மீட்சி, கடந்த ஓராண்டு காலமாக பெண் தலைமை குடும்பங்கள் (விதவை) மற்றும் மாற்றுத் திறனாளிக் குடும்பங்களின் வாழ்வாதாரத் தொழில்களுக்கான உதவிகளை வழங்கி வந்திருக்கின்றது.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் பின் தங்கிய கிராமங்களில் வாழும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இனங்கண்டு அவர்களது வாழ்வாதாரத் தொழிலுக்கான உதவிகள் வழங்கியிருக்கிறது.
இத்தகைய குடும்பங்களில் வாழும் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளையும் மீட்சி அமைப்பு வழங்கியிருக்கிறது.
கொரோணா தொற்றுக் காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் பட்ட போதும், பயணத்தடை விதிக்கப்பட்ட போதும் தொழிலை இழந்த குடும்பங்களிற்கு உலருணவுப் பொதிகளையும் வழங்கியிருந்தது.
மலையகத்தில் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியிலும் மீட்சி பணியாற்றி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, பல்வேறு அமைப்புக்களின் உதவிகளையும் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின் றோம்.
அதனை விட விசேட தேவையுடயை குடும்பங்களிற்கான மனிதாபிமான உதவிகளையும் வழங்கி இருக்கின்றோம்.
கடந்த ஓராண்டு கால மீட்சியின் உதவித் திட்டங்களுடன் இணைந்து பணியாற்றிய களப்பணியாளர்கள், நிதி வழங்கியவர்களுக்கு மீட்சி நிர்வாகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
தொடர்ந்து மீட்சியின் பணிகளை மேற்கொள்ள உங்கள் அனைவரதும் மேலான ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.
புதிய ஆண்டில் இப்பணிகளை தொடர்வதுடன் புதிய நோக்கிலான செயற்றிட்டங்களையும் மேற்கொள்ள ஆலோசனை செய்து வருகின்றோம்.
விழிப்பு நிலை மக்களின் பொருளாதார, கல்வி, சமூக மேம்பாட்டிற்காக அம்மக்கள் மத்தியில் இயங்கும் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பானது எனக் கருதுகிறோம்.
அத்துடன் பின்தங்கிய கிராமங்களில் வாழும் வறுமையான குடும்பங்களின் பொருளாதார, சமூக மேம்பாட்டிற்காகவும் சிறப்பு செயற்றிட்டங்களை மேற்கொள்ளவது அவசியம் எனவும் கருதுகின்றோம்.
வறுமையான குடும்பங்களில் சிறுசிறு பொருளாதார முயற்சிகளை மேற்கொண்டு வருவோர்களை இனங்கண்டு, அவர்களது முயற்சிகளை மேலும் வளப்படுத்தும் செயற்றிட்டங்களை மேற்கொள்ளலாம் எனக் கருதுகின்றோம்.
கிராமிய ரீதியாக முன்னெடுக்கப்படும் இம் முயற்சியில் நாட்டுக் கோழி குஞ்சு வளர்ப்பு, பருவ காலப் பயிர்ச்செய்கை, குறுகிய காலப் பழப் பயிர்ச் செய்கை, பாரம்பரிய விதை உற்பத்தி போன்ற தொழில்களுக்கான உதவிகளை வழங்க ஆலோசனை செய்து வருகின்றோம்.
இதன் மூலம் வறுமையான குடும்பங்கள் மேலதிக வருமானத்தைப் பெறக் கூடியதாகவும், உப தொழில் வாய்ப்புக்கள் உருவாகக் கூடியதாகவும், கிராமிய மட்டத்தில் தன்னிறைவு நிலையை எட்டக் கூடியதாகவும் இருக்கும் எனக் கருதுகின்றோம்.
உங்கள் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி
மீட்சி நிர்வாகம்.