மலையக மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள்
இந்தியாவிலிருந்து இலங்கையில் குடியமர்த்தப்பட்டதிலிருந்து இன்றுவரை மலையக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதோடு தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படாத மக்களாக வாழ்ந்து வருகின்றனர். 2017ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தியின் 150ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. 1995-2015ஆம் ஆண்டு வரை தேயிலையின் உற்பத்தி இருமடங்காக அதிகரித்த அதேவேளை 2015ஆம் ஆண்டு 43 சதவீதமாக காணப்பட்ட உற்பத்தி 2016ஆம் ஆண்டு 34 சதவீதமாக குறைவடைந்ததாக பிரதமர் கூறினார். தேயிலை உற்பத்தியின் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை கொள்ளும் அரசாங்கம் இம்மக்களின் வாழ்க்கை தர உயர்வு பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாது இயந்திரத்திற்கு ஒப்பாகவே நோக்குகின்றது.
1948ஆம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இந்திய வம்சாவளித்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது பாரிய மனித உரிமை மீறலாகும். இது மாத்திரமின்றி காணி அபிவிருத்தி சட்டம், கிராம சபைகள் மசோதா சட்டம், மீன்பிடிச்சட்டம், கிராமசபை மசோதா அனுமதிப் பத்திர சட்டம், தனி சிங்கள மசோதா போன்ற பல சட்டங்களால் மலையக மக்கள் பல உரிமை மீறல்களுக்கு உள்ளாகியதுடன் தொடர்ந்தும் அரசியல் ஏமாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
குடியிருப்பு சார் எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும்
மலையகத்தில் காணியுரிமையை வென்றெடுப்பதும் லயன் குடியிருப்புக்களை முற்றாக ஒழிப்பது என்பதும் இன்னும் எட்டப்படாத இலக்காகவே உள்ளது. இருப்பினும் பெருந்தோட்ட மக்களின் காணிகளை பெரும்பான்மை சமூகத்திற்கு பகிர்ந்து கொடுப்பதை தற்கால நல்லாட்சி அரசாங்கமும் முன்னெடுத்து வருகின்றது. கண்டி, மாத்தளை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் சிங்கள கிராமங்களில் வாழுகின்றவர்களுக்கு தோட்ட காணிகளை 20 பேச்சர்ஸ் என்ற அடிப்படையில் வழங்கி வரும் அதேவேளை தோட்ட மக்களுக்கு 7 பேச்சர்ஸ் காணி என்று அரசியல் பங்குதாரர்களான மலையகத் தலைவர்கள் பேரம் பேசி முடிவெடுத்திருப்பது எவ்வளவு பொருத்தமானதென தெரியவில்லை. காணியுரிமை பற்றி பேசப்பட்டாலும் இனத்துவேசம் அதனை வழங்குவதில் தடையாக இருந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
காணி சீர்திருத்தம் தொடர்பான சட்டங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதில் மலையக மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கபட்டுவதுடன் காணியுரிமையை இரு சகாப்த காலமாக அனுபவிக்க முடியாத அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். இக்காணியுரிமையினை பெற்றுக்கொடுப்பதில் அரசியல் தலைமைகள் நுனிப்புல் மேய்வதைப் போல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் நாடற்றவர்களாக இருந்த இம்மக்கள் காணியற்றவர்களாக இன்றும் இருந்துவருவதால் இரண்டாந்தர பிரஜைகளாகவே நோக்க வேண்டியவர்களாக கருதப்படுகின்றனர்.
இலங்கையில் லயன் வீடுகளில் (நவீன குடிசைகள்) வாழக்கூடிய ஒரேயொரு சமூகவமைப்பினராக மலையக மக்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். இவ்வாறான லயன் அறைகளில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வசித்து வருவதோடு அடிப்படை வசதிகளற்ற, சுகாதாரப் பிரச்சினைகளுடன் கூடிய வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர். மலையகத்தில் லயன் வீடுகளைப் புனரமைத்தல், மாடிலயன் குடியிருப்பு, தனிவீட்டுத்திட்டங்கள் என்பன மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவை ஏனைய வீடமைப்பு திட்டங்களுடன் ஒப்பிட முடியாத நிலையிலேயே காணப்படுகின்றன. வீட்டின் தரம், வீட்டு நிர்மாணத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், வீட்டின் அறைகளின் எண்ணிக்கை என்பனவற்றை ஏனைய சமூகவமைப்பினரோடு ஒப்பிட்டு பார்த்தால் மலையக மக்கள் பின்வரிசையிலே இருப்பர்.
தனது சொந்தப் பணத்தினைக் கொண்டு வீட்டினை கட்டினாலும் அவ்வீடுகள் அரசுக்கு அல்லது தோட்டங்களுக்கு சொந்தமான வீடுகளாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நகரப்பகுதிகளில் 82.9 சதவீதத்தினரும், கிராமத்தில் 94.3 சதவீதத்தினர் சொந்த வீட்டினை கொண்டு காணப்படும் அதேவேளை பெருந்தோட்டத்தில் 21.5 சதவீதத்தினர் மாத்திரமே சொந்த வீட்டிற்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். தற்கால அரசாங்கம் மலையக மக்களின் காணியுரிமையினை பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது. எனினும் புதிய வீடமைப்பு முயற்சி எவ்வளவு காலத்தில் சாத்தியமாகும், அவ்வாறு அமைக்கப்படும் வீடுகள் எவ்விடங்களில் அமைக்கப்படும், லயன் வீடுகளில் வாழும் சிலர் சொந்தப் பணத்தினை வைத்து வீடுகளை திருத்தியுள்ளனர் எனவே புதிய வீடமைப்பு திட்டமானது எல்லோருக்கும் சமமான அளவுகளில் வழங்கப்படும் என்றால் வீடுகளை திருத்தியுள்ளவர்களுக்கு அரசாங்கம் பணத்தினை வழங்குமா போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
மலையத்தில் மண்சரிவு அபாயம் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக பேசப்படுகின்றது. கடந்த இரு வருடங்களில் பல்வேறு உயிர்கள் மண்சரிவினால் காவுகொள்ளப்பட்டன. இதிலும் குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் மழைக் காலத்தில் மாத்திரமே இப்பேச்சுக்கள் முக்கியத்துவம் பெறும். பின்னர் இது தொடர்பான பேச்சுக்கள் அணைந்துவிடும். அத்துடன் இயற்கை அனர்த்தம் ஏற்படும் இடங்களை அடையாளப்படுத்தினாலும் அவ்வாறான பிரதேசங்களில் வாழும் மக்களின் எதிர்காலம், அவர்களுக்கான வீடமைப்பு திட்டம் தொடர்பில் எவரும் சிந்திப்பதில்லை. மழைக்காலங்களில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுவதுடன் பின்னர் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இயற்கை அனர்த்தத்தில் பெருமளவான உயிர்கள் காவுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அரச அதிகாரிகள் ‘மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் நாங்கள் ஏற்கனவே வெளியேறுமாறு கூறியும் அவர்கள் வெளியேறவில்லை’ என்கின்றனர். வெளியேறச் சொன்ன இந்த அதிகாரிகள், வெளியேறி எங்கு செல்ல வேண்டும், மாற்று குடியிருப்புக்கள் என்ன, எங்கு வாழ்வது போன்ற விடயங்களை தெளிவு படுத்தாது வெறுமனே அறிக்கை விடுவது அரச அதிகாரிகளின் மூடத்தனத்தையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான சுழற்சி போக்கே இது வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதே தவிர பாதுகாப்பான இடங்களில் இவர்களை குடியமர்த்த முன்வருவதில்லை. இருப்பினும் அண்மைக்காலத்தில் கட்டப்படும் தனிவீட்டு செயற்றிட்டங்கள் தேசிய கட்டட ஆய்வு மையத்தின் மூலம் ஆராயப்பட்டு இயற்கை அனர்த்தத்திற்கு உட்படாத இடங்களிலே கட்டப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வேதனம் தொடர்பான பிரச்சினைகளும் ஏமாற்றங்களும்
1992ஆம் ஆண்டு அரசின் வசமிருந்த தேயிலைத் தோட்டங்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் 1998ஆம் ஆண்டு தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வேலைத்தள நிலை மீளாய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 2000ஆம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளுக்கான அடிப்படைச் சம்பளம் 101 ரூபாவாகவும் இறப்பர் தொழிலாளர்களுக்கு 98ரூபாவாகவும் அதிகரிக்க இணக்கம் காணப்பட்டது, அத்தோடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு விற்பனை விலை கொடுப்பனவாக 6 ரூபா வழங்குவதோடு ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியத்தையும் வழங்க இணக்கம் காணப்பட்டது. தொழிற்சங்கங்கள் 130 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக கோரினாலும் முதலாளிமார் சம்பேளனம் அதனை நிராகரித்து 101 ரூபாய்க்கு இணக்கம் தெரிவித்தது. 2002, 2003களிலும் கூட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதிரணி தொழிற்சங்கங்களும் சிவில் சமூக அமைப்புக்களும் அதனை எதிர்த்தன.
2007ஆம் ஆண்டு 500 ரூபா அடிப்படைச்சம்பளமாக வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் 285 ரூபாவை வழங்க முன்வந்தது. 2009ஆம் ஆண்டு ஏப்ரலில் 380 ரூபாயாகவும் 2011ஆம் ஆண்டு கூட்டுஒப்பந்தத்தில் 450 ரூபாயாகவும் அடிப்;படைச்சம்பளம் அதிகரிக்கபட்டது. கடந்த ஆண்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1000 ரூபாயை அடிப்படைச் சம்பளமாக வழங்க கோரிக்கையை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் இக்கோரிக்கையினை ஏற்க முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்தது.
இதனை அடிப்படையாக வைத்துப்பார்க்கும் போது இந்நாட்டின் உழைக்கும் வர்க்கமாக காணப்படும் மலையகத்தவர்களின் உடல் உழைப்பு சுரண்டப்படுவதோடு அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது. முதலாளிமார் சம்மேளத்துடன் நியாயமான அடிப்படையில் போராடி சம்பளத்தைப் பெற்றுத்தருமளவுக்கு தொழிற்சங்கங்களுக்கு திறன் இல்லாமிருக்கிறது. தொழிற்சங்கங்கள் சுயலாபத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதோடு தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை கொள்ளாத போக்கு காணப்படுகின்றது.
மலையக மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் எண்ணிக்கையானது குறைவாக காணப்படுகின்றது. அதாவது ஏழரை இலட்சம் மக்கள் வாழும் இம்மாகாணத்தில் 5 பிரதேச செயலகங்களே (நுவரெலியா, ஹங்குராங்கெத்த, வலப்பனை, கொத்மலை, அம்பகமுவ) காணப்படுகின்றன. இதனால் மக்கள் தங்களின் பொது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். 25000-30000 மக்கள் வாழும் பகுதியில் பிரதேச செயலகம் என்று சட்டத்தில் கூறப்பட்டாலும் நுவரெலியா மாவட்டத்தில் 132000 பேருக்கு ஒரு பிரதேச செயலகம் காணப்படுவதுடன் 2500-3000 குடும்பங்களுக்கு ஒரு கிராம செயலாளர் பிரிவு காணப்படுவது பாரபட்சமான செயலாக காணப்படுகின்றது. அத்தோடு அரசியல் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்துகின்ற தாழ்மட்ட அமைப்பான பிரதேசசபைளும் மலையக பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒழுங்குப்படுத்தப்படாமல் இருப்பதும் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தடையாக உள்ளது. அத்தோடு அரசாங்க திணைக்களங்களில் சேவைகளை பெற்றக்கொள்ளும் போது சிங்களமொழி மூலமான ஆவணங்களே அதிகம் காணப்படுவதால் மலையக மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதோடு துரிதமாக சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் இன்னலடைகின்றனர்.
இவை மாத்திரமின்றி கல்வி, சுகாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிளுமே மலையக மக்கள் ஏனைய சமூகத்தவர்களை விட பின்னிலையிலே நிற்கின்றனர். சமூகத்தை சீரழிகக்கூடிய போதைப்பொருள் பாவனை இன்று மலையகத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது, இத்தகைய போதைப்பொருள் பாவனைக்கு அரசியல்வாதிகளின் செல்வாக்கு மறைமுகமாக தாக்கம் செலுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
காலனித்துவ ஆட்சி காலத்திலிருந்து இன்று வரை மலையக மக்களின் எதிர்பார்ப்புக்களானது இன்னும் தேக்க நிலையிலேயே காணப்படுகின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய மாற்றங்கள் தான் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் அதேவேளை அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே காணப்படுகின்றன. தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக போராடும் தலைவர்கள் பின்னர் மக்களின் வாழ்வைப் பற்றி சிந்திக்காத நிலை காணப்படுகின்றது. மலையக மக்களின் அரசியல் கலாசாரத்தின் தன்மையானது மங்கிய நிலையிலே காணப்படுகின்றது. அத்தோடு தொழிற்சங்கவாதங்களுக்குள் கட்டுண்டு இருக்கும் இவர்கள் தலைவர்களின் பேச்சுக்களுக்கே செவிசாய்க்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். முதலாளித்துவத்தின் பிடிக்குள் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை மாற்றத்தினை பற்றி சிந்திக்கும் தலைவர்கள் குறைவாகவே காணப்படுவதோடு சமூக விடியலைப் பற்றி சிந்திப்பதில் அக்கறைக் கொள்ளாது அசமந்த போக்கிலே செல்கின்றனர்.
இந்திய வம்சாவளியினர் இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமின்றி கண்டி, மாத்தளை, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, குருநாகல், காலி, கம்பஹா போன்ற மாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நுவரெலிய மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விட வித்தியாசமானது. இவர்கள் பெரும்பான்மை இனமக்களுடன் செறிந்து வாழ்கின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அரசியல் பிரதிநிதித்துவமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்திய வம்சாவளியினர் சார்பாக அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்பவர்கள் பெரும்பாலும் நுவரெலிய மாவட்டத்தை சார்ந்தவர்களாகவே திகழ்கின்றனர். இவர்கள் தமது எதிர்கால அரசியல் நலன் கருதி நிதி ஒதுக்கீடுகளையும் சலுகைகளையும் ஓரளவுக்கேனும் நுவரெலிய மாவட்டத்திற்கு வழங்கி வருகின்றனர்.
இந்திய அரசாங்கத்தினூடாக மலையகத்தவர்களுக்கென வீடமைப்பு திட்டமொன்றினை அறிமுகப்படுத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வேலைத்திட்டங்கள் ஏனைய மாவட்டங்களை சென்றடைவதாக தெரியவில்லை. கண்டி, மாத்தளை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் பெரும்பாலான பெருந்தோட்டங்கள் முகாமைத்துவ சீர்கேட்டின் காரணமாக மூடப்பட்டுவிட்டன. அம்மக்களுக்கு தோட்ட நிர்வாகத்தில் கிடைக்கக் கூடிய அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப்பெறுவதில்லை. ஆனால் தேவையற்ற விடயங்களில் ஆளும் தரப்பினர் தலையிடுகின்றனர், மக்களின் சுதந்திரமான செயற்பாடுகளை தடுக்கின்றனர். இலங்கையில் வடகிழக்கு பிரதேசங்களில் வாழும் தமிழர்களின் நலன்கருதி கல்வி, ஆன்மீகம், சுகாதாரம் போன்ற விடயங்களுக்காக புலம்பெயர் தமிழர்கள் பெருமளவான உதவிகளை செய்து வருகின்றனர். அத்தகைய வாய்ப்பு இந்திய வம்சாவளியினருக்கு இல்லை. மேற்கத்தேய நாடுகளில் வதியும் இந்திய வம்சாவளியினரை சார்ந்த சிலர் தங்கள் உதவிகளை அரசியல் பிரதிநிதிகளினூடான வழங்கிவருவதாக அறிகின்றோம் ஆனால் அந்நிதி எந்தளவு தூரம் உண்மையில் மக்களை சென்றடைகின்றது என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
மலையகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் மலையகத்தைச் சார்ந்த அனைத்து மட்ட தரப்பினரும் முன்வர வேண்டும். மலையக புத்திஜீவிகள், சிவில் சமூக அமைப்புக்கள், இளைஞர் படையணிகள், மேற்கத்தேய நாடுகளில் வதியும் இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட சகல தரப்பினரும் முன்வரவேண்டும். அரசாங்கமானது வேற்றுக்கண்ணாடியுடன் மலையக மக்களை நோக்காது சகபிரஜைகளாக எண்ண வேண்டும், மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான அறிவினை மக்களுக்கு புகுத்த சிவில் சமூகம் உழைக்க வேண்டும். ஆனாலும் பெரும்பான்மை சமூகமையவாத அரசாங்கத்தின் செயற்பாட்டாலும் மலையக தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் அசமந்த போக்கினாலும் இதன் நடைமுறைத்தன்மை எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பதை தெளிவாக கூறிவிடமுடியாது.