பேராசிரியர் சி. மௌனகுரு
“சக்தி பிறக்குது” நாடகம் 1986 ஆம் ஆண்டு இலங்கையிலும் 1989 ஆம் ஆண்டு நோர்வேயிலும் 2019 ஆம் ஆண்டு மீண்டும் நோர்வேயிலும் மேடையேறியது. இவ்வகையில் 33ஆண்டுகள் வாழ்வை அது கண்டுள்ளது.
1986 இல் நடித்த பலருக்கு இன்று 70 வயதுக்கு மேலாகிவிட்டது. அவர்கள் பழைய நினைவுகளில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பலர் காலமாகிவிட்டனர். அவர்கள் நம் நினைவுகளில் வாழ்கின்றனர். 1989 இல் நோர்வேயில் நடித்த பலர் இன்று 60 வயதைத் தாண்டி விட்டனர். சிலர் காலமாகி இருக்கவும் கூடும்.
2019 இல் நோர்வேயில் மேடை கண்ட “சக்தி பிறக்குது”வில் நடித்த அந்தப் பழையவர்கள் சிலர் நடித்துள்ளனர். ஏனையோர் புதியவர்கள். 2019 “சக்தி பிறக்குது”வில் ஏறத்தாள 35 பேர் பங்கு கொண்டனர். 1986, 1989,,2018 ஆகிய ஆண்டுகளில் மேடை கண்ட இந்த நாடகம் உருவான பின்னணிகளையும் அந்நாடகத்திற்கு வந்த விமர்சனங்களையும் பதிவதோடு, 2019 இல் நோர்வேயில் மேடைகண்ட சக்தி பிறக்குது நாடக அனுபவங்களையும் நாடகப் படங்களையும் இங்கு தொடர்ச்சியாகப் பதியவுள்ளேன்.
ஆர்வமுடையோர் வாசிக்கலாம் அபிப்பிராயங்களைப் பகிர்ந்தும் கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தில் “சக்தி பிறக்குது“
1986 இல் யாழ்பாணப் பலகலைகழகத்தில் முதன் முறையாக சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதனைக் கொண்டாடியவர்கள் யாழ் பெண்கள் ஆய்வு வட்டத்தினர். 1986 களுக்குப் பின்னர் வந்த காலங்கள் ஈழத்தமிழர் வரலாற்றின் மிக முக்கிய காலங்களாகும். பெண்ணியக் கருத்துகள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல எழுந்த காலம் அது. சித்திரலேகா, சர்வமங்களம், சுல்பிகார், யுகனேஸ்வரி (ஊர்வசி) போன்ற மூத்த தலைமுறையினரும் செல்வி, சிவரமணி, சுமங்களா கைலாசபதி போன்ற இளம் தலைமுறையினரும் இன்னும் பல பல்கலைக் கழக மாணவிகளும் இந்தப் பெண்கள் ஆய்வு வட்டத்தில் இருந்தனர்.
பெண்கள் சம்பந்தமாக வந்த எழுத்துக்களை இவர்கள் கற்றனர், வாசித்தனர், விவாதித்தனர், செயற்பட்டனர். கண்காணிக்கவும் பட்டனர். அன்னையர் முன்னணி கூட உருவாகியது. அது அன்றைய இராணுவ அடக்குமுறைக்கு எதிராக அமைதியான முறையில் ஒரு பெரும் ஊர்வலம் கூட நடத்தியது. ராஜினி திரணகம, சுமதி சிவமோகன், நிர்மலா போன்றோர் “அடுப்படி அரட்டை” எனப்பெண்கள் பிரச்சனை சம்பந்தமாக நாடகம் போட்டனர்.
நாடக அரங்க் கல்லூரி, அவைக்காற்றுக் கழகம் எனும் நாடக நிறுவனங்களும் பெண்கள் பிரச்சனை சம்பந்தமாக நாடகங்கள் போட்டன. பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும், விளம்பரப்பொருட்களாக பெண்கள் நோக்கப்படுவது பற்றியும் ஓவிய புகைப்படக் கண்காட்சிகள் நடந்தன. பெண்ணியம் ஒரு கோட்பாடகப் பார்க்கவும் பட்டது. பெண்ணியம் முற்போக்காளராலும் அன்றைய முற்போக்கு இளைஞர்களினாலும் வரவேற்கவும் பட்டது.
1986 இல் இந்தப்பெண்கள் ஆய்வு வட்டம் நடத்திய சர்வதேச பெண்கள் தின விழாவில் மேடையிட என்னிடம் ஒரு நாடகத்தையும் சிதம்பரநாதனிடம் ஒரு கவிதா நிகழ்வையும் பெண்கள் ஆய்வு வட்டத்தினர் கேட்டிருந்தனர். முதன் முதலில் யாழ்ப்பாணத்தில் சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
சிதம்பரநாதன், “வாருங்கள் தோழியரே இந்த வையகத்தை வென்றெடுப்போம்” எனும் தலைப்பிலமைந்த ஓர் கவிதா நிகழவை தந்தார். நான் ஒரு நாடகம் தருவதாக உறுதியளித்தேன்.
இதனை எழுத என்னுடன் இந்தப் பெண்கள் ஆய்வு வட்டத்தினர் நீண்ட உரையாடல்களை நடத்தினர். என் மனைவி சித்திரலேகா எனக்குப் பல பெண்ணிய எழுத்துக்களை அறிமுகம் செய்தார். என்னோடு பல நாட்கள் இது பற்றி விவாதித்தார். நாடகம் எங்கே எங்கே கேட்டு நச்சரித்தார். அவரைக்காண வந்த தென்னிலங்கைச்சிங்களப் பெண்ணிய வாதிகளான சுனிலா அபெயசேகரா, அனோமா ராஜகருண, குமுதினி போன்றோரும் இது பற்றி என்னுடன் உரையாடினர். இவர்கள் யாவரும் தீவிர பெண்ணியச் செயற் பாட்டாளர்கள்.
காலம் காலமாக அடக்கப்படும் தொழிலாள மக்கள் பாலும் அடக்கப்பட்ட மக்கள் பாலும் அனுதாபம் கொண்டு கவிதைகளும் கதைகளும் நாடகங்களும் செய்த என் பார்வை காலம் காலமாக அடக்கப்படும் பெண்கள் மீதும் திரும்பியது. பல்கலைகழகத்தில் பணிபுரிந்த பேரா.சிவத்தம்பி, நுஃமான், குழந்தை சண்முகலிங்கம், சிதம்பரநாதன், முருகையன், ஏ,ஜே கனகரத்தினா, மு. நித்தியானந்தன் போன்ற ஆண்களும் பல்கலைக் கழகத்தில் கல்விகற்றுகொண்டிருந்த ஆண் மாணவர்கள் சிலரும் இப் பெண்ணியக் கருத்துகளுக்கு ஆதரவாளர்களாக இருந்தனர். அவர்கள் ஆலோசனைகளும் கிடைத்தன.
சக்தி பிறக்குது நாடகம் பிறந்தது. அதன் பிரதியைபடித்துப் பார்த்து ஏற்றுக் கொண்டனர் பெண்கள் ஆய்வு வட்டத்தினர். அது நாடகமா அல்லது மேடை நிகழ்வா என்ற வினாவை எம் நாடக விற்பன்னர்கள் எழுப்பினர். நுண்கலைத் துறைத் தலைவராக அன்று இருந்த பேரா. சிவத்தம்பியிடம் பிரச்சனையைக் கூறினேன். அவரே என்னிடம் “சக்தி பிறக்குது – மேடை நிகழ்வு; இது ஓர் நாடகமாகவும் இருக்கலாம்“ எனப் பெயரை வை என்றார்.
குழந்தை சண்முகலிங்கம் நாடக அரங்க கல்லூரியினரையும் பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைகல்லூரி நடன் மாணவிகளையும் இணைத்து நாடகம் செய்யலாம் எனஆலோசனையும் கூறினார். சாந்தா பொன்னுத்துரையையும் பிரபல வயலின் நிபுணர் தனதேவி சுப்பையாவையும் அணுகினேன். அவர்கள் எனது நண்பர்கள். ஒப்புக் கொண்டார்கள். அங்கு நடனம் பயின்றுகொண்டிருந்த திறன் மிகுந்த நடன மாணவிகளான மாலினி, நிமலினி, ஜஸ்மின் போன்றோர் தெரிவாகினர். நாடகப்பயிற்சிகளில் கலந்தும் கொண்டனர்.
நடனப் பயிற்சி பெற்றவர்களுக்கு இந்த நாடகப் பயிற்சி புதிது. இராமநாதன் நுண்கலைக் கல்லூரி பரதம் பயிலும் மாணவிகள் நாடகம் நடிப்பதா? என்ற எதிர்ப்பலையும் உண்டாகியது. அதனையும் வென்றோம். மாணவிகள் ஆர்வத்தோடு நடிப்பு பழகினர் பாடி நடித்தனர். குடும்பத்தலைவனாக பிரான்சிஸ்ஜெனம், ஆலை முதலாளியாக ருத்ரேஸ்வரன்,
கங்காணியாக காலம் சென்ற நல்லை சுந்தரலிங்கம், விடலைப் பெடியங்களாக ஶ்ரீகணேசனும் இன்னொருவரும் எடுத்துரைஞர்காளாக கார்த்தியாயினி, கலைப்பேரசு ர ஏ.ரி பொன்னுத்துரை, காலம் சென்ற ஜெயகுமார் ஆகியோரும் நடித்தனர். சக்தியாக நிமலினி, குடும்பப் பெண்ணாக தேயிலைத் தோட்டத் தொழிலாளிகலாக மாலினியும் நெசவாலையில் வேலை செய்யும் பெண்ணாக பாடசாலை செல்லும் பெண்ணாக ஜஸ்மினும் நடித்தனர்.
எல்லா நாடகங்களும் ஒரு வகையில் மேடை நிகழ்வுதான். ஆனால் எல்லா மேடை நிகழ்வுகளும் நாடகமாகி விடுவதில்லை. நாடக அம்சம் நிரம்பிய மேடை நிகழ்வுகளை என்ன சொல்லால் அழைப்பது? எனவே தான் இதனை நான் ஒரு மேடை நிகழ்வு; நாடகமாகவும் இருக்கலாம் என்று குறிப்பிட்டோம்.
நாடகத்திற்கென்று சில வரையறைகளை நாம் ஏற்படுத்திக் கொண்டு விட்டோம். வரையறைக்குள் நின்று சிருஷ்டிப்பது சிரமமான காரியம். சிருஷ்டியில் புதிது புதிதாகச் செய்ய விரும்பு வோருக்கு மரபுகள் தடைகளாகி விடுகின்றன. இதனை ஒரு பரீட்சார்த்தமாகவே நான் செய்தேன். பரதம், கூத்து, காத்தான் கூத்து, கொட்டகைக்கூத்துச்சாயல், நாட்டாரிசை, கர்நாடக இசை, நாடகம், நாட்டிய நாடகம் என்ற நானாவித அம்சங்களையும் கலந்து அதனை உருவாக்க முயன்றேன்.
அதன் அடிச்சரடு பெண் நிலைவாதம் என்ற கருத்து நிலையாகும். புராணங் களிலும் இதிகாசங்களிலும் சக்தி என்று போற்றப்படும் பெண் நடைமுறையில் கீழாகவே ஆணாதிக் கச்சமூகத்தால் கணிக்கப்படுகின்றாள். இந்தச் சமூக முரணை வெளிக்காட்டுவதும், சக்தியான பெண்கள் தம் சக்தியை உணர்த்துவதும் தான் எனது எழுத்தின் நோக்கு.
மேடையில் இது வெற்றி கண்டது. பலரை இது கவர்ந்தது. இளைஞர் சிலர் வெகு கோபத்தோடு மண்டபத்தை விட்டுச் சென்றனர். சிலரை இது முகம் சிவக்கச் செய்தது. இன்னும் சிலரை இது வெகுவாக அசைத்தது எனப் பின்னால் அறிந்தேன். ஏதோ ஒரு வகையில் பார்வையாளர் இதற்களித்த response எனக்குத் திருப்தியை தந்தது. பெண்ணிலைவாதக் கருத்தியலுக்கு என்னை அறி முகமாக்கிய சித்திரலேகாவுக்கு இவ்விடத்தில் மிகுந்த நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
முன் சொன்னது போல இந் நாடகத்தின் உந்து சக்திகளாக அமைந்தவர்கள் சர்வமங்களம் கைலாசபதியும், சித்திரலேகாவும் ஆவர். இந்நாடகத்தின் தயாரிப்பில் வழக்கம் போல எனக் குக் குழந்தை சண்முகலிங்கம் பேருதவியாக இருந்தார். திறமையான கலைஞர்களின் சங்கமிப்பாக இது அமைந்தது.
இந்நாடகத்திற்கான இசைப் பொறுப்பைக் கண்ணனும், பரதநாட்டியப் பகுதியை பல்கலைக்கழக நடன விரிவுரையாளர் சாந்தா பொன்னுத்துரையும் பொறுப்பேற்றனர். பின்னணி வயலின் இசையை இசை விரிவுரையாளர்கள் தனதேவி சுப்பையாவும் பாக்கியலட்சுமி நடராஜாவும் ஏற்றிருந்தார். கிருபாகரன் தபேலா வாசித்தார். கண்ணன் ஹார்மோனியம் இசைத்தார். அனைவரின் உதவியும் முழுமையாக எனக்குக் கிடைத்தன.
மிகுந்த அற்புதமான அந்த யாழ்ப்பாண நாட்கள் மனதை விட்டு அகலாதவை. இந்நாடக உருவாக்கத்தின் பின்னணியில் நின்ற அனைவரும் என் நன்றிக்கு உரியவர்கள்.
இந்நாடகத்தின் தன்மைகளையும் செய்தியையும் அறிந்த கலாநிதி செம்மனச்செல்வி திருச்சந்திரன் அவர்கள் இதனைத் தங்களின் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (WERC) மூலமாக வெளியிடலாம் என்று என்னிடம் கூறினார். இதனால் அதனை மேலும் திருத்தியும், சில விடயங்களை உட்புகுத்தியும் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்நாடக மேடை நிகழ்வு அச்சில் வெளி வருகை யில், இந்த நாடக மேடை நிகழ்வு சம்பந்தமாகப் பத்திரிகையில் அன்று வந்த விமர்சனங்களையும் சேர்க்கும் படி நண்பர்கள் கூறினார்கள். அது நல்ல ஆலோசனையாக எனக்குப்பட்டது. அவையும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு கால மன உணர்வை அறிய இவை உதவும்.
நோர்வேயில் வசிக்கும் ஒருவகையில் எனது மாணவரும் நண்பருமான சர்வேந்திரா இந் நாடகத்தை 1989 இதனை நோர்வேயில் மேடையிட்டார். இதன் இசைப் பொறுப்பை அன்று ரவிகுமார் ஏற்றிருந்தார் என அறிகிறேன். சர்வேந்திரா அது சம்பந்தமாக அன்று சுவடு பத்திரிகையில் வந்த வந்த வாதப் பிரதிவாதங்களை நறுக்குகளாக எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவை அந்நாடகம் அங்கு எப்படி மேடையேற்றப் பட் டது என்ற விபரணத்தை எனக்குத் தந்தன. நோர்வேயில் மேடையேறிய முதல் காத்திரமான நாடகம் அது என நினைக்கிறேன்.
நோர்வே தமிழ்ச் சங்கம் தனது 10 ஆவது ஆண்டு நிறைவு நாளுக்காகத் தயாரித்த இந்நாடகம் சென்ற வாரம் நோர்வே தமிழ்ச் சங்க 40 ஆவது ஆண்டு விழாவில் நோர்வே தமிழ் சங்கத்தினரால் தயாரிக்கப்பட்டு மேடையிடப் பட்டது.
30 வருடங்களுக்கு முன்னர் இந்நாடகத்தை அங்கு நெறியாள்கை செய்த சர்வேந்திராவே இதனை இம்முறையும் நெறியாளகை செய்திருந்தார். அவருடன் இணைந்து நெறியாளகை செய்தவர் ரூபன் சிவராஜா இதற்கான இசையினை ஏற்றிருந்தார். 30 வருடங்களுக்கு முன்னர் இசை ஏற்றவர். நடன அமைப்பினை மேற்கொண்டிருந்தார் கவிதாலக்சுமி. சர்வேந்திரா, விஜயேந்திரன், சந்த கண்ணா அகியோர் பழைய தலைமுறை எனின் ரூபன், கவிதாலக்சுமி ஆகியோர் இளைய தலைமுறையினர். பழையவர்களில் சாந்த கண்ணாவும் விஜயேந்திரனும் 1989 இல் தாம் நடித்த அதே பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
35 பேர் பங்கு கொண்ட இந்நாடகத்தின் பயிற்சியினை நான்கு நாட்கள் அவதானிக்கவும் ஆலோசனை கூறவும் நேரகாலத்துடனேயே என்னை நோர்வே தமிழ் சங்கம் அழைத்திருந்தது. இதனால் இந்நாடகத்தில் ஈடுபட்டோரின் அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டையும் அவர்கள் எதிர் கொண்ட பிரச்சனைகளையும் நேரடியாக் காணும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. மிகத் திறமான இளம் நடிகர்களை அவர்கள் மத்தியில் கண்டேன், மகிழ்ந்தேன். அவர்களோடு கழித்த அந்த எட்டு நாட்களும் மிக இன்பமானவை. அவ்வனுபவங்களையும் பகிரவுள்ளேன்.
முதலில் 1986இல் யாழ்ப்பாணத்தில் மேடியேறிய “சக்தி பிறக்குது” நாடகம் பற்றி வந்த விமர்சனங்களைப் பதிகின்றேன்…
தொடம்…