மகாவம்சத்தில் வருகின்ற குவேனி அல்லது குவேன்னா பற்றிய கதை தமிழில் பிரபல்யமானதொன்று. மகாவம்சத்தின் ‘விஜயனின் பட்டாபிஷேகம்’ எனும் ஏழாம் அத்தியாயத்தில் குவேனி பற்றிக் கூறப்பட்டிருக்கிறது.
மகாவம்சத்தின் ஆறாம் அத்தியாயத்தின் இறுதி வரியானது, ‘விஜயன் என்னும் பெயர் பெற்ற வீரனான இளவரசன் இலங்கையில் தம்மபாணி [Tambapanni] என்றழைக்கப்படும் பகுதியில் கரையிறங்கினான். தாதகர் நிர்வாணமடைவதற்காக இரட்டை சாலவிருட்சங்களிடையே அமர்ந்த அதே நாளில் இது நடந்தது.’ என விஜயன் வருகையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பாலி மொழியிலிருந்த மகாவம்சத்தை மொழிபெயர்த்த வில்ஹெம் கெய்கர் புத்தரின் நிர்வாண ஆண்டு கி.மு. 544 என்பதே இலங்கை வழக்கு என்கிறார். விஜயன் வந்திறங்கிய இடம் மாதோட்டம் எனக் கருதப்படுகிறது.
மகாவம்சத்தின் ஏழாம் அத்தியாயத்தில் குவேனி மற்றும் இயக்கர்கள் பற்றி கூறப்பட்டுள்ள தகவல்களில் இரண்டு முக்கியமான விடயங்கள் காட்டப்பட்டுள்ளன. ஓன்று, குவேனி இயக்கர் பரிவாரம் அல்லது குழு ஒன்றின் எஜமானி [mistress] என்பது. இரண்டு, அக்குழு கடற்கரையோரமாக வரும் கப்பல்களில் உள்ளவர்களை கொல்பவர்கள் அல்லது கைதுசெய்பவர்கள் மற்றும் கப்பல்களில் உள்ள உணவுப் பொருட்களைக் கொள்ளையிடுபவர்கள் என்பது.
ஏழாம் அத்தியாயத்தில், விஜயனும் தோழர்களும் இலங்கைத் தீவில் நின்றபோது, ‘அங்கு பெண் நாய் உருவில் ஒரு யஷிணி தோன்றினாள். அவள் குவேன்னா என்பவளுடைய பரிவாரத்தைச் சேர்ந்தவள்.’ என்று கூறப்படுகிறது. விஜயனைச் சேர்ந்த ஒருவன், விஜயன் தடுத்ததையும் கேளாமல் நாயுருவில் தோன்றிய பெண் யஷிணியைத் பின்தொடர்ந்து சென்றபோது, ‘மரத்தடியில் சந்நியாசினி போல் நூல் நூற்றுக் கொண்டு அமர்ந்திருந்த, நாயுருவில் இருந்த யஷிணியின் எஜமானி குவன்னாவைக் காண்கின்றான்.’ என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்வழியாக குவேனி இயக்கர் பரிவாரம் அல்லது குழு ஒன்றின் எஜமானி எனக் காட்டப்படுவதனை அறியமுடிகிறது.
இதனைவிட, மகாவம்சத்தில் இயக்கர் தலைவனின் மகளின் திருமணம் பற்றிக் கூறப்பட்டுள்ள தகவல்களும் குவேனி இயக்கர் குழுவொன்றின் எஜமானி என்பதனைக் காட்டுகின்றது. விஜயனுக்கு ஒரு பெண் செய்யும் சேவையைச் செய்வதற்காக குவேனி, ‘பதினாறு வயதுப் பருவ மங்கையின் எழிலுருவை எடுத்துக் கொண்டு சகலாபரண பூஷிதையாக’ ஆகி, விஜயனுடன் இருக்கும் வேளை, அருகில் சத்தங்கள் கேட்க, அதன் பொருளை அவளிடம் விஜயன் வினாவினான். அதற்கு அவள், ‘இதோ இங்கே சிரிஸவத்து என்னும் பெயருடைய இயக்க நகரம் ஒன்றிருக்கிறது. இலங்கை நகரில் வசிக்கும் இயக்க தலைவனுடைய [chief of the yakkhas] மகள் இலங்கையிலிருந்து இங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள். அவளுடன் அவளுடைய தாயும் வந்திருக்கிறாள். திருமணத்திற்காக அங்கே பெரிய கொண்டாட்டம் நடைபெறுகிறது. அது ஏழு நாட்கள் நடக்கும். அந்தச் சந்தம்தான் இது. ஏராளமானபேர் அங்கு கூடியிருக்கிறார்கள் என அவள் கூறுகிறாள்.’
வம்சத்தபகசினி எனும் நூல், இயக்கர்களுடைய தலைவன் மகாகலசேனன் எனவும் அவன்; சிறிஸவத்த என்ற இடத்தில் இருந்தான் எனவும் கொண்டா என்ற இயக்கினியின் மகள் பொலமிதாவை அவன் மணமுடித்திருந்தான் எனவும் கூறுகிறது. இந்த தகவல்கள் குவேனி இயக்க குல இளவரசி அல்ல என்பதனைக் காட்டுகிறது.
ஏழாம் அத்தியாயத்தில், ‘அவனைப் பற்றித் தூக்கி வீசியெறிந்தாள் குவேன்னா. அதேபோல எழுநூறு பேரையும் ஒருவர் பின் ஒருவராக அவள் தூக்கி வீசியெறிந்தாள்’ எனவும் கூறப்பட்டுள்ளது. அங்கு வந்த விஜயன் அவளை யஷிணி என ஊகித்து கைதுசெய்கிறான். அதன்பின்னர், ‘குவேன்னா, விஜயனுடைய ஆட்களை அந்த இடத்துக்கு அவள் கொண்டு வந்தாள். அவர்களுடைய பசியைப் போக்க, தன்னால் விழுங்கப்பட்ட வர்த்தகர்களுடைய கப்பல்களில் இருந்த அரிசியையும் இதர உணவுப் பொருட்களையும் அவள் அவர்களுக்கு காட்டினாள்.’ என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் குவேனி குழு கப்பல்களில் வருவோரை கைதுசெய்யும் அல்லது அழிக்கும் குழுவாகவும் கப்பல்களில் உள்ள பொருட்களை கொள்ளையிடும் குழுவாகவும் இருந்தது என்பதனைக் காட்டுகின்றது.
குவேனி மற்றும் அவளது குழு பற்றிய இவ்விபரங்களைவிட் குவேனி பற்றிய மேலும் பல தகவல்கள் மகாவம்சத்திலும் வம்சத்தபகசினியிலும் கூறப்பட்டுள்ளன. விஜயன் குவேனியின் உதவியுடன் அங்கு கூடியிருந்த இயக்கர்கள் அனைவரையும் கொல்கின்றான். இயக்க ராஜனுடைய [yakkha king] உடைகளைத் தான் அணிந்து கொண்டு, தனது சகாக்களுக்கு அவர்களுடைய இதர ஆடையணிகளை அளித்தான். பின் அந்த இடத்தில் சில தினங்களைக் கழித்த பிறகு அவன் தம்மபாணிக்குச் சென்றான். அங்கு விஜயன் தம்மபாணி நகரத்தை ஏற்படுத்தி யஷிணியுடனும் மந்திரிகளுடனும் வசித்து வந்தான். செம்மண்ணின் புழுதியைத் தொட்டதால் கைகள் செந்நிறமாகக் காட்சி தர அந்த இடத்தையும் அந்தத் தீவையும் தம்மபாணி எனப் பெயரிட்டான் என்பது மகாவம்சத்தின் கதை. முன்னர் இயக்க தலைவன் எனக்கூறப்பட்ட போதிலும் இங்கு இயக்க ராஜன் எனக்கூறப்படுகிறான். குவேனியும் விஜயனுக்கு ராஜ்யமொன்றைத்தருவதாகவே கூறுகிறாள். அத்துடன் விஜயனும் குவேனியும் தம்மபாணி என்ற நகரத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
குவேனியின் இருபிள்ளைகளும் (மகனும் மகளும்) ஜீவகத்தா, தீபல்ல என அழைக்கப்பட்டனர் எனவும் வம்சத்தபகசினி கூறுகிறது. பிற்காலத்தில் குவேனி விஜயனால் விரட்டியடிக்கப்பட்டு, தன்னிரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு லங்காபுரத்துக்கு செல்கிறாள். அங்கு அவள் உளவாளி எனச் சந்தேகிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறாள். குவேனியின் தாய்மாமன் இரு பிள்ளைகளிடமும் விபரத்தைக் கூறி தப்பியோடச் சொல்கிறான். அவர்கள் இருவரும் சுமண கூடத்தை அடைந்து, உரிய வயதடைந்ததும் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்கள் நிறையக் குழந்தைகளைப் பெற்றுக் பெருகிக் கொண்டு, மலையகப்பகுதியில் அரசனுடைய அனுமதியுடன் வசித்து வந்தனர். இவர்களிடமிருந்து தோன்றியவர்கள் தான் புலிந்தர்கள் [Pulinda] என்ற தகவலையும் மகாவம்சம் தருகிறது.
எனினும் தீபவம்சம் கூறும் விஜயன் கதையில், குவேனி பற்றியோ இயக்கர்களுடனான அவனது தொடர்பு பற்றியோ எதுவும் கூறவில்லை என்பதனைக் கவனத்தில் கொள்ளவும் வேண்டும்.