இங்கு தமிழர் வட்டாரங்களில் தற்போதைய பேச்சு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் பல சபைகளில் ஆட்சியமைக்க, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்(ஈபிடிபி) உதவியை பெற்றிருக்கிறது என்பதும், அதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கையை அடகு வைத்துவிட்டது, அல்லது கொள்கையில் இருந்து தவறிவிட்டது என்பதுந்தான்.
இது வடக்கு பிரச்சினையாக இருந்தாலும், கிழக்குக்கும் கொஞ்சம் பொருந்தும்.
இந்த நிலைமைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பை தள்ளியது தற்போதைய மிகவும் முன்னேற்றகரமான கலப்புத் தேர்தல் முறை.
இந்த விசயத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் கூட கையில் எடுத்து த.தே.கூவின் கொள்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்படி ஆட்சியமைக்கலாமா, அதன் மூலம் அதன் கொள்கை தவறவிடப்பட்டதா என்று பார்க்க வேண்டியது முதல் விடயம். அப்படி கொள்கை தவறவிடப்பட்டதாக கூறுபவர்கள், சுட்டிக்காட்டுவது ஈபிடிபி ஒரு துரோகக் கட்சி, ஆகவே அதனோடு சேர்ந்தது தவறு என்பதாகும்.
இந்த “யார் துரோகி” என்ற விவாதம் ஒரு வகை “தூய்மை வாதம்”. மறுபுறம் பார்த்தால் நாம் மட்டுமே புனிதர், எதிர்த்தரப்பு துரோகி என்று வர்ணிக்க புறப்படுவது, ஒருவகை “பாசிசம்”.
ஈபிடிபியை பொறுத்தவரை அதனை குறைகூறுபவர்கள் சொல்வது அது கொலைகாரக் கட்சி மற்றும் அரசாங்கத்தோடு சேர்ந்திருந்தவர்கள் என்று.
தமது அரசியல் ரீதியான எதிரிகளுக்கு “இயற்கை மரணம் கிடையாது” என்று எழுதியும் பேசியும் வந்தவர்களின் வழி வந்ததுதான் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
ஆயுதம் தூக்கியவர்களை கொலைகாரர்கள் என்று விலக்க அவர்களுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது. அந்தக் கொலைகளுக்கு, வன்செயல்களுக்கு தூண்டியவர்கள் இவர்கள். இவர்களின் தூண்டுதலால்தான் இளைஞர்கள் வன்செயல் பாதையை ஒரு காலத்தில் தேர்ந்தெடுக்கவும், அது “அவர்கள் கூறுவது போல” லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் பலியாகவும் காரணமானது. நான் இங்கு வன்செயலை ஆதரிக்கவில்லை. ஆனால் யாரும் உத்தமரில்லை என்பதையே கூறவிளைகிறேன்.
அடுத்தது, அரசாங்கத்தோடு சேர்ந்து ஈபிடிபி செயற்பட்டது என்ற கருத்து. இது குறித்து இனியும் கேலி பேசிக்கொண்டிருப்பது, எந்த தமிழ் கட்சிக்கும் முடியாத காரியம். யார் அரசோடு சேர்ந்து, என்ன செய்தார்கள் என்பதை ஆராய ஒரு நீண்ட கட்டுரைத் தொடரே தேவைப்படும்.
ஆனால், ஈபிடிபி பகிரங்கமாக தான் நினைத்ததை செய்திருக்கிறது. அதனால், அந்தக் கட்சியை பாராட்டலாம். அதன் மூலம் அந்தக் கட்சி ஆற்றிய பணிகள்தான், அந்தக் கட்சி மீதான பலதரப்பு குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் வடக்கில் அதற்கு கணிசமான ஆதரவுத் தளம் ஒன்றை தக்க வைக்க உதவியுள்ளன. அந்தக் கட்சிக்கு வாக்களித்த வடக்கு மக்களின் கருத்தை வெறுமனே புறக்கணிக்க முடியாது.
ஆகவே, இந்த தூய்மை வாதம் பேசுவது தவறு என்பது ஒருபுறம் இருக்க, அப்படியான வாதத்தை முன்வைக்க இனியும் இங்கு எவருக்கும் அருகதை இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியாக வேண்டும். அந்த வகையில் முதலமைச்சர் சி. வி. விக்னேஷ்வரனின் கருத்தும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. அவரும் அந்த அருகதையை எப்போதோ இழந்துவிட்டார்.
அடுத்தது தேர்தல் முறைமை குறித்த கருத்து. உண்மையில் இந்த தேர்தல் முறைமை மிகவும் நவீனமானது. ஒரு மிகமிகச் சிறிய சிறுபான்மை குழுவுக்கும், அல்லது சிறிய மக்கள் தொகைக்கும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யக் கொண்டுவரப்பட்டது.
ஆனால், இங்கு அரசியல் கட்சிகளால் கூறப்படும் கருத்து, “இது ஆட்சியமைப்பதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது” என்பதாகும். சிறிய மக்கள் குழுவுக்கும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதால், நேரடி வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்படும் பெருந்தொகையான மக்களுக்கும் இது பிரதிநிதித்துவம் வழங்குகின்றது. ஆகவே ஒரு சிறிய வாக்கு வீதத்தால் மாத்திரம் வெற்றி கொண்ட கட்சி தாம் அனைவரையும் அடக்கி ஆளுவதை இது தடுக்கிறது. இது ஜனநாயகத்தின் உச்சக் கட்டம்.
அந்த ஜனநாயகத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ப, தமக்கு முரணாக இருந்தாலும் மாற்று கருத்து கொண்ட மக்கள் குழுவின் கருத்துக்கும் மதிப்பு கொடுத்து அனைவரும் சேர்ந்து ஆட்சியமைத்து செயற்படுவதுதான் இங்கு ஜனநாயக நாகரீகம். அதனை புரிந்துகொள்ளும் பக்குவம் இந்தக் கட்சிகளுக்கு இல்லை என்பதுதான் இங்கு பிரச்சினையே ஒழிய தேர்தல் முறையை குறை கூறுவது ஜனநாயக பாதையில் பின்னோக்கிச் செல்வதற்கு நிகரானது.
மக்கள் கருத்துக்கு மதிப்புக்கொடுக்காமல், மாற்றான கருத்துக்களை மதிக்காமல் போனதுதான் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் இன்று படுகின்ற துன்பங்களுக்கு காரணம். அதனை உணர மறுக்கின்ற அரசியல் கட்சி எதுவாக இருந்தாலும் அதன் அரசியல் பக்குவத்தை கேள்விக்கு உள்ளாக்க வேண்டுமே ஒழிய தேர்தல் முறையை மாற்ற நினைப்பது ஒரு மடத்தனம்.
அடுத்து இன்னும் இங்கு எஞ்சி நிற்கும் ஒரு கேள்வி, “சரி, அப்படியானால், ஈபிடிபியோடு த, தே.கூ கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கலாமா” என்பதுதான்.
ஆம், மக்களுக்கு தொண்டாற்றுவதானால், அதனை செய்யலாம். அதில் தவறில்லை. அது வரவேற்கப்பட வேண்டிய முன்னேற்றகரமான விடயம். ஆனால், இங்கு என்ன நடக்கிறது? நாங்கள் ஈபிடிபியுடன் பேரம் பேசவில்லை, ஆதரவு கேட்கவில்லை என்று கூறி, எம்.ஏ.சுமந்திரன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் ஒழிந்து விளையாடுகிறார்கள். ஆனால், உண்மை நிலை அப்படியில்லை என்றே வரும் செய்திகள் கூறுகின்றன.
“ஆம், மக்கள் நலனுக்காக, நீடித்த ஆட்சியின் மூலம் அவர்களுக்கு பணி செய்வதற்காக எங்கள் எதிரிக்கட்சியாக இருந்தாலும் ஈபிடிபியிடம் ஆதரவு கேட்டோம்” என்று சொல்லும் அரசியல் துணிபு, வெளிப்படைத்தன்மை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுக்கு கிடையாது என்பதுதான் இங்கு பிசகு.
ஈபிடிபியும் இங்கு ஒரு தவறைச் செய்திருக்கிறது. தாம் வழங்கு ஆதரவை வெளிப்படையாக அறிவித்து அவர்கள் வழங்கியிருக்க வேண்டும். யாழ் மாநகர சபையின் மேயர் தெரிவின் போது அந்தக் கட்சியின் நடவடிக்கையில் தடுமாற்றம் தெரிந்தது.
ஆகவே இங்கு அனைத்து அரசியல் கட்சிகளிடம் மக்கள் எதிர்பார்ப்பது, இருக்கும் அரசியல் வாய்ப்புக்களை பயன்படுத்தி 30 வருட போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே ஒழிய “அந்த முறைமை பிழை, இந்த முறைமை பிழை” என்று ஜனநாயகத்துக்கு பொருந்தாத விடயங்களை கூறி, ஓடி ஒழிந்து விளையாடி, மக்கள் நிலைமை மேலும் மோசமாக்குவது அல்ல. இருக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்கு முன்னேற முனையுங்கள். அரசியலில் புறமுதுகு காட்டாதீர்கள். அரசியல் கோழைகள் எங்களுக்கு தேவையில்லை.
நன்றி : ‘அரங்கம்’