திரௌபதி அம்மன் வழிபாடு
பேரா.சீனிவாசன், ‘இவ்வாறு பல்லவர் ஆட்சி செய்த தொண்டை மண்டலத்தில் 10 மாவட்டத்தில் பாரதக் கதை பரவியது. அக்காலத்தே பாரதம் வழிபாட்டு நிலைக்கு மாறியது.’ என்கிறார். திரௌபதி அம்மன் வழிபாடு குறித்து களஆய்வு செய்த “ஹில்தபெய்தல்” என்ற மேல்நாட்டு ஆய்வாளர், ‘தமிழகத்தின் பல்லவர் ஆட்சிக் காலத்தில் பாரதக் கதை வெகுவாகப் பரவியதன் விளைபொருளாக திரௌபதி வழிபாட்டைக் காண முயன்றுள்ளேன்.’ எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
பல்லவர் காலத்தில் தமிழ் நாட்டில் பரவிய பாரதம் – பாரத வழிபாடு வன்னியர்களுடன் தொடர்பு பட்டதாக இருந்திருக்கிறது. “நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள் ஆவர். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்றவர் வன்னியர் குலத்தைச் சேர்ந்த பரஞ்சோதி என்கிற சிறுதொண்டர் ஆவார். இத்தாக்கத்தினால் வன்னியர்களிடையே அவர்கள் வாழும் பகுதிகளில் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாக ஏற்படத்தொடங்கியது. பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்தது. பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.” என்கிறது விக்கிபீடியாத் தகவல்.
வன்னிய புராணம், பாரதக் கதை – இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. பாரதம் படிப்பதற்கென்று பல மானியங்களை பல்லவ மன்னர்கள் அளித்துள்ளதை கல்வெட்டுகள் காட்டுகின்றன. பாரதக் கதையின் பாதிப்பால் உருவான திரௌபதி அம்மன் கோவில்களிலும், கூத்தாண்டவர் கோவில்களிலும் பாரதம்படித்தல் என்பது இன்றும் ஒரு பண்பாட்டு மரபாக விளங்கி வருகின்றது.
ஆயினும் 200 ஆண்டுகளுக்கு முன்னர், செஞ்சியை மையமாகக் கொண்ட யாதவ அரசர்கள் காலத்திலேயே திரௌபதி வழிபாடு எழுச்சி பெற்றது. பேரா.சீனிவாசன், நாட்டார் வழிபாடுகளில் காண முடிகிற எல்லா திரௌபதி வழிபாடு குறித்த ஹில்த்பெய்தலின் ஆய்வின் முதலாவது தொகுதி, செஞ்சிக்கு அருகேயுள்ள மேலச்சேரியைத் தென்னிந்தியாவின் திரௌபதி வழிபாடு உருவாவதன் துவக்கப் புள்ளியாக நிறுவுவதுடன், தமிழகத்தில் காணப்படுகிற திரௌபதி வழிபாடு தனக்கென ஒரு தொன்மத்தை உருவாக்கியிருப்பதாகவும், அந்தத் தொன்மம் செஞ்சியை மையமாகக்கொண்ட இந்து அரசின் வரலாற்றோடு இணைந்ததாகவும் உள்ளது என்கிறார். இந்தத் தொன்மத்தோடு தொடர்புள்ள கிளைக்கதைகள், தொன்மம் பரவிய விதம், ஊர்கள், இவ்வழிபாட்டில் ஈடுபட்டுள்ள சாதிகள் போன்றவற்றைக் களப்பணியில் தான் சேகரித்த மிக விரிவான தரவுகளைக் கொண்டு நிறுவுகிறார். எனக்குறிப்பிடுகிறார்.
“திரௌபதி அம்மனுக்கு ஒரு சன்னதி கட்டவேண்டுமெனில், ஆந்திரா தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள செஞ்சிக்குச் சென்று, அங்கு ஒரு குறிப்பிட்ட புனிதமான இடத்திலிருந்து மண்ணை எடுத்து, பின் கால்நடையாகவே வழியில் எங்கும் நிற்காமல் அந்த மண்ணை எடுத்து வரவேண்டும் என்று ஒரு நம்பிக்கை இன்றும் இருக்கிறது. முந்தையத் தலைமுறையினர் பலர் இதற்கு சான்றளிப்பார்கள். இந்தக் கதைக்குள் செஞ்சி எப்படி நுழைந்து கொண்டது என்பது தெரியவில்லை.” என்கிற வெங்கட் சுவாமிநாதனின் குறிப்பும் திரௌபதி அம்மன் வழிபாட்டில் செஞ்சி பெற்றிருக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
தமிழ் நாட்டில் பரவிய பாரத வழிபாடு, திரௌபதி அம்மன் வழிபாடாகவே அமைந்தது. இது தமிழ் நாட்டிற்குரிய சிறப்பம்சமாகும். பேரா.சீனிவாசன், “தமிழ்நாட்டில் பாரதம் திரௌபதி அம்மன் விழாவாகவே அறியப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத நிலை பாரதத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ளது.” எனக்கூறுகிறார். பாரதத்தின் முதன்மைப் பெண் பாத்திரமான திரௌபதியை வழிபடும் தமிழர்கள், அதன் வழியாக பாரதத்தை வழிபடுகிறார்கள். திரௌபதி அம்மன் வழிபாட்டிலே, வழிபாடும் கூத்து மற்றும் பிரசங்கம் எனும் நிகழ்த்து கலைகளும், பாரதப்படிப்பும் இணைந்துள்ளதும் விசேடமானதொரு அம்சமாகும்.
“தொண்டை மண்டலம் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடமேற்குத் தமிழகப் பகுதிகளில் வழிபாட்டு மரபாக பாரதம் இன்றும் உயிரோட்டத்தோடு செயல்படுவதைக் காண்கிறோம். காலந்தோறும் வழிபாட்டு மரபுகளின் மடைமாற்றத்தில் பாரதக் கதை ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டறிய முடிகிறது. வட இந்தியக் கதை மரபு தென்னிந்திய மரபாக உருப்பெற்ற வரலாறு சுவையானது. வடக்கு – தெற்கு எனும் முரண்கள் இதற்குள் அழிந்து போவதைக் காண்கிறோம். தன்வயப்படுத்திக் கொள்ளும் நிகழ்வும் நடந்தேறியுள்ளது.” சமூக வரலாற்று மாணவர்களுக்கு இவை மிகவும் சுவையானவை என்று கூறுகிறார் பேரா.சீனிவாசன்
வடமொழிப் புராணத்திலுள்ள திரௌபதியின் அக்கினிப் பிரவேசத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்ததில் வில்லிபுத்தூரருக்கு முக்கியப்பங்குண்டு. செஞ்சியை மையப்படுத்தி உருவான திரௌபதித் தொன்மத்தின் தனித்தன்மை நிறுவியதில் அடைக்கல பாரதியார், ஆதிகேசவ பாரதியார் முதலிய பாட்டு வாத்தியார்களின் பங்கு முக்கியமானது என்பது “ஹில்தபெய்தல்” அவர்களின் கருத்தாகும்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி மற்றும் இலங்கையிலும் திரௌபதி அம்மனுக்கு தனிக் கோயில்கள் உள்ளன; திரௌபதி அம்மனுக்கு தனித்துவமான வழிபாடும் நிகழ்த்தப்பட்டும் வருகிறது.
இலங்கையின் கிழக்கில்; அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பழுகாமம் மற்றும் புளியந்தீவு – பாஞ்சாலிபுரத்திலும் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயில்கள் பிரசித்தமானவை. இதற்கப்பால், இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் உடப்பு மற்றும் முந்தல் கிராமங்களிலும் பிரசித்தமான திரௌபதி அம்மன் கோயில்கள் உள்ளன. இங்கு ‘மண்ணின் மரபை’யொட்டிய திரௌபதை அம்மன் வழிபாடு நிகழ்த்தப்பட்டும் வருகிறது. இலங்கையில் நிலவும் திரௌபதி அம்மன் வழிபாட்டை அறிந்து கொள்ள, தென்னிந்தியாவின் – தமிழகத்தின் திரௌபதி அம்மன் வழிபாடு பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.
தமிழ் நாட்டில் நிலவும் திரௌபதி அம்மன் வழிபாடு தொடாபாக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரிவான அத்தகவல்களில் தேவையானவற்றை தேவைப்படும் இடத்து பின்னர் விபரிக்க முனைகிறேன். கேரளாவில் பெருமளவிற்கு பாண்டவர் கோயில்களும் வழிபாடும் நிலவுகின்றதனை அறியமுடிகிறது.
கர்நாடகாவில் நடைபெறும் திரௌபதி அம்மன் கரகத் திருவிழா பற்றிய தகவல்களை அண்ணல் பக்கங்களில் அறிய முடிகிறது. பெங்களூர் நகரில் சிட்டி மார்கெட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ தர்மராய சுவாமி திருகோயிலில் நடத்தப்படும் கரக திருவிழா, விஜயபுரா திரௌபதி அம்மன் கோயில் பற்றிய தகவலைத் தருகிறது “அண்ணல் பக்கங்கள்”.
“அண்ணல் பக்கங்கள்” இன் தகவல்களிலிருந்து, கர்நாடக மாநிலம் முழுவதிலும் திரௌபதி அம்மன் ஆலயங்கள் காணப்படுகின்றன, இந்த ஆலயங்களில் நடத்தப்படும் கரக திருவிழா மிகவும் புகழ் பெற்றது, இந்த ஆலயங்களில் திகிலர்களே அறங்காவலர்களாகவும் பூசாரிகளாகவும் திகழ்கின்றனர், தமிழ்நாட்டில் கேட்கும் அதே சந்தம், தாளம், ராகத்துடன் அதே உச்சரிப்பில் தமிழ் பாடல்களை கன்னடம் அல்லது தெலுங்கில் எழுதி வைத்து கொண்டு பாடல்களை பாடுகின்றனர் என்ற தகவலை அறிய முடிகிறது.
மேலும், கர்நாடக மாநிலத்தில் திகிலர் என்ற பெயரில் வன்னியகுல க்ஷத்ரியர்கள் வாழ்ந்து வருகின்றனர். தீக்குலத்தவர் என்பதன் சுருக்கமே திகிலர். வரலாற்றுக்கு எட்டிய காலம் தொட்டு பெங்களூர் உள்ளிட்ட பூர்வீக தமிழ் பகுதிகளில் திகிலர்கள் வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு வரலாறு மற்றும் சமூகவியல் நூல்கள் திகிலர்களை தமிழர்கள் என்றும் குறிப்பாக வன்னியகுல க்ஷத்ரியர்கள் என்றும் கூறுகின்றன. இவர்கள் பேசும் மொழி கன்னடம் என்றாலும் அது முழுமையான கன்னடமாக இல்லை. தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளின் கலவையாக இருக்கிறது என்னும் தகவலை அறிய முடிகிறது. திகிலர்கள் பாரம்பரியமாக நடனமாடுவதற்கான இசை சிலம்புளை கையில் மாட்டி பயன்படுத்துவர் என்ற தகவலையும் அறியமுடிகிறது.
மேலும், “கோயிலில் உள்ள வீரகுமார சிலை பற்றியும், கரக விழாவின் போது வாள்களை ஏந்தி, அம்மன் உத்தரவு கிடைத்தால் தங்கள் மார்பில் வாளால் தாக்கிக் கொண்டு போர்க்கலையை நிகழ்த்திக் காட்டுபவர்கள் வீரகுமாரர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.” “கரகம் ஏந்தி வருபவரை வீரக்குமாரர்கள் பாதுகாப்பாக அழைத்து செல்வர்” என்ற தகவலையும் அறிய முடிகிறது.
தொடரும் …
உசாத்துணைகள் :
பேரா. வீ. அரசு, பாரதத்தைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட வரலாறு: சில குறிப்புகள் [http://www.viruba.com/final.aspx?id=VB0003350]
பேரா.சீனிவாசன், திரௌபதி வழிபாடு: விரிவடையும் அர்த்தங்கள் பகுதி 1 https://minnambalam.com/k/2017/11/05/1509820224
இரா. சீனிவாசன் (இணைப்பேராசிரியர் – தமிழ்த்துறை மாநிலக்கல்லூரி, சென்னை ) பதிப்புரை – பாரதத்தைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட வரலாறு: சில குறிப்புகள் [http://www.viruba.com/final.aspx?id=VB0003350]
பேரா.சீனிவாசன், உரை : தமிழர் வரலாறு : பண்பாட்டு விவாதங்கள் (திரௌபதை வழிபாட்டை முன்வைத்து)
https://www.youtube.com/watch?v=fdFeAhsarlY&list=PL47kBp0-hhot-T2H2UHbb1uYUPOXuhzpa&index=7
அ.பாஸ்கரன், புனைவுகளால் கட்டமைக்கப்படும் வரலாறும் வரலாற்றைப் புனையும் வழிபாடும் (திரௌபதை வழிபாட்டை முன்வைத்து)
http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/3655-ungal-noolagam-may17/33142-2017-05-25-18-21-54
வெங்கட் சாமிநாதன், “தெருக்கூத்து – பகுதி 2” : https://solvanam.com/?p=39688
அண்ணல் பக்கங்கள் : http://annalpakkangal.blogspot.com/2012/07/blog-post_13.html