‘- கருப்பையா பிரபாகரன் BA, MA (Pol), Med, PGDE
பல்லின சமூக அமைப்பினைக் கொண்ட இலங்கையில், தேசிய பிரஜைகள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்படாமலும் வர்க்க ரீதியாகவும் இன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட இனமாகவும் மலையக மக்கள் இன்று வரை வாழ்ந்து வருகின்றார்கள். மலையக மக்கள், இலங்கையில் வாழும் சக பிரஜைகளில் இருந்து அந்நியப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றதோடு இந்திய வம்சாவளியினர், பெருந்தோட்ட தொழிலாளர்கள், கூலிகள் என்ற அடையாளப்படுத்தல்களுடனும் வாழ்ந்து வருகின்றார்கள். அடிமைகள், அரை அடிமைகள் என்ற நிலையிலிருந்து மாறி நவீன அடிமைகள் எனும் நிலையில் இன்று வாழ்ந்து வருகின்றனர்.
காலனித்துவ ஆட்சி காலத்தில் அந்நியர்களின் கொடிய அடக்குமுறைகளுக்கு உட்பட்ட இவர்கள், தற்போது இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தாலும் நவகாலனித்துவ வாதத்தினாலும் நசுக்கப்படுகின்றனர். எனினும் இவர்களின் உரிமைப் போராட்டமானது வலுக்குன்றிய வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிரித்தானியர் 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியதிலிருந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஜோர்ஜ் பேர்ட் என்பவரால் 1824ஆம் ஆண்டு கோப்பிப் பயிர்ச்செய்கை அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மலையக மக்களின் வருகை தொடங்கப்பட்டது. கிராமம், நகரம் என்ற பிரிவுகள் இருந்த இலங்கையில் தோட்டம் எனும் புதிய வகை அறிமுகம் செய்யப்பட்டு அங்கே மலையக மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.
1820ஆம் ஆண்டு கம்பளை நகருக்கு அருகாமையிலுள்ள சிங்கபிட்டி எனும் இடத்தில் 150 ஏக்கர் பரப்பில் கோப்பி பயிரிடப்பட்டு, பின் பன்மடங்காக பெருகி வளர்ச்சியடைந்தது. இலங்கையில் வாழ்ந்த கிராமப்புற சிங்கள மக்கள் கூலிகளாக வேலை செய்யத் தயாராக இல்லாதிருந்தமையால் சீனா அல்லது இந்தியாவிலிருந்து கூலிகளை இறக்குமதி செய்ய காலனித்துவவாதிகள் விரும்பினர். அதில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யச் சில காரணங்கள் தடையாக இருந்தன. சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான போக்குவரத்து பிரச்சினை, மூன்று இந்தியர்கள் உண்ணும் உணவினை ஒரு சீனர் உண்ணக்கூடும் அதனால் செலவு அதிகம் ஏற்படும், சீனத்தொழிலாளர்கள் குடும்பத்தோடு வர மறுப்பு தெரித்தனர் மற்றும் சீனர்கள் ஆடம்பரத்தை விரும்புபவர்களாக இருந்தனர்.
அத்தோடு கண்டி இராசதானியில் வாழ்ந்தவர்கள் சாதி ரீதியாகவும், குல ரீதியாகவும் சுதந்திரமாகத் தொழிற் செய்யும் ஒரு பிரிவினராக வாழ்ந்து வந்தனர். பெரும்பாலானவர்கள் பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்களவர்களாக இருந்தனர். இவர்கள் பிரித்தானியரின் பெருந்தோட்டங்களில் கூலித் தொழில் செய்ய விரும்பவில்லை.
இதன் காரணமாக தமது காலணித்துவத்திற்கு உட்பட்ட அண்மித்த நாடான தென் இந்தியாவில் மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் நிலவிய கடும் பஞ்சத்தை தமக்கு சார்பாக பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் தொழிலாளர்களை இறக்குமதி செய்தனர்.
அதன்படி 1824ஆம் ஆண்டு முதல் தடவையாக 14 குடும்பங்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக Pடயவெநசள யுளளழஉயைவழைn வரலாற்று பதிவேடு கூறுகின்றது. 1841ஆம் ஆண்டு 265467 ஆண்களும் 5155 பெண்களும் 2250 சிறுவர்கள் வருகை தந்ததாகவும் அவர்களில் 25 சதவீதமானோர் இறந்ததாகவும் மலையக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. 1864இல் தனுஷ;கோடியிலிருந்து தலைமன்னார் நோக்கி புறப்பட்ட ஆதிலச்சுமி கப்பல் 120 தொழிலாளர்களுடன் கடலில் மூழ்கியதோடு 7 பயணிகளும் 13 மாலுமிகளும் மாத்திரம் உயிர் தப்பியதாக கூறப்படும் வரலாறு கூட இன்று வெளிச்சத்திற்கு கொண்டுவராத வகையில் மூடிமறைக்கப்பட்டுள்ளது.
1867 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெய்லர் (1835 – 1892) என்பவர் தேயிலைப் பயிர்ச்செய்கையினை அறிமுகம் செய்ததன் பின்னர் தொழிலாளர்கள் பெருவாரியாக வருகைதர தொடங்கியதுடன் 1961ஆம் ஆண்டு இலங்கையின் சனத்தொகையில் இரண்டாவது இடத்தினை பிடித்திருந்தனர். இந்திய – இலங்கை உடன்படிக்கையின் பின்னர் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு 1981ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் படி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டனர். பின்னர் படிப்படியாக இலங்கைக்கு வருகைத்தந்த மலையக மக்கள் இன்று இலங்கையின் மொத்த சனத்தொகையில் 4.2 சதவீதமாக வாழ்வதாக 2012 ஆம் ஆண்டு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் தகவல் கூறுகின்றது. 1981, 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பிற்கமைய முறையே 5.5 சதவீதம், 5.08 சதவீதமாக இருந்தவர்கள் எப்படி திடீரென 2012ஆம் ஆண்டு 4.2 சதவீதமாக குறைந்தார்கள் என ஆராய்ந்தால் மலையத் தமிழர்களில் பெரும்பாலோனார் தம்மை இலங்கைத் தமிழர்கள் என பதிவுசெய்துள்ளனர். இதனை பேராசிரியர் சந்திரபோஸ் மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் விஜயசந்திரன் போன்றோர் தமது ஆய்வுகளில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மலையக தொழிற்சங்க வரலாறு
மலையக அரசியலோடும் மக்களின் வாழ்வியலோடும் பின்னிப்பிணைந்த ஒரு விடயமாக தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன. இத்தகைய தொழிற்சங்க வரலாற்றில் கோ. நடேசைய்யரின் பணி மிக முக்கியமானது…
தொடரும்…