மீட்சி அமைப்பு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், புதியதொரு செயற்றிட்டமாக பழமரங்கள் மற்றும் பயன்தரு மரங்கள் நடுகைத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
பழமரங்கள் மற்றும் பயன்தரு மரங்கள் நடுகைத் திட்டம், பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்கள் தமது சூழலில் உள்ள வளங்களைக் கொண்டும் இலகுவான முயற்சிகளை மேற்கொண்டும் நிரந்தரமான வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பழமரங்கள் மற்றும் பயன்தரு மரங்களின் நடுகை செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இச் செயற்றிட்டத்தில் நிலம், நீர், முயற்சி உள்ள குடும்பங்களிற்கு பப்பாசி, மாதுளை, மா, தோடை, அன்னமின்னா, கொய்யா போன்ற பழ மரக் கன்றுகளையும் தேசி, முருங்கை, அகத்தி, கறிவேப்பிலை போன்ற பயன்தரு மரக்கன்றுகளையும் வழங்குதல், அவற்றை அம்மக்கள் வளர்த்துப் பயன்பெறுவதற்கு வழிகாட்டுதல்களை வழங்குதல் ஆகிய முயற்சிகளை செய்வதே மீட்சியின் பணியாகும். பிரதேச செயலகங்களுடனும் கிராமிய மட்ட அமைப்புக்களுடன் இணைந்து இச்செயற்றிட்டத்தினை மேற்கொள்வது மீட்சியின் நோக்கமாகும்.
2023 ஆம் ஆண்டில் பொங்கல் தினத்தன்று மீட்சியின் உதவித் திட்டத்தில் இயங்கிவரும் குடும்பிமலை குமரன் பாலர் பாடசாலையிலும் புலிபாய்ந்தகல் மாணிக்கப்பிள்ளையார் பாலர் பாடசாலையிலும் சம்பிரதாய பூர்வமாக இச்செயற்றிட்டத்தினை ஆரம்பி வைத்தோம்.
தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு – சர்வதேச மகளிர் தினத்தினை ஒட்டி வாகரைப் பிரதேச செயலகத்துடன் இணைந்து அப்பிரதேசத்தில் வாழும் 40 குடும்பங்களிற்கு மாதுளை, கொய்யா, சீதா என 120 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைந்து அப்பிரதேசத்தில் வாழும் 50 பெண்தலைமைக் குடும்பங்களிற்கு 150 பலாக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனையடுத்து கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து அப்பிரதேசத்தில் வாழும் 20 பெண் தலைமைக் குடும்பங்களிற்கு மா, மாதுளை, தோடை என 100 கன்றுகள் (குடும்பம் ஒன்றிற்கு 05 கன்றுகள்) வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலயுதபுரம் கிராமத்தில் 4 குடும்பங்களிற்கு பப்பாசி, அன்னமின்னா, முருங்கை, மா ஆகிய கன்றுகளை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதேவேளை பாலக்குடா கிராமத்தில் பெண்தலைமைக் குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதாரத் தொழிலாக பழமரம் மற்றும் பயன்தரு மரச் செய்கைக்கான உதவியை வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். தொடர்ந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கிராமிய மட்ட அமைப்புக்களின் உதவியுடன் பயனாளிகதை; தெரிவு செய்து கன்றுகளை வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இச்சிறப்புச் செயற்றிட்டத்தினை மேற்கொண்டு வரும் அதேவேளை, வாழ்வாதார உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் கல்விக்கான உதவிகளையும் தொடர்ந்தும் மீட்சி மேற்கொண்டு வருகின்றது. வாழைச்சேனை கருணைபுரத்தில் பெண்தலைமைக் குடும்பமொன்றிற்கு வாழ்வாதார தொழிலை மேற்கொள்வதற்காக கொச்சிக்காய் தூள் அரைத்து விற்பனை செய்வதற்கான மூலப்பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. பிரதேச செயலகத்தின் துணையுடன் இச்செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டு, அவர்களது கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றது.
வாழைச்சேனை பிரதேசத்தில் வீடும் வீட்டுப் பொருட்களும் முற்றாக எரிந்து நிர்க்காதியான குடும்பம் ஒன்றிற்கான அவசர உதவிகளையும் (உலருணவுப் பொருட்கள்) மீட்சி வழங்கியுள்ளது.
மிகப் பின்தங்கிய கிராமமான குடும்பிமலைக் கிராமத்தில் பாலர் பாடசாலையை சீரமைத்து இயக்கி வருகின்றதுடன் ஆசிரியருக்கான மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவையும் வழங்கி வருகின்றோம். பழங்குடிமக்கள் வாழும் கிராமமான முறுத்தானைக் கிராமத்தில் இயங்கும் பாலர் பாடசாலை ஆசிரியருக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவையும் வழங்கி வருகின்றோம்.
அத்துடன் மாத்தளை தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பில் பௌதீகவியல் பாடத்தினைக் கற்பித்து வரும் தொண்டராசியருக்கான மாதாந்தக் கொடுப்பனவில் ஒரு பகுதியையும் மீட்சி வழங்கியுள்ளது.
தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்ற அம்பாறை – செங்காமம் கிராமத்தில் 10 குடும்பங்களிற்கு மாரிகாலச் சேனைப் பயிர்ச்செய்கை செய்வதற்குத் Nவையான கச்சான் விதைகைள ஏற்கனவே வழங்கியிருந்தோம். தற்போது மேலும் 3 குடும்பங்களிற்கு ஆடுகளை வழங்குவதற்hகான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தற்போது நெதர்லாந்தின் மனிதநேய செயற்பாடுகளுக்கான கூட்டுறவுச் சங்கம் கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வரும் நிலைபேறான அபிவிருத்திக்கான கூட்டுறவு சங்கங்கள் – சமாஜங்கள் – சம்மேளனங்களை புனரமைத்தல் மற்றும் ஸ்தாபித்தல் பணிகளில் மீட்சி அமைப்பும் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளது. மீட்சியின் செயற்றிட்டங்களுடன் இணைந்துள்ள மீனவர்களை இச்செயற்றிடத்தின் கீழ் கொண்டு வரும் பணிகளை பிரதேசத்தில் இயங்கும் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றோம்.
தொடர்ந்தும் மீட்சியின் பணிகள் தொடர்கின்றன. தொடர்ந்தும் எமது செயற்றிட்டங்களுக்கான உதவிகைளயும் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு வேண்டுகின்றோம்.
நன்றி.
நிர்வாகம்,
மீட்சி.