வடமொழியான சமஸ்கிருதத்தில் வியாச முனிவரால் இயற்றப்பெற்ற பாரதம்; தமிழ்ச் சமூகத்தில் காவிய மரபு, நிகழ்த்து மரபு, வழிபாட்டு மரபு எனும் பல்நிலைகளில் ஆழமாகவே உள்வாங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்ச் சமூகத்தில் கதையளவில் புகழ்பெற்றது மகாபாரதம். பாரதம் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களிலேயே இடம் பெற்றிருக்கின்றன. புறநானூற்றில் ‘…ஈரைப்பதின்மரும் பொருது களத்தொழிய பருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தாய்…’ என்று பாரதம் தொடர்பான தகவல் குறிப்பிடப்பட்டள்ளது. “சங்க இலக்கியத்தில் காணப்படும் மகாபாரதச் செய்திகளைத் தொகுத்துக் காணும் பொழுது கலித்தொகையில் மிகுதியாக குறிப்புகளைக் அறிய முடிகிறது. மகாபாரதச் செய்திகள் மரச்சிறப்பையும் கொடைச்சிறப்பையும் வெளிப்படுத்துவதற்கு உவமைகளாகப் பயன்பட்டுள்ளன. அவை பீமன் துரியோதனைத் தொடையிலே அடித்து விழ்த்திமை – அசுவத்தாமனின் தந்தையைக் கொன்றவனைப் பழிதீர்த்துக் கொண்டமை – பாண்டவர்கள் நூற்றுவர்களை வெற்றி கொண்டமை – மகாபாரதப் போர்க்களச்சிறப்பு போன்ற செய்திகள் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. இச்செய்தி தமிழகத்தில் பரவியிருந்தமையால்தான் புலவர்கள் உவமையாக எடுத்தாண்டனர் என்பது அறியமுடிகின்றன.”, என்றும் “பாண்டவர்களைச் சுட்டுவதற்கு ஐவர் என்றும், கௌரவர்களைக் குறிப்பதற்கு நூற்றுவர், ஈரைம்பதின்மர் என்றும் பெயர்களே காணமுடிகின்றன.” என்றும் குறிப்பிடுகிறார் சி.புவியரசு. புறநானூறு, புதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களிலும் மகாபாரதம் தொடர்பான செய்திகள் காட்டப்பட்டுள்ளன.
பாரதக் கதை தொடர்பான நூல்கள்
தமிழில் பாரதக் கதை தொடர்பான நூல்கள் பல வெளிவந்துள்ளன. ‘பாரதத்தை தமிழில் முதன்முதலாகப் பாடியவர், கடைச்சங்கப் புலவர்களில் ஒருவராகிய பெருந்தேவானர் என்பர். அதனால் அவருக்குப் பாரதம் பாடிய பெருந்தேவானர் என்னும் பெயர் வழங்கலாயிற்று. ஆனால் அப்பாரதம் கிட்டாமல் போயிற்று. தொல்காப்பியவுரை, வீரசோழியவுரை முதலியவற்றிலே மேற்கோளாக எடுத்தாளப்பட்டு ‘இது பெருந்தேவனார் பாட்டு’, ‘இது பாரதப் பாட்டு’, என்று குறிப்பிடப்பட்டிருக்கின்ற பாட்டுக்களுள் இப்பொழுது கிடைத்தவற்றைத் திரட்டி, ‘பெருந்தேவனாரின் பாரதம் என்னும் பாரத வெண்பா’ பதிப்பின் முகவுரையின் பின்னே சேர்த்திருக்கிறார் பண்டித அ.கோபாலையன்.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில், 3 ஆம் நந்திவர்ம பல்லவன் காலத்தில், பாரதத்தை பாட்டும் வசனமும் கலந்த நடையில் ‘பாரத வெண்பா’ எனப்பாடியிருப்பவரும் பெருந்தேவானர் என்றே அழைக்கப்படுகிறார். பாரதவெண்பாவும் முற்றும் இப்பொழுது கிடைக்கவில்லை. கிடைத்த எல்லாவற்றையும் ‘பெருந்தேவனாரின் பாரதம் என்னும் பாரத வெண்பா’ என 1925 இல் பதிப்பித்திருக்கிறார் பண்டித அ. கோபாலையன்.
“பெருந்தேவனார், வில்லிபுத்தூரர், நல்லாப்பிள்ளை ஆகிய மூன்று பெருங்கவிஞர்கள் பாரத நூல்களை இயற்றியுள்ளனர். இவற்றுடன், அரங்கநாதக் கவிராயர் இயற்றிய பாரதம், கச்சாலையர் இயற்றிய மகாபாரதச் சுருக்கம், செய்யிது முகம்மது அண்ணாவியார் இயற்றிய சாந்தாதி அசுவமகம் முதலிய பெருநூல்களும் உள்ளன. சண்முகக்கவிராயர் இயற்றிய இரண்டாயிரம் பக்கங்களில் விரிந்துகிடக்கும் வசன காவியமும் உள்ளது. இவற்றிற்கெல்லாம் மணிமுடி வைத்ததுபோல் பாரதியார் இயற்றிய பாஞ்சாலி சபதம் என்ற காவியமும் உள்ளது.” என தமிழில் தோன்றிய பாரத நூல்கள் பற்றிய விபரத்தைத் தருகிறார் பேராசிரியர் இரா.சீனிவாசன். தென்புல வழக்குப் பாடம் என்று அழைக்கப்படும் சுமார் 99,000 சுலோகங்கள் கொண்ட கிரந்த வரிவடிவிலான மகாபாரதத்தை அச்சில் பதிப்பித்த கும்பகோணம் மத்வவிலாச புத்தகசாலைத் தலைவர் கிருஷ்ணாசாரியர் வெளியிட்ட, ‘கும்பகோணம் பதிப்பு’ம் முக்கியமானதொரு நூலாகம். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுமுள்ளார்.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூரரால் இயற்றப்பட்ட வில்லிபாரதம், 18 ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் இயற்றப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதம் முழுமையாகக் கிடைப்பவை, நன்கு அறிமுகானவை. வியாசரை முதல் நூலாசிரியராகக் கொண்ட வில்லிபுத்தூரார் தமக்குமுன் வழங்கிய சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பாரத வெண்பா, வடமொழியிலமைந்த பாலபாரதம், மக்களிடையே வழங்கிய பாரதம், கிளைக்கதைகள், நாட்டுப் பாடல்கள், பழமொழிகள் ஆகியவற்றை மனத்தில் கொண்டு தமது நூலைப் பாடினார் என்பர்.
தொடர்ந்து பாரதக் கதை தொடர்பான படைப்புக்கள் இன்று வரை படைக்கப்பட்டு வருகிறது. ஜெயமோகன் மகாபாரதத்தை “வெண்முரசு” என்ற பெயரில் நாவல் வடிவில் [நாவல் வரிசை] ஜனவரி 2014 முதல் எழுதிக்கொண்டிருக்கிறார். ஜெயமோகனின் இணையதளத்தில் தினமும் ஒரு அத்தியாயம் வீதம் வெளிவந்து கொண்டிருக்கிறது. கிழக்கு பதிப்பகம் வெண்முரசின் அனைத்து நாவல்களையும் சாதாரணப் பதிப்பாகவும் சேகரிப்பாளர்கள் பதிப்பு எனும் செம்பதிப்பாகவும் வெளியிடுகிறது. பாரதக்கதையின் மறுவாசிப்பு சார் படைப்பக்களும் வந்துள்ளன. இதனைவிட பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் மகாபாரதம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாரதப்படிப்பு
தமிழகத்தில் பல்லவர் காலத்திலேயே பாரதம், பாரதப்படிப்பு என்ற வகையில் பிரபல்யம் பெற்றது என்பர். பல்லவர் காலத்தில், ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் காலத்தில் பாரதப்படிப்பு பிரபலயம் பெற்றது. “சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் கி. பி ஏழாம் நூற்றான்டில் பகைமை வளர்ந்தது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்மன் (மாமல்லபுரம் நகரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த அரசன் மாமல்லன்), இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர்.” என்கிறது விக்கிபீடியாத் தகவல்.
நிகழ்த்துகலைகள்
நிகழ்த்து மரபின் பல்வேறு பரிமாணங்களில் பாரதக்கதை தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவியுள்ளது. “காவிய, வசன மரபுகளைப் புறந்தள்ளி தனக்கென புதிய மரபை பாரதக் கதை தமிழக நிகழ்த்து மரபில் கொண்டிருக்கிறது எனலாம்.” என்கிறார் பேராசிரியர் வி.அரசு.
பிரசங்கம், கூத்து முதலிய பலவகையான நிகழ்த்துகலை வடிவங்களிலும் பாரதக்கதை மக்களிடம் பரவியுள்ளது. இத்தகைய பல துறைகளிலும் எழுத்து வடிவம் பெற்றுள்ள பிரதிகள் ஏராளமாகவும் உள்ளன. தமிழ்நாட்டில் பாரதக் கதையை அதிகமாகவும் முழுமையாகவும் மக்களிடம் பரப்பியது பிரசங்கம் என்ற நிகழ்த்துகலை வடிவம்தான் என்கிறார் பேராசிரியர் இரா.சீனிவாசன். அதேசமயம், தமிழ்நாட்டில் பாரதம் என்றவுடன் நினைவுக்கு வருவது தெருக்கூத்து. தெருக்கூத்தைத் தவிர்த்துவிட்டு பாரதம் பற்றிப் பேசமுடியாது என்ற அளவுக்குப் பாரதம் தெருக்கூத்துடன் பிரிக்க முடியாத தொடர்பு கொண்டுள்ளது என்றும் கூறுகிறார் பேராசிரியர் இரா.சீனிவாசன்.
தொடரும்…
உசாத்துணைகள்:
சி.புவியரசு.,[முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்], “சங்க இலக்கியத்தில் மகாபாரதப் பதிவுகள்”, [http://www.geotamil.com/pathivukalnew/ index.php?option=com_content&view=article&id=2698:2015-05-12-02-54-10&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82]
இரா. சீனிவாசன் (இணைப்பேராசிரியர் – தமிழ்த்துறை மாநிலக்கல்லூரி, சென்னை ) பதிப்புரை – பாரதத்தைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட வரலாறு: சில குறிப்புகள் [http://www.viruba.com/ final. aspx?id=VB0003350]