அண்மைக்காலத் தடலாடி அரசியல் மாற்றங்களின் உச்சமாக, இலங்கைப் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்கிறார் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்.
சானதிபதி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்காற்றிய விசேட உரையில், ‘பல்வேறு முக்கிய காரணங்களைக் கருத்தில் கொண்டு நான் பாராளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுத்தேன்’ என கூறியதுடன் அந்த முக்கிய காரணங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு காரணம், ‘புதிய பிரதமர் நியமனத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றன. ஒரு உறுப்பினருக்கு 100 மில்லியனிலிருந்து 500 மில்லியன் ரூபாவரை விலை பேசப்பட்டது.’ என்பதாகும். மற்றொரு காரணம், ‘சபாநாயகர் கரு ஜயசூரிய தனது அதிகாரத்தை மீறி செயற்பட ஆரம்பித்தார். பதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.’ என்பதாகும். அடுத்த காரணம், ’14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மோதல்கள் ஏற்படும் அபாயம் காணப்பட்டது. ஒரு சிலரின் மரணங்கள் கூட இடம் பெறும் என்ற அபாயம் வெளிக்காட்டப்படது.’ என்பதாகும்.
இந்தக் காரணங்களைக் கேட்போர், இவை பாராளுமன்றத்தைக் கலைத்ததற்கான தக்க காரணங்களாக அமையாது என்றே உணர்வர். மேலும் இந்தக் காரணங்கள் மூன்றும் அவரது புதிய கூட்டாளிகள் மேல் சுமத்தக்கூடியவை என்பதுவும் சுவாரஸ்யமானதொன்றே. இதற்காப்பால் பாராளுமன்றக் கலைப்புக்கான பல காரணங்கiளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தைக் கலைத்தமை அரசியலமைப்பிற்கு முரணானது எனக்கூறும் ஐக்கிய தேசியக் கட்சி, இதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியும் பாராளுமன்றத்தைக் கலைத்தமையை எதிர்த்து உயர்நிதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைய எதிர்த்து உயர்நிதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்திருக்கிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்திருக்கிறது.
இந்தக் கட்சிகள், உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிந்து எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுடப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விடயத்தில் உயர் நீதிமன்றத் தீர்மானத் தீர்ப்பு எவ்வாறு அமையப்பபோகிறது என்பது சர்வதேச கவனத்தையும் ஈர்த்திருக்கிற ஒரு விடயமாகியிருக்கிறது.
எனினும் இந்த அரசியல் கட்சிகள் உயர்நிதிமன்றத் தீர்ப்புக்கமைய தேர்தலுக்கான நடவடவடிக்கைளுக்கு தயாராகப் போவதாகவும் தெரிவித்திருக்கின்றன. உயர்நிதிமன்றத் தீர்ப்பு பற்றி பலமான நம்பிக்கைகள் கொள்ளப்படாது, விரைவில் தேர்தல் வரும் என்ற ஒரு எதிர்பார்ப்பே தோன்றியிருக்கிறது.
பாராளுமன்றக் கலைப்பால் பாதிக்கப்பட்ட கட்சிகள், இது ஒரு சனநாயகத்திற்கு முரணான நடவடிக்கை எனக்கூறத்தொடங்கியிருக்கின்ற அதேசமயம், இதற்கு எதிர்மறையாக இக்கட்சிகள் சனநாயகப் பாரம்பரியங்களைப் பேணிப்பாதுகாத்த கட்சிகளா? இலங்கை சனநாயகத்தைப் பேணப்படும் ஒரு நாடா? என்ற காத்திரமான கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கான தெளிவான பதில்களை நாம் தேடியறிந்து கொள்ள வேண்டிய காலத்திலிருக்கிறோம்.