மார்ச் 15 ஆம் திகதி வீரகேசரியில் வெளிவந்த இரா.செழியனின் ‘வறுமையின் சவால்கள்’, மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலைபற்றி விபரிக்கும் கட்டுரை மாத்திரம் அல்ல; மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டத்தின் தோல்வியையும் வெளிப்படுத்தும் கட்டுரையுமாகும். இது போன்ற அறிக்கைகள் ஏற்கனவே மாவட்டத்திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுமிருக்கிறது!
இக்கட்டுரையில், ‘இதுவரை 29 சமுர்த்தி வங்கிகளாலும் சேமிக்கப்பட்ட தொகை ரூபா 3,256 மில்லியன் ஆகும். இதில் (1997 முதல்) வழங்கப்பட்ட மொத்தக் கடன்தொகை ரூபா 2263 மில்லியன் ஆகும். இது 34,662 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவொரு குடும்பமும் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக புள்ளிவபரங்கள் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது! இத்தகவல், சகலரையும் அதிர்ச்சியடைச் செய்வதொன்றே!!
1997 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் எந்தவோரு குடும்பமும் வறுமையிலிருந்து மீட்கப்படவில்லை என்பது அதிர்ச்சி தரும் தகவலே. வறுமை ஒழிப்புத் திட்டம் மாத்திரமன்றி பல மில்லியன் ரூபா செலவிலான பல அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டள்ளது என்பதனையும் கவனத்தில் கொள்ளும் போது, இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதே.
இத் “தோல்விகரமான வறுமை ஒழிப்புத் திட்டம்” மட்டுமன்றி பல அபிவிருத்தித் திட்டங்களும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீள்குடியேற்றப்பகுதியில் வசிக்கும் 7871 குடும்பங்களுக்கான உதவி, போரினால் கணவனை இழந்த பெண்கள் 1891 பேருக்கான உதவி, வலதுகுறைந்த 615 குடும்பங்களுக்கான உதவி, புனர்வாழ்வளிக்கப்பட்ட 549 நபர்களுக்கான உதவி, போரினால் அங்கத்தவரை இழந்த 264 குடும்பங்களுக்கான உதவி, காணாமல்போனோரைக் கொண்ட 311 குடும்பங்களுக்கான உதவி, போரினால் பாதிக்கப்பட்ட 4241 குடும்பங்களுக்கான உதவி என இதுவரை பல உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன!
அரசாங்கம் மட்டுமன்றி அரச சார்பற்ற நிறுவனங்கள், புலம்பெயர்ந்தோர் அமைப்புக்கள், சமூக நலன் விரும்பிகள் எனப்பலதரப்பினராலும் மக்கள் அபிவிருத்திக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும் எனப் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ப்பட்டள்ளன!
இருந்தும் முன்னேற்றங்கள் இல்லை! அல்லது சிறியவிலான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலை 2014 ஆம் ஆண்டில் 19.4% மாக இருந்து, 2017 இல் 11.3% மாக குறைந்திருக்கிறது. தேசிய வறுமை நிலை 6.7 %. மாவட்ட மாதாந்த தலா வறுமை வருமான மட்டம் 4281 ரூபா. இதன் காரணமாக தேசிய வறுமைப்பட்டியிலில் மட்டக்களப்பு 3 ஆவது இடத்திலுள்ளது.
எனினும், இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்கள் வெற்றியளித்துள்ளது என அரசாங்கம் கூறிவருகிறது. தேசிய மட்டத்தின் வறுமையை அரைவாசியாக்கும் இலக்கை அடைவதற்கு 2008 ஆம் ஆண்டில் முடிந்திருக்கிறது என அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இலங்கையில் தலைக்குரிய வறுமை வீதம் (இது வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் நபர்களின் எண்ணிக்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும்) 1995-96 இன் 28.8 சதவீதத்திலிருந்து 2009-10 இன் 8.9 சதவீதமாக (1.8. மில்லியன் மக்கள்) வீழ்ச்சியடைந்ததுள்ளது. தொடர்ந்து 2012-13 இல் 6.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. 2012-13 இல் சுமார் 1.3. மில்லியன் மக்கள் வறுமையில் உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூட வசதி இல்லாத 7,518 குடும்பங்கள், சுத்தமான குடிநீர் இல்லாத 27,419 குடும்பங்கள், தற்காலிக வீடுகளில் வசிக்கும் 12,482 பேர், போசாக்கு குறைவான 7,580 குடும்பங்கள், மின்சாரவசதியற்ற 21,608 குடும்பங்கள் இன்னமும் உள்ளனர். வலதுகுறைந்தோர் 6,879 பேர், விதவைகள் 27,805 பேர், அநாதைகள் 1,885 பேர் சிரேஷ்ட பிரஜைகள் (65 வயதுக்கு மேற்பட்டோர்) 26,521 பேர் என பொருளாதாரத்தில் நலிவுற்றோரும் உள்ளனர்.
மீள்குடியேற்றப்பகுதிகளில் அடிப்படை வசதிகளின்மை, சமூக காப்புறுதித் திட்டம் இன்மை, போதைப்பொருள் பாவனை, விவசாய உற்பத்திகளுக்கு உரிய விலை கிடைக்காமை, விவாசாயிகள் கடன்பொறியில் சிக்கியுள்ளமை, காலநிலை மாற்றங்கள், யானைகளின் பாதிப்பு, திட்டமிட்பபடாத செலவுகள் எனப் பல வறுமைய ஏற்படுத்தும் காரணங்கள் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஆனால், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் – அபிவிருத்தித் திட்டங்கள் ஏன் தோல்வி அடைந்தன என்ற கேள்விக்கான விடையைக் கண்டறிதல் முக்கியமானதாகும். கட்டுரையில் வறுமை ஒழிப்புத் திட்டத் தோல்விக்கு சமூர்த்தி உத்தியோகத்தர்கள் நடவடிக்கைகளே காரணம் எனக்கூறப்பட்டுள்ளது. சில முகாமையாளர்கள் நிலையான வைப்பில் பணத்தை வைத்திருக்கவே விரும்பி 50 % குறைவான கடன்களை வழங்கியிருக்கிறார்கள் மற்றும் ஊழல், மேசாடிகள் இடம் பெறுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், நீடித்து நிலைத்திருக்கும் வறுமை குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்கொள்ளப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டத்தின் குறைபாடுகள் பரிசீலிக்கப்படவும் வேண்டும் என்பதனையே “நிலைமைகள்” உணர்த்துகின்றன.
தனியே வருமானக்குறைவை மட்டும் கருத்தில் கொண்டு வறுமை வரைவிலக்கணப்படுத்தப்படுவதில்லை. குடும்ப அலகுகள் அல்லது தனிப்பட்டவர்கள் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான மூலவளங்களையோ அல்லது ஆற்றல்களையோ கொண்டிருக்கும் நிலையுடன் தொடர்பு பட்டது வறுமை. வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும் எனக்கூறலாம்.