கருப்பையா பிரபாகரன் BA, MA (Pol), Med, PGDE
மலையக தொழிற்சங்க வரலாறு
மலையக அரசியலோடும் மக்களின் வாழ்வியலோடும் பின்னிப்பிணைந்த ஒரு விடயமாக தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன. இத்தகைய தொழிற்சங்க வரலாற்றில் கோ.நடேசைய்யரின் பணி மிக முக்கியமானது. மலையகத்தில் தொழிலாளர்களுக்கென அமைப்பு ரீதியாக தொழிற்சங்கத்தைத் தொடங்கியவர் நடேசையர் தான்.
நடேசைய்யர் இந்தியாவின் தஞ்சாவூரில் அரசாங்க உத்தியோகம் செய்ததுடன் பத்திரிகையாசிரியராகவும் கடமையாற்றியவர். தென்னிந்திய ஆண்டு விழாவில் கலந்து கொள்வதன் நிமித்தம் 1919ஆம் ஆண்டு கொழும்புக்கு வருகை தந்த நடேசைய்யர் பெருந்தோட்டத்தில் இந்தியத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைப் பார்த்து கவலையடைந்து இம்மக்களின் விடிவிற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் 1920ஆம் ஆண்டு தன் மனைவி மீனாட்சியம்மையாருடன் இலங்கைக்கு வந்தார்.
ஆரம்பத்தில் இடது சாரி சிந்தனையாளராக ஏ.ஈ. குணசிங்கவுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் கழகத்தோடு மலையக மக்களுக்காக குரல் கொடுத்து வந்தார். பின்னர் ஏ.ஈ குணசிங்காவின் இந்தியத்துவேசக்கொள்கை காரணமாக 1928ஆம் ஆண்டு அதிலிருந்து வெளியேறினார். 1931ஆம் ஆண்டு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை ஆரம்பித்தார். இதுவே மலையக மக்களுக்காக உதயமான முதலாவது தொழிற்சங்கமாகும். இவ்வாண்டில் ஹட்டன் நகரில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
1921ஆம் ஆண்டு பிஜித் தீவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இடதுசாரி சிந்தனையாளர் மணிவால் என்பவரை நடேசைய்யர் சந்தித்தார். இவர் நடேசையருக்கு பக்கபலமாக இருந்து தொழிலாளர் நலனில் அக்கறைக்காட்டியதை கண்டு அஞ்சிய காலனித்துவ ஆட்சியாளர்கள் அவரை மீண்டும் நாடுகடத்தினர்.
1935ஆம் ஆண்டின் பின்னர் இடதுசாரிகளான லங்கா சமசமாஜக்கட்சியினர் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காக செயற்பட்டனர். 1936 இல் நடந்த அராசாங்க சபைத் தேர்தலில் நடேசைய்யர் வெற்றி பெற்றார். பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நடேசைய்யர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடினார். அதன் பின்னர் இந்தியத் தேசியத் தலைவர்களின் செல்வாக்கினால் இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதில் தோட்டத்தில் பணியாற்றிய பெரிய கங்காணிமார்கள், நிர்வாகிகள் ஆகியோரே அதிகளவு பங்களிப்பு செலுத்தினார்.
1938ஆம் ஆண்டு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் பொதுத் தலைவராக என்.எம். பெரேராவும் பொது செயலாளராக பி.எம். வேலுசாமியும் நியமிக்கப்பட்டிருந்தனர். 1940ஆம் ஆண்டு முல்லோயா போராட்டத்தில் கோவிந்தன் கொலை செய்யப்பட்டார். இப்போராட்டத்தில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடியதால் ஒரு நாள் சம்பளம் 16 சதமாக உயர்த்தப்பட்டது. 1940ஆம் ஆண்டு இடதுசாரி கட்சி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கமும் செயலிழந்தது. பின்னர் லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் என்ற பெயரில் மீண்டும் தொடங்கி தொழிலாளர் நலனுக்காக செயற்பட்டது.
1939ஆம் ஆண்டு ஜீலை 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்தியன் காங்கிரஸ் அமைப்பில் ஏ.சு.ஆ.ஏ.யு லெட்சுமண் செட்டியாரும் இணைச்செயலாளராக ஏ. அஸீஸும், எச்.எம் தேசாய் அவர்களும் நியமிக்கப்பட்டனர். 1940ஆம் ஆண்டு பெரியசுந்தரம் அவர்களின் தலைமையில் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் ஆரம்பமானது. இதுவே பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம் பெற்றது. 1950 ஆண்டுகளில் தொண்டமான் அவர்களின் செல்வாக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அதிக தாக்கம் செலுத்தியது. 1955ஆம் ஆண்டு இதன் தலைமைகளுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டால் அது பிளவுண்டது. தொண்டமானின் பணபலம் இ.தொ.கா விற்குள் செல்வாக்கு செலுத்துவதாக காரணம் காட்டி ஏ. அஸிஸ் அவர்கள் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை ஆரம்பித்தார்.
1956ஆம் ஆண்டு அக்கரபத்தனை டயகமவில் நடாத்தப்பட்ட வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஏ.அஸிஸ், சி.வி. வேலுப்பிள்ளை, ரொசாரிசோ பெர்னாண்டோ, எஸ்.நடேசன் ஆகியோர் பங்குபற்றினர். வேலை நிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதால் எபிராம் சிங்கோ என்ற தொழிலாளி கொல்லப்பட்டார். அதன் பின்னர் தொழிலாளர் போராட்டத்தின் வேகம் உச்சம் அடைந்தது. சிங்கோவின் இறுதி ஊர்வலத்தில் முப்பதாயிரத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்டனர். 1959ஆம் ஆண்டு ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் பிளவுபட்டது, இதன் பின்னர் 1965ஆம் ஆண்டு வெள்ளயன் என்பவர் தொழிலாளர் தேசிய சங்கத்தை உருவாக்கியதோடு எஸ். பெருமாள் என்ற தொழிலாளியை இதன் தலைவராக நியமித்தமை விசேட அம்சமாகும். 1966ஆம் ஆண்டில் சி.வி.வேலுப்பிள்ளையும் இதில் இணைந்து செயற்பட்டார்.
இதன் பின்னர் செங்கொடி சங்கம், பொது சேவையாளர் சங்கம், இலங்கை விவசாய தோட்டத் தொழிலாளர்கள் காங்கிரஸ், லங்கா சுதந்திர சேவையாளர் சங்கம், இலங்கை விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் என பல தொழிற்சங்கள் தோற்றம் பெற்றன. இவ்வாறு பல தொழிற்சங்கங்கள் தோற்றம் பெற்றாலும் அடிமட்ட மக்களின் செல்வாக்கு, பெண்களின் வகிபங்கு என்பன மிகக்குறைவாகவே இருந்தது. இன்று வரையில் மலையக தொழிற்சங்கங்கள் பெண்களின் பங்குபற்றுதலை பற்றி அதிகளவில் கவனத்தில் கொள்வதில்லை.
அமரர் நடேசைய்யர், அமரர் சௌ.தொண்டமான் போன்ற தலைவர்கள் தொழிற்சங்கங்களை நடத்திய போது உண்மையிலேயே தொழிலாளர்ளின் நலன் கருதி தங்களது ஆழ்ந்த தியாகங்களுக்கு மத்தியில் பல போராட்டங்களை நடத்தி தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்தனர். சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவிற்கு பின்னர் தொழிற்சங்கங்கள் ‘சந்தா சங்கங்கங்களாகவே’ இயங்கி வருகின்றன. தொண்டமானுக்குப் பிறகு சந்தா சங்கங்களின் ஊடாக எந்தவொரு வினைத்திறனான நடவடிக்கையும் இடம்பெற்றதாக தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேரம் பேசி தமது சட்டப்பைகளை நிரப்பும் பணியை செய்துக் கொண்டு தொழிலாளர்களை காட்டிக் கொடுகின்றார்கள். 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கை ஒரு தசாப்தத்திற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்றும் கூட அது நிறைவேறவில்லை. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரியளவு பங்களிப்பு செலுத்தும் தோட்ட கூலிகளின் நாட்சம்பளம் 5 அமெரிக்க டொலர்களுக்கு குறைவாக இருப்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. சந்தா சங்கங்கள், சம்பள உயர்வையோ தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையோ உயர்த்தக் கூடிய எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற் கொள்ளாது இருப்பது வருந்தக் கூடிய விடயம்.
நுணுகி ஆராயும் போது உலக வரலாற்றிலும் சரி, இலங்கையிலும் சரி தொழிற்சங்கம் எனும் போது அதனைக் கொண்டு நடாத்தக் கூடிய பொறுப்பு, குறித்த தொழிற் துறையோடு சம்பந்தப்பட்டவர்களிடமே காணப்படுகின்றது. ஊதாரணத்திற்கு ஆசிரியர் சங்கம், தனியார் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், மருத்துவர் சங்கம், துறைமுக தொழிலாளர் சங்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சங்கங்கள் மாத்திரம் தொழிற்துறையில் சம்பந்தப்படாத உயர் வர்க்கத்தினர் தமது நலனிற்காக தொழிற்சங்கங்களை ஆரம்பித்து நடாத்துகின்றமை உசிதமானதில்லை. தொழிற்சங்கங்களின் ஊடாக உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமாயின் அத் தொழிற் துறையோடு நேரடியாக தொடர்புப்பட்ட தொழிலாளர்களின் கரங்களுக்கு தொழிற்சங்க தலைமைத்துவம் கைமாற வேண்டும்.
மலையக மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள்
இந்தியாவிலிருந்து இலங்கையில் குடியமர்த்தப்பட்டதிலிருந்து இன்றுவரை மலையக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதோடு தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படாத மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.
தொடரும்…