அறிமுகம்
இந்த வருடத்தின் ஆரம்பப்பகுதில் விதை குழுமத்தின் புதிய செயற்பாட்டாக்கங்கள் பற்றிய உரையாடல் நிகழும் போது உருவாக்கப்பட்ட கருத்து – செயற்பாட்டாக்கம் தொன்ம யாத்திரையாகும்.
பேரினச்சூழலின் அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மரபுரிமைகளை அற்றுப்போகச்செய்யும் செயற்பாடுகளினை கருத்தில் கொண்டு மரபுரிமைகளை அறிதல், ஆவணமாக்கல், பாதுகாத்தல் மற்றும் கொண்டாடல் என்ற தொனிகூறிகளின் கீழ் உருவாக்கப்பட்ட மரபுரிமைகளை பாதுகாக்கும் சிந்தனை மற்றும் செயல் பூர்வமான முன்னெடுப்பாக தொன்மயாத்திரை அமைந்தது.
விதைகுழுமமும் அதன் சகோதர அமைப்புக்களும் மேற்கொண்ட உரையாடலின் பின்னர், உருவாகிய இவ் யாத்திரை ஏற்கனவே விதை அமைப்பு மேற்கொண்டிருந்த சில உப நிகழ்வுகளையும் உள்ளெடுத்து கொண்டு மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாட்டுக்கான ஒரு பங்கெடுத்தலை சமூக அசைவியக்கத்தில் மேற்கொள்கின்றது.
தொன்ம யாத்திரை பற்றிய குறிப்பில் விதைகுழுமத்தின் பதிவு குறித்த செயற்பாட்டினை ப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றது.
“மரபின்அழிப்பென்பது ஓர் இனத்து இருப்பின் அழிப்பு வரலாற்றின் அழிப்பு. அதனை மீட்பதென்பது அதன் சந்ததிகளின் கடமை சொற்ப அளவிலான நிலங்களும் மரங்களும் குளங்களும் ஏரிகளும் கட்டடங்களும் தமக்கென்ற வரலாற்றுக்காலகட்ட சாட்சியமாக நம்மிடம் எஞ்சி நிற்கின்றன. பண்பாட்டு உற்பத்திகள், கைவினைகள், வழக்குகள், நடைமுறைகள், ஆற்றுகைகள் போன்ற சமூக அசைவியக்கத்தின் பேறுகளை நாம் அடையாளம் காணுதல் நமது காலகட்டத்தின் தேவையென உணருகிறோம். பெரும்பான்மை இனத்தின் புதிய அடையாள உருவாக்கங்கள் நிகழும் இக்காலகட்டத்தில் நமது தொன்மையை அறிதலும் கொண்டாடுதலும் நம்மிடம் இருக்கும் ஓர் எதிர்ப்பு நடவடிக்கை. இந்த அடிப்படையில் நமது தொன்மங்களை புழக்கத்திற்குரிய கொண்டாட்டத்திற்குரிய இடங்களாக மாற்றுவதற்கான ஒரு முன்னெடுப்பே ‘தொன்மயாத்திரை. (மார்ச் 30 தொன்ம யாத்திரை முகநூல் பக்க பதிவிலிருந்து )
யாத்திரை உருவாக்கப் பின்னணி
முன்பு குறிப்பிட்டதனைப் போல இவ்வருட ஆரம்பத்தில் மரபுரிமைகள் அடைந்திருக்கும் அச்சுறத்தல் பற்றிய உரையாடல்கள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நுண்கலை துறையில் மரபுரிமை பற்றிய பாடவிதானங்களும், அது பற்றிய கடந்தகால செயற்பாடுகளும் விதைகுழுமத்தின் உரையாடல்களில் மேற்கோள்காட்டப்பட்டன. குறிப்பாக விரிவுரையாளர் பா. அகிலன், விரிவுரையாளர் சனாதனன் என்போரும் அவர்களுடைய மாணவர்களும் கடந்த காலத்தில் மேற்கொண்டிருந்த மரபுரிமை அழிப்புக்கு எதிராக பல்கலைக் கழகம் சார்பாகவும் எழுத்து செயற்பாட்டின் ஊடாகவும் மேற்கொண்ட செயற்பாடுகளை முன் அனுபவ வேலைகளாக எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நுண்கலைத்துறையின் கல்விசார்ந்த, சாராத சில மரபுரிமை சார் உரையாடல்களும் வெளிப்பாடுகளும் யாத்திரையின் உருவாக்கம் பற்றிய கருத்துருவாக்கத்தை துரிதம் செய்தன. குறிப்பாக தமிழ்நாட்டின் மதுரைப்பகுதியில் கிரனைட் மாபியாக்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான தொன்மையான மலைகள் மற்றும் அது சார்ந்த, மரபுரிமைகளைப்பாதுகாக்கும் பொருட்டு தோழர் அ. முத்துகிருஷ்ணன் மற்றும் தோழர்களும், மக்களும், மேற்கொண்டிருக்கும் “பசுமை நடை” எனும் செயலுருவாக்கம் பற்றிய உரையாடலை நுண்கலைத்துறையின் “கலைவட்டம்” முத்துகிருஷ்ணனின் இலங்கை வருகையின் போது ஒழுங்கு படுத்தியது . விதைகுழுமத்தின் செயற்பாட்டாளர்கள் அந்த உரை யாடலில் கலந்து கொண்டனர். அவ்வுரையாடல் “மரபுரிமை நடை” என்பதன் பிரயோக ரீதியான எண்ண உருவாக்கத்திற்கு முக்கிய அசைவினைக்கொடுத்தது.
அதை தவிர ஏற்கனவே அறியப்பட்ட தமிழ்நாட்டின் இளைஞர் செயல் குழுவான “ஊர் குருவிகள் பற்றிய செய்திகளும் ” யாத்திரை எண்ண உருவாக்கத்தில் துணை நின்றன.
இவ் உரையாடல்களைத் தொடர்ந்து நுண்கலைதுறையின் ”கலைவட்டத்தினால்” ஒழுங்கு செய்யப்பட்ட மரபுரிமை பற்றிய உரையாடலும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும் . விதை குழுமத்தின் செயற்பாட்டாளரும், குறித்த துறையில் கல்வி பயில்பவருமான செயற்பாட்டாளர் யதார்த்தனால் “மரபுரிமைகளை பாதுகாப்பதில் சமூக செயற்பாட்டு இயக்கங்களை மாதிரியாக முன் மொழிதல்” என்ற உரையாடலும் தொன்ம யாத்திரை உருவாக்கத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றது .
இவற்றைதொடர்ந்து யாத்திரை பற்றிய முதலாவது பொது வெளி உரையாடல் விதை குழுமத்தின் வருடாந்த முதல் பொதுக்கூட்டத்தில் முன் மொழியப்பட்டது. விதையின் சகோதர செயற்பாட்டு அமைப்புக்களான அக்கினிச்சிறகுகள், யப்னா டுடே முதலான வற்றில் இருந்தும் நண்பர்களும் செயற்பாட்டளர்களும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு யாத்திரையின் உருவாக்கம் பற்றி கலந்துரையாடினர்.
கடந்த வருடத்தின் செயற்பாடுகள், எதிர்வினைகள், அடைவுகள், சறுக்கல்கள் பற்றிய சுருக்கமான விளக்கத்தினை பிரதம செயற்பாட்டாளார் என்ற பொறுப்பின் அடிப்படையில் கிரிஷாந் வழங்கினார். தொடர்ந்து அடுத்த பிரதம செயற்பாட்டாளராக ஆதிபார்த்தீபன் அடுத்த அரையாண்டுக்கு செயற்படுவார் என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வருடத்தில் மரபுரிமைகளை அறிதல், கொண்டாடுதலின் பொருட்டு ”தொன்மயாத்திரை “ எனும் நடைச்செயலாக்கம் முன்மொழியப்பட்டு அது தொடர்பான கருத்தாடல்கள் இடம்பெற்றன. தொன்மயாத்திரை தொடர்பான மேலதிக தீர்மானங்கள் செயற்பாடுகள், இனிவரும் நாட்களில் பதிவிடப்படும். மேலும் விதையின் சகோதர அமைப்புக்களில் இருந்துகலந்து கொண்ட நண்பர்கள், அவர்களின் செயற்பாடுகள் பற்றியும், ஈழத்து சமூகச்சூழலில் செயற்பாட்டியக்கங்களின் வருகை பற்றியும் சுவாரஸ்யமாக உரையாடப்பட்டது.
விதையின் ஏனைய தொடர்ச்சியான செயற்பாடுகள், அதன் ஏனைய சமூக அரசியல் பண்பாட்டு அசைவியக்கத்தின் மீதான வழமையான உரையாடல்கள் தொடர்ந்தும் சிந்தனை மற்றும் செயற்பாட்டுதளங்களில் முன்னெடுப்பதற்கான கருத்தாடல்களும் முன்வைக்கப்பட்டன. சிந்தனையை, செயற்பாட்டை ஒரு கொண்டாட்டமாக விளைதிறனை நோக்கி நகர்த்துதலை பிரதம செயற்பாட்டளரும் ஏனைய நண்பர்களும் உரையாடினர்.
மேற்படி கூட்டத்தில் மார்ச் மாதம் வெளிவர இருக்கும் யாழ்ப்பாண மரபுரிமைகள் பற்றிய பா. அகிலனின் “காலத்தின் விளிம்பு” நூலை முதாலாவது தகவல் தரும் மூலமாக பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது. நூல் வெளியீட்டு நிகழ்வினைத்தொடர்ந்து யாத்திரை ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.
அதன்படி மார்ச் 27 இல் “காலத்தின் விளிம்பு” என்ற நூல் பிரதி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் வெளியிடப்பட்டது. மரபுரிமைகளை பாதுகாத்தல் ஆவணப்படுத்தல் என்னும் செயலாக்கத்தில் “காலத்தின் விளிம்பு” நூல் முக்கிய அசைவியக்க புள்ளியாகவும் கருதப்பட்டது. துறைசார்ந்த அடையாளம் காணுதல், விவாதித்தல், தேடியறிதல் என்பவற்றின் அடியாக இப்பிரதியை விதைகுழுமத்தின் – தொன்ம யாத்திரை சிந்தனைக்குழு கருத்திலெடுத்தது. மேலும் மரபுரிமைகள் பற்றிய நூல்களையும் தகவல்களையும் தேடியறியவும் ஆவணப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
தொன்ம யாத்திரை – பதவிளக்கமும் உருவ உள்ளடக்கமும்.
தொன்ம யாத்திரை என்ற பதம் பற்றிய தெளிவு படுத்தலையும் அதன் அர்த்தம் குறித்த செயலியக்கத்தில் எத்தகைய குறிப்பானாக நிற்கின்றது என்ற கேள்வி எழுப்ப பட்ட போது பொது வெளிக்கு பின்வருமாறு அதன் அர்தத சாத்தியங்கள் சொல்லப்பட்டன.
தொன்மயாத்திரை என்பதில் நாங்கள் தொன்ம என்பதை “தொல்” என்பதை அடிச்சொல்லாகக் கொண்ட தொன்மம் என்கிற தமிழ்ச்சொல்லின் அர்த்தத்திலேயே பயன்படுத்துகின்றோம். Myth என்கிற ஆங்கிலச்சொல்லுக்கான தமிழ்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படும் தொன்மம் என்கிற அர்த்தத்தில் அல்ல. நாம் வாழும் சமூகத்தில் நிலவும் நீண்ட நாட்களாக வழங்கப்பட்டு வரும் கதைகளும், புராணங்களும், வாய்மொழி இலக்கியங்களும், நம்பிக்கைகளுமாக எம்மைச் சுற்றி நிறையக்கதைகள் இருக்கின்றன. அவை குறிப்பிடும் இடங்கள், அவற்றுடன் சம்பந்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் மரபுச்சொத்துகளாக இருக்கின்ற கட்டடங்கள், இயற்கைப்பிரதேசங்கள், அழிவுக்குள்ளாகியும் எஞ்சியிருக்கும் பழைய இடங்கள் போன்றவற்றை நோக்கிய பயணங்கள் மேற்கொள்வதும் அவற்றைப்பற்றி அறிந்து கொள்வதுமே இந்ததொன்ம யாத்திரையின் நோக்கம்.
இவ்வகையில் குறித்த யாத்திரையின் உருவ உள்ளடக்கம் அதன் உப சொல்லாடல்களின் மூலமாக அடையாளம் செய்யப்பட்டது. நடத்தல் ; அறிதல் ; கொண்டாடுத்தல் ; பாதுகாத்தல் என்ற வகையில் அமைந்தது , இவ் தொன்ம யாத்திரையில் மேற்கொள்ளப்படும் பிரதான செயலாக்கங்களகா பின் வருவன உருவாக்கப்பட்டன.
1 – முன்கள ஆய்வு
இதன்போது எந்த இடத்தை தெரிவு செய்தல், அது தொடர்பாக குறித்த பிரதேச மக்களிடம் ஏற்கனவே இருக்கும் தொன்மக்கதைகள் போன்றவற்றை அறியவும் அங்கே என்ன வகையான நடவடிக்கைகள், உரையாடல்கள், ஆற்றுகைகளை நிகழ்த்தலாம் என்பன பற்றியும், குறித்த பிரதேச சனசமூகநிலையங்கள், இளைஞர் அமைப்புக்கள் போன்றவற்றை சந்தித்து மேற்படி நடவடிக்கை தொடர்பான அவற்றின் கருத்துக்களையும் தெரிந்துகொள்ளப்படும் .2 – யாத்திரை
தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு சில கிலோ மீட்டர் முன் தொடங்கி அது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தும், பதாகைகள் தாங்கியும் யாத்திரை இடம்பெறும் .
3 – ஆற்றுகைகள் – கொண்டாட்டம்
குறித்த இடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிலான ஆற்றுகைகளும், உரைகளும், நடைபெறும். இயற்கைசார் உணவுகள் வழங்கப்படும். நாடுப்புறவடிவங்கள், கூத்தின் சிலபகுதிகள், அல்லது பிரதேசம் சார் மக்கள் பாடல்கள் இசைக்கப்படும். சில மணி நேரங்கள் மட்டுமே கொண்ட இந்த நிகழ்வானது நமது மரபை கொண்டாடவும், நமது தலைமுறையின் புதிய கொண்டாட்ட வழிமுறைகளைக் கண்டடைவதற்குமாகும்.
4 -ஆவணமாக்கல் /பாதுகாத்தல்
மேற்படி யாத்திரைகளின் நீட்சியாக அவை தொடர்பான ஆவணமாக்கல் (எழுத்து, காணொளி , புகைப்படங்கள் ) நடைபெறும். குறித்த இடங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான பொறிமுறைகளைக் கட்டமைக்கவும், அவை தொடர்பான சமூகவியல் ஆய்வுகளை அகலப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொல்லியல் திணைக்களத்திற்கும், குறித்த அரச நிறுவனங்களுக்கும் இவற்றின் பராமரிப்பு தொடர்பிலான எமது அழுத்தம் வழங்கப்படும்
மேலும் மேற்குறிப்பிட்டதனைப்போல ஏற்கனவே விதைகுழுமம் செயபடுத்திவந்த சில உப செயற்பாடுகளும் இதனுள் உள் இணைக்கப்பட்டன. அவையாவன,
பாரம்பரிய உணவுகளை ஞாபகமூட்டலும் பகிர்தலும்
விதை குழுமம் 2015 பாரம்பரிய உணவு முறைகளை ஞாபகமூட்டவும் பகிர்ந்துகொள்ளவும் இரண்டு சிறியளவான உணவுப்பகிர்தல் கொண்டாட்டங்களை நிகழ்தியிருந்தது . அச்செயற்பாட்டை யாத்திரைக்கு உள்ளும் இணைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
பாரம்பரிய இசை / ஆற்றுகைகள்
யாத்திரை கொண்டாட்டங்களின் போது பாரப்பரிய இசை கருவிகளை (பறை முதலானவை) இசைத்தல், பாடுதல் என்பவற்றோடு, கூத்து, நாடகம் போன்ற ஆற்றுகை வடிவங்களையும் பொருத்தமுற கையாளும் நிகழ்த்தல்களும் யாத்திரையினுள் உட்சேர்க்கப்பட்டன.
பாரம்பரிய விளையாட்டுகள் / கதையாடல்கள்
உலகமயமாதலில் கரைந்து போன விளையாட்டுக்கள், கதையாடல்களை நிகழ்த்தவும் , பதிவு செய்யவும் குறித்த மரபுரிமை சூழலோடு ஒட்டி மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆவணமாக்கல்
குறித்த யாத்திரை ஒவ்வொன்றின் பொழுதும் ஆவணமாக்கல், மற்றும் எழுத்துச்செயற்பாடுகள் அதிக வனத்துடன் முன்னெடுக்கவும் ஆவன செய்யப்பட்டிருக்கின்றது , வீடியோ , போட்டோ , உரையாடல் பதிவுகள், வரலாற்று ஆதார சேகரிப்புக்கள், குறித்த சூழலின் கதைகள், செய்திகளின் எழுத்துப் பதிவுகள் என்பன முன்கள ஆய்விலும் , அதற்கு வெளியேயான தகவல் சேகரிப்பு ஆய்விலும் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர பத்து யாத்திரைகளின் முடிவில் இவை துறை சார்ந்து தொகுக்கப்பட்டு “புதிய சொல்” பதிப்பகத்தின் மூலம் நூலாக வெளியிடப்படவும் உள்ளது .
சகோதர அமைப்புக்கள்
விதை குழுமத்துடன் தொன்ம யாத்திரையின் பொருட்டு இதுவரை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் அக்கினிச்சிறகுகள், யப்னா டுடே முதாலான சமூக செயற்பாட்டு அமைப்புக்கள், உடல் மற்றும் மூளை உழைப்பினை பகிர்ந்துகொண்டுள்ளன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட தொன்ம யாத்திரை அசைவியக்கம், ஒவ்வொரு மாதமும் ஒரு மரபுரிமைக்கூறு என்ற வகையில் அதிகம் கவனிக்கப்படாமல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மரபுரிமை சார் அடையாளங்களை கண்டறிந்து அம்மரபுரிமையை நோக்கி தொன்ம யாத்திரையை மேற்கொள்கின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் பருத்தித்துறையில் உள்ள இலங்கையின் இறுதி “தெருமூடி மட” த்திலும், மே மாதாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இயற்கை மரபுரிமையான தென்மராட்சி – சரசாலையில் உள்ள “குருவிக்காடு” எனும் சதுப்பு நில பறவைகள் சராணாலயமாக விளங்கும் சிறு காட்டு பகுதிக்கு யாத்திரையை மேற்கொண்டு இருந்தது.
தொடர்ந்து வரும் கட்டுரைகள் யாத்திரைகள் பற்றிய தகவல்களை ஒழுங்கு படுத்தும். அத்துடன் யாத்திரைகளை தொகுக்கும் ஆவணமாக்கும் நூலும் வெளிவரவுள்ளது.