“அரங்கம்“ மட்டக்களப்பில் இருந்து ஒரு குரல் பத்திரிகையாக, இணைய வானொலியாக 23.02.2018 இலிருந்து
பல களங்களை கண்டதுதான் இந்த கிழக்கு மண். ஏற்ற இறக்கங்களுடனான பல திடல்கள் அதில் அடக்கம். போர் என்ற “தீ” எரித்துப்போன மண்களில் இதுவும் ஒன்றே.
ஆனால், இலங்கையின் ஏனைய பகுதிகளில் இல்லாத ஒரு பிரத்தியேகமான சூழ்நிலை இங்கு எஞ்சி நிற்கிறது. மூவின மக்கள் வாழ்வது இங்கு சிறப்பு என்றாலும், ஏனைய சமூகங்கள் வளர்ச்சிபெற முயற்சித்த வேளை, ஒரு சமூகம் மாத்திரம் போரினால் இடிந்து போனமை சமூகச் சமநிலையை குழப்பியுள்ளது.
அந்தச் சமநிலை பேணப்படும் போது மாத்திரமே அனைத்து இனங்களும் இணக்கமாக வாழமுடியும். அந்தச் சமநிலையை ஏற்படுத்துவதற்கான முன்னோடி விவாதங்களுக்கான களமே இந்த “அரங்கம்”.
கிழக்கிலங்கை தமிழ் மக்களின் சமூக, பொருளாதார, கலை, கலாச்சார மற்றும் அரசியல் நிலவரங்களை இது பேசும். அதை பேசவிளைபவர்களுக்கு ஒரு தளமாக இது அமையும்.
இந்த அனைத்து அம்சங்களிலும் கிழக்கிலங்கை தமிழர் பல காரணங்களால் பிந்தங்கி நிற்கிறார்கள் என்பது இங்குள்ள பல தரப்பினரதும் கருத்து. அதனுடன் “அரங்கம்” இணங்கும் அதேவேளை, அதில் முரண்படுபவர்களுக்கும் அது களம் தரும்.
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய ஆரோக்கியமான விவாதங்களுக்கான ஒரு கனதியான தளமாக நிலைப்பதுவே எமது கடமை. அதற்கு இந்த மண்ணினதும் இதன் மீது அக்கறை கொண்ட அனைவரினதும் ஆதரவை நாம் நாடி நிற்கின்றோம். மீண்டும் மிடுக்காய் ஒரு சக வாழ்வுக்கான பயணத்தை தொடருவோம். எமது முதல் அடியை பலர் தொடர வழி செய்வோம்.
பூபாலரட்ணம் சீவகன்