வரலாற்றுக்கு முற்பட்ட கால மட்டக்களப்பு -கிரான் விஜய்
மட்டக்களப்பைப் புரிந்து கொள்வதற்கும், மட்டக்களப்பில் இன்று காணப்படும் சமூக அமைப்பைப் புரிந்து கொள்வதற்கும், மட்டக்களப்பில் இன்று காணப்படும் பல சமூகப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கும், மட்டக்களப்பின் வரலாற்றைப் புரிந்து கொள்வது அவசியமாகும் எனக் குறிப்பிட்டிருக்கிறார் த.சிவராம். “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” எனும் நூலிற்கு எழுதிய “வரலாற்று அறிமுகக் குறிப்புரை” யிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இதற்கப்பாலும் பலவழிகளில் வரலாறு முக்கியத்துவமுடையதொன்றே. வரலாறு முக்கியமானதே!
ஆயினும், மட்டக்களப்பின் வரலாற்றை அறியும், எழுதும் முயற்சிகள் மிகப்பிற்பட்ட காலத்திலேயே ஆரம்பிக்கத்தொடங்கியது. கிழக்கு மாகாண அரசாங்க அதிபராகக் கடைமையாற்றிய ஆர்.ஏ.ஜி. ஃபீல்டிங் அவர்கள், “மட்டக்களப்பு மாவட்டம் அதன் பொழிப்பை எழுதிவைக்கக்கூடிய ஓர் அரசாங்க அதிபரையோ மாவட்ட நீதிபதியையோ பெறத்தவறிவிட்டது” என “The Monograph of Betticaloa District” எனும் கையேட்டிற்கு 1918 ஆம் ஆண்டில் எழுதிய முகவுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மட்டக்களப்பு வரலாற்றை அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தினைப் புரிந்து கொண்ட சிலர், மட்டக்களப்பின் வரலாற்றை அறிவதற்கும் பதிந்துவைப்பதற்குமான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினர். எனினும் அவர்கள் எதிர்நோக்கிய பெரும்சவால், மட்டக்களப்பு வரலாற்றை அறிந்து கொள்வதற்கான “வரலாற்று மூலாதாரங்கள்” கிடைக்காமையாகும். மட்டக்களப்பின் நவீன கால வரலாற்றைக் கூட அறிந்து கொள்வதற்கான திட்டவட்டமான வரலாற்று மூலாதாரங்கள் கிடைக்கவில்லை என்பது பெரும் சவாலானதே. மட்டக்களப்பைப் பொறுத்தவரை சோழர் காலத்துக்கு முற்பட்ட திட்வட்டமான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைத்தில எனச் சிவராம் 2005 இல் எழுதியிருக்கிறார்.
மட்டக்களப்பு வரலாறு, ‘ஐதீகங்கள்‘ என்ற வகையில் “மட்டக்களப்பு மாண்மியம்” / “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” என ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டிருந்தன என்பதனை, இவ்வேடுகளின் அச்சுப்பதிப்புகளாக வெளிவந்த மட்டக்களப்பு மாண்மியம், மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் எனும் நூல்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. இவ்வேடுகளில் மட்டக்களப்பின் பண்டைய வரலாறு கூறப்பட்டுள்ளது. ஆனால், இவை திட்டவட்டமான வரலாற்று ஆவணங்களாக கருதப்படாத நிலையே இன்றுவரை இருந்து வருகிறது. இவ் ஏடுகளைத் தவிர்த்தால் சோழர் காலத்திற்குரியதெனக் கருதப்படும் இரண்டு திருக்கோயில் கல்வெட்டுக்கள், வீரமுனைச் கல்வெட்டு என்பவையே திட்டவட்டமான வரலாற்று ஆதாரங்களாக அறியப்பட்டனவாகும். இதனால் மட்டக்களப்பின் வரலாற்றுக்கு முற்பட்ட கால வரலாற்றை தெளிவாக அறிந்து கொள்ள முடியாத நிலை காணப்பட்டு வந்தது.
வரலாற்றுக்கு முற்பட்ட கால சமூக. பொருளாதார, பண்பாட்டு முறைகள் பற்றி அறிவதற்கு, தொல்லியல் சான்றுகளே முக்கியமான ஆதாரங்களாக விளங்குகின்றன; தொல்லியல் சான்றுகளே நம்பகரமான தகவல்களாகவும் அமைகின்றன, தொல்லியல் ஆய்வுமுறை அடிப்படையிலேயே வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் குழுமங்கள் பற்றி விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்படுகின்றன.
மட்டக்களப்பின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய தொல்லியல் சான்றாக நீண்டகலாமாக அறியப்பட்டு வந்தது கதிரவெளி தொல்லியல் சான்று மட்டுமே. இலங்கை வரலாற்றை எழுதிய, மட்டக்களப்பு வரலாற்றை எழுதிய பல்வேறு அறிஞர்களும் இத்தொல்லியல் சான்று பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பின் வடக்கேயமைந்துள்ள கதிரவெளியில், குரங்கு படையெடுத்த வேம்பு என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சான்றுகள்; மட்டக்களப்பில் பிரதேசத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மக்கள் வாழ்ந்தார்கள், மட்டக்களப்பில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்கள் குடியிருப்பு ஒன்று இருந்தது என்பதனை உறுதியான முறையில் நிரூபித்திருக்கிறது எனக்கூறமுடியும். எனினும் இன்று வரைக்கும் கதிரவெளியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் பற்றித் தெளிவான தகவல்களைப் பெறமுடியாதவர்களாகவே இருக்கின்றோம். இதனால் கதிரவெளியில் வாழ்ந்த வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களைப் பற்றித் தெளிவான முடிவுகள் எதனையும் பெறமுடியாத நிலையிலேயே உள்ளோம். இந்த நிலைமை, மட்டக்களப்பின் தொடர்ச்சியான வரலாற்றை அறிந்து கொள்வதிலும் தடைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கதிரவெளி தொல்லியல்கள் பற்றி ஆராய்வதற்கு முதல், கதிரவெளிக் குடியிருப்பிற்கு முற்பட்டதாகக் கருத வேண்டிய, கிழக்கிலங்கையில் கண்டெடுக்கப்பட்ட இரு தொல்லியல் ஆதாரங்கள் பற்றி அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. இவ்விரண்டு தொல்லியல் ஆதாரங்களும், கிழக்கிலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலத்தில் மக்கள் வாழ்ந்தமையை அறியத்தரும் சான்றுகளாக அமைகின்றன.
செ.கிருஷ்ணராசா அவர்களின் இலங்கை வரலாறு பாகம் –1 எனும் நூலில் இவ்விரண்டு தொல்லியல் ஆதாரங்களும் காட்டப்பட்டுள்ளன. ஒன்று, கிழக்கு மாகணத்தில் லெனம என்னும் இடத்திலுள்ள குகைளிற் பெறப்பட்ட கற்காலத்திற்குரிய சில கல்லினாலான கைவினைப் பொருட்கள். இப்பொருட்கள், இலங்கை நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டன எனக் குறிப்பிட்டிருக்கிறார். இரண்டாவது, கிழக்கு மாகாணத்தில் சியம்பக அண்டுவ என்னுமிடத்திற்கு அண்மையிலுள்ள மண்டு கல்கேயில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கால மனிதனால் வரையப்பட்ட யானை ஓவியங்கள். இது, கலாநிதி தெரணியாகல அவர்களினால் பிரதி செய்யப்பட்டன (பக்: 77) எனக் குறிப்பிடுகிறார். இவ்விரண்டு தொல்லியல் சான்றுகளும் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலத்திற்குரியவை. லெனக குகையில் கண்டெடுக்கப்பட்டது கற்கால கைவினைப் பொருள். மண்டுகல்கேயில் கண்டெடுக்கப்பட்டது கற்கால மனிதன் வரைந்த யானை ஓவியம்.
இலங்கைத்தீவில் மக்கள் வாழத்தொடங்கிய காலம் குறித்து, வரலாற்றறிஞரிடையே முரண்பட்ட கருத்துக்களே காணப்படுகின்றன. எனினும், அக்காலம் கி.மு. 29000 ஆண்டளவு என்பதே நிருபிக்கப்பட்ட ஒன்றாக அமைகிறது. இலங்கையில் இரத்தினபுரிப் பிரதேசத்திலும் பலாங்கொடை – பண்டாரவளைப் பிரதேசத்திலும் குகைளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் வழியாக, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில இரத்தினபுரிப் பண்பாட்டு மக்கள் குழுமங்கள், பலாங்கொடைப் பண்பாட்டு மக்கள் குழுமங்கள் என இரு மக்கள் குழுமங்கள் வாழ்ந்தமை அறியப்பட்டது.
செ.கிருஷ்ணராசா, “இரத்தினபுரிப் பண்பாடு பழங்கற்காலப் பண்பாடு எனவும், பலாங்கொடைப் பண்பாடு புதிய கற்காலப் பண்பாடு எனவும் கருதப்பட்டு வந்தது. எனினும் அவை இரண்டுமே கி.மு. 29000 வருடங்கட்கு முந்திய குறுணிக்கற்காலப் பண்பாட்டுக்குரியவை என்பது சிரான் தெரணியாகல என்பவர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்கிறார் [1999; பக்:75]. எனவே, இலங்கைத்தீவில் இற்றைக்கு 31000 வருடங்களின் முன்னர் அதாவது கி.மு. 29000 ஆண்டளவில் மக்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனலாம்.
இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு கி.மு 800 ஆம் ஆண்டளவில் தொடங்குகிறது என்கிறார் செ.கிருஷ்ணராசா [1999; பக் : 81]. இக்கால எல்லையை ஏற்றுக்கொண்டு, இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலம் கி,மு. 29000 ஆண்டிலிருந்து கி.மு. 800 ஆம் ஆண்டுவரை நிலவியது எனக்கருதலாம்.
இது, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் அறியப்படும் காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் எனப்படும் என்பதனால், இக்காலத்தை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பர். “வரலாற்றுக்கு முற்பட்ட காலம் கற்காலமாகவே காணப்படுகின்றது. இதன் காலம் கி.மு. 125,000 – 1000 வரையிலான காலப்பகுதியாகும்.” எனக்குறிப்பிடுவார் சி.க.சிற்றம்பலம் (1994, பக்:4) அவர்கள்.
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலத்தில் வாழ்ந்த இம்மக்களின் பண்பாடு, தென்னிந்திய வரலாற்றுக்கு முற்பட்ட கற்கால மக்களின் பண்பாட்டை ஒத்துக்காணப்படுகின்றமை முக்கியமானதொரு விடயமாக அமைந்தது. செ.கிருஷ்ணராசா (1999;பக்:56). “குறுணிக்கற்காலப் பண்பாட்டிற்குரிய மண்படையடுக்குகளைக் கொண்ட இலங்கையின் இக்காலப்பரப்பானது தென்னிந்திய ‘தேரி’ப் பண்பாட்டினைச் சிறப்பாக ஒத்துக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது என்கிறார்.” சி.க.சிற்றம்பலம் அவர்கள்(1994;பக்:4), ‘இக்கால ஆயுதங்களுக்கும் தமிழகத்தில் கிடைத்துள்ள கற்கால ஆயுதங்களுக்குமிடையே நெருங்கிய ஒற்றுமையைக் கண்ட அறிஞர் இவற்றை ஆக்கிய மக்கள் தமிழகத்தில் இருந்து ஈழத்தினை அடைந்திருக்கலாமெனக் கருதுகின்றனர். இவர்கள்தான் இன்றைய வேடர்களின் மூதாதையினர் ஆகும். இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரிக்மொழியாகும். இற்றைக்கு 28,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமாகிய இக் கலாசாரம் கி.மு. 1000 வரை ஈழத்தில் நிலைகொண்டிருந்தது எனவும் குறிப்பிடுகிறார்.
இத்தகவல்கள் சரியானவை எனின், இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போலவே, கிழக்கு மாகாணத்திலும், இற்றைக்கு 28000 வருடங்களுக்கு முன்னர், வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலத்தில், தென்னிந்திய கற்கால மக்களின் பண்பாட்டை ஒத்த, கற்காலப் பண்பாடு கொண்ட மக்கள் வாழ்ந்திருந்தார்கள் என்ற முடிபுக்கு வரக்கூடியதாகவும் இருக்கும். உண்மையில் இத்தொல்பொருட்களின் காலத்தை சரியாக அறிந்து கொள்ள முடியாதுள்ளது என்பதனால் இதன் பழமை பற்றி உறுதிபடக் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாதுள்ளது.
இத்தகவல்கள் சரியானவை எனின், மட்டக்களப்பிற்கான தொடர்ச்சியானதொரு வரலாற்றை கண்டறியவும் முடியம். அதாவது இன்று மட்டக்களப்பில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் நீண்டகால வரலாற்றுத் தொடர்ச்சியை கண்டறியவும் முடியம். இதற்குப் போதுமானளவு தகவல்கள் இப்போது கிடைத்துள்ளன.
லெனம, மண்டு கல்கே ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்கள் மேலதிகத் தகவல்களை சேகரிக்க வேண்டியுள்ளது. மட்டக்களப்பில் பல தொல்லியல் மையங்கள் காணப்படுகின்றன எனப்பலரும் குறிப்பிடுகின்றனர். இத்தொல்லியல் மையங்கள் பற்றி ஆராய்வது அவசியமானதாகும். இதன் வழியாக மட்டக்களப்பின் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலம் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்ள முடியலாம்.
இவ்வாறு மட்டக்களப்பின் வரலாற்றுக்கு முற்பட்ட கற்கால வரலாற்றை ஆராய்ந்தறிவதுடன், மட்டக்களப்புச் சமூகம் பற்றி மிக அண்மைக்காலம் வரை கிடைத்துள்ள சான்றுகளைத் தொகுத்து நோக்கும் போது மட்டக்களப்பில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் நீண்டகால வரலாற்றுத் தொடர்ச்சியைக் கண்டறிந்து கொள்ள முடியம். இந்நீண்டகாலப் பரப்பில் இன்றைய சமூகம் உருவாகிய தன்மையையும் அறிந்து கொள்ள முடியுக் கூடியதாகவிருக்கும்.
ஆனால் லெனம, மண்டு கல்கே ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்கள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெறமுடியாதவர்களாக இருக்கின்றோம். அவற்றைப் பற்றி அறிய முயலவேண்டும். இதற்குப் பிற்பட்ட பெருங்கற்காலத்தில் மட்டக்களப்புப் பிரதேசதத்தில் மக்கள் வாழ்ந்தமையை கதிரவெளி தொல்லியல் சான்றுகள் உட்பட வேறுபல தொல்லியல் சான்றுகள் நிரூபிக்கின்றன. இவை பற்றிய தகவல்களைத் தேடியறிவதுடன் இவை பற்றிய தெளிவின்மைகளை நீக்கிக் கொள்ளவும் வேண்டும். இதற்குப் பிற்பட்ட காலம் தொடர்பில் இதுவரை பெருமளவு தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தொகுத்து ஆராயவேண்டிய தேவையும் உண்டு.
இவ்விடத்து, 1917 ஆம் ஆண்டில் கந்தரோடையில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டிருந்த சேர் போல் பீரிஸ் அவர்கள், ‘இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத தமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக் கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்திருப்பதை தமிழ் மக்கள் ஒரு காலத்தில் உணர்வார்கள் என எதிர்பார்க்கிறேன்‘ (சி.க.சிற்றம்பலம், பக்:13) எனக் கூறிய கருத்தை நினைவு படுத்துதல் மிகப் பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
உசாத்துணைகள்:
கிருஷ்ணராசா, செ. “இலங்கை வரலாறு பாகம் –1,” திருநெல்வேலி, யாழ்ப்பாணம். 1999.
பத்மநாதன், சி. “இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள்”, கொழும்பு. 2006.
சிற்றம்பலம், சி.க. “ஈழத்தமிழர் வரலாறு ( கி.பி. 1000 வரை) தொகுதி 1”, யாழ்ப்பாணம். 1994.