கிரான் குமாரர் ஆலயம் [குமாரத்தன் கோயில்] வருடாந்த திருச்சடங்கு உற்சவம். 2018 -கிரான் விஜய்
மட்டக்களப்பின் வடக்கே அமைந்துள்ள கிரான் பதியிலேயமைந்துள்ள ஸ்ரீ குமாரப் பெருமானின் விளம்பி வருட வருடாந்த திருச்சடங்கு உற்சவமானது, ஆனித் திங்கள் 7 ஆம் நாள் வியாழக்கிழமை மாலை (21.06.2018) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, ஆனித் திங்கள் 14 ஆம் ஆம் நாள் வியாழக்கிழமை (28.06.2018) காலை கன்னிமார் வழிபாடு, திருக்கும்பம் சொரிதலுடன் சிறப்பாக நிறைவு பெற்றது.
குடிவழி மரபு சார்ந்து மடைபரவி மன்றாடி வழிபடும் தெய்வமான குமாரர்-குமாரத்தன் குலதெய்வத்தின் வருடாந்த திருச்சடங்கின் முதலாம் நாள் சடங்கு, கடந்த வியாழக்கிழமை மாலை (21.06.2018) திருமலை வன்னியர் குடியின் உபயத்தில் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. இன்றைய தினம் பகல், இரவுச் சடங்குள் இடம் பெற்றன.
இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை (22.06.2018) இராமநாதர் குடியின் உபயத்தில் பகல், இரவுச் சடங்குள் இடம் பெற்றன. மூன்றாம் நாள் சனிக்கிழமை (23.06.2018) இடதர் குடியின் உபயத்தில் பகல், இரவுச் சடங்குள் இடம் பெற்றன. நான்காம் நாள் ஞாயிற்றுக்கிழமை (24.06.2018) திருமதி பொன்னம்மா நாகையா குடும்பத்தின் உபயத்தில் பகல், இரவுச் சடங்குள் இடம் பெற்றன. ஐந்தாம் நாள் திங்கட்கிழமை (25.06.2018) பெரியார் குடியின் உபயத்தில் பகல், இரவுச் சடங்குள் இடம் பெற்றன. ஆறாம் நாள் செவ்வாய்க்கிழமை (26.06.2018) சிறுகுஞ்சாப்போடி மற்றும் கொண்டையாப்போடி குடிகளின் உபயத்தில் பகல், இரவுச் சடங்குள் இடம் பெற்றன.
ஏழாம் நாள் பதன்கிழமை (27.06.2018) சிறுகுஞ்சாப்போடி மற்றும் கொண்டையாப்போடி குடிகளின் உபயத்தில் மதியம் 2.00 மணிக்கு அம்மாள் பெட்டி எடுத்தல் வைபவம் இடம் பெற்றதுடன், பகல், இரவுச் சடங்குள் இடம் பெற்றன.
எட்டாம் நாள் வியாழக்கிழமை (28.06.2018) புறாங்கர் குடி உபயத்தில், அதிகாலை 3.00 மணிக்கு தீமித்தலும், கன்னிமார் வழிபாடு இடம் பெற்றதுடன் காலை திருக்கும்பம் சொரிதலுடன் வருடாந்தச்சடங்கு சிறப்பற நிறைவு பெற்றன.
குமாரத்தன் ஆலயத்தின் பூசகர் சந்திரசேகரம் சோமநாதன் மற்றும் கப்புகர் சுப்பிரமணியம் துரைச்சாமி ஆகியோரின் தலைமையில் இடம் பெற்ற வருடாந்தச் திருச்சடங்கு பண்டைய மரபு வழுவாது வழமைபோலவே நடைபெற்றது.
குமாரர் – குமாரத்தன் கலைகளில் இராச கலையில் இடம் பெறும் திருச்சடங்கு, “பூசகர்கள் குமார காவியம் மற்றும் பாடல்களைப் பாடி மன்றாடி வழிபட, கப்புகார் தெய்வேம் உருவேறி ஆடி வழிபடுதல்” என மரபுவழி சார்ந்தே நடைபெறும். கட்டுச் சொல்லுதலும், நேர்த்தி செலுத்துதலும் இங்கு காணும் சிறப்பம்சமாகும்.
குமாரர் அல்லது குமாரத்தன் மட்டக்களப்பின் பூர்விக குடிகளின் தெய்வமாகும். இங்கு குமாரரை இராசா என்றே அழைப்பர். அவரைக் கொழும்புக் குமாரர் என குறிப்பிடும் குமார காவியம். குமாரர் கோயிலுடன், குமாரர், புள்ளிக்காரன், முருகையன், மாப்பாணர் மற்றும் அம்பாள், காவற்காரன் ஆகிய தெய்வங்களுக்கான பந்தல்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் தனித்தனியாக தெய்வமாடுதலும் இடம் பெறும். அத்துடன் கழுக்குமார் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதிலும் தனியான தெய்வமாடுதலும் இடம் பெறும்.
இங்கு நடைபெறும் வருடாந்தச் சடங்கில், கூய் போடுதல், பொங்கல் வைக்காது நோருப்பு செய்தல், வாழையிலை பாவிக்காது தாமரை இலை பாவித்தல் என்னும் மூன்று அம்சங்களும் தனித்துவமான மரபாகும். தெய்வமாடும் கப்புகரும் ஏனையோரும் மரப்பொல்லுகள் மற்றும் சிறு கத்திகளை கொண்டே ஆடுதலும் தனித்துவமானதொரு மரபாகும்.