திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள கிரானில் இருந்து மேற்கே 24 கிலோ மீற்றர் தொலைவில் வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமம் முறுத்தானை. இது பழங்குடிகள் தனித்து வாழும் கிராமம் ஆகும். அதி கஸ்டப்பிரதேசத்தில் அமைந்துள்ள இக்கிராமம். இறுதி யுத்தத்தில் இடம் பெயர்ந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமும் கூட.
இக் கிராமத்தில் தரம் 5 வரையான வகுப்புகளைக் கொண்ட ஆரம்பப் பிரிவு பாடசாலை மாத்திரமே அமைந்துள்ளது. இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தரம் 6 இற்குப் பின்னரான கல்வியைத் தொடர 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பொண்டுகள்சேனை பாடசாலைக்குச் செல்ல வேண்டும். தரம் 9 இற்குப் பின்னராக கல்வியைத் தொடர 20 கிலோ மீற்றர் கடந்து செல்ல வேண்டும்.
2023 ஆம் ஆண்டில் முறுத்தானைக் கிராமத்தினைச் சேர்ந்த 6 – 9 வரையான வகுப்புகளில் கல்வி கற்க, பொண்டுகள்சேனை பாடசாலைக்குச் செல்ல வேண்டிய 28 மாணவர்கள் போதிய போக்குவரத்து வசதியின்றி தமது கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ளனர்.
இக்கிராமத்திற்கான கிறவல் பாதை போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. பொதுப் போக்குவரத்து வசதியும் இதுவரை வழங்கப்படவில்லை. தனியார் வாகனப் போக்குவரத்தும் இல்லை. யானைகளின் தொல்லையும் அதிகம். இதனால் மாணவர்கள் ஆபத்தான பாதை வழியே நடந்து சென்று கல்வி கற்க வேண்டிய நிலையே உள்ளது. இதனால் இவ்வருடம் இம்மாணவர்கள் பாடாசலைக்கு இன்னமும் சமூகமளிக்காத நிலை காணப்படுகிறது.
இது தொடர்பான கிராம மக்களுடனான கூட்டங்கள் நடாத்தப்பட்ட போதிலும் சாதகமான தீர்வுகள் எடுக்கப்பட முடியாத நிலை காணப்பட்டு வருகின்றது. எனவே இக்கிராம மாணவர்களின் போக்குவரத்;திற்காக துவிச்சக்கர வண்டிகளை வழங்குவதே மேற்கொள்ளக் கூடியதொரு நடவடிக்கையாக இனங்காணப்பட்டுள்ளது. பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கினால் அதனை தொடர்ச்சியாக கல்வி கற்கும் மாணவர்களது போக்குவரத்திற்காக வழங்க முடியும்.
இம் மாணவர்கள் தங்களது கல்வியைத் தொடர துவிச்சக்கர வண்டிகளை வழங்கி உதவுமாறு சமூக நலன் விரும்பிகளிடம் கோருகின்றோம்.
நன்றி
மீட்சி..