வடமுனையும் ஊத்துச்சேனையும் : மீள்குடியேற்றக் கிராமங்களின் கதை.
-கிரான் விஜய்
வெலிக்கந்தையில் இறங்கியபோது மாலை ஐந்து மணியாகி விட்டிருந்தது. வெலிக்கந்தை சிறிய நகரமாயினும் காபெட் வீதிகளும் கட்டடங்களுமாகக் காட்சி தருகிற சிறுநகரம்.
சந்தியிலிருந்து சிங்களக் கிராமத்திற்கு செல்லும் அழகிய காபெட் வீதிக்கு எதிரே, குண்டும் குழியுமான கிறவல் வீதியில் 7/8 கிலோமீற்றர் செல்ல வேண்டும் வடமுனைக்கு! அதிலிருந்து சிறு தூரத்தில்தான் ஊத்துச்சேனைக் கிராமம். ஊத்துச்சேனையில் நடைபெறும் சிறுவர் தின – முதியோர் தின நிகழ்வுகளுக்குச் செல்லுவதற்கான பயணத்தில் இந்தச் சந்தியில் நின்று கொண்டிருந்தோம்.
வடமுனை, ஊத்துச்சேனை என்பன எல்லையோரக் கிராமங்கள். 1980 களில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பெயரில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான சிங்களக் குடியேற்ற வாசிகளைக் கொண்டு வந்து குடியேற்ற முயற்சித்த போது பிரபல்யமான கிராமங்கள் இவை.
வடமுனைக் குளமும் வளமான மண்ணும் கடிமான உழைப்பும் ஒன்று சேர செழிப்பான கிராமங்களாக அவை அப்போதிருந்தன. மா, பலா, தென்னஞ் சோலைகள் என வளமும் வனப்பும் மிகுந்த கிராமங்களாக இருந்தன. பாலும் தேனும் அங்குதான் சுவையாக இருக்கும். வேட்டையாடுவேரின் சொர்க்க புரியும் கூட. ஆயுதப் போராட்டம் தொடங்கிய பின்னர் இரண்டு முறை, நீண்ட காலம் இடம் பெயர்ந்து இப்போது மீளக்குடியேறியிருக்கிறார்கள்.
எங்களை அழைத்துச் செல்லும் முச்சக்கரவண்டி வந்து, நாங்கள் அதில் ஏறியபோது 5.30 மணியாகிவிட்டது. “7/8 கிலோ மீற்றர்தான் என்றாலும் குண்டும் குழியுமான வீதியல் செல்ல சற்று நேரம் பிடிக்கும். மழை மூட்டம் வேறு. யானைகள் வீதிக்கு வந்து விடும். கவனமாகப் போகவேண்டும்.‘ என்று பயமுறுத்தினார் முச்சக்கர வண்டிச்சாரதி.
கடும் நெருக்கடிகளில் கூட இப்பாதையில் செல்லும் துணிச்சல் மிக்கவர் எனக்கூறப்பட்டதால்தான் இந்த நேரத்தில் அவருடன் பயணம் செய்யத் துணிந்தோம். அவரே இப்படிக் கூறினால்? இந்தக் காட்டுக்குள் யானைகளில் அடிபட்டுச் சாக யாருக்குத்தான் விருப்பம் வரும்.
விதியின் இருபக்கங்களிலும் காடுகள். வீதியும் விதியில் யானை வரும் இடங்களும் அவருக்கு அத்துப்படி. ‘இது யானைகள் கடக்கும் இடம். கடக்கும் போது நாம் குறுக்கறுக்கக் கூடாது. அத அது பாட்டுக்குப் போகவிட்டால் சரி.” எனக் கூறிக்கொண்டும் காடுகளைப் அவதானமாகப் பார்த்துக் கொண்டும் மெதுவாகவே வண்டியை ஓட்டிச் சென்றார். முச்சக்கர வண்டி மெதுவாகத்தான் சென்றது என்றால் அது கொஞ்சம் புனைவுதான். மிகமிக மெதுவாகவே சென்றது வண்டி.
மனதுள் ஓடிய பயத்தினைக் போக்க சத்தமாகப் பேசிக்கொண்டு சென்றோம். அரை மணி நேரப் பயத்தின் பின் கள்ளிச்சை என்ற பெயர்ப்பலகையும் ஒரு கிறவல் வீதியும் தென்பட்டது. அதுவும் மீள்குடியேற்றக் கிராமம்தான். இன்னும் கொஞ்சத்தூரத்தில், காடுகளுக்கூடாக சில வீடுகள் தெரிந்த போதுதான் நிம்மதி ஏற்பட்டது. அது எல்.பி. கிராமம். எல்.பி கிராமத்தைத் தாண்டிய போது வடமுனைக் குளம் விசாலமாத் தெரிந்தது. மாலைமங்கிய் வெளிச்சத்தில் மனோரம்மியமாகக் காட்சியளித்தது குளம்.
வடமுனைக்கிராமத்திற்குள் நுழைந்து ஊத்துச்சேனைக்கு திரும்பியபோது இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. இருளில் பெரிய உருவத்தில் யானை ஒன்று நிற்பது தெரிந்தது. வயல் வெட்டைக்குள் யானை ஒன்று இறங்கிவிட்டிருந்தது. நாங்கள் ஊருக்குள் போகும் போது யானைகளும் ஊர் எல்லைக்குள் போய் விட்டிருந்தன. பட்டாசு வெடிச்சத்தமும் கூய் கூய் என யானைகளை விரட்டும் சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.
முன்னர் சண்டை நடந்த காலத்தில் மாலையானதும் மக்கள் வீட்டுக்கள் முடங்கிக் கிடக்கும் நிலைமை இருந்தது. அது ஆமிக்குப் பயத்தினால். இப்போது யானைகள் மக்களை முடக்கி வைத்திருக்கின்றன. ஊருக்குள் புகும் யானைகள் ஊருக்குள்ளேயே மனிதர்கள் நடமாட முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது! ஆனால் என்ன, ஊர் எல்லையில் நின்ற யானைகளைப் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கும் இரண்டு நாட்களுக்கு முன் யானை வந்திருந்தது. யானைகள் வந்தாலும் ஒன்றும் செய்வதில்லை என்றார்கள்.
மறுநாள் ஊரைப் பார்க்கப் புறப்பட்டோம். நீண்ட கால இடப்பெயர்வுகள் கிராமங்களின் செழிப்பையும் வனப்பையும் துடைத்தழித்திருந்தன. 1990 இல் இடம் பெயர்ந்து 13 ஆண்டுகள் பல ஊர்களுக்கு இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து, 2003 இல் மீண்டும் வந்து குடியேறிய போதிலும், யுத்தம் அவர்களை நிம்மதியா வாழவிடவில்லை. மீண்டும் 2006 இல் இடம் பெயர வேண்டி ஏற்பட்டது. 2009 இல் கொஞ்சப் பேர் மீண்டும் வந்து குடியேறியிருக்கிறார்கள். இடம் பெயர்ந்து வாழ்ந்த இடங்களில் சிலர் நிரந்தரமாகவே வாழத்தொடங்கிவிட்டார்கள்.
வடமுனைக் குளம் பெரிய குளங்களில் ஒன்று. ஆனால் அதன் நீர்ப்பாசனத்தைக் கொண்டு பெரியளவில் நெற்செய்கை விருத்தியடைவில்லை என்றார்கள். இன்றைய நெற்செய்கையும் இயந்திரப் பாவனையுடன் நடைபெறுகிறது. புல்லு செருக்குதல், வரம்பு கட்டுதல், அருவி வெட்டுதல் என்ற வாழ்வதாரத் தொழில்கள் இல்லாமல் போயுள்ளன. அதனால் கிடைக்கும் வருமானமும் நெல்லும் இப்போது கிடைப்பதில்லை. குளத்து மீனும் மீன்பிடியும் வருடம் முழுவதற்குமான ஆதாரமாக விளங்குகின்றன. இது மீள்குடியேற்றக் கிராமங்களின் பொதுக்காட்சி.
குடியேறியவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மின்சாரமும் கிடைத்திருக்கிறது. ஆனால் இது அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளப்படுத்த உதவியதாகத் தெரியவில்லை என்பது சங்கடமானதொரு விடயம் தான். மின்சாரம் கிடைத்திருப்பது செல்லிடத்தொலைபேசிப் பாவனைக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. தொலைக்காட்சிப் பாவனைக்கும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இரண்டுமே செலவைத் தரும் விடயங்கள் தான்!
சிலர் மாடும் ஆடும் வளர்க்கிறார்கள். அது நாட்டு வளர்ப்பு முறை. பாரம்பரியமாக நடைபெற்று வருவன. வீட்டுத் தேவைக்குப் போக மிகுதியை விற்றுக் கொஞ்சம் பணம் பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான்.
பொது நீர் வசதிகள் கிடைத்திருக்கின்றன. அதைக்கொண்டு காலை, மாலைக் கடன்களை முடித்துக் கொள்ளலாம். குடிநீரையும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பயிர் செய்ய முடியாது! நிலத்தடி நீரைப் பெற்றுப் பயிர் செய்வதற்கு பல லட்சம் ருபாய்களில் செலவு ஏற்படும். மாரி மழையை நம்பிய சேனைப் பயிர்ச்செய்கைதான் சாத்தியமாகிறது.
மீள்குடியேற்றக் கிராமங்களில் இன்றைய நிலையில் கீரையும் இல்லை, கோழியும் இல்லை, கோழி முட்டையும் இல்லை என்பது கிராமங்கள் பற்றிய மனப்பதிவையே மாற்றியமைத்து விடுகின்றன. பாடசாலைச் சத்துணவுத் திட்டத்திற்கான முட்டை வாங்க ஓட்டமாவடிக்கோ அல்லது வாழைச்சேனைக்கோ செல்ல வேண்டியிருக்கிறது என பாடசாலை அதிபர் கூறியது கவலை தரும் செய்திதான். அங்கேயும் குளியாப்பிட்டியிலிருந்து வருகிற முட்டைதான் விற்கிறார்கள். குருநாகலில் இருந்து வருகிற கோழியைத்தான் விற்கிறார்கள்.
கடின உழைப்பும் வாழ வேண்டும் என்ற எண்ணமும் இக் கிராமங்களில் உயிர்ப்பை மீண்டும் துளிர்விடச் செய்திருக்கிறது. தென்னை, பலாக்கள் இப்போதுதான் வளரத்தொடங்கியிருக்கின்றன. அவை வளர்ந்து செல்லும். மண்ணும் உழைப்பும் அப்படி.