அறியப்பட்டனவும் அறியப்படாதனவும் – கிரான் விஜய்
இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியலாய்வுகளும், மட்டக்களப்பில் மிக அண்மைக்காலங்களில் தொல்லியல் தலங்களில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளும் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலத்திலிருந்து மட்டக்களப்புத் தேசத்திலே மக்கள் வாழ்ந்து வருகின்றமையை உறுதிப்படுத்தியுள்ளன.
மிக அண்மைக்காலங்களில் மட்டக்களப்பில் தொல்லியல் தலங்களில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளினால் பெருமளவில் வெளிவந்துள்ள தகவல்கள், மட்டக்களப்புத் தேசத்தின் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலத்தைப் புரிந்து கொள்வதில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியலாய்வுகள் மூலம் கிழக்கிலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலத்தைச் சேர்ந்த, கல்லாயுதங்களைப் பயன்படுத்திய மக்கள் வாழ்ந்துள்ளமை அறியப்பட்டிருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் ‘லெனம‘ குகையில் கற்கருவிகளைப் பயன்படுத்திய மக்கள் வாழ்ந்து வாழ்ந்தனர் என்பதுவும் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் ‘சியம்பக அண்டுவ‘க்கு அண்மையிலுள்ள குகையில் இத்தகைய கற்கால மக்கள் வாழ்ந்தனர் என்பதுவும் தொல்லியலாய்வுகள் மூலம் அறியப்பட்டிருக்கிறது. இங்கு வாழ்ந்தவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலத்தைச் சேர்ந்த நாடோடி வேட்டையாடும் சமூகத்தினராவர்.
தமிழகத்தலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து, இலங்கையின் பல பிரதேசங்களிலும் பரவி வாழ்ந்த நாடோடி வேட்டைச் சமூகத்தினரின் ஒரு பிரிவினரே, இலங்கையிலும் இலங்கையின் கிழக்குப் பிரதேசத்திலும் வாழ்ந்த நாடோடி வேட்டைச் சமூகத்தினராவர். இவர்களே இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தின் ஆதிகுடிகளாவர்.
இவர்களின் ஆதிகால வசிப்பிடங்கள் அம்பாறை மாவட்டத்திலமைந்துள்ள ‘லெனம‘ குகையும் ‘சியம்பக அண்டுவ‘க்கு அண்மையிலுள்ள குகையுமாகும். இதன்றி கிழக்கிலங்கையின் வனப்பிரதேசங்களில் உள்ள பல குகைளிலும் ஒதுக்கான பாறைகளிலும் இத்தகைய மக்கள் வாழ்ந்திருக்காலம் என்றே நம்பப்படுகிறது. அதனை உறுதிப்படுத்திக் கொள்ள அவ்விடங்களில் தொல்லியலாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிழக்கிலங்கையின் கடற்கரையோரங்களிலும் இவர்கள் வாழ்ந்திருக்கலாம்.
வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலத்தையடுத்த காலத்தில், (குறுணிக்கற்காலத்தில்) மட்டக்களப்புத் தேசத்தில் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளும் இலங்கை வரலாற்று நூல்களில் உள்ள குறிப்புக்களும், மட்டக்களப்பு பூர்வு சரித்திரத்திரத்தில் இடம் பெறும் குறிப்புக்களும் அண்மைக்கால மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியலாய்வுகளும் அறியச் செய்திருக்கின்றன.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் குறுணிக்கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் இலங்கையில் பரவலாக வாழ்ந்தமை அறியப்பட்டுள்ளது. எனினும் மட்டக்களப்புத் தேசத்தில் இத்தகைய அகழ்வாய்வுகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் அண்மைக்காலத்தில் கண்டறியப்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுத் தொல்லிடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படும் போது இது உறுதிசெய்யப்படலாம் என்றே கருதப்படுகிறது. ஏனெனில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் குறுணிக்கற்கால வாழிடங்களில் பெருங்கற்காலப் பண்பாட்டு சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சி.பத்மநாதன், இரு பண்பாடுகளுக்கும் உரிய சின்னங்கள் பலவிடங்களில் அண்மையிலோ அல்லது கலப்புற்றோ காணப்படுவது குறிப்பிடற்குரியது எனக் குறிப்பிடுகிறார்.
இலங்கை வரலாற்று நூல்களில் வட இந்தியக் குடியேற்றங்களிற்கு முன்னர் இலங்கையில் மக்கள் வாழ்ந்தமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக இயக்கர், நாகர்கள் பற்றிய தகவல்களைக் குறிப்பிடலாம். மட்டக்களப்பு பூர்வ சரித்திரமும் இயக்கர், நாகர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கிறிஸ்துவுக்கு முன் 2350 ஆம் ஆண்டில் (கலி எண்ணூறில்), குருகுலத்தில் அண்டிய நாகர் கூடி அத்தி நாட்டிலிருந்து மீண்டு, இலங்கைக்கு வந்து வாழத்தொடங்கினார்கள் என்கிறது. கிறிஸ்துவுக்கு முன் 2250 ஆம் ஆண்டில் (கலி தொண்ணூறாண்டில்) நாகர்கள், இலங்கையில் வலிய இயக்கரோடு கலந்தனர் எனவும், இருவர் மரபும் ஒன்றாகியாது என்றும் கூறுகிறது. இவர்கள், ‘நலிவில்லா நிருபஞ் செய்து, நகரலொம் இறைகளென்ன, ஒலிவளர் உகந்தம் என்னும் நகரத்திலுறைந்தார்‘ என்றும் குறிப்பிடுகிறது. மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் இந்நிகழ்வு இடம் பெற்றதாகக் குறிப்பிடும் காலம், அதற்குப் பிந்தியது என்பது தற்போதைய தொல்லியலாய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.
அண்மைக்கால தொல்லியலாய்வகள், மட்டக்களப்பிலே வாழ்ந்த இயக்கர், நாகர் பற்றிய தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. தென்னிந்தியாவில் உற்பத்தியான ஆதி இரும்புக்காலப் பண்பாடான பெருங்கற்காலப் பண்பாடு, கிறிஸ்துவுக்கு முன் 750 ஆம் ஆண்டளவில் இலங்கையிற் பரவத்தொடங்கியது, கிறிஸ்துவுக்கு முன் 500 ஆம் ஆண்டு முதலாக மட்டக்களப்பு தேசத்தில் இவ்விரு சமூகத்தினரும் கலந்து வாழத்தொடங்கினர் எனக்குறிப்பிடுகிறார் சி.பத்மநாதன் அவர்கள். அண்மைக்காலத்தில் மட்டக்களப்பில் பல இடங்களில் காணப்பட்ட பெருங்கற்காலத் தொல்லிடங்களில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளின் அடிப்படையிலேயே இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
இவ் இயக்க குலத்தினர் கூடுதலாக கிழக்கிலங்கையிலுள்ள மலைகளிலும் மலையடிவாரங்களிலும் வாழத்தொடங்கினர், இங்கு வாழ்ந்த இயக்கர்கள் குறுணிக்கற்கால மக்கள் எனவும் நாகர் ஆதி இரும்புக்கால மக்கள் எனவும் அடையாளங் காண்பது பொருத்தமானது எனக்குறிப்பிடும் சி.பத்மநாதன், இரு பண்பாடுகளுக்கும் உரிய சின்னங்கள் பலவிடங்களில் அண்மையிலோ அல்லது கலப்புற்றோ காணப்படுவதும் குறிப்பிடற்குரியது எனவும் குறிப்பிடுகிறார்.
இரும்பின் பயன்பாட்டையும் பெருங்கற்காலப் பண்பாட்டையும் கொண்ட நாகர்கள் மட்டக்களப்புத் தேசத்தில் குடியேறி, இயக்கருடன் கலந்து வாழத் தொடங்கியதும், கிறிஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே மட்டக்களப்பு தேசத்தில் பெருங்கற்காலப் பண்பாடு பரவத்தொடங்கி விட்டது என்பது தற்போது உறுதியாகத் தெரிய வந்துள்ளது. (பக்:453)
இங்கு கண்டறியப்பட்டுள்ள தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள் கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு முன் 250 ஆம் ஆண்டளவிலிருந்து பொறிக்கப்பட்டுள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந் நாகர்கள் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதுவும் தற்போது உறுதியாகத் தெரிய வந்துள்ளது. இவற்றிலிருந்து மட்டக்களப்பு தேசத்தில் இலங்கைத் தமிழர் சமுதாயம் கிறிஸ்துவுக்கு முன் முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதுவும் பெருமளிவில் உறுதியாகிவிட்டது.
இந்த வரலாற்று வளர்ச்சியின் காரணமாக மட்டக்களப்பு தேசத்தில் நெற்பயிர்ச்செய்கை, நிலையான குடியருப்புக்கள் என்பன தோன்றியதுடன், அதன் காரணமாக அரசுருவாக்கத்திற்கு ஏதுவான சமூகக்கட்டமைப்பு ஒன்றும் உருவாகிவிட்டது என்பதுவும் தற்போதய தொல்லியலாய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது. கிறிஸ்துவுக்கு முன் மட்டக்களப்பு தேசத்தில் வேள் எனும் சிறப்புப் பட்டத்தைப் பெற்ற நாகர் சிற்றரசுகள் தோன்றி விட்டது என்பதுவும் பெருமளவில் உறுதியாகிவிட்டது.
இந்த வளர்ச்சியினால் தோற்றம் பெற்ற, குடும்பிமலை, கல்லடிச் சேனை, பாலமடு, இலவாணை வேரம், வெல்லாவெளி, கிரான், நெடிய மடு, வந்தாறுமூலை, குசாலன் மலை, மட்டக்களப்பு – நாவற்குடா, கறுவாஞ்சிக்குடி, சங்கமன்கண்டி, வாகரை, தாந்தாமலை எனப் பதினைந்து வேள் எனும் பட்டத்தைக் கொண்ட நாகரின் ஆட்சியின் கீழமைந்த வேள்புலங்கள் இனங்காணப்பட்டுமுள்ளன. இதில் கிரானைத் தவிர்த்தும் பூலாக்காடு -வட்டிபோட்டமடு, முறுத்தானை என்பவற்றை புதிதாக இணைத்துக் கொள்ள வேண்டும். மேலும் சில வேள்புலங்களை தெளிவாக இனங்காணப்படாமலும் உள்ளன.
இந்தத் தகவல்கள் மட்டக்களப்புத் தேசத்தில், இலங்கையைப் போன்று வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வருகின்றமையை உறுதிப்படுத்துகின்றன. தெளிவாக அறியப்பட்டுள்ள வகையில் இலங்கையில் நுண்கற்கருவிகளின் பயன்பாடு கிறிஸ்துக்கு முன் 29000 ஆண்டுகளுக்கு முற்பட்டகாலத்தில் ஏற்பட்டதாகும். இக்கருத்து சிரான் தெரணியகல என்பவரின் ஆய்வின் முடிபு. இக்காலம் இற்றைக்கு 31000 வருடங்களுக்கு முற்பட்டதாகும். எனவே அதற்கு முன்பிருந்தே இலங்கையிலும் மட்டக்களப்பு தேசத்திலும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் எனலாம்.
இந்தத் தகவல்கள் மூலம், மட்டக்களப்புத் தேசத்தின் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலம், குறுணிக்கற்காலம், பெருங்கற்காலம் பற்றிய வரலாற்று வளர்ச்சிக்கட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. மறுபுறமாக மட்டக்களப்புத் தேசத்தின் நாடோடி வேட்டடைக் காலம், நாடோடி மந்தைக் காலம், நிலையான பயிர்ச்செய்கைக் காலம் என்ற சமூக வளர்ச்சிக்கட்டங்கள் பற்றி பற்றி அறிந்து கொள்ளவும் முடிகிறது. இந்த சமூக வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் சிற்றரசுகள் தோற்றம் பெற்றதனையும் அறிந்து கொள்ள முடிகிறது.
மட்டக்களப்புத் தேசத்தில் வாழ்ந்த மக்களின் தொடர்ச்சியான வரலாற்று வளர்ச்சியை இப்போது, இவ்வாறு புரிந்து கொள்ள முடிகிற போது, அறியப்படாத விடயங்கள் அதிகரித்தச் செல்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவது விடயம், இலங்கை வரலாற்று நூல்களில் குறிப்பிட்டுள்ள எல்லாளன் மற்றும் துட்டகாமினி காலத்தில் கிழக்கிலங்கையின் மேற்கில் வாழ்ந்த 32 தமிழ் சிற்றரசர்களை, இந்த வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் எங்கனம் பொருத்திப் பார்ப்பது என்பதாகும். இவற்றை விட துட்டகாமினி இணைத்துக் கொண்ட பலம்மிக்க பத்துத் துணைவர்கள், வத்த காமினியின் பின் ஆட்சி செய்த ஐந்து தமிழ் அரசர்கள் என்போரையும் இந்த வரலாற்றில் எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பதுவும் அறியப்பட வேண்டிய விடயங்களாகும். இந்நூல்கள் குறிப்பிடும் தகவல்களை மட்டக்களப்புத் தேசத்தில் வாழ்ந்த இயக்கர், நாகர் பற்றிய தகவல்களுடன் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது.
இரண்டாவது விடயம், மட்டக்களப்பின் தொன்மையான ஊர்களினதும் தொன்மையான கோயில்களினதும் தோற்றத்துடன் தெடர்புடைய ‘வேடர்கள்’ யார் என்பதும் அவர்களை மட்டக்களப்புத் தேசத்தின் வரலாற்று வளர்ச்சிக் கட்டத்துடன் எங்கனம் பொருத்திப் பார்ப்பது என்பதாகும். இவ்விடயம் பற்றிய ஆய்வு மட்டக்களப்பு சமூகங்கள் பற்றிய தெளிவான தகவல்களை தரவல்லன என்றே கருத முடிகிறது.
மூன்றாவது விடயம், மட்டக்களப்பின் பூர்விக குடிகளின் வழிபாடான குமாரர் வழிபாடு எச்சமூகத்தினருக்குரியது, எக்காலத்திற்குரியது என்பது. குமாரர் வழிபாட்டில் காணப்படுகிற வேடர் கலை, இராஜ கலை என்பன இருவேறுபட்ட பழங்குடிகளினது பண்பாட்டைக் காட்டுகின்றன. இவை இரண்டினையும் ஆராய்ந்தறிய வேண்டியுள்ளது.
இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேடியறிவதில் உள்ள பிரதானமான சிக்கல் ஒன்றினைப் புரிந்து கொள்ள வேண்டும். மட்டக்களப்புத் தேசத்திலே நாடோடி வேட்டடைக் காலம், நாடோடி மந்தைக் காலம், நிலையான பயிர்ச்செய்கைக் காலம் – நிலவுடமைச் சமுதாயம், நவீன சமகாலச் சமுதாயம் என்ற சமூக வளர்ச்சிகள் காணப்பட்டுள்ள போதிலும், ஆதிகாலத்திற்குரிய நாடோடி வேட்டையாடும் சமூகத்தினரில் சில சமூகப்பிரிவினர் இன்னமும் தனித்துவமான பொருளாதார – சமூக அம்சங்களுடன் மட்டக்களப்புத் தேசத்திலே வாழ்ந்து வருகின்றார்கள்.
நாடோடி வேட்டையாடுவேரை நாம் “வேடுவர்” என்ற பொதுப் பெயரில் அழைத்து வருகிறோம். ஆனால் அவர்களிடையே பல் வேறு குலங்கள் இருந்துள்ளன என்பது தற்போது அறியப்பட்டள்ளது. இத்தகைய குலங்களில் சில, இவ்வாறு தொடர்ந்தும் பழைய சமூக பொருளாதார நிலைமைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்றே கருதவேண்டியுள்ளது. இவ்வழியிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுமுள்ளது.
இவற்றை விட, அநுராதபுரத்தை ஆட்சி செய்த குதிரை வியாபாரியின் மகன்களான சேனன், குத்திகன் என்போருக்கும் மட்டக்களப்புத் தேசத்தில் வாழ்ந்த மக்களுக்கும் ஏதெனும் தொடர்புகளைக் காண முடியுமா என்பதனையும் தேடியறிய வேண்டியுள்ளது.
இன்னுமொரு அறியப்படாத விடயமும் உண்டு. மட்டக்களப்புத் தேசத்திலே பெருங்கற்காலப் பண்பாடும் அதனோடான வளர்ச்சிகளும் ஏற்படத் தொடங்கிய காலம், தமிழகத்தில் சங்ககாலம் எனப்படும் எழுத்திலக்கியங்கள் தோன்றிய காலமுமாகும். தற்போது சங்ககாலச் சமூகம் பற்றிய ஆய்வுகள் வழியாக இக்காலத்தில் வாழ்ந்த பல்வேறு சமூகப் பிரிவினர் – இனக்குழுமங்கள், சிற்றரசர்கள் பற்றி அறியப்பட்டுள்ளது. சங்க காலத்தில் சிறு நிலப்பகுதிகளில் சிற்றரசுகளைத் தோற்றுவித்த குலக்குழுக்களில் வேளிர், ஆய் போன்றனவும் அடங்கும். (சிவத்தம்பி, பக்:97) மட்டக்கப்புத் தேசத்தில் வேளிர் என்ற பட்டம் பெற்ற நாகர்களின் சிற்றரசுகள்தான் ஏற்பட்டது. எனவே இந்த விடயங்களையும் நாம் தேடியறிய வேண்டிய தேவையுள்ளது.
உசாத்துணைகள் :
ஜீ.ஸி. மெண்டிஸ், நம்முன்னோரளித்த அருஞ்செல்வம் – முதல் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி லிமிற்றட், இலங்கை. 1969
செ .கிருஷ்ணராசா, இலங்கை வரலாறு பாகம் 1, பிறைநிலா வெளியீடு, திருநெல்வேலி, யாழப்பாணம், 1999.
சி. பத்மநாதன், “இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள்”, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு. 2006.
சி. பத்மநாதன், “இலங்கைத் தமிழர் வரலாறு – கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும்”, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2016
கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம் – வரலாற்றுப் புரிதலை நோக்கி, மக்கள் வெளியீடு, சென்னை, 2003
சா.இ.கமலநாதன், கமலா கமலநாதன், (பதிப்.) “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்”, குமரன் பதிப்பகம், கொழும்பு – சென்னை, 2005