01.01.2023
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மீட்சி அமைப்பு, “இலங்கையின் நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்சி” எனும் நோக்குடன் செயற்பட்டு வரும் அமைப்பாகும்.
இந்த இலக்கின் அடிப்படையில், கடந்த இரு வருடங்களாக வட கிழக்குப் பிரதேசத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைக் குடும்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிக் குடும்பங்களை இலக்காகக் கொண்டு வாழ்வாதார உதவிகள், கல்விக்கான உதவிகள், மனிதாபிமான உதவிகள் என்பவற்றை வழங்கியதுடன் கொரோணா காலப் பொருளாதார நெருக்கடி நிலையில் உலருணவுப் பொதிகளையும் வழங்கியிருந்தோம். இப்பணிகள் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் மேம்பாட்டுக்கு நாம் உதவி புரிந்துள்ளோம்.
எமது பணிகள் ஊடாகப் பெற்றுக் கொண்டு அனுபவங்கள் மூலம் வட கிழக்கில் தொலைதூரத்தில் அமைந்துள்ள, எல்லைப்புறங்களில் அமைந்துள்ள கஸ்டப் பிரதேசக் கிராமங்களிலும் எமது பணிகளை விஸ்தரித்தோம். இக்கிராமங்களில் வாழும் மக்களிற்கு கொரோணா காலப் பொருளாதார நெருக்கடி நிலையில் உலருணவுப் பொதிகளையும் வழங்கியிருந்தோம். மேலும் இக்கிராமங்களின் நிலையான இருப்பிற்கு உதவும் வகையில் இக்கிராமங்களில் வாழும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி, அம்மாணவர்கள் தமது கல்வியைத் தொடர வழிசெய்திருக்கின்றோம்.
இக்கிராமங்களில் அமைந்துள்ள முன்பள்ளிகளின் வளர்ச்சிக்கான பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளோம். குறிப்பாக அம்பாறையில் பாணமை, மட்டக்களப்பில் குடும்பிமலை, முறுத்தானை, கிளிநொச்சியில் மலையாளபுரம், பிரமந்தனாறு ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள பாலர் பாடசாலைகளின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளோம். இம் முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள், கற்றல் உபகரணங்கள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் என்பவற்றையும் வழங்கியிருந்தோம்.
கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி நிலையினை அடுத்து பாதிக்கப்பட் மக்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கியிருந்தோம். அதே வேளை பொருளாதார வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கினோம். சிறிய நிலப்பிரப்பில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு விதைகள், பயிர்ச் செய்கைக்கு தேவையான உபகரணங்கள் என்பவற்றை வழங்கியிருந்தோம்.
அண்மைக்காலங்களில் அம்பாறை செங்காமம் கிராமத்திலும் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலும் சேனைச் செய்கையில் ஈடுபடும் வறிய குடும்பங்களிற்கு கச்சான் விதைகளையும் மரக்கறி விதைகளையும் வழங்கி, அவர்களை விவசாயச் செய்கையில் ஈடுபடச் செய்திருக்கின்றோம்.
எமது கடந்த காலச் செயற்பாடுகளின் அனுபவங்களையும் வட கிழக்கின் புதிய சமூக பொருளாதார நிலையினையும் பகுத்தாராய்ந்து வருகின்றோம். இது தொடர்பான கலந்துரையாடல்கள் களத்திலும் புலத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புதிய ஆண்டில், மக்களின் சமூக பொருளாதா வளர்ச்சிக்கு உதவக் கூடிய நிலையான செயற்றிட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்த மீட்சி அமைப்பு தீர்மானித்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
மீட்சி அமைப்பின் காத்திரமான கடந்த காலச் செயற்பாடுகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் போதுமான நிதி உதவிகளையும் வழங்கிய தன்னார்வத் தொண்டர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மீட்சி அமைப்பின் பணிகளை சிறப்புற செயற்படுத்திய களப்பணியாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது பணிகளுடன் ஒன்றிணைந்து நின்று செயற்பட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கும் பிரதேச செயலக, கல்வித் திணைக்கள, விவசாயத் திணைக்கள அலுவலகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சகலரது ஒத்துழைப்புடன் இலக்கு நோக்கி செயற்படுவோம்.
நன்றி
நிர்வாகம்,
மீட்சி அமைப்;பு – இலண்டன் – இலங்கை