– மீட்சி
இலங்கையின் எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
இலங்கையின் எட்டாவது பாராளுமன்றம் மார்ச் 2 ஆம் திகதியுடன் நான்கரை வருடங்கள் முடிவுற்ற நிலையில், நள்ளிரவு 12 மணியுடன் கலைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உள்ள விசேட அதிகராங்களுக்கு அமைவாக பாராளுமன்றத்தை கலைத்திருக்கிறார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ.
ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும், தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலமர்வு ஆம் மாதம் 14 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கைப் பாராளுமன்றத்தின் 196 உறுப்பினர்கள் மாவட்ட ரிதியாக வாக்காளர்களினால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார்கள். 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் ஊடாகத் செய்யப்படுவார்கள். இதில் சாதாரண பெரும்பாண்மையான 50 சதவீத ஆசனங்களை அதாவது 113 உறுப்பினர்களைப் பெறும் அரசியல் கட்சி அல்லது அரசியல் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெறும். மூன்றிலரண்டு பெரும்பாண்மை அதாவது 150 உறுப்பினர்களைப் பெறும் அரசியல் கட்சி அல்லது அரசியல் கூட்டணி யாப்புச் சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தையும் பெற்றுக் கொள்ளும்.
2019 ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பின் அடிப்படையில் நடைபெறும் இத்தேர்தலில் 1 கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 889 பேர் வாக்களிக்கவுள்ளார்கள். இதில் 2 இலட்சத்து 71 ஆயிரத்து 789 பேர் இத்தேர்தலின் புதிய வாக்காளர்களாவார்கள்.
தற்போது ஆடசியதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்தரிரக் கட்சியை இணைத்துக் கொண்டு மொட்டுச் சின்னத்தில், மூன்றிலரண்டு பெரும்பாண்மைப் பலத்தைப் பெறும் இலக்கில் இத்தேர்தலில் போட்டியிடத் தயாரகி வருகிறது.
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, உள் தலைமைத்தவ முரண்பாடுகளினால் இன்னமும் தெளிவானதொரு நிலைப்பாட்டை அறிவிக்கும் நிலையில் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் பெரும் செல்வாக்குடைய தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்களை இணைத்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணி தனித்துப் போட்டியிடலாம் என்றும் கருதப்படுகிறது. சஜித் பிரேமதாஸ தலைமையில் ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து கடந்த மார்ச் 2 ஆம் திகதி “ஐக்கிய மக்கள் சக்தி” என்ற கூட்டணி உருவாக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டு அமைப்பில் தேர்தலில் களமிறங்கவுள்ளது.
கடந்த முறை 6 பாராளுமன்ற உறுப்பினர்களைப் கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் – பெரும்பாலும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியுடன் இணைந்து இத்தேர்தலில் போட்டியிடவுள்ளது. கடந்த முறை 2 பாராளுமன்ற உறுப்பினர்களைப் கொண்டிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இணைந்து இத்தேர்தலில் போட்டியிடவுள்ளது.
இத்தேர்தலில், மாவட்ட ரீதியாக வாக்காளர்களினால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவுள்ள உறுப்பினர்கள் 196 ஆகும். இதில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலிருந்து 7 உறுப்பினர்களும், வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து 6 உறுப்பினர்களும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களும், திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்திலிருந்து 7 உறுப்பினர்களும் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திலிருந்து 4 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.