடியமர்த்தியதையும், அந்தக் குடிமக்களை நீதிதவறாமல் ஆட்சி செய்தவற்கு குறுநில மன்னர்களைப்போல வன்னிமைகளை அமர்த்தியதையும்” விபரிக்கின்றது. கோணேசர் கல்வெட்டின் இரண்டாம் பாடலில்,
“சொல்லரிய திரிகயிலைப் பெருமையெல்லாம் தூயபுராணக்கதையிற் சொன்னதுண்டு
வல்லதொரு வன்னிமையுந் தானத்தாரும் வரிப்பத்துமாமிவர்கள் வந்தவாறும்
நல்லதொரு பூசைவிதி நடக்குமாறும் நடந்தனதன்மே லினிநடக்கும் நடத்தையாவும்
சொல்லனவே சோதிடத்தின் நிலையேகண்ட கவிராசன் வருங்காலஞ்சொல்லும் சீரே.”
என வன்னிமை, தானத்தார், வரிப்பத்தர் ஆகியோர்கள் ’வந்தவாற்றை’ கவிராசன் சொல்லத் தொடங்கினான் என்ற தகவல் கூறப்படுகிறது.
குளக்கோட்டு மன்னன் ஆலயத் தொழும்பு செய்ய ஆள் வேண்டுமென சோழநாட்டுக்குச் சென்றான் என நான்காம் பாடல் கூறுகிறது. ஐந்தாம் பாடலில் மருங்கூரிலிருந்து வளவரின் நல்லோரை திருகோணமலையில் குடியேற்றியமை பற்றிய தகவல் கூறப்பட்டுள்ளது.
“பரிதிகுலத் துதித்த குளக்கோட்டு ராசன் பங்குனி உத்திரம் பதினைந்தாம் தேதி
தன்னில்
வரிசையுடன் சென்று மருங்கூரிலே வளவரின் நல்லோரை மரக்கலத்தில் ஏற்றி
அரியதிரி கோணமலை நாதற்கென்றே அன்னகரில் ஐயாறு குடியும் ஏற்றி
உரிமையிது உங்கள் பரவணியாம் என்றே உரைசெய்தான் சதுர்வேத ஞானமூர்த்தி.”
இப்பாடலில் வரும் வளவரின் நல்லோர் என்பது “சோழ மக்களில் நல்லொழுக்கமும் சீலமும் ஆசாரமும் நிறைந்த நன் மக்கள்” எனப் பொருள் படும். ஆறாம் பாடலில், மருங்கூர் வளவரின் நல்லோர்- தானத்தார் பற்றிய தகவல்கள் கூறப்பட்டள்ளன.
“இத்தலத்தில் அரன் கயிலை ஆலயத்தில் இயன்ற அறைதனில் முதல் இருப்பு நாட்டி
நித்தம் வரவாகும் பொருள்களோடு நிதம் பூசைச் செலவெழுதநியமஞ் செய்து
அத்தர்முன்னர் ஆலாத்தி நடனமிடல் பன்றிகுற்றல் அதிகப்பட்ட அரனுக்கீதல்
இத்தனையும் தானத்தார் செய்வீரென்ன எழுகுடிக்கு இராயப்பட்டம் ஈந்தன்
வேந்தன்.”
இப்பாடல் மூலம் தானத்தார், அத்தர் முன்னர் ஆலாத்தி எடுத்தல் – நடனமிடல், பன்றி குற்றல், அதிகப்பட்ட அரனுக்கீதல் (அரனுக்கு பட்டாடை இடல்) என்பவற்றை செய்வீரென குளக்கோட்டான் பணித்தமை பற்றிய தகவல் கூறப்பட்டுள்ளது.
உரையில், “இறைவன் திருவுலா வரும்போது தானத்தார் குடியைச் சேர்ந்த பெண்கள் ஆலாத்தி எடுக்க வேண்டுமென்றும், இன்னின்ன குடியைச் சேர்ந்தவர்கள் நடனமாடவும், பன்றி குத்தவும், அரனுக்குப் பட்டாடை இட வேண்டுமெனவும் திட்டம் பண்ணி…” யதாகக் கூறப்படுகிறது. குடியேற்றங்கள் பற்றிய விபரங்களைக் கூறும் கோணேசர் கல்வெட்டின் உரைப்பகுதியில், “மருங்கூர் வன்னிபம்” எனவும் குறிப்பிடப்பட்டு பலருடைய பெயர்கள், செய்ய வேண்டிய தொழும்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.
கோனேசர் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள தானத்தார் என்னும் சமூகத்தினர் திருகோணமலையில் வாழ்ந்தமைக்கான வேறு தகவல் ஆதாரங்களும் உண்டு. தானத்தார் என்னும் குடிகள் பற்றிய செய்திகள் தம் காலத்தில் மக்கள் மத்தியில் நிலவியதை அறிந்து, முன்னுரையில் கூறியிருக்கிறார் இ.வடிவேல். வையாபாடலிலும் மருங்கூர் மற்றும் தானத்தார் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
கோணேசர் கல்வெட்டில் கூறப்படும் மருங்கூர் மற்றும் தானத்தார் பற்றிய தேடல், இலங்கைத் தமிழரின் வரலாறு பற்றிய புதிய தகவல்களை வழங்கக் கூடியதொன்று.