அரங்கம் பத்திரிகை குறித்த மக்களின் எதிர்பார்ப்பு நாம் நினைத்ததைவிட அதிகமாகவே இருக்கின்றது. சில இடங்களில் மக்கள் காண்பித்த ஆதரவும் தந்த வரவேற்பும் எமக்கு மெய்சிலிர்க்கச் செய்தன.
இதற்கு காரணம் பத்திரிகை சிறப்பாக இருக்கின்றது என்பது அல்ல. அப்படி முழுதாக நம்பிவிட்டால், நாம் ஏமாந்து போவோம் என்பது எமக்குத் தெரியும். ஆனால், மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கின்றன.
“அரங்கம்” பத்திரிகையின் விநியோகத்துக்காக எழுவான் கரையிலும், படுவான் கரையிலும் நாம் செய்யும் பயணங்கள் நிறையப் பாடத்தை எமக்கு கற்றுத் தருகின்றன. அம்பாறையும், திருகோணமலையின் தென்பகுதியும் கூட மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்த பகுதிகளாக இருப்பதை உணர்கிறோம்.
எங்கும் பலவிதமான நெருக்கு வாரத்தில் மக்கள் இருப்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது. விவசாயம், கல்வித் தேவை, ஏனைய பொருளாதார நிலவரங்கள் ஆகியவற்றோடு சேர்ந்து மக்கள் ஒருவித அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
தமது பிரச்சினை என்னவென்பதையே அறிய முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இந்த விடயம் தொடர்பில் நிறைய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது.
உண்மையில் மக்களின் தேவைகளை ஓரளவாவது விளங்கிக்கொள்ள வேண்டியதுதான் தற்போதைய தேவையாக இருக்கிறது. அவர்கள் சொல்ல நினைக்கும் தேவைகளை எமது ஊடகமும் பிரதிபலிக்க அவர்கள் எம்மை தமது சகாக்களாக கருதுகிறார்கள். “தாம் பேச நினைப்பதை நாம் பேசுவதாக” அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் எம்மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு எம்மை மலைக்கச் செய்கிறது.
அவர்கள் நம்பும் அளவுக்கு நாம் அவர்களை முழுமையாக புரிந்துகொண்டிருக்கிறோமா என்ற அச்சம் என் மனதில் எழுகின்றது.
ஆனால், எம்மை தனியே சந்திக்கும் போது எம்மிடம் அனைத்தையும் அவர்கள் கொட்டிவிட நினைப்பதற்கு அவர்களின் கையறு நிலையே முக்கிய காரணமாகப் படுகின்றது.
கடந்த 30 வருடப் போரின் ரணங்களில் இருந்து அவர்கள் இன்னமும் விடுபடவில்லை. அதற்கிடையே வேறு வகையான பலவித ஆக்கிரமிப்புக்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். சில மதக்குழுக்கள் அல்லது இனக்குழுக்கள் தமக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டுச் செய்வதாக அவர்கள் நம்புகிறார்கள்.
அவை குறித்து ஒவ்வொரு கிராமத்துக்கும் போகும் போது அவர்கள் நிறையக் கதைகளைக் கூறுகிறார்கள். அவர்களின் பயத்தை போக்கும் அளவுக்கு நிலைமைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்த எந்தத் தரப்பும் பெரிதாக முனைந்ததாகத் தெரியவில்லை. அவர்களின் நம்பிக்கையீனங்களை கையாளவும் எவரும் போதியளவுக்கு முனையவில்லை.
ஒட்டுமொத்தமாக எவரும் மக்கள் நலனில் கவனமற்று இருக்கிறாகள் என்று கூறிவிட முடியாது. ஆனால், அவர்களின் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டதாக, பாரிய அளவில் திட்டமிடப்பட்டதாக இல்லை.
பல இடங்களில் மக்கள் நலக் குழுக்கள் மருத்துவ முகாம்கள் மற்றும் வேறு சில சேவைகளை செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது. சில விழிப்புணர்வு நடவடிக்கைகளும் நடந்தன. அரச அதிகாரிகள், அரச சார்பற்றோர் ஆகியோரும் அவற்றில் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இவை ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்துவனவாக இருக்கின்றன.
ஆனால், மாவட்ட அல்லது மாகாண மட்டத்தில் இவை ஒருங்கிணைக்கப்பட நடவடிக்கைகள் தேவை. ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதற்காக பல நலவிரும்பிகளின் செயற்பாடுகளுக்கு அவை தடையாக அமைந்துவிடவும் கூடாது.
அரசியல் கட்சிகள் தொடர்பாக மக்கள் மத்தியில் கனத்த அதிருப்தி காணப்படுகின்றது. இந்த நிலையை கட்சிகளும் அவற்றின் உறுப்பினர்களும் புரிந்துகொள்ள வேண்டும். தமது மக்களுக்கான செயற்பாடுகளை விரிவுபடுத்துவதுடன், அவர்கள் மாற்றியமைக்கவும் முயல வேண்டும். அதைவிடுத்து தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் பணிகளை அவர்கள் தொடர்ந்தால் அவர்கள் மக்களால் ஏமாற்றப்படுவார்கள்.
ஊடகங்களுக்கும் அவை பொருந்தும். மக்களுக்கு பொருத்தமில்லாத, தமது வணிக நோக்கை மாத்திரம் இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். மக்களின் ரசனையை ஊடகங்களின் படைப்புக்கள் உயர்த்த வேண்டுமே ஒழிய சீரழிக்கக் கூடாது. உண்மையான தகவலை தர முயற்சிக்க வேண்டுமே ஒழிய பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிடக் கூடாது.
இந்த விடயத்தில் நாமும் மிகக் கவனமாக இருக்க விளைகிறோம். மக்களை இன்னும் அதிகமாக புரிந்துகொள்ள நினைக்கிறோம். அவர்களோடு சேர்ந்து அவர்களுக்காக இணைந்து ஓட நாமும் தயாராக இருக்கின்றோம். நல்லிணக்கமே இறுதி நிலவரமாக இருக்கட்டும்.
நன்றி : ‘அரங்கம்’ வெள்ளி, பங்குனி 30இ 2018. இதழ் – 06