தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பிரதமர் ரணில் வழங்கிய பத்து வாக்குறுதிகளை ‘அரங்கம்’ பத்திரிகையில் பார்க்கக் கிடைத்தது.
அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணை தொடர்பில், கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதற்காக முன்வைத்த நிபந்தனைகளே இவை. இந்நிபந்தனைகளை பிரதமர் ஏற்றுக்கொண்டார் என்கிறது கூட்டமைப்புத் தரப்பு. இந்த பத்து வாக்குறுதிகளிலும்; புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மீள்கட்டுமானம் எனும் விடயங்களில் ஒன்றுதானும் உள்ளடங்கியிருக்கவில்லை! பத்தாவது வாக்குறுதியாக வடக்கு, கிழக்கு அபிவிருத்தி பற்றி மட்டும் கூறப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் யுத்தம் ஏற்படுத்திய பிரதான பிரச்சினைகளில் இவை முக்கியமானவை. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனேகம் பேரின் பிரச்சினையும் இவை. இலகுவில் தீர்க்கப்படாத, இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இவை. எனினும் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளில் இவை உள்ளடக்கப்படவில்லை என்பது ஆச்சரியமானதே!
புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மீள்கட்டுமானம் என்பவை வடக்கு, கிழக்குத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மிக அவசியமானது மட்டுமல்ல சாத்தியமானதும் கூட. எனினும் தமிழ்த் தலைமைகள் இவ்விடயத்தில் சரியான முறையில் நடந்து கொண்டதாகத் தெரியவில்லை.
வடக்கு, கிழக்கில் யுத்தம் முப்பதாண்டுகளாக இடம் பெற்றிருக்கிறது. பேரழிவகள் இடம் பெற்றிருக்கிறது. இறுதி இரண்டாண்டுகளில் பெரும் நிலப்பரப்பில், எல்லாவற்றையும் துடைத்தழித்தவாறுதான் யுத்தம் இடம் பெற்றது. பெருமளவான மாற்றுத்திறனாளிகளை, ஆண்தலைமையற்ற குடும்பங்களை, விதவைகளை, கைவிடப்பட்ட குழந்தைகளை உருவாக்கியிருக்கிறது யுத்தம்.
யுத்தம் முடிவுற்ற பின்னரும் முன்னய அரசாங்கம் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மீள்கட்டுமானம் என்பவற்றில் போதிய அக்கறை காட்டவில்லை. அரசாங்கம் இவற்றை தனது கைகளில் வைத்துக் கொண்டு செயற்பட்டது. தமிழர்கள், தமிழர் அமைப்புக்கள் இவ்விடயங்களில் ஈடுபடுவதையும், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபடுவதனையும் முன்னய அரசாங்கம் தடுத்தது, கட்டுப்படுத்தியது. பல விடயங்களில் இராணுவத்தினரே ஈடுபடுத்தப்பட்டனர்.
புதிய நல்லாட்சி ஆட்சியிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படவில்லை. அரசாங்கமே எல்லாவற்றையும் கையாளும் நிலை தொடர்கிறது, அமைச்சு – உள்ளுர் நிர்வாகம் என்பவற்றின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலைமையே பொருத்துவீடு போன்ற பிரச்சினைகளின் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது. மேலும், அரசாங்கம் கொண்டுவருகிறது. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைளில் பாரிய முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை. அவை மக்களின் மீண்டெழுகைக்கு உதவவில்லை. மீள்குடியேற்றப்பட் மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.
இது புதிய பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்க காரணமாகியிருக்கிறது. மீள்குடியேற்றம் நடைபெறாமையால் குடியேற்றங்கள் இலகுவில் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள்கட்டுமானம் நடைபெறாமை மக்களை வறுமையில் வைத்திருக்கச் செய்திருக்கிறது. இவற்றிலிருந்து சமூக – பொருளாதாரப் பிரச்சினைகள் தோன்றியிருக்கிறது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கே சாதகமான சூழல்கள் தோன்றியிருக்கிறது எனக் கூட்டமைப்பு கூறும் நிலையில், அதற்குச் சாதகமான நல்லாட்சி மற்றும் சர்வதே அழுத்தங்கள் காணப்படுகின்றன என்று கூறும் நிலையில், இந்த விடயத்தில் சாதகமான தீர்வைப் பெறுவது இலகுவானதே. நல்லாட்சி அரசாங்கமோ, எதிர்க்கட்சிகளோ, பேரினவாத சக்திகளோ இலகுவில் எதிர்த்து நிற்கமுடியாத விடயங்கள் இவை. சர்வதேச சமூகம் உதவியும் ஒத்தசையும் புரியக்கூடிய வியடங்கள் இவை.
அவசியமான – சாத்தியமான இத்தகையதொரு விடயத்தினை கணக்கில் எடுக்காமல் விட்டிருக்கிறது தமிழ்த் தலைமைகள். இதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம்.
யுத்த அழிவகளிலிருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகள், விசேட செயற்றிட்டங்கள் ஒன்றும் புதுமையான விடயமுமல்ல. யுத்த அழிவகளிலிருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகள் மார்ஷல் திட்டத்திலிருந்து (Marshall Plan – European Recovery Program) ஆரம்பிக்கிறது. இரண்டாம் யுத்த அழிவிலிருந்து ஐரோப்பாவை மீளக்கட்டியெழுப்பவதற்கான அமெரிக்காவின் உதவித் திட்டமே மார்ஷல் திட்டம். இதேபோல யப்பானின் யுத்த அழிவிலிருந்து மீண்டெழுவதற்கான திட்டங்கள் எனப் பல உதாரங்கள் உண்டு. இலங்கையின் சுனாமி மீட்சித் திட்டமும் உண்டு.
பேரழிவகளிலிருந்து மீட்சி பெறுவதற்கு வழமையான நிர்வாகப் பொறிமுறையும், வழமையான திட்டங்களும் சாத்தியமில்லை என்பதனையே இத்திட்டங்கள் காட்டுகின்றன. இலங்கையின் கடந்த ஒன்பதாண்டு அனுபவங்க ளும் இதனைத் திட்டவட்டமாக நிருபணம் செய்திருக்கின்றன.
எனவே வடக்கு கிழக்குத் தமிழர்களின் விடிவுக்கு, சுயாதீனமான – சுதந்திரமான மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள்கட்டுமானப் பொறிமுறை ஒன்று அவசியம். இது சாத்தியமாகும் போதுதான் பல்வேறு சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். யுத்த அழிவிலிருந்து மக்கள் மீள எழமுடியும்.
இது அவசியமனது மட்டுமல்ல சாத்தியமானதும்கூட.