மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையில், காத்தான்குடி நகரை கடந்ததும் கம்பீரமாக நிற்கும் சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை எதிர்ப்படும். தொடர்ந்து மன்னன் எல்லாளன், அரசி உலகநாச்சி என தொடர்ந்து வழிநெடுகிலும் சிலைகள் தென்படும். இவ்வாறு சிலைகளின் நகரமாக மிளிரும் பழம்பெரும் தமிழ் கிராமம்தான் ஆரையம்பதி.
காத்தான்குடியை வடக்கிலும், தாளங்குடா மற்றும் மண்முனை என்ற புராதன தமிழ் கிராமங்களை தெற்கிலும், கிழக்கில் பரந்து விரிந்த வங்கக்கடலையும், மேற்கில் மட்டக்களப்பு வாவியையும் எல்லைகளாகக் கொண்டது ஆரையம்பதி. ஈழத்தின் கீழ்த் திசையில் காணப்படும் தமிழ் கிராமங்களில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 11 ஐ உள்ளடக்கி பரப்பளவிலும் சனத்தொகையிலும் பெரிய கிராமமாக அமைந்திருக்கிறது ஆரையம்பதி.
மட்டக்களப்பு தேச வரலாற்று மூலங்களில் முக்கியத்துவம் பெறும் மண்முனை இராட்சியம், இக்கிராமத்தை சார்ந்து அமைந்திருந்ததனால் கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கும், அனுராதபுரத்தை மையப்படுத்தி ஆட்சி புரிந்த மன்னன் எல்லாளனோடு தொடர்பு படுத்தப்படுவதால் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்கும் இக்கிராமத்தின் தொன்மை கொண்டு செல்லப்படுகின்றது. கோவில்குளத்தில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டளவில் உலகநாச்சியாராலும், அதன் பின்னர் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் மாகோனாலும் சிகர கோபுரத்துடன் அமைக்கப்பட்ட காசிலிங்கேஸ்வரர் ஆலயமும், அந்த ஆலயம் போத்துக்கேயரால் அழிக்கப்பட்ட பின்னர், காசிலிங்கேஸ்வர் ஆலயத்தின் எச்சங்களையும் சிதைவுகளையும் வைத்து பெரிதாக்கபட்டதும் காத்தான் எனும் வேடுவத்தலைவன் வழிபட்ட முகூர்த்தத்தை கொண்டு உருவாக்கப்பட்டதுமான கந்தசுவாமி ஆலயமும் ஆரையம்பதியின் தொன்மைக்கு இன்னுமோர் சரித்திர சான்றாகும்.
கி.மு. 2 ஆம் நூற்றாண்டளவில், மன்னன் எல்லாளன் தனது பாதுகாப்புக்காக மட்டக்களப்பு வாவியோரங்களில் ஆற்றுக்காவல் படையினராக நிறுத்தி வைத்திருந்தவர்களில் பரம்பரையே இங்கு வாழும் பரம்பரை குடிகள் என்பது இங்கு நிலவும் ஐதீகமாகும்.
பின்னர் கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கலிங்க தேசத்தில் இருந்து வந்து மண்முனையில் ஆட்சி செய்த சிற்றரசி உலகநாச்சியுடன் வந்த சில குடிகளும், பின்னர் கி.பி 12 ஆம் நூற்றாண்டில் மாகோன் காலத்தில் வந்த சிலகுடிகளும், போர்த்துக்கேயரால் கோயில்குளத்தில் (தற்போதைய ஆரையம்பதியின் எல்லையில்) அமைந்திருந்த காசிலிங்கேஸ்வரர் கோயில் 16 ஆம் நூற்றாண்டில் சிதைக்கப்பட்ட பின்னர் வந்த சிலகுடிகளும் எனப் பல குடிகள் இவ்வூரில் குடியேறின என்பது இக்கிராமத்தின் குடியேற்றம் பற்றிய வரலாற்றுச் செய்திகளாகும். கண்டி அரசன் சேரலாதன் காலத்தில் சேர நாட்டிலிருந்தும் சில குடியேற்றங்கள் இடம்பெற்றன எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு காலத்திற்கு காலம் ஏற்பட்ட குடியேற்றங்கள் இக்கிராமத்தின் குடிப்பரம்பலை அதிகமாக்கியுள்ளன.
ஆதியில், காலத்திற்கு காலம் கரையூர், மண்முனை, ஆலஞ்சோலை என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இக்கிராமம் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த வேடுவத் தலைவனான காத்தான் என்பவன் குடியிருந்தமையால் காத்தான்குடியிருப்பு எனும் பெயரில் அறியப்பட்டது. 1872 இல் காத்தான்குடியிருப்பில் இருவேறு பக்கங்களில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் நிர்வாகரீதியாக அரசால் இரண்டாக பிரிக்கப்பட்ட போது இஸ்லாமியர்கள் வாழ்ந்த வடக்கு பகுதி ‘காத்தான்குடி’ எனவும் தமிழர்கள் வாழ்ந்த தெற்கு பகுதி ‘ஆரைப்பற்றை’ எனவும் வழங்கப்படலாயிற்று. கிராமத்தின் ஊடே ஊடறுத்து ஒடும் நீரோடைகளில் ஆரை எனப்படும் ஒரு வகை கீரை அதிகமாக வளர்ந்து காணப்பட்டதால் குறித்த ஒடைகள் அதிமாக காணப்பட்ட பகுதி ‘ஆரைப்பற்றைத் தெரு’ என அழைக்கப்பட்டு வந்தது. ‘ஆரைப்பற்றைத் தெரு’ என்னும் அத்தெருவின் பெயரே முழுக்கிராமத்திற்கும் பெயராக அமைந்தது. அரசால் 1872 இல் ஆரைப்பற்றை என பெயர் பதிவேடுகளில் பதியப்பட்ட தமது ஊரை, கிராம மக்கள் ஆரையம்பதி என்றே அழைத்து வந்தனர். 1992இல் ஆரைப்பற்றை ‘ஆரையம்பதி’ என அரசால் உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டது.
பல்வேறுப்பட்ட சமூகங்கள் வாழும் ஒர் கூட்டுக்கிராமாக காணப்படும் இக்கிராமத்தில் ஒவ்வொரு சமூகமும் தனித்தனியான ஒவ்வொரு தெருக்களில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு காணப்படுவது இதன் தொன்மைக்கு இன்னுமொரு சான்றாகின்றது. முகத்துவாரத் தெரு, நடுத் தெரு, ஆரைப்பற்றை தெரு என்ற தெருக்களில் குருகுலத்தோர் வாழ்கின்றனர். வேளாளர் தெரு, சாண்டார் தெரு, செங்குந்தர் தெரு, வண்ணார் தெரு, பறையர் தெரு, பொற்கொல்லர் தெரு என பல்வேறு தெருக்கள் குலப்பெயர்களில் காணப்படுகின்றன. என்பதோடு ஆதியில் இக்கிராமத்தைச் சூழவுள்ள காட்டுப் பகுதியில் வசித்த வேடர்கள் பெயரால் சில இடங்கள் அழைக்கப்படுகின்றன வெறியன் சேனைப்பயிர் செய்துகொண்டு வாழ்ந்த இடம் ‘ வெறியன்சேனை ‘ சோழன் வாழ்ந்த இடம் ‘ சோளஞ்சேனை’ காங்கேயன் வாழ்ந்த இடம் காங்கேயனோடை , அலையன் வாழ்ந்த இடம் ‘ அலையன் குளம் ‘ , ஆனையன் வாழ்ந்த இடம் ஆனைக்குளம் எனவும் அழைக்கப்படுவது போல் துரும்பர் எனும் சமூகம் வாழ்ந்த இடம் துரும்பன் கேணி எனவும் அடைக்கப்படுகின்றது.
இக்கிராமத்தின் வடமேற்கில் உள்ள முகத்துவராத் தெரு, இக்கிராமத்துள் வருவோருக்கு முகத்துவராமாக அமைந்திருந்தது. இத்தெருவில் பண்டங்கள் சேமிக்கும் கிட்டங்கிகளும் கடைக்கட்டிடங்களும் இருந்தன. பர்மா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்துவரும் சிறு கப்பல்கள் பொருட்களை இத்துறையில் இறக்கும் போது வரி (தீர்வை) அறவிடப்பட்டதால் இது தீர்வைத்துறை என பெயர் பெற்றது. தீர்வை அறிவிட்டப்பட்டதும் அவைகள் மாட்டுவண்டி மூலம் வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் . இத்தெருவில் தனவந்தர்கள் பலரும் , நெல் வியாபாரிமாரும், அரசாங்க உத்தியோகத்தர்களும் வாழ்ந்து வந்துள்ளனர் . மண்முனை இராசதானி வலுப்பெற்றிருந்த காலத்தில் உலகநாச்சியார் சகோதரன் உலகநாதன் இத்தெருவின் கரையோரங்களில் காவல் அமைத்து எதிரிகளை வேவுபாத்தான் என்பதும் வரலாற்று தகவல்கள்.
அறியக்கிடைத்த தகவல்களின் படி பிரித்தானியர் காலத்தில் ஆட்சிக்கு பொறுப்பாயிருந்த சோமநாத வன்னியர், சம்புநாத வன்னியர், பொன்னுசாமி வன்னியர் தொடங்கி இன்றைய காலத்தில் புனிதலிங்கம், சிவராசா, சதாகரன் என விஞ்ஞானிகள் வரை கல்விக்கு பேர்போன ஒரு கிராமமாக விளங்கும் ஆரையம்பதி, மட்டக்களப்பு தேசத்திற்கு ஒர் புலமைசார் மாந்தர்களை தந்திருக்கின்றது.
ஆரம்பத்தில் கடல்வாணிபமும் மீன்பிடியும் நெசவும் இங்கு முக்கிய தொழில்களாக காணப்பட்டது. நாவாய் ஒடம் போன்ற சிறுகப்பல்களுக்கு சொந்தக்காரர்களும், நாகப்பர், மூத்ததம்பி, கணபதிப்பிள்ளை,தனாச்சீனா, பூபாலபிள்ளை, சின்னவாத்தியார், இளையதம்பி, காசிநாத உடையார், மாரிமுத்து, அருணகிரி, வேலிப்பிள்ளை என ஏகப்பட்ட வயல்களுக்கும் நிலபுலன்களுக்கும் சொந்தமான போடியார்களும் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்திருக்கின்றார்கள். பிரித்தானியர் காலத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளிப்பணங்களுக்கும் சொத்துக்களுக்கும் சொந்தமான பெரியபுள்ளை என்பரின் சொத்துக்களை பிரித்தானியர் பறிமுதல் செய்தது முக்கிய செய்தியாகும். இது சட்டரீதியான அணுகுமுறையாதலால், லண்டன் பிரிவிக்கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்து வழக்கினை செயற்படவைத்து ஈற்றில் வெற்றி பெற்றார் பெரியபிள்ளை. தன்னிடமிருந்து பறிமுதல் செய்த பணம் முழுவதையும் மீளப்பெற்றுக் கொண்டார். இந்த வழக்கே இலங்கையில் இருந்து முதன்முதலாக லண்டன் பிரிவிக்கவுண்சிக்கு கொண்டு செல்லப்பட்ட வழக்கு என்பதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
கந்தசுவாமி, கண்ணகையம்மன் திருநீலகண்ட விநாயகர், பரமநயினார், ஆதிவைரவர், மாரியம்மன், பேச்சியம்மன்,வீரமாகாளி, வடபத்திர காளி, பத்திரகாளி, சிவனேஸ்வர், மதுரைவீரன், அரசடிப்பிள்ளையார், எள்ளுச்சேனை பிள்ளையார், சமாதடிப்பிள்ளையார், கிருஸ்ணன், நரசிம்மர் என எந்த வீதியில் சென்றாலும் ஒர் இந்துகோயில் அமைந்திருப்பதை காணலாம். அன்னை திசேசாம்பாள், மெதடிஸ்த தேவாலயம் என கிருஸ்தவ தேவாலயங்களும் அமைந்திருக்கின்றன.
வீதிகொரு கோயில் இருந்தாலும், இங்கிருக்கும் கண்ணகி கோயில், “பேழை” ஒன்றினை மூலாதாரமாவும், நாட்டார் வழிபாட்டு மூலங்களில் இருந்து தன்னை விலக்கிகொள்ளாத மரபுகளை தொடர்ந்து பேணுவது, என பல்வேறுபட்ட தனித்துவங்கள் மற்றும் பழமையான கோயிலாக ஈழத்தில் காணப்படுவது இதன் சிறப்புகளாகும்.
மட்டக்களப்பின் மூத்த அறிஞர் குமாரசாமி ஐயரில் தொடங்கி மட்டக்களப்பின் கல்வி பாரம்பரியத்தின் சிற்பி பண்டிதர் பூபாலபிள்ளை, பண்டிதர் சந்திரசேகரம், மட்டக்களப்பின் முதல் தலபுராணத்தை தந்த அளகேச முதலியார், தமிழ்மணி விவேகானந்த முதலியார், ஆசிரியர் சிரோண்மணி செல்வநாயகம், மட்டக்களப்பு இலக்கியத்தை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்த நவம், தமிழ்மணி அன்புமணி, பன்முக ஆளுமை ஆரையூர் அமரன் போன்றவர்களோடு நம்முடன் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் தலைக்கோள் மூனாக்கானா என ஒர் இலக்கிய பாரம்பரியத்தை தேசத்தில் விதைத்த இக்கிராமம், மட்டக்களப்பின் நாட்டுக்கூத்து, மட்டக்களப்புக்கு மட்டுமே உரித்தான மகிடி கலை போன்றவன்றின் முதன்மை இயங்குதளமாகவும் காணப்பட்டது. இன்று கிழக்கின் கலை பாரம்பரியத்தின் அடையாள குறியீடாக காணப்படும் ‘கூத்து முடி’யும் இக்கிராமத்தில் இருந்து வந்ததுதான்.
ஒர் பிரதேசத்திற்கு தேவையான அனைத்து வணிக -அரச நிருவாக கட்மைப்புக்களும் ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் சிறப்பும், நூற்றாண்டு கடந்த 2 பாடசாலைகள் உட்பட 8 கல்வி வளர்க்கும் பாடசாலைகள் என ஒர் நகரமயப்பட்டு ஆரையம்பதி நிமிர்ந்து நிற்கின்றது.
முற்காலத்தில் மண்முனை இராட்சியமும்,கடல் வாணிபமும், இடைக்காலத்தில் நிறைந்த கலைகள், நிறைந்த கல்வியாளர்கள், கோலாகலமான கந்தசுவாமி கோயில் திருவிழா என சிறப்பு அடையாளங்களைக் கொண்ட இக்கிராமம், இப்போது ஊரெங்கும் சிலையெழுப்பி சிலைகளின் நகரம், அதிகமான கோவில்கள் கொண்ட கோவிலுர் என்கின்ற அடையாளங்களை தனதாக்கி கொள்கின்றது.
தொன்மையானதொரு கிராமமாக விளங்கினாலும், பழந்தமிழ் அடையாளங்களை கொண்டிருந்தாலும் எல்லைகள் பறிக்கப்படுவது, அயலவர்களின் காழ்ப்பு எனப் பல்வேறு பட்ட அரசியல் சமூக காரணிகள் இக்கிராமத்தின் எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கின்றன என்பதே சமகால வரலாறு.