தானத்தார் தொடர்பான பல தகவல்களை தமிழகத்தின் தொன்மையான குடுமியான்மலைக் கல்வெட்டின் மூலம் அறியக்கூடியதாகவிருக்கிறது. குடுமியான்மலைக் கல்வெட்டில் மருங்கூர், தானத்தார் பற்றிய தகவல்களுடன் ஈழம் பற்றிய சில தகவல்களும் கூறப்பட்டுள்ளன.
குடுமியான்மலை புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயில் மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு குடுமியான் மலை என்று அழைக்கப்படுகிறது. சிகா என்பது குடுமி என்னும் பொருளில் குடுமியுள்ள இறைவன் என்று வரும். கி.பி 10 ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இவ்வூர் திருநலக்குன்றம் என்றும் 14ம் நூற்றாண்டு கல்வெட்டில் சிகாநல்லூர் என்றும் கடவுளின் பெயர் குடுமியார் என்றும் 17-18ம் நூற்றாண்டு கல்வெட்டில் குடுமியான்மலை என்றும் குறிப்பிடப்படுகிறது. தற்போது இவ்வூர் பெயர் குடுமியான் மலை என்றே நின்று நிலவ, இறைவன் பெயர் மட்டும் சிகாநாதா என வழங்கப்படுகிறது.
குடுமியான்மலை ஊர் தற்போது குன்றியூர் நாட்டிலமைந்த திருநலக்குன்றம் அல்லது திருநிலக்குன்றம் எனப்படுகிறது. “குன்றியூர் நாட்டை உள்ளடக்கியிருந்த கோனாடு பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களில் இரட்டாயாடி கொண்ட சோழவளநாடாகவும் பின்னர் கடலடையாதிலங்கை கொண்ட சோழவளநாடாகவும் அறியப்பட்டது என்கிறார் இரா.கலைக்கோவன். சோழவளநாடு, கடலடையாதிலங்கை பற்றி மேலும் தகவல்கள் அறியப்படவேண்டும்.
இங்கு மொத்தம் 120 கல்வெட்டுகள் உள்ளன, இவை இப்பகுதியின் அரசியல் பொருளாதார வரலாற்றினையும் இக்கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட விபரங்களையும் தெரிவிக்கின்றன. குடுமியான்மலைக் கல்வெட்டில், தானத்தார், நாட்டார் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
“கோனாட்டுக் காரையூரில் மன்னர் வீரபாண்டியர் இருந்தபோது கோயில் தானத்தார் சந்தித்துக் கோயிலுக்குச் சொந்தமான மேல்மணநல்லூரில் நிலத்தை இறையிலியாக்க வேண்டினர்.” (53)
“கடலடையாதிலங்கை கொண்ட சோழவளநாட்டு நாட்டாரும் கோயிற் தானத்தாரும்..” நிலம் விற்றமை (117)
தொடர்பான தகவல்கள் இக்கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குடுமியான்மலைக் கல்வெட்டில் மருங்கூர் பற்றிய தகவல்களில், ஓடிப்போனவர் நிலம், கைமாறிய நிலம் பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன. நலங்குன்றத்து கைக்கோளார் ஜயதுங்கநாயகன் இறைவன் தேவதானமான மருங்கூரை விலைக்குப் பெற்று அனுபவித்து வந்தார். கோனாட்டு நாட்டாரும் கோயில் தானத்தாரும் அந்நிலத்துக்குரிய பங்காக ஜயதுங்கநாயகனைத் திருக்கோபுரத் திருப்பணிக்கு மூன்று அச்சு அளிக்குமாறு செய்தனர் என்ற தகவல் ஒரு கல்வெட்டில் (131) கூறப்பட்டுள்ளது.
வீரபாண்டியரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில், நலக்குன்ற இறைவனின் திருக்கற்றளி சீர்குலைந்தமையாலும் அக்குலைவை நேர் செய்யப் பொருள் இல்லாமையாலம் கடலடையாதிலங்கை கொண்ட சோழ வளநாட்டாரும் கோயில் தானத்தாரும் இணைந்து இறைவன் திருநாமத்துக் காணியாக விளங்கிய இலுப்பைக்குடிக் குளம், வயல் இவற்றுள் ஒரு பகுதியை நலக்குன்றத்து தேவரடியார் தக்கையாண்டாள் மகள் நாச்சிக்கு 73,3000 அன்றாடு நற்புதுக்காசுக்கு விற்றனர். (45) இந்நிலத்திற்கான ஆவணமொன்றிலும் நாட்டார் சிலரும் கோயில் தானத்தாரும் கையெழுத்திட்டுள்ளனர். கையீடு எனும் இவ்வாணத்தில் நாட்டாரையும் தானத்தாரையும் கிழிப்புணையாக பணமுடிப்பிற்குப் பொறுப்பாளர்களாக அடையாளப்படுத்துகிறது.(46)
குடுமியான்மலையிலுள்ள கல்வெட்டுக்களில், முதற் பராந்தகனின் முப்பத்து மூன்றாம் ஆட்சியாண்டின் போது ஈழப் போருக்குச் சென்ற பராந்தகன் பற்றிக் கூறப்பட்டுள்ளது. “ஈழமும் கொங்கு மண்டலமும் கொண்டு வல்லானை வென்ற பெரும்பற்றப்புலியூரில் வீராபிஷேகம், விஜயாபிஷேகம் செய்து கொண்டவராக வீரபாண்டியரைப் பெருமைப்படுத்துகின்றன”, என்கிறார் இரா.கலைக்கோவன். இக்கல்வெட்டுக்கள் பல்வேறு காலப்பகுதிக்குரியனவாகும்.
திருவண்ணமாலைக் கோயில் கல்வெட்டுக்களிலும் கோயில் அதிகாரிகளில் ஒருவராக தானத்தார் என்போர் குறிப்பிடப்பட்டுள்ளனர். கும்பகோணத்திலுள்ள தலைஞாயிறு என்றழைக்கப்படும் கருப்பறியலூர் கோயில் கல்வெட்டுக்களிலும் தானத்தார் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் அமைந்துள்ள மருங்கூர்
கோணேசர் கல்வெட்டில், கூறப்பட்டுள்ள மருங்கூர் தமிழ் நாட்டில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சியாகும். இம்மருங்கூர் பற்றிய தகவல்களை விக்கிபீடியா உட்பட பல்வேறு வலைத்தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இம்மருங்கூரின் அயலில் கொட்டாரம், நல்லூர், புத்தளம் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. திருகோணமலையில் கொட்டியாரம், நல்லூர் என்ற பெயர்கள் பிரசித்தமானவை!
மேலும் அறிய…
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1040.
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=4
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1143