மட்டக்களப்பின் வரலாற்றை விபரிக்கும் முதல் நூல் ‘மட்டக்களப்பு மான்மியம்’ ஆகும். இதன் மூலப்பிரதியாக இருந்த ஏட்டின் பெயர் ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ என்பர். மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கூத்திகன் எனும் அரசன் மட்டக்களப்பு கிராமத்தையும் மட்டக்களப்பு இராசதானியையும் உருவாக்கினான் எனக்கூறுகிறது. இதுபற்றி விலாவாரியாகவே விபரித்துள்ளது மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்.
கூத்திகன்; விஜயனின் பின் இலங்கையை ஆண்ட சிறிகுலசேனனுடைய புத்திரன், சிறிகுலசேனனால் ‘விசயதூபமிருந்து தென் மேற்குத் தொடங்கி தென்கிழக்கு வரையும்’ உள்ள பிரதேசத்திற்குப் பட்டங்கட்டப்பட்டவன், தனது நகரத்தை மாட்சிமைப்படுத்தக் கருதி முன்னகரங்களுக்கு எல்லாம் திக்கதிகாரிகள் வகுத்து ஆட்சி புரிந்தவன் என்கிறது மட்டக்களப்பு பூர்வ சரித்திரம். அவனது நகரத்தின் பெயர் பற்றிய தகவல்கள் ஏதும் கூறப்படவில்லை.
கூத்திகன்; சிறிகுலசேனனுடைய புத்திரன், சிறிகுலசேனன் காலிங்க நகரத்தை அரசியற்றிவரும் சிறிகேசவ சந்திரசேனனுடைய இரண்டாம் புத்திரன், கலிங்கரிற் கலந்தவர், வங்ககுலம், வங்கர் தேசத்து மாமணி என்பவளை மணம் புரிந்தவன் என்கிற தகவல்களையும் தருகிறது மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்.
கூத்திகன் நகர்வலம் வருகையில் சமுத்திரக்கரையருகில் காளிசேனனுடைய சிங்கார மண்டபம், புட்பத்தோப்பான சிங்காரத் தோப்பு என்பவற்றைக் காண்கிறான். அங்குள்ள இடங்களை கிராமம் ஆக்கக் கருதி சிங்காரத் தோப்பைச் செப்பனிட்டு காளிநாட்டிலுள்ள குடிகள் 90 குடும்பங்களை வரவழைத்து அதற்கருகாக அவர்களைக் குடியேற்றினான்.
மேலும், காலிங்க தேசமிருந்த தனது சந்ததிகளில் 96 குடும்பங்களையும், காளிகட்டத்திலுள்ள படையாட்சித் தலைவர்களோடு பற்பல செந்நெல் தானியம் செய்யும் 60 குடும்பங்கைளயும் வரவழைத்து, கழனிகள் திருத்தக் கருதி, காளிகாட்டத்தால் வந்தவர்களுக்கு படையாட்சித் தiலைவர்களைத் தலைவர்களாக்கி, அவர்களைக் கொண்டு சிங்காரத்தோப்புக்கு மேற்கிலிருந்த மேட்டுக்களப்பை, மண், கல், மலையாயிருந்த புட்டியை வெட்டி, மட்டமாய் மூடி, அந்த இடத்தில் மாளிகை உண்டாக்கினான் எனவும் படைவீரரை அக்களப்பு முனையில் சாலைகளமைத்து அவர்களை இருத்தி, அந்த இடத்திற்கு வீரர்முனை என நாமஞ்சூட்டடினான் எனவும் தனது மாளிகை அமைந்த இடத்திற்கு மட்டக்களப்பு எனும் நாமஞ்சூட்டி, பின் களப்பை மூட மண்கல் எடுத்த இடத்திற்கு மண்கல்புட்டி – மல்கம்பிட்டி என நாமஞ்சூட்டி அந்த இடத்தை இராசதானமாக்கினான் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தனது மூத்த புத்திரன் சேனன் இளவரசு காலம் வர, மட்டக்களப்பை இராசதானமாக்கி, ‘இலங்கை தென்திசையாயுள்ள மூன்றிலொரு பங்கைப் பட்டங்கட்டினான் எனவும் கூறப்படுட்டுள்ளது.
இவற்றிலிருந்து மட்டக்களப்பு எனும் கிராமத்தினை உருவாக்கியது கூத்திகனும் அவனால் காளிகட்டத்திலிருந்கு குடியேற்றப்பட்டவர்களுமே எனவும் கூத்திகனே மட்டக்களப்பு இராதானத்தை உருவாக்கி தன் மகன் சேனனுக்குப் பட்டங்கட்டினான் எனவும் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கூறுவதை அறியமுடிகிறது.
இத்தகவல்கள் இப்பிரதேசத்தில் குடியேறியவர்களாலேயே ‘மட்டக்களப்பு’ உருவாக்கப்பட்டது என்ற கருத்தை தருவதாகவே அமைகிறது. ஆனால் தனது குடிகளைக் கொண்டல்லாது, காளிகாட்டத்திலிருந்து வந்த படையாட்சித் தலைவர்களையும் பற்பல செந்நெல் தானியம் செய்யும் குடும்பங்களையும் கொண்டே கூத்திகன் மட்டக்களப்பை உருவாக்கினாhன் எனக்கூறப்பட்டுள்ளது!
அதேவேளை, பற்பல செந்நெல் தானியம் செய்யும் 60 குடும்பங்கள் பற்றிய தகவல்மூலம் இப்பிரதேசத்தில் விவசாயச் செய்கையும் இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற கருத்தையும் இந்நூல் தருகின்றது. இத்தகவல்கள், இலங்கையின் ஆரம்பகாலக் குடியிருப்புக்கள் – இராசதானி – விவாசயச் செய்கை என்பவை விஜயன் வழியிலமைந்த குடியேற்ற வாசிகளாலேயே உருவாக்கப்பட்டது என மகாவம்சம் கூறும் தகவல்களுடன் ஒத்திருக்கிறது.
கூத்திகனுக்குப் பட்டம் கட்டிய காலம் கலிபிறந்து 2806 வருடம் என்கிறது மட்டக்களப்பு பூர்வ சரித்திரம். இவ்வாண்டு கி.மு. 296 ஆண்டுக்குச் சமம் என்கிறார் க.தங்கேஸ்வரி. வெல்லவூக்கோபால் கூத்திகனுடைய ஆட்சி கி.மு. 236 – 214 வரை மட்டக்களப்பில் நிலவியது எனக்குறிப்பிடுகிறார். இவற்றிலிருந்து 2200 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பு எனும் கிரமமும் அதன் பின்னர் மட்டக்களப்பு இராசதானமும் உருவாக்கப்பட்டது என மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் குறிப்பிடுகிறது எனக்கருதலாம்.
மட்டக்களப்பு இராசதானம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே மண்கல்புட்டி இராசதானமாக்கப்பட்டது என்ற தகவலும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. இங்கு பண்டைக்காலத்தில் உருவாக்கப்பட்ட இராசதானம் என்பது பிற்கால இரசாதானிகளை ஒத்ததொன்றல்ல என்பதனையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இவ் இராசதானிகள் மைய நிலையங்களாக இருந்திருக்கலாம்.
மகாவம்சம் விஜயனின் பின் அவன் சகோதரன் பண்டுவாசுதேவ நாட்டை ஆண்டான் எனக்கூறுகிறது. ஆனால் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் விஜயனின் பின் சிறிகுலசேனன் இலங்கையை ஆண்டான் என்கிறது. அவனது புத்திரனே கூத்திகன். எனினும் இலங்கை (பாலி) வரலாற்று நூல்களில் காணப்படுகின்ற முரண்பாடுகள், தேவநம்பியதிஸ்ஸனுக்கு முற்பட்ட காலம் குறித்த தெளிவற்ற தகவல்கள் என்பனவற்றைக் கருத்தில் கொண்டால் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கூறும் இத்தகவல்களைப் பிழையெனக் கூறுவதற்கும் முடியாதுள்ளது. இக்காலத்திற்கு முன்னர் அல்லது இக்காலத்தே மட்டக்களப்பு பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கும் தொல்பொருள் சான்றுகள் உள்ளன.
இலங்கை வரலாற்றில் சேனன், குத்திகன் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. குதிரைகளை இங்கு கொண்டு வந்து வணிகம் செய்த ஒருவரது பிள்ளைகளான சேனன் (SENA) , குட்டகன் (GUTTAKA) ஆகிய இரண்டு தமிழர்கள் சூரதிசனை (SURATISSA கி.மு. 247 – 237) வெற்றி கொண்டார்கள். பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு, இந்த இருவரும் சேர்ந்து இருபத்திரண்டு வருடகாலம் நீதி தவறாமல் ஆட்சி செய்தனர் என்கிறது மகாவம்சம். மகாவம்ச சேனன் – குட்டகனுக்கும் பூர்வ சரித்திர கூத்திகன் – சேனனுக்கும் இடையே சிறியளவு காலவேறுபாடுண்டு. ஆனால், மன்னர் வரிசையில் வேறுபாடுகள் உண்டு. மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் இலங்கை வரலாற்றை நன்கறிந்து எழுதப்பட்டதொன்று போலவே தெரிகிறது.
இதேவேளை, மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில் குறிப்பிடப்படும் மட்டக்களப்பு, இன்று மட்டக்களப்பு நகரம் என அறியப்படும் இடமல்ல என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைய மட்டக்களப்பிலிருந்து 30 மைல் தெற்கில் சம்மாந்துறைக்கருகே உள்ள இடத்தைத்தான் மட்டக்களப்பு என மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் குறிப்பிடுகிறது என த.சிவாரம் குறிப்பிட்டிருக்கிறார். சிவராம், 1767 ஆம் ஆண்டளவில் மட்டக்களப்புக்குப் பொறுப்பான அதிகாரி ஜோஹோனஸ் பிறாங்கின் குறிப்பிலிருந்து இதனை அறியமுடிந்தது எனவும் குறிப்பிடுகிறார். இன்றைய சம்மாந்துறை அல்லது மட்டக்களப்புத் தரவையே அவ்விடம் என்கிறார் வெல்லவூர்க்கோபால். இன்று மட்டக்களப்பு எனப்படுவது புளியந்தீவு என முன்னர் அழைக்கப்பட்ட இடமாகும். ஐரோப்பியர் ஆட்சிக் காலத்திலேயே மட்டக்களப்பு நகரம், மட்டக்களப்பு பிரதேசம் எனும் தற்போதைய பெயர் வழக்குகள் தோன்றின.
மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கூறும் இத்தகவல்கைள உறுதிப்படுத்தவதற்கான வேறு வரலாற்றாதாரங்கள் எவையும் அறியப்படவில்லை. அதேவேளை, இத்தகவல்களை மறுத்துரைப்பதற்கும் வழியில்லை!
மேலும், முன்னர் இப்பிரதேசம் எப்பெயரால் அழைக்கப்பட்டது என்பதனை கண்டறிவதும் அவசியமானதாகும். மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்திலேயே இவை பற்றிய சில குறிப்புக்கள் உண்டு. கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருள் சான்றுகளையும் பூர்விக குடிகளின் வரலாற்றையும் ஆராய்வதினூடாக இதற்கான விடைகளைக் காணலாம்.
எவ்வாறெனினும் இலக்கியங்களில் பதினைந்தாம் நூற்றாண்டில் மட்டக்களப்பு எனும் சொல் இடம் பெறத்தொடங்கிவிட்டதனைக் காணமுடிகிறது. ‘கண்ணகி வழக்குரை’ எனும் இலக்கியத்திலும் ‘கோவலனர் கதை’ எனும் இலக்கியத்திலும் மட்டக்களப்பு எனும் சொல் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் ‘வையாபாடல்’ எனும் வரலாற்று நூலிலும் மட்டக்களப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல்கள் 1500 ஆம் ஆண்டளவில் எழுந்தனவையாகும். F.X.C. நடராசா அவர்கள், ‘மட்டக்களப்பு என்ற சொற்பிரயோகம் பதினைந்தாம் நூற்றாண்டில் இலக்கியத்தில் ஏறியுண்டென்பது பெற்றாம்’ என்கிறார்.
உசாத்துணைகள்
நடராசா. F.X.C, மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும், 1980
வெல்லவூர்க் கோபால், ‘மட்டக்களப்புத் தேசம் வரலாறும் வழக்காறும்’, 2005.
தங்கேஸ்வரி.க., மட்டக்களப்பின் வரலாற்றுப் பின்னணி,
சங்கரன். எஸ். (தமிழாக்கம்) மகாவம்சம், 1962