தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை அறிஞரான பேராசிரியர் கா.ராஜன் அவர்கள், “சங்க இலக்கியமும் அகழாய்வும்” தலைப்பில் நிகழ்த்திய, “கொழும்புத் தமிழ்ச் சங்க முன்னாள்த் தலைவர் பொ.சங்கரப்பிள்ளை நினைவுப் பேருரை”யை – ஆய்வுரையை(12.11.2015), கொழும்புத் தமிழ்ச் சங்கம் நூலாக வெளியிட்டிருந்தது.
பேராசிரியர் கா.ராஜன் அவர்களின் நினைவுப்பேருரையானது-ஆய்வுரையானது; சங்க இலக்கியங்கள், இரும்புக்கால ஈமச்சின்னங்கள், இரும்புக்கால ஈமச்சின்னங்களும் சங்க இலக்கயமும், எழுத்தறிவு, குறியீடுகள், தமிழ்ப் பிராமி எனச் சிறு பிரிவுகளாக பிரித்தமைக்கப்பட்டிருக்கிறது.
“தமிழகத்தின் வரலாறு பொதுவாக சங்க காலத்துடன் தொடங்குவதாகக் கருதப்படுகிறது” எனத் தொடங்கும் இந்நினைவுப் பேருரை – ஆய்வுரை, “ஒரு தனிப்பட்ட முதன்மைச் சான்றினை முன்னிறுத்திச் செய்யப்படுகின்ற எந்தவொரு ஆய்வும் எந்நிலையிலும் முழுமையடையாது என்பது திண்ணம். இலக்கியம், கல்வெட்டு, நாணயம், அயல்நாட்டார் குறிப்புகள், தொல்லியல் சான்றுகள் என அனைத்து முதன்மைச் சான்றுகளையும் ஒருமுகப்படுத்தி ஆய்வு செய்யப்பட வேண்டும்.” என்ற கருதுகோளை முன்வைத்திருக்கிறது.
“இக்கருதுகோளை மனதில் நிறுத்தி அண்மைக்காலங்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் சங்க காலத்தை அறிய இக்கட்டுரை முயல்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ள கா.ராஜன், சங்க காலத்தை இவ்வடிப்படையில் மீள் உருவாக்கமும் செய்திருக்கிறார் என்பதே இவ்வாய்வின் முக்கிய அம்சமாகும்.
சங்க காலம் உருவாவதற்கும், சங்க இலக்கியங்கள் எழுச்சி பெறவும் உறுதுணையாக இருந்த, சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழ் சமுதாயம் பற்றி கா.ராஜன் முன்வைத்துள்ள கருத்துக்கள், இலங்கையின் – இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை அறிய முயலும் ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக அமையும்.
பேராசிரியர் கா.ராஜன், அனைத்து முதன்மைச் சான்றுகளை ஒருமுகப்படுத்தி, அண்மைக்காலத் தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்ட இவ்வாய்வு, தமிழகத்தின் சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழ் சமுதாய உருவாக்கத்தைப் பற்றிச் சில முக்கியமான முடிவுகளை முன்வைத்திருக்கிறது. அவை;
- கி.மு.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென்பகுதியில் வாழ்ந்த மக்கள் நுண் கற்கருவிகளைப் பயன்படுத்தும் பண்பாட்டிலும், தமிழகத்தின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள் புதிய கற்காலப் பண்பாட்டிலும் வாழ்ந்துள்ளனர்.
தமிழகத்தின் தென்பகுதியில், வைகை ஆற்றுக்கு தெற்கே மாங்குடி, தேரிருவேலி, கல்லுப்பிட்டி போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் நுண்கற்கருவிகளின் பயன்பாடு பற்றி அறியப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வடபகுதியில், வைகை ஆற்றுக்கு வடக்கே குறிப்பாக பெண்ணையாறு, பாலாறு ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள ஊர்களான அப்புக்கல், மையம்பள்ளி, மயிலாடும்பாறை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் புதிய கற்காலப் பண்பாடு பற்றி அறியப்பட்டுள்ளது.
- கி.மு.ஆயிரம் வாக்கில் இவ்விரு பண்பாடுகளும் இரும்பின் பயன்பாடு காரணமாக தமிழகத்தில் ஒரு மிகப் பெரிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டன.
தமிழகத்தின் தென் பகுதி நுண்கற்கருவிகளின் பயன்பாடுகளிலிருந்து நேரடியாக பெருங்கற்படை அல்லது முதுமக்கள் தாழி அல்லது இரும்புக் காலப் பண்பாட்டிற்கு மாறியுள்ளதையும், தமிழகத்தின் வடபகுதி புதிய கற்காலப் பண்பாட்டிலிருந்து பெருங்கற்படை அல்லது இரும்புக் காலப் பண்பாட்டிற்கு மாறியுள்ளதையும் அகழாய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இக்காலத்திற்குரிய பெருமளவான மக்கள் வாழிடங்கள் அறியப்பட்டுள்ளன.
இவ்வாறு கி.மு. ஆயிரம் ஆண்டுவாக்கில், தமிழகத்தில் இரும்பின் பயன்பாட்டை அடுத்து ஏற்பட்ட பெரும் வளர்ச்சியினால் சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழ்ச் சமுதாயம் உருவாக்கம் பெற்றிருந்ததை ராஜன் அவர்கள் பல்வேறு சான்றுகளை கொண்டு எடுத்துக்காட்டியிருக்கிறார்.
சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழ்ச் சமுதாயமே; இனக்குழு தோன்றவும், தொழில் நுட்பம் பெருகவும், அதன் மூலம் வெளிநாட்டுடனான வாணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும், தமிழகத்தில் எழுத்தறிவு எழவும், அதன் மூலம் சங்க இலக்கியங்கள் உருவாகவும், இறுதியாக அரசு தோன்றவும் வழிவகை செய்தனர். அதாவது சங்க கால எழுச்சிக்கு வித்திட்டவர்கள் இம்மக்களே.
இவ்வாறு கி.மு.ஆயிரம் வாக்கில் உருவான தமிழ்ச் சமுதாயம் பற்றிய சில முக்கியமான தகவல்களையும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
- கி.மு.ஆயிரம் ஆண்டு வாக்கிலேயே தமிழ் மக்கள் குறியீடுகள் எனப்படும் ஒரு வகையான எழுத்துப் பொறிப்புக்களை அல்லது வரிவடித்தை தமது கருத்துப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் கிடைத்துள்ள வரிவடிவங்களில் காலத்தால் முந்திய சிந்துவெளி எழுத்துக்களை அடுத்துக் கிடைத்துள்ள குறியீடுகள் எனப்படும் வரிவடிவம், சிந்துவெளி எழுத்துக்களின் மறைவிற்கும் பிராமி எழுத்துக்களின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட சுமார் 1200 ஆண்டுகள் இந்தியாவில் வழக்கில் இருந்த ஒரு வகை வரிவடிவமே இக்குறியீடுகள். பெருமளவில் தென்னகத்திலும் இலங்கையிலும் கிடைத்துள்ளன.
இக்குறியீடுகள் தென்னகம் முழுவதும் பரவிக்காணப்பட்டுள்ளது. அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் கிடைத்துள்ளன. தமிழகத்தில இக்குறியீடுகள் எனும் வரிவடிவத்திற்குப் பின்னரே பிராமி – தமிழ்ப் பிராமி எழுத்தக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
- சங்க காலத்திற்கு முற்பட்ட இரும்புக் காலத்தைச் சேர்ந்த இம் மக்களே சங்க கால எழுச்சிக்கு வித்திட்டவர்கள்.
- இம் மக்களே, திராவிடப் பண்பாட்டின் முக்கிய கூறாகிய விளங்கிய இறந்தவர்களைப் புதைத்து அவர்களை வழிபடுகின்ற வழக்கம் பின்னாளில் உருவாவதற்கு அடிகோலியவர்கள்.
- இம் மக்கள், தமது இறுதிக்காலத்தில் அதாவது சுமார் கி.மு. 4-5 ஆம் நூற்றாண்டுகளில் சமண மதம், புத்த மதம், வைதீக மதம் போன்ற உயர் சமய நெறிகளின் தாக்குதலுக்கு உள்ளாகினர். இம் மக்கள் உயர் சமய நெறிகளுக்கு உட்பட்ட போதிலும் தமது தனித்துவத்தையும் நிலை நிறுத்திக் கொண்டனர்.
- பல்வேறு வகைப்பட்ட பண்பாட்டினை இவர்கள் கடைப்பிடித்த போதிலும் ஒரே வகையான மொழி, வரிவடிவம் என்ற கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழ்ச் சமுதாயம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
- இம் மக்கள் பெருங்கற்படைச் சின்னங்களையும், முதுமக்கள் தாழிகளையும், கருப்பு-சிவப்பு பானை ஓடுகளையும், இரும்பையும் பயன்படுத்தி பழந்தமிழ் வரிவடிவத்தின் எழுச்சிக்கும் பரவலுக்கும் காரணமாக இருந்தனர்.
- இக்காலத்தில் தானிய உற்பத்தியில் ஈடுபட்டதையும், குளம் ஆற்றுப்பாசனம் போன்ற நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்தியதையும் பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கியதையும் தொல்பொருட்கள் மூலம் அறிய முடிகிறது.
இவ்வகையில் கா.ராஜன் அவர்களின் ஆய்வு, சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழ்ச் சமுதாய வரலாற்றை மீள் உருவாக்கம் செய்திருப்பது மட்டுமன்றி, இலங்கைச் சமூக உருவாக்கத்தை, ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கத்தை மீள் உருவாக்கம் செய்வதற்கான அடிப்படைகளையும் முன்வைத்திருக்கிறது.
‘இலங்கையில் சமூக உருவாக்கம் ஆரியர் குடியேற்றங்களுடன் தொடங்கிற்று’ என்ற நீண்ட காலக் கோட்பாடு ஏற்கனவே மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கம் இராவணனுடன் தொடங்குகிறது என்பது போன்ற போக்கிலிருந்து விலகி மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.
இலங்கையின் வரலாறு பற்றிய அண்மைக்கால அகழாய்வுகள், இலங்கையின் வரலாற்றை மிக நீண்டகாலத்திற்குரிய ஒன்றாக இனங்காட்டியிருக்கிறது. அது மட்டுமன்றி இலங்கையின் பல பாகத்திலும், வட கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள மிக அண்மைய தொல்பொருள் கண்டுபிடிப்புக்கள் இலங்கைத் தமிழரின் – உண்மையில் ஈழத்தமிழரின் வரலாற்றைப் பற்றிய புதிய தகவல்களை வழங்கக் கூடியனவாக உள்ளன.
இந்நிலையில், கி.மு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான காலத்திலிருந்து, தமிழ் சமுதாய உருவாக்கத்தின் வரலாற்றை கா.ராஜன் அவர்கள் தெளிவு படுத்தியிருப்பதனை பின்புலமாகக் கொண்டு இலங்கையின் – இலங்கைத் தமிழரின் – ஈழத்தமிழரின் சமூக உருவாக்கத்தை மீளுருவாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
இவ்வாய்வுரையில், தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் கா.ராஜன். “அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல் போன்ற ஊர்களில் இலங்கை பிராமிக்கே உரித்தான வரிவடிவங்கள் கிடைப்பதும், “ஈழக்குடும்பிகன்” எனத் திருப்பரங்குன்றம் கல்வெட்டில் வருவதும், “ஈழத்துணவு” என பட்டினப்பாலையில் வருவதும், இலங்கையில் உள்ள காசுகளிலும், கல்வெட்டுக்களிலும் தமிழ்ப் பெயர்கள் வருவதும் இருநாட்டிற்கு இடையேயான பண்பாட்டுத் தொடர்பினை வெளிப்படுத்துவன. அண்மையில் அநுராதபுரத்தில் மேற்கொண்ட அகழாய்வின் அடிப்படையில் தரணியகல, கோனிங்காம் போன்றோர் அசோகர் காலத்திற்கு முன்பே வணிகர்கள் மூலமாக பிராகிருதமும், பிராமி வரிவடிவமும் இலங்கைக்கு வந்துவிட்டது எனவும், இன்னும் சில அறிஞர்கள் பிராமி வரிவடிவம் இலங்கையிலேயே முதலில் தோன்றியது எனவும், பின்னர் இவை இந்தியாவிற்குச் சென்றதாகவும் வாதிடுகின்றனர். இக்கருதுகோளுக்கு மேலும் ஆணித்தரமான தரவுகள் தேவைப்பட்டாலும் இதனை எளிதாக ஒதுக்கிவிடமுடியாத அளவிற்கு பல்வேறு ஊடகங்களின் வழியே தரவுகள் வெளிவந்தவண்ணமுள்ளன. எனவே, எதிர்காலத்தில் இக்கருதுகோளையும் உன்னிப்பாக பார்க்க வேண்டியுள்ளது.” எனத் தெரிவித்திருக்கிற ராஜன் அவர்களின் கருத்து உன்னிப்பாக கவனிக்க வேண்டியதொன்றே.
ஆய்வுரையின் இறுதியில் கா.ராஜன் அவர்கள், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும், இலங்கையிலும் அரசு உருவாக்கத்திற்கும், இலக்கியம் செழிப்புறவும், தொழில் நுட்பத்தின் மூலம் சமுதாய மேன்மை பெறவும், வெளிநாட்டுடனான உறவுகள் மூலம் வளம் பெருகவும் காரணமாக இருந்த பெருங்கற்படைச் சின்னங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் காணப்படும் இடங்களைத் தெரிவு செய்து பரந்த அளவில் அகழாய்வினை மேற்கொண்டால் அறிஞர்களிடையே இவ்வரிவடிவத்தின் தோற்றம், பரவல் மற்றும் காலம் தொடர்பான கருத்து மோதல்கள் நீக்கப்பட்டு தமிழச் சமுதாயம் தொடர்பான கண்ணோட்டம் உலகளவில் மேலும் தெளிவு பெறும் எனக் குறிப்பிட்டிருப்பது, கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய கருத்தும் பணியுமாகும்.
இவ்வகையில், வரலாற்றுக்கால இலங்கைச் சமூக உருவாக்கத்திற்கும், வரலாற்றுக்கால இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கும் காரணமாக இருந்த வரலாற்றுக்கு முற்பட்ட கால சமூகம் பற்றிய ஆய்வுகள் நடைபெற வேண்டும். இலங்கைக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழ்ச் சமுதாயத்திற்கும் இடையிலான தொடர்புகள் அறியப்பட வேண்டும். இது தொடர்பிலான ஆய்வுகள் சில ஏற்கனவே நடைபெற்றுமுள்ளன.
இந்நூலில், கொழும்புத் தமிழச் சங்க முன்னாள்த் தலைவர் பொ.சங்கரப்பிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய We Tamils (நாம் தமிழர்) எனும் நூலிற்கு, அப்போது உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த திரு. க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நிகழ்த்திய வெளியீட்டுரையும் இணைப்பாக இடம் பெற்றிருக்கிறது.