Mu.Ramasamy Ayya : Professor – Senior Theatre – Film Actor
போருக்குப்பிந்தைய சூழலில் தமிழர்களைப் பெருவாரி மக்களாகக் கொண்டிலங்கும் ஈழத்தின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நாடக முயற்சிகளைக் காதுகொடுத்துக் கேட்டால் இரண்டும் தம்மளவில் பெருத்த வேறுபாடுகளைக் கொண்டிருப்பது தெரிகிறது. வடக்கு, கிழக்கு இரண்டு தமிழர்கள் பகுதிகளையும் இணைத்துத்தான் ஈழம் என்கின்றனர். அதனால் மலையகத் தமிழர்கள் ஈழம் என்கிற பகுதிக்குள் வரவில்லை. அதன் காரணமாக அவர்களின் நாடக முயற்சிகள் இங்கு பேசப்படவில்லை. அது இன்னுமே தனித்ததொரு ஆய்விற்குரியது.
ஈழத்தின் வடக்கு, கிழக்குப் பகுதிகளின் நில அமைப்பு, இரண்டு பகுதிகளின் மக்கள் வாழ்நிலை, கிழக்கிலிருந்து வேறுபட்டு, வடக்கில் போருக்கு முன்வரை மக்களின் மிகப்பெரும் நம்பிக்கையாய் இருந்த விடுதலைப்புலிகளின் ஆட்சி நிருவாகம் ஆகியவை அவை இரண்டின் வேறுபாட்டிற்கும் காரணமாய் அமைந்திருக்கிறது.
நில அமைப்பில், கிழக்கின் விவசாயச் செழிப்பு வடக்கில் இல்லை. ஆழி நீர் சுழித்து ஊருக்குள் உள்நுழைந்த வாவிகளும் நல்ல நீர் ஆறுகளுமாக ஊரெல்லாம் நீரால் சூழப்பட்டு, விவசாயத்தில் நிறைமகசூலுடன் செழிப்பில் திளைத்திருப்பது கிழக்கு! விவசாயம், மீன்பிடி என்பது அங்குள்ள பெருவாரி மக்களின் தொழில்! மட்டக்களப்பு, திரிகோணமலை, கல்முனை போன்றவை அங்கிருக்கிற பகுதிகள். அங்குப் பொடி அரிசிதான் உணவு. அது, நம்மூர் பாண்டிய நாட்டு உணவு போன்றது!
வடக்கே பரு அரிசிதான் உணவு. அது, நம்மூர் நாஞ்சில் நாட்டு உணவு போன்றது! யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்றவை அங்கிருக்கிற பகுதிகள். போர்நிறுத்த காலத்திலிருந்து 2009 இன் தொடக்கம் வரையும் புலிகளின் கட்டுப்பாடான அரவணைப்பில் புதியதொரு தமிழ்ச்சமூகமாய் உருவாகியிருந்த பூமி அது! புலிகளின் ஆதிக்கம் இருந்தபோதும், வடக்கைப்போல் முற்று முழுதான புலிகளின் அரசமைப்பு நிருவாகம் கிழக்கில் உருவாகி இருந்திருக்கவில்லை.
கிழக்கில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் எனும் கிழக்குப்பல்கலை! வடக்கே, அதற்குத் தாய்ப் பல்கலைக்கழகமான யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் எனும் யாழ்ப்பல்கலை! இங்கிருக்கிற நாடகக்கல்வியைக் கற்றுத் தேர்ந்து வெளிவந்தவர்கள்தாம் பேராசிரியர் சிதம்பரநாதன், பேராசிரியர் மௌனகுரு, பேராசிரியர் ஜெயசங்கர், பேராசிரியர் ஜெயரஞ்சினிபோன்றோர்! நாடக ஆசிரியர் பேராசிரியர் குழந்தை சண்முகலிங்கம், நாடக நெறியாளுநர் பேராசிரியர் சிதம்பரநாதன் போன்றோர் அங்கு மிகமுக்கிய நாடகப் போராளிகள்!. வடக்குப் பகுதியில் தமிழ் இஸ்லாமியர்கள் தீர்மானகரமான சக்தியாக இல்லை. ஆனால் கிழக்குப் பகுதியில் தமிழ் இஸ்லாமியர்கள் தீர்மானகரமான சக்தியாக உள்ளனர்.
1956 இல் பேராசிரியர் சரச்சந்திர மூலம் தொழிற்பட்ட சிங்கள இனக்கலை நெறி அரங்கிற்கு எதிர்வினையாகப் பேராசிரியர் வித்தியானந்தன் மூலம் தமிழ் இனக்கலை நெறியை நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது போல், இஸ்லாமிய இனத்தவர் கலை நெறியாக ’சோனகஅரங்கு’ இப்பொழுது அவர்களால் முன்மொழியப்படுகிறது. மட்டக்களப்புத் தமிழும் யாழ்ப்பாணத் தமிழும் நம்மூர் நாஞ்சில் தமிழும் பாண்டித் தமிழுமாய்ப் பேச்சு வழக்கில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. இந்த வேறுபாடுகளின் பின்புலத்திலேயே அங்கிருக்கிற நிகழ்த்துக்கலைகளின் இயல்புகளையும் பார்க்க முடிகிறது.
கிழக்குப் பகுதியில் தமிழின் கலை அடையாளமான வடமோடி, தென்மோடிக் கூத்துகளைப் புத்துருவாக்கம் செய்யும் முயற்சிகள், பேராசிரியர் வித்தியானந்தனைத் தொடர்ந்து, பேராசிரியர் சிவத்தம்பியின் முன்மொழிதலுடன் பேராசிரியர் மௌனகுரு, பேராசிரியர் ஜெயசங்கர் போன்றோர் மேற்கொண்டு வந்துள்ளனர். பேராசிரியர் மௌனகுரு, கூத்தின் தாளங்களையும் இசையையும் தன்வயமாக்கிக் கொண்டு அதில் புதிய பொருண்மையைப் புகுத்திப் பிரயோக அரங்காங்கித் தொழிற்படுகிறார்.
ஆனால் பேராசிரியர் ஜெயசங்கர், இதற்கு மறுதலையாக, கூத்துக்குழுவினருடன் கலந்துறவாடி, கூத்தின் பிற்போக்குக் கூறுகளை அவர்களுடன் விவாதித்து, அதைக் கூத்தர்கள் ஏற்றுக் கொள்கிற நிலையில், கூத்தர்களால் அவர்களின் கூத்துகளில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு, இன்னொருவகையில் தொழிற்படுகிறார். இவரின் மூன்றாவதுகண் அமைப்பு, கூத்தர்களுடனான இது தொடர்பான விவாதங்களாகப் பல குறுநூல்களைப் பதிப்பித்து வந்திருக்கிறது. கூத்தில் தங்கள் தேசிய இன அடையாளத்தை இனங்காணும் முயற்சியாகவே இவற்றை இனங் காணமுடியும்.
உள்ளடக்கத்தில் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைக்கும் முயற்சிகள் அங்கு தீவிரமுடன் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு அங்கிருந்த புலிகளுக்கு எதிரான இன்னொரு சூழலைத்தான் காரணம் கூற முடியும். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, மட்டக்களப்பில் படுவான்கரைப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில்! எழுவான்கரைப் பகுதியோ அப்பொழுது கருணா மற்றும் இலங்கை ராணுவத்தின் கூட்டுக் கட்டுப்பாட்டில்! தினமும் மாறிமாறிக் கொலைகள் விழுந்து கொண்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் நிகழ்த்துகலைப் படைப்புகள் பெரிய வீச்சுடன் அங்கு எழவில்லை என்பதுதான் உண்மை! அதனால் தான் 2008 இல் நாடகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகக் கலைப்புல முதன்மையரான பேராசிரியர் பாலசுகுமார் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான எதிரணியால் கடத்திச் செல்லப்பட்டது நடந்தது. அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாதன் கொல்லப்பட்டதும் நடந்தது. துப்பாக்கிகளின் ஊடாக நாடகம் தீவிரத்துடன் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்காமல், தமிழ்த் தேசிய இன அடையாளமான கூத்தைப் புதுப்பிப்பதில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தது.
இதற்கு எதிர்நிலையில் வடக்கின் அரசியல் சூழல் இருந்தது. புலிகளின் நேரிடை ஆட்சி அங்கு நடந்து வந்தது. நாடகக்கலை, தமிழ்த் தேசியத்தைப் பேசுவதற்கு அங்கு அச்சம் கொள்ளத் தேவையில்லாதிருந்தது. நிகழ்த்துக்கலையின் மூலம் மக்கள் மனங்களில் தமிழ்த் தேசிய இனச் சிந்தனையைப் புனல் ஊற்றாய்ப் பொங்க வைத்துக் கொண்டே இருப்பதற்கு அங்கிருந்த நாடக முயற்சிகள் உதவின. போர்ச்சூழலுக்கு முன்வரையும் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட பொங்குதமிழ் அரங்கு வடக்குப்பகுதியில் பிரசித்தமாயிருந்துள்ளது. வடக்கில் புலிகளின் ஆதரவுடன் தங்கள் முயற்சிகளை அங்குள்ளோர் உறுதியுடன் மேற்கொண்டு வந்திருந்தனர். தங்களின் அடையாளங்களான தமிழ்க்கூத்து வடிவங்களை உள்வாங்கிய, தமிழ்த் தேசிய இன அரசியல் பேசிய ‘மண்சுமந்தமேனியர்’,‘உயிர்த்தமனிதக்கூத்து’, ‘அன்னைஇட்டதீ’ போன்ற நாடகங்கள் ஈழத்தமிழர்களால் பெரும் வரவேற்பிற்குள்ளானவை. நேரிடைத் தமிழ்த் தேசியஅரசியலை அவை முன்னெடுத்து, புலிகளின் பண்பாட்டு அரசியலுக்கும் அவைபக்கபலமாக இருந்துள்ளன.
இத்தகைய தமிழ்த் தேசியஅரசியல் வீச்சு கிழக்கில் வடக்கின் போக்குடன் நிகழ்ந்துவரவில்லை. ஆயின் இப்பொழுது, கிழக்குப் பகுதியானது, வடமோடி, தென்மோடி எனும் பாரம்பரியக் கூத்துக்கலைகளை, அதுபோன்ற இன்னபிற கூத்துகளைக் கற்றவர்களைக் கொண்டு தங்களின் இன அடையாளமாய்ப் புதியவகையில் மீட்டுருவாக்கம் செய்துவரும் நிலையில், வடக்குப் பகுதியில் கலை வெறுமை பீடித்து எந்தச் செயல்பாடுமின்றித் தேங்கி நிற்கிறது. தாங்கள் உயர்த்திப் பிடித்த தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஏற்பட்டிருக்கிற தற்காலிகத் தொய்வு அவர்களின் செயல்பாடுகளை தளர்வடையச் செய்துள்ளது என்பது ஒருவகையில் உண்மையேயாயினும், இதிலிருந்து பெறப்படும் அனுபவங்கள் இன்னொரு புதியவகை அரங்கை நோக்கி அவர்களை நகர்த்தும் என்பதும் உண்மையே! ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்கப் போவதில்லை! தமிழ்த் தேசியத்தைப் பாடி ஆடிய வாயும் காலும் எத்தனைக் காலம் சும்மா இருக்கும் என்பதை யாரும் உறுதி கூற முடியாது. ஏனெனில் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதற்கான சூழல் இன்னமுன் கொதிநிலைக்குக் குறைவான இன்னொரு நிலையில் அங்கு இருந்து கொண்டிருக்கிறது என்பதுவே உண்மை! . .
இரண்டு பக்கத்தவர்களும் கூத்துக்கலையின் முக்கியத்துவத்தை, தமிழ்த் தேசியத்தின் அடையாளம் என்பதாக, மிகத்தெளிவாக உணர்ந்திருக்கின்றனர். சமூகத்தைப் பிளவுபடுத்தி, தனி மனிதர்களைப் பயத்தினூடே தனிமைப்படுத்தி, தன் இனமோதுகை அரசியலை மிக உறுதியாகக் கையிலெடுத்திருக்கும் ’லங்கா’ அரசுக்கு எதிரான தமிழ் இன அடையாளத்தை மீட்டெடுக்க, அதன் பழைமையைப் பேணி, சிலவேளைகளில் காலத்தேவைக்கேற்ப அதைப் புதுப்பித்து, அதை மீட்டெடுப்பது என்பதும் கூட இந்த நிலையில் மிகமுக்கியமானதுதான்!
தனிமைப்படுத்தப்பட்ட மக்கள், சமூகத்தளத்தில் கூடுமிடமாக இக்கூத்து நிகழ்த்துகைகள் அமையும் என்பது முக்கியம். தமிழ் மக்களைப் பிரித்து வைக்கிற சிங்கள தேசிய அரசியலுக்கு எதிராகத் தமிழ் மக்களை ஒன்றுகூட வைக்கும் தமிழ்த் தேசிய அரசியலை இந்தக் கூத்து அரங்குகள் மௌனமாய் முன்மொழிந்து கொண்டிருக்கும். இது, தங்கள் கலை அடையாளத்தின் வழி தங்கள் வாழ்க்கையை நினைவு கூறும் வாழ்வியல் நிர்ப்பந்தங்களுக்கு, பாதிக்கப்பட்டிருக்கிற மக்களை இயல்பாகவே இட்டுச் செல்லும் திறன் கொண்டது. நினைவுகளின் விளிம்பிலிருந்து தமிழ்த் தேசிய அடையாளங்களை அப்புறப்படுத்துவதற்கு எதிராக நினைவுகளில் தமிழ்த் தேசிய அடையாளத்தை உறுதியுடன் இருத்தும் காரியத்தை இது செய்து கொண்டிருக்கும். அரங்கானது, வெளித்தெரியாதிருக்கிற உண்மைகளை வெடிப்புற மனதிற்குள் பேசிக் கொண்டே இருக்கும். அதன் மூலம், பார்வையாளர்களான மக்கள் பகிர்வாளர்களாக மாறுவர். விவாதங்கள், அவர்களின் மனதிற்குள் மிக இயல்பாக உருப்பெறும். இதற்கான களமாக நிகழ்த்துகை வெளிகள் அமையும். சமூக மனிதர்களின் கரம்பற்றுகைகள் மிக இயல்பாகத்துளிர்விடும். அரங்கு அதைத்தான் செய்யும்- செய்ய முடியும்!
இதைப்போன்று எதுவொன்றையும் விவாதிக்கும் களமாக ஆக்க, வடக்கின் அரங்கியலும் அதற்குரிய சுழலை வரித்துக் கொண்டு, செயல்படவேண்டும். பாரம்பரியமோ அதனின்று உத்வேகம் பெற்ற புதியதோ, அரங்கு என்பது சமூகக்கூடுமிடம்! அரங்கு எதுவொன்றையும் பூடகமாகவோ வெளிப்படையாகவோ காலனறிந்து, இடனறிந்து மனசுக்குள் புதிய அரசியல்பேசும். நிகழ்த்துகையில் பார்வையாளரின் பங்கு பெறலின் போது, அவர்களின் உடலும் மனசும் நாடகத்திலிருந்து உயிர்த்தெழுந்து புதிய வாழ்வியல் உரையாடல்களாக்கப்படும். எதிரெதிரான இரண்டு பக்கத்து மனசுகளின் சொல்லாடல்களின் வழி இயங்கியல் தொழிற்படும். இருண்ட காலத்தின் அரங்கு இருண்ட காலத்தின் தன்மையையேகூட உரையாடலாக்கும்; இயங்கியல் நெறியில் அதைப் பேசும்! அரங்க இயங்கியல் வாழ்வியல் இயங்கியலாய்ப்பருண்மை பெறும்! அதைத்தான் அரங்கு செய்யும்! நினைவுகளைக்கிளறிவிடும். அர்த்தமுள்ள அவர்களின் செயல்பாடுகளை நினைவின் மேல்தளத்திற்கு அதுவே பூவின் மலர்தலாய்க் கொண்டு வரும். அவர்களின் சோர்விலிருந்து, அவர்களின் பயத்திலிருந்து, அவர்களின் வெறுமையிலிருந்து அவர்களை விடுவிக்கவேகூட அரங்கு அவர்களின் மனசுக்குள் புதியவகை உரையாடலை உருவாக்கும்.
ஆளுபவர்கள் புத்திசாலிகளாய் இருந்தாலுமேகூட, அரங்கு அதனினும் கூடுதல் புத்திசாலித்தனமாய்த் தொழிற்படக்கூடிய விந்தை செய்யவல்லது. உருவை மாற்றிக்கொண்டு உள்மனசுடன் பேசும் வல்லமை கொண்டது. எல்லாக் காலங்களிலும், எல்லாச்சமூகங்களிலும், எல்லாச் சூழல்களிலும் அரங்கு இப்படித்தான் தொழிற்பட்டிருக்கிறது. சமூகச்சிகிச்சை முறையாகவே செயல்படக்கூடிய தகுதி கொண்டது அது!
இதனை அனுபவமாய்க் கைக்கொண்டவர்கள் அவர்கள். இரண்டு வகையான முயற்சிகளும், அரங்கப்புரிதலும், ஈழத்தின் அவரவர்களின் சூழல்கள் உருவாக்கிக் கொடுத்திருப்பவை என்பதாகத்தான் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. போர்ச்சூழலில் கிழக்கை விடவும் வடக்கின் பாதிப்புகள் அதிகம். போருக்கு நேர் முகம் காட்டியவர்கள் அவர்கள்! உறவுகளை, உரிமைகளை, சொந்த நிலங்களை இழந்து நிற்பவர்கள் அதிகம். நிலங்களுக்கு நிகரானவை நிலத்தின் கலைகள்! பருண்மையான தங்களின் உடலுக்கு நிகரானவை தங்களின் உரிமை நிலங்கள்! உயிரைப்போல் அதனுடன் கலந்திருப்பது அவர்களின் உணர்வு! நிலத்தை இழந்து, அதன்மேலான உணர்வை இழக்காது வாழ்ந்து கொண்டிருக்கிற மானிட சமூகத்திற்கு உணர்வும் உடலுமாய் இப்பொழுது இருந்து கொண்டிருப்பது அவர்களின் கலைகள் மட்டுமே! அதில், மக்களைக் கூட்டமாய்ச் சேர்க்கும் கலை, மற்றவரின் முகத்தையும் மனசையும் நேரிடையாக வசீகரித்து உள்ளியங்கும் ஒரே கலை ‘அரங்கு’ மட்டுமே! இனியொரு சுதந்திரத்திற்கான தாவல், அவர்களுக்கு அரங்கிலிருந்துதான் தொடங்க வேண்டியதிருக்கும். சூழல் அதற்கான உந்து சக்தியைத் தரவல்லது.
நன்றி – பாரவி, தளம் (கலை இலக்கிய இதழ்): 1 இதழ் : 4, அக் – டிச 2013.
மு. இராமசுவாமி (https://www.facebook.com/pg/mu.ramasamyayya/about/?ref=page_internal_)