இலங்கையில் மூன்று தசாப்தங்களிற்கு மேலாக நடைபெற்ற யுத்தம் ஏற்படுத்திய பேரழிவுகள் அநேகம்! அநேகம்!!
நீண்ட கால யுத்தம்; தனித்தியங்க முடியாத முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோர்கள், சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வரும் அநாதைச் சிறுவர்கள், அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள அகதிகள், இயல்பியக்கம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் எனப் பல்வேறு விசேட சமூகப் பிரிவினரைத் தோற்றுவித்திருக்கிறது. இவ்விசேட சமூகப் பிரிவினர் பல்வேறு உதவிகளில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.
பெண்தலைமை தாங்கும் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிக் குடும்பங்கள், முன்னாள்ப் போரளிக் குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்கள் எனத் துயருற்று வாழும்; பல்வேறு அசாதாரணக் குடும்பங்களையும் தோற்றுவித்திருக்கிறது நீண்ட கால யுத்தம். இத்தகைய குடும்பங்கள் தொழிலுக்கும், அடிப்படை வசதிகளுக்கும், கல்விக்கும் எனப் பலவேறு தேவைகளுக்கும் சிரமப்பட்டுக் கொண்டே இயங்குகிறது.
அடிப்படை வசதிகளற்ற மீள்குடியேற்றக் கிராமங்கள், பின்தங்கிய கிராமங்கள், எல்லைக் கிராமங்கள் எனப் பல கிராமங்களையும் உருவாக்கியிருக்கிறது நீண்ட கால யுத்தம். அக்கிராமங்களில் தொழிலின்றி – தொழிலுக்கான உதவிகளின்றி வறுமையுடன் போராடி வாழும் உழைப்பாளர்கள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்காக அவதியுறும் மக்கள், சிறந்த கல்வி வாய்ப்பைப் பெறுவதற்காக சிரமப்பட்டுவரும் பிள்ளைகள் எனச் சாதாரண வாழ்வுக்காகவே துயருறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்து பத்தாண்டுகள் கடந்து விட்ட போதிலும், பல் வேறு உதவிச் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், பாதிக்கப்பட்ட எமது சமூகத்தின் இந்தப் பிரச்சினைகள் இன்னமும் தீர்ந்த பாடில்லை. பல்வேறு புதிய பிரச்சினைகளும் தோன்றித் துயருற்ற மக்களை மேலும் மேலும் இன்னல்களுக்கு உள்ளாக்கி வருகிறது.
இத்தகையதொரு சமூகச் சூழ்நிலையில், மீட்சி அமைப்பு “நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்சி” எனும் இலக்குடன் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்கு உருவான தொண்டு நிறுவனமாகும். மீட்சி அமைப்பானது, சாதி, மத, பாலின வேறுபாடுகளின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது, மேற்கொள்ளும். விசேடமாக,
- பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவிகள்,
- மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவிகள்,
- பாதிக்கப்பட்ட குடும்பங்களில் வாழும் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகள்,
- கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான உதவிகள்,
- பாதிக்கப்பட்ட மற்றும் மீள் குடியேற்றக் கிராமங்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான உதவிகள் –
என்பனவற்றில் கவனம் செலுத்தி வருகின்றது மீட்சி அமைப்பு.
எமது உதவித் திட்டங்கள், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களது தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பி, அவர்களது முயற்சிகளை வலுப்படுத்தி, எதிர்கலாத்தில் தமது முயற்சிகளில் தங்கி வாழும் நிலையை அவர்களிடையே ஏற்படுத்தும் எனக் கருதுகின்றோம். தன்னார்வத் தொண்டர்களின் நிதி உதவியுடன் இச்செயற்றிட்டங்களில் மீட்சி ஈடுபட்டு வருகின்றது.
மீட்சி அமைப்பு, இப்பிரதேசங்களில் இயங்கும் சமூக அமைப்புக்களுடன் இணைந்து அவ் அமைப்புக்களின் செயற்றிட்டங்களுக்கு கடன் உதவிகைள வழங்குவதுடன் ஆலோசனை உதவிகளையும் வழங்கி வருகின்றது.
மேலும் மிகத் தொலைதூரக் கிராமங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, அத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் இம் மக்களைச் சென்றடையும் செயற்றிட்டத்தினையும் மீட்சி அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.
அதே வேளை, ஈழத்தமிழர்களின் அரசியல் – சமூக – வரலாறு – வழிபாடு – கலை – இலக்கியம் சார்ந்த தகவல்களைத் தேடல், பதிவுசெய்தல், பரவச் செய்தல் எனும் வகையில் “மீட்சி” பணியாற்றியும் வருகின்றது.
மீட்சி; மக்களின் மீட்சி எனும் இலக்குடன் செயற்படுவோர்களை அரவணைத்துச் செல்லும், இவ்விலக்குடன் செயற்படுவோர்களுடன் ஒன்றிணைந்து நிற்கும், இவ்விலக்குடன் செயற்படுவோரை ஒன்றிணைக்கும், அவ்வாறனவர்களுக்கான சமூக ஊடக வெளியாகவும் அமையும்.
இணைந்து செயற்படுவதன் மூலமே இந்த இலக்கையும் நோக்கையும் அடைந்து கொள்ளலாம். இணைந்து செயற்படுவதன் மூலமே மக்களின் மீட்சி – மக்களின் முன்னேற்றம் சாத்தியமாகும்.
மீட்சியின் செயற்றிட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்
நட்புடன்,
இணைப்பாளர்,
மீட்சி.