மட்டக்களப்பு – புன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் வருடாந்த சடங்கு உற்சவம், எதிர்வரும் வைகாசித் திங்கள் 27 ஆம் நாள் (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, ஆனித்திங்கள் 01 ஆம் நாள் (15.06.2018) வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
வாவியும் கடலும் சேர்ந்த மட்டக்களப்பு நகரின் வடக்கே, அமிர்தகழிக்கருகே அமைந்திருக்கிற புன்னச்சோலை, மட்டக்களப்பு வாவிக்கரையோரத்தை அண்டி- நெய்தல் நில அமைவிடத்தைக் கொண்ட அழகிய கிராமம்.
இங்கே அமைந்திருக்கிற ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் அழகுற அமைக்கப்பட்டிருப்பதுவும், கொடித்தம்பத்திற்குப் பதிலாக ‘கம்ப காமாட்சி’ அமைந்திருப்பதுவும், பல்வேறு பரிவாரத் தெய்வங்கள் ஒருங்கே அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருவதும் சிறப்பம்சமாகும். வருடாந்த உற்சவம் சடங்கு உற்சவமாக நடைபெறுவதே வழமையும் மரபுமாகும்.
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் வருடாந்த சடங்கு உற்சவத்தின் முதலாம் நாள் 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7.00 மணிக்கு, திருக்கதவு திறக்கும் வைபவத்துடன் அம்பாள் எழுந்தருளப் பண்ணலுடன் இவ்வருடத்திற்கான பூசைகள் ஆரம்பமாகும். உற்சவ காலங்களில் விசேட அபிஷேக அலங்காரப் பூசைகள் தினசரி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.
கல்யாணக்கால் வெட்டும் வைபம் நான்காம் நாள் 13.06.2018 புதன்கிழமை அன்று நடைபெறுவதுடன் வீதி வலம் வரும் நிகழ்வும் இடம்பெறும். 15.06.2018 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு தீமிதிப்பு வைபம் இடம் பெறும். தொடர்ந்து பலிகருமப் பூசைகள் நடைபெற்று அம்பாளின் வருடாந்த சடங்கு உற்சவம் இனிதே நிறைவுறும்.