கூத்திகன் எனும் அரசன்; மட்டக்களப்பு, வீரர்முனை, மண்கல்புட்டி அல்லது மல்கம்பிட்டி எனும் கிராமங்களை அமைத்தான் எனவும் மண்கல்புட்டி அல்லது மல்கம்பிட்டியை இராசதானமாக்கினான் எனவும் பின்னர் மட்டக்களப்பு இராசதானத்தை உருவாக்கி தனது மகன் சேனனுக்குப் பட்டங்கட்டினான் எனவும் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கூறுகிறது. இது இற்றைக்கு 2200 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது என்றும் கூறுகிறது.
எனினும் இதேநூலில் கூத்திகன் காலத்திற்கு முன்னரே இப்பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் 2200 வருடங்களிற்கு முன்னரே இப்பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதனை இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகளும் வெளிக்காட்டுகின்றன. எனவே முன்னர் இப்பிரதேசம் எப்பெயரால் அழைக்கப்பட்டது, இப்பிரதேசத்தில் தோன்றியிருந்த ஊர்கள் மற்றும் இராதானங்கள் எவை? என்ற கேள்வி தோன்றுகிறது.
மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தின் உரைப்பகுதியின் ஆரம்பத்திலேயே, மட்டக்களப்பிற்கு ‘மாட்சிமை தாங்கிப் பல நாமங்கள் சூட்டப்பட்டிருக்கும். அவையானவ :- மலையாளர் மலாயர் குகநாடென்றும், நாகர் இயக்கர் நாகர்முனை என்றும், வங்கர் மட்டக்களப்பென்றும், கலிங்கர் உன்னாசகிரியென்றும், சிங்கர் மண்முனை என்றும்…’ என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகவல்கள் மூலம் இப்பிரதேசத்திற்கு பல நாமங்கள் இருந்தது என்பதனையும் அதில் ஒரு நாமம் மட்டக்களப்பு என்பதனையும் அறியமுடிகிறது. எனினும் இந்த நாமவரிசையின் கால ஒழுங்கை கண்டறிய முடியாதுள்ளது.
எனினும் இத்தகவலின்படி, நாகர்முனை என்பதைத் தவிர்த்த ஏனைய பெயர்களான மலாயர் குகநாடு, மட்டக்களப்பு, உன்னாசகிரி, மண்முனை என்பவை அக்காலத்தில் மக்கள் குடியேறிய இடங்களின் பெயர்கள் போலவும், குடியேறியவர்கள் குடியேறிய இடங்களிற்கு இட்ட பெயர்கள் போலவுமே தெரிகிறது. வீரர்முனை, மண்கல்புட்டி அல்லது மல்கம்பிட்டியும் இவ்வாறே மக்கள் குடியேறிய இடங்களே.
ஆனால், நாகர் இயக்கர் இப்பிரதேசத்திற்கு நாகர்முனை என நாமமிட்டிருந்தார்கள் என்ற தகவல் முக்கியமானதாக அமைகிறது. அவர்களே இலங்கையினதும் இப்பிரதேசத்தினதும் பூர்வ குடிகள். நாகர்முனையும் பண்டைய பெயரொன்றே. இந்நூலிலும் இப்பிரதேசத்தில் வாழ்ந்த இயக்கர், நாகர் பூர்வ குடிகள் எனக்கூறப்பட்டுள்ளது. ‘இயக்கர் எனும் திமிலர்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனினும் திமிலர் தனியானதொரு சமூகப்பிரிவினர் என்ற கருத்தே நிலவுகிறது.
இதனைவிட, கூத்திகன் புதல்வன் சேனன் வம்சம் அருகிப்போக, நாகர், இயக்கர் என்னும் இரு குலத்தவர்கள் மேலெழும்பி, முக்குலத்தவரையும் அடக்கி, விண்டு அணையை இராசதானமாக்கி முப்பது வருஷ காலங்களாக கொடுங்கோல் செலுத்தினன்.’ என்கிற பூர்வ சரித்திரம் கூறும் தகவலில் விண்டு அணை எனும் நாகர், இயக்கர் இராசதானம் பற்றியும் அறிய முடிகிறது. அங்கு இராசமாளிகை இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. விண்டு அணை என்பது விந்தனை என்பதனைக் குறிக்கிறது போலும்.
மேலும், மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில் விஜயன் இலங்கை வந்தபோது இலங்கையின் முதலரசனாக இருந்தவன் காளிசேனன் எனவும் காளிசேனனுடைய இராச்சியம் தென்னிலங்கையில் இருந்த காளிதேசம் எனவும் கூறப்பட்டுள்ளது. காளிசேனனுடைய இடத்தினை இராச்சியம் என்று விசேடித்துக் கூப்பட்டுள்ளது.
காளிதேசம் சென்ற விஜயன், இயக்கர் குலத்துக் குவேனியை மணந்து, காளிசேனனுக்கு விஜயகுமாரனும் தோழர் எழுநூறுபேரும் படைவீரர்களாக இருந்து, மண்ணினால் மாளிகை இயற்றி வாழுங்காலம்…’ எனவும் கூறப்பட்டுள்ளது. இத்தகவலிலிருந்து பண்டைக்காலத்தில் இப்பிரதேசம் காளிதேசம் என அழைக்கப்பட்டதாகக் கொள்ளலாம். பின்னரே விண்டு அணை எனும் இரசாதானம் உருவாக்கப்பட்டது எனக் கொள்ளலாம். இவை, இயக்கர், நாகருடன் தொடர்பு பட்டவை. எனவே இவற்றை மட்டக்களப்பின் பண்டைய பெயர்களாகக் கொள்ளலாம்.
முடிவாக, பண்டைக்காலத்தில் அதாவது 2200 வருடங்களுக்கு முன்னர், கூத்திகன் காலத்திற்கு முன்னர், தென்னிலங்கையில் இலங்கையின் முதலரசன் காளிசேனனுடைய காளிதேசம் என்ற இராசதானி இருந்தது என்ற தகவலைப் பெறமுடிகிறது. இதுவே இப்பிரதேசத்திற்குரிய பண்டைப்பெயராகும். அக்காலத்தே சமுத்திரக்கரையருகில் காளிசேனன் நகர்வலம் வந்து இருந்து போவதற்காக சிங்கார மண்டபம், சிங்காரத் தோப்பு என்பன அமைக்கப்பட்டிருந்தன, காளிதேசத்தில் விஜயன் மற்றும் தோழர்களால் மண்ணினால் மாளிகை இயற்றப்பட்டிருந்தது. இது பூர்வசரித்திரத்தில் கூறப்பட்டுள்ள முதற்கட்ட வரலாறு.
காளிசேனனால் சமுத்திரக்கரையருகில் அமைக்கப்பட்ட சிங்கார மண்டபம், சிங்காரத் தோப்பு என்ற இடங்களிலேயே பின்னர் குடியேற்றங்களும் கிராமங்களும் இராசதானங்களும் அமைக்கப்பட்டன. அதிலொரு கிராமமே மட்டக்களப்பு. அந்தக் கிராமங்கள் – இராசதானங்கள் என்பன வளர்ச்சி பெற்றே இன்றைய மட்டக்களப்பு உருவானது. இது இரண்டாம் கட்ட வரலாறு.
குடியேற்ற காலத்தில் பின்னடைவைச் சந்தித்திருந்த இயக்கர், நாகரால் பின்னர் விண்டு அணை இராசதானம் உருவாக்கப்பட்டது, அங்கும் ஒரு மண்மாளிகை அமைக்கப்பட்டிருந்தது. இது மூன்றாம் கட்ட வரலாறு.
இந்த விபரங்களிலிருந்து மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் இலங்கை வரலாற்றை நன்கறிந்து உருவானது என்றோ அல்லது பண்டைக்காலச் சரித்திரத்தை ஓரளவு சரியான முறையில் பதிவு செய்து உள்ளது என்றோ கருத வேண்டியுள்ளது.
இலங்கை (பாலி) வரலாற்று நூல்களின்படி இயக்கர் குல அரசன் மகாகலசேனன் அல்லது காலசேனன் அல்லது காளிசேனன் என்பதேயாகும். அவனுடைய அரசும் சிரிஸவத்து எனுமிடத்தில் அமைந்திருந்தது. சிரிஸவத்து மற்றும் லங்காபுர எனும் இயக்க அரசனின் இடங்கள், பின்னர் லொக்கல, லக்கல குன்றுகளே என இனங்காணப்பட்டது என்கிறார் ‘இலங்கையின் சுருக்க வரலாறு’ எனும் வரலாற்று நூலை எழுதிய H.W கொடிறிங்கடன். லக்கல என மாத்தளை மாவட்டத்தில் ஒரு பிரதேசம் உள்ளது!
பூர்வ சரித்திரத்தில் காளிதேசம் தென்னிலங்கையில், உட்பகுதியில் அமைந்த ஒரு இடமாகவே கூறப்பட்டுள்ளது. எனவே மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் கூறும் காளிசேனன் – காளிதேசம் பற்றிய தகவல்கள் இலங்கை வரலாற்று நூல்கள் கூறும் விபரங்களுடன் சரியான வகையில் பொருந்தியமைவதைக் காணமுடிகிறது.
இதேவேளை, தேவநம்பியதிஸ்ஸனுக்கு முன் ஆட்சி செய்த பந்துகாபய மன்னன் கிழக்கு மாகாணத்துடன் தொடர்பு பட்டிருக்கிறான் என்பதுவும் இவ்விடயத்தில் முக்கியமானதொரு தகவலாகக் கொள்ளலாம். பந்துகாபய மன்னனுடைய வரலாறு தொடர்பில், ‘இந்த மன்னனின் காலத்திற்குச் சற்று முன்னரும், பின்னரும் நிகழ்ந்த சம்பவங்கள் இவனது காலத்திய சம்பவங்களாகக் கோவைப்படுத்தப்பட்டு மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ளமையே உண்மையாகும்.’ என செ.கிருஷ்ணராசா குறிப்பிடுவதும் கவனத்திற்குரியது. . அவரின் இலங்கை வரலாறு பாகம் – 1 என்ற நூலில் இத்தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
மகாவம்சம் கூறும் தகவல்களின்படி, பந்துகாபயனுடைய வாழ்க்கை வரலாறு கிருஷ்னன் கதையைப் போலவே அமைந்திருப்பதுவும், கீழ் மாகணத்துடன் தொடர்பு பட்டிருப்பதுவும் முக்கியமானதொரு விடயமாகும். மகாவம்சத்தில் பந்துகாபயன் கதைத்தெகுப்பில் இடம் பெற்றுள்ள இடப்பெயர்களுள் பெரும்பாலானவை கீழ் மாகாணத்திலேயே காணப்படுகின்றன என்கிறார் செ.கிருஷ்ணராசா.
மேலும் செ.கிருஷ்ணராசா, ‘…இச்செய்தியிலிருந்து பெற்றுக்கொள்கின்ற வரலாற்றுத் தகவல் என்னவெனில் இலங்கையின் கீழ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சிற்றரசுத் தலைவன் அனுராதபுரத்து அரச ஆட்சியாளருடன் மோதி, அதன் பின்னர் படிப்படியாக அனுராதபுர அரசைக் கைப்பற்றி ஓர் ஆட்சியாளனாகப் பிரகடனப்படுத்திய வரலாற்று வரன்முறையை குறித்து நிற்கின்றது. பந்துகாபயனின் தந்தையின் பெயர் தீக காமினி ஆகும், இது கிழக்கு மாகாணத்திலுள்ள தீகவாபியுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.’ எனவும் இவனுடைய காலத்தில் அனுராதபுரத்தில் பல இந்துக்கோயில்களும் கட்டப்பட்டுள்ளன. பல்வேறு மதப்பிரிவுகளும் காணப்பட்டுள்ளன எனவும் கூறுகிறார்.
இந்தத் தகவல்கள், ‘பந்துகாபயனுக்கு முன்னரும் பின்னரும்’ ஆன காலத்தில், மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆட்சி செய்த சிற்றரசர்கள் பற்றிய தகவல்கள் முக்கியமானவை என்பதனைக் காட்டுகின்றன. இது பற்றிய தகவல்களை மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில்தான் தேட வேண்டியுள்ளது.
பந்துபாசு, பந்துகாபய எனும் பெயர்கள் பண்டு என்பதனுடனும் தொடர்பும் பட்டுள்ளது. மட்டக்களப்பு பூர்வ சரித்திரமும் காளிசேனன், அயோத்தியாபுரியைப் பண்டைய நாளில் அரசு செய்த இரகுவமிச அல்லது பரிதிகுல இரகுவமிசத்தைச் சேர்ந்தவன் என்றே குறிப்பிட்டுள்ளது.
மட்டக்களப்பு பூர்வ சரித்திரத் தகவல்கள் இலகுவில் ஒதுக்கப்படக் கூடியவை அல்ல. இலங்கை வரலாற்று நூல்களில் தெளிவற்றுக் கூறப்பட்டுள்ள, சிலவேளைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ள, சில வேளைகளில் விடப்பட்டிருக்கக் கூடிய கூடிய வரலாற்றுத் தகவல்களை மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் தரும் தகவல்களைக் கொண்டு ஆராய்ந்தறிந்து கொள்ளலாம் என்றே எண்ணத்தொன்றுகிறது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள், தற்போது சிலரால் மட்டும் அறியப்பட்டுள்ள மண்மனை போன்ற வெளிப்படுத்தப்படாத தொல்பொருள் சார்ந்த தகவல்களும் ஒரு புதிய வரலாற்றை அறிவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தலாம். இங்கு கண்டறியப்பட்டுள்ள மண்மனை கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரியவருகிறது. இம்மண்மணையும் வடமுனைக்கருகில் அமைந்திருக்கிறது. இவ்விடம் பூர்வ சரித்திரம் கூறும் காளிதேசத்தின் அமைவிடத்தைச் சுட்டுகிறதோ என்று எண்ணத்தொன்றுகிறது.
விரிவாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலமே தெளிவான பதில்களைக் கண்டறியமுடியும். இங்குள்ள ஆற்றங்கரைகளிலும் மண்புட்டிகளிலும் பெரும் வரலாற்று ஆதாரங்கள் மறைந்து கிடக்கலாம் என்றும் எண்ணத்தோன்றுகிறது!